Total Pageviews

Tuesday, January 25, 2011

வழிபாடு


மாஸ்டர்,  வழிபாடு செய்வது தவறு என்கிறீர்களா?.  நீங்கள் நாத்திகரா?........(என் பெயரை வெளியிட வேண்டாமே)நண்பர்களே,     நாம் வழி பாடுகளுக்கே முதலிடம் தருகிறோம். அந்த வழிபாடு யாரைக்குறித்து நிகழ்த்தப்படுகிறதோ அந்த வஸ்துவை புறக்கணித்து விடுகிறோம். "கடவுள்' என்ற சொல்லை ஆராய்கிறோம். கடவுளின் உண்மையை அலட்சியப்படுத்துகிறோம்.

ஒருவர் கதவை மூடிக்கொண்டு வழிபாடு செய்கிறார். கதவு தட்டப்படுகிறது. "யார்' என்று கேட்கிறார். "நான்தான் கடவுள்' என்று பதில் வருகிறது. "சற்று நேரம் இருங்கள். நான் வழிபாட்டை முடித்துக்கொண்டு வந்து கதவைத் திறக்கிறேன்' என்கி றார் அவர்.

எவரைக் குறித்து வழிபாடு செய்கிறோமோ அவரை விட்டுவிட்டு புற வழிபாட்டைத்தான் செய்கிறோமே தவிர - வழிபாடு என்ற பெயரில் உண்மையை மறக்கிறோம். சப்தங்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் சப்தங்கள் தரும் அர்த்தத்தை, உண்மையை உணர மறக்கிறோம். வார்த்தை ஜாலங்களிலேயே திருப்தி பட்டுக் கொள்கிறோம்..


வழிபாடு என்றால் பயணப்படக்கூடிய பாதை என்று தானே பொருள். பயணத்தின் இலக்கு தெரியாமல் எப்படிப் பயணப் படமுடியும்?.பாதையிலேயே நின்று கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியுமா?
வழிபாடு தேவை இல்லை என நான் கூறவில்லை. ஆரம்பகால சாதகனுக்கு அவசியம்தான். ஆனால் வழிபாட்டின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? புத்த பகவான் சொல்லும் ஒரு கதை...

ஓரிடத்தில் வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் தவிக்கின்றனர். அங்கு ஒரு படகு வருகிறது. மக்கள் படகில் ஏறி அமர்ந்து வெள்ளத்தைக் கடந்து கரை சேர்கின்றனர். கரை சேர்ந்ததும் அந்தப் படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

கரை சேர்ந்தபின் படகு தேவையில்லை; படகையே தூக்கி வைத்துக்கொண்டு திரிவது நன்றாகவா இருக்கிறது?

தூண்டில்மேல் கவனம் செலுத்த வேண்டும். எதுவரை? மீன் தூண்டிலில் சிக்கும்வரை. மீன் பிடித்ததும் தூண்டிலைச் சுமந்து திரிவது அறிவார்ந்த செயலா?. "வழிபாடு உண்மையை (உங்கள் புரிதலுக்கேற்ப, கடவுள் )உணர்வதற்கே... உணர்ந்தவுடன், அந்த உண்மையான வஸ்துவின் மேல் கவனத்தைக் கொண்டுவரும் நிலையே சிறந்ததாகும்.

பகவான் ரமண மகரிஷியை ஒரு ஜெர்மானிய அறிஞர் பார்க்க வந்தார். அவர் ரமண மகரிஷி யிடம், ""பகவானே! நான் ஆன்மீகம் நிறைய கற்றுள்ளேன். நிறைய பட்டங்கள் பெற்றுள்ளேன் . நிறைய ஆராய்ச்சி களைச் செய்துள்ளேன். உங்களிடம் புதிதாய் நான் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று கேட்டார்.

அதற்கு பகவான் ரமணர், ""நீ கற்றதனைத்தையும் மறந்துவிட வேண்டும். அதுவே நீ இங்கு கற்க வேண்டுவது'' என்றார்.

உணரும் வரைதான் வழிபாடு,  வழிபடுகிறவனை உணர்வதே வழிபாட்டின் நோக்கம்..

பகவான் ராமகிருஷ்ணர் சொல்கிறார்:

""வண்டு பூவின்மேல் அமர்ந்து மதுவை உறிஞ்சி ருசிக்கும் வரைதான் சிறகுகளை அடித்து ரீங்கார சப்தமிடும். தேனை ருசிக்க ஆரம்பித்துவிட்டால் சிறகடிப்பது ஓய்ந்துவிடும்; சப்தம் இருக்காது.''

"சும்மாயிரு சொல்லற' என்று ஞானியர் சொல்வதும் இதைத்தான்.

சீடன் ஒருவன் குருவை நாடிச் சென்று தனக்கு உபதேசம் செய்ய வேண்டினான். தான் பல நூல்களைக் கற்றவனென்றும் கூறினான்.

அதற்கு குருநாதர், ""உனக்கு உபதேசிக்க வேண்டுமானால் மற்ற சீடர்கள் தருவதைவிட இரண்டு மடங்கு அதிகமான குரு தட்சிணையை நீ தர வேண்டும்'' என்றார்.

""ஏன் குருநாதா, நான் பல விஷயங்களைக் கற்றவன். இவர்களோ ஒன்றும் அறியாதவர்கள். அவர்களைவிட என்னிடம் அதிகமாக தட்சிணை கேட்கிறீர்களே...'' என்று கேட்டான்.

""நீ கற்றவற்றை மறக்கச் செய்ய ஒரு மடங்கு; புதிதாய்க் கற்பிக்க ஒரு மடங்கு. ஆக இரண்டு மடங்கு தட்சிணை'' என்றார் குருநாதர்.


ஒரு நாத்திகர் தலைமை விஞ்ஞானியாக உள்ள நாட்டில், ஒரு விண்வெளி விஞ்ஞானி, விண்வெளியில் ஆய்வு செய்தார். அங்கு அவர் இறையின் இருப்பை உணர்ந்தார். பின் பூமி திரும்பி, தலைமை விஞ்ஞானியிடம் வந்தார்.

தலைமை விஞ்ஞானி, ""நீ விண்வெளிப் பயணத்தில் என்ன கண்டாய்?'' என்று கேட்டார்.

""இறைவனின் இருப்பை'' என்றார் விஞ்ஞானி.

""என்னிடம் சொன்ன "இறையிருப்பு" பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடாதே... நான் நாட்டில் இறைவன் இல்லை என்று கூறி, நாத்திகவாதத்தை கூறி வந்துள்ளேன். நீ உணர்ந்த "இறையிருப்பு" உண்மை உன்னுடனே இருக்கட்டும்'' என்றார்.

அந்த விஞ்ஞானியை ஒரு ஆன்மீகவாதி சந்தித்தார்.

அவர், ""நீ இறைவனைக் கண்டாயா?'' என்று கேட்டார். ""இல்லை'' என்றார் விஞ்ஞானி. அதற்கு அந்த ஆன்மீகவாதி, "நீ இதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே. நானும் இறைவன் இல்லை என்பதை அறிவேன். ஆனால் நான் இறைவன் உண்டு என்று பிரசாரம் செய்து வருகிறேன். இறைவன் இல்லையென்று நீ உணர்ந்ததை வெளியில் சொல்லிவிடாதே'' என்றார்.

ஆகவே இறையிருப்பு என்பது அவரவர் உணர்வைப் பொறுத்தது. வழிபாடுகளாலோ- பிரார்த்தனைகளினாலோ ஏற்படுவதல்ல இறையுணர்வு. இது ஒவ்வொரு மனிதனுடைய உணர்வை பொறுத்த விஷயம்

ஒரு அருமையான சிலையை அதன் பெருமை தெரிந்த ஒருவர் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார். அதைப் பார்த்த ஒருவன், ""இவ்வளவு அரிய சிலையை வெறும் பத்தாயிரத்திற்கு விற்று விட்டானே'' என்றான்.

இன்னொருவன், ""இந்த அற்பமான கல்லுக்கு பத்தாயிரம் கொடுத்து வாங்குகி றானே. இவன் எவ்வளவு பெரிய மடையன்'' என்றான்.

ஆக கொடுப்பவனின் மனப்பான்மை - வாங்குபவனின் மனப்பான்மையைப் பொருத்தது அதன் மதிப்பு!


வழிபாடு என்பது இறைத்தன்மையை உணர்வதற்காகச், செல்லக்கூடிய பயணம். பிரார்த்தனையோ, வேண்டுதலோ அல்ல.

இறைவன் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட உணர்வு.  ஆனால் என்னுடைய வகுப்புகளில் யாரையும் இறை எதிர்ப்புக்கு கட்டாயப்படுத்தவில்லை.இது அவரவர்களின் உணர்வைப் பொறுத்த விஷயம்.(அதிகாரி பேதம்)

 இறைவன் இல்லை என்பது தான் என்னுடைய உணர்வே தவிர,   இறைத்தன்மையை இல்லை என நான் மறுப்பதற்கில்லை.அந்த இறைத்தன்மையை அகத்தில்தான் உணரவேண்டுமே தவிர புறத்தில் இல்லை.


"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே"


  கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
  கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
  கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
  ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

  செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
  செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
  உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
  அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமே!
ஓம் தத் சத் 

No comments:

Post a Comment