Total Pageviews

Friday, November 30, 2012

புது ஜனனத்தைத் தேடி


புது ஜனனத்தைத் தேடி


இதோ 
அஞ்சாத இதயம் ஒன்று....
வலுவிழந்து விட்டது......

ஓடி ஓடி 
உழைத்த "கால்கள்"
இழைப்பைத் தேடி
சோர்ந்து விட்டது....

அஞ்சாநெஞ்சனாய்
வாழ்ந்த்தவர்
இதோ---
மரணம் முன்னே தோற்று.........
புது ஜனனத்தைத் தேடி.....

பகலவன்
மறைந்து விட்டான்....
சந்திரன்
மெல்ல தலையைத் தூக்கி
மாலைப் பொழுதை
எட்டிப்பார்க்கிறான்....

கூண்டை
விட்டு ஒரு கிளி
சுகந்திரமாய்
பறப்பது போல -----

"உயிர்"

உடம்பென்னும்
சிறை கூண்டை விட்டு
சுகந்திரமாய் பிரிந்தது.....

பாவ உலகில்
பாடுபட்டு வாழ்ந்தவர்....

நிம்மதி பெருமூச்சுடன்
புறப்பட்டார்....

புது ஜனனத்தைத் தேடி........

Wednesday, November 7, 2012

நான் யார்????








நான் விசித்திரமானவன்


வித்தியாசமானவன்


யாராலும் பார்க்க முடியாத


அதிசயங்களை நேரில் பார்த்தவன்


பௌர்ணமி நிலவைப் பகலில் பார்த்திருக்கிறேன்,


செவ்வாய் கிரகத்தைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன்


குளிரும் சூரியனை அருகில் பார்த்திருக்கிறேன்


மேகத்தை மூடும் வானம் பார்த்திருக்கிறேன்


பூவின் சிரிப்பை நேரில் பார்த்திருக்கிறேன்


தென்றல் காற்றைத் தழுவிப் பார்த்திருக்கிறேன்


இரவின் நடுவில் விடியல் பார்த்திருக்கிறேன்


தூக்கம் இல்லாமல் தூக்கம் பார்த்திருக்கிறேன்


தூண்டிலே மீனாகிய விந்தையைப் பார்த்திருக்கிறேன்


மீன்களின் வலையில் சிக்கிப் பார்த்திருக்கிறேன்


மீன்களின் கண்ணீரைத் துடைத்துப் பார்த்திருக்கிறேன்


மீண்டும் ஒருமுறை பிறந்து பார்த்திருக்கிறேன்


மௌனம் பேசும் கவிதைகள் பார்த்திருக்கிறேன்


கவிதை பேசும் மௌனங்கள் பார்த்திருக்கிறேன்


கனவை கனவில் தேடிப் பார்த்திருக்கிறேன்


இத்தனைப் பார்த்தும் என்னை "நான்" பார்த்ததில்லை

வில்லாளிக்குள் விளைந்த வித்தை-பாகம் 2



ஆச்சர்யம்..அங்கே ....யாரது ?

அதே நீல வண்ண முகம்.. மயில் இறகு, கொண்டையில். அருகில் ஓடினான்.



"சாமி! சாமி!!"



அந்த உருவம் நின்றது..



"நீங்க யாரு சாமி? .. நீங்க தான் கடவுளா? உங்களை அடிக்கடி எனக்குள்ளே பார்த்து இருக்கேன்."


"கடவுளா? நானா? எனக்குத் தெரியாது! என்னை எல்லாரும் கண்ணன் என்றும் கிருஷ்ணன் என்றும் சொல்வார்கள்"


முகத்தில் மெல்லிய புன்னகை இழைந்தோடியது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது..


"அப்ப நீங்க கடவுள் இல்லையா?"


மறுபடி புன்னகை.


"தெரியாதப்பா... கடவுள் எல்லாரிடமும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.. அப்படிப் பார்த்தால்.. நீயும் கடவுள்தான்; நானும் கடவுள்தான்"


"என்ன சாமி, அப்ப நான் கூட கடவுளா? அப்ப சாமி சிலை எல்லாம் எதுக்கு?"


"அது தன்னை அறியாதவர்களுக்கு."


"எப்படி என்னை நானே தெரிஞ்சிக்கிறது?"


"தியானம்.. நீ தினமும் காலையில் கண்மூடி செய்வாயே அது. அதை செம்மைபட செய்தால் உன்னில் கடவுளை உணரலாம் அதற்கு மனது கட்டுப்படவேண்டும்."


"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"


"புலால் உணவைக் குறை. மனதுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. மாமிச உணவு மனதை அலைபாயச் செய்யும்"


"தியானம் செய்ய எதாவது விதிமுறைகள் இருக்கா சாமி?"


கண்ணன் சொல்லச் சொல்ல ஏகலைவன் வாய்பொத்திக் கேட்டுகொண்டு இருந்தான். மறுபடி ஒரு சிறு கீதோபதேசம் அரங்கேறியது.


"என் கட்டை விரல் குரு கேக்கும்போது உன்னைக் கேட்டேனே கொடுக்கவான்னுட்டு, அது இல்லாம எனக்கு எவ்வளோ பிரச்சினை.. சரியா வேட்டை ஆட முடியலை. நீ வேண்டாம்னு சொல்லியிருக்கக் கூடாதா"


ஏகலைவன் ஆதங்கத்துடன் கேட்டான்


கண்ணன் கண் சிமிட்டினான்..


"நான் வேண்டாம் என சொல்லியிருந்தால் மறுத்திருப்பாயா?"


ஏகலைவன் மௌனித்தான்.


என்னவாயிருந்தாலும், யாராக இருந்தாலும் குருவின் கட்டளையை அவன் நிறைவேற்றி இருப்பான். அது நிச்சயம்.

"சரி சாமி அது கெடக்குது, என் குரு சாமி செய்ஞ்சது சரியா"


கண்ணன் மௌனித்தான்; தன் நினைவைப் பின்னோக்கிச் செலுத்தினான். சகுனி தன்னுள்ளே குமைந்து கொண்டு இருந்த காட்சி தெரிந்தது. சகுனியின் வார்த்தைகளும் நினைவில் வந்தது.


"இந்த துரோணர் சும்மா இருக்கமாட்டாமல் அவன் கட்டை விரலைக் காணிக்கையாய் கேட்டு விட்டார். அர்ஜுனனுக்கு சரியான எதிரி கிடைத்தான் என நினைத்திருந்தேன்.. எல்லாம் பாழாய்ப் போனது"


கண்ணனுக்கும் சகுனிக்கும் மட்டும் தெரிந்த உண்மை இது. இதைக் கண்ணன் சொல்ல விரும்பவில்லை.


"நடந்தது, நடப்பது நடக்கப்போவது எல்லாம் நிச்சயிக்கப்பட்டது. எதுவும் யாராலும் மாற்ற முடியாது. நிகழ்வுகளின் நன்மை தீமை காலத்திற்கேற்றவாறு மாறுபடும். சரியும் தவறும் அந்த நேரத்துக்கேற்றவாறு மாறுபடும் இது உலக நியதி."




ஏகலைவன் மகன் குறுக்கிட்டான்.


"சாமி, அம்பு வுட்டுக் கொல்லும் போது எல்லா உசுருகளுக்கும் வலிக்கும் தானே.. எல்லா உசுரும் சமம்னு நீங்க சொல்றீங்க .. அப்படின்ன விலங்குகளைக் கொல்றது பாவம் இல்லையா??"


கண்ணன் சிறுவனிடம் திரும்பினான்.


"மகனே.. உணவுக்காகவும் தற்காப்புக்காவும் கொல்வதில் தவறில்லை. ஆனால்..."


சிறுவன் வெகு உன்னிப்பாக கவனித்தான்


"அதிகம் வதைக்கவிட்டுக் கொல்லக்கூடாது. அதுதான் பாவம்"


"சரி சாமி"


இருவரும் கண்ணன் காலடியில் வீழ்ந்து வணங்கினார்கள்..


"நாங்க வரோம் சாமி"


"நானும் போகிறேன்"


o o o


மறுநாளில் இருந்து ஏகலைவன் அந்த மரத்தடி விட்டு அதிகம் வருவதில்லை. மகனின் விற்பயிற்சி நேரம் மற்றும் உணவு
நேரம் போக அந்த மரத்தடியே கதியாய் இருந்தான். புலால் உணவு அறவே துறந்திருந்தான். வேட்டைக்குப் போவது எல்லாம் சிறுவன்தான்.


சிறுவனுக்கும் கண்ணன் மேல் ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு.. எங்கோ தேடி அலைந்து மயிற்பீலி கொண்டுவந்தான். கண்ணனைப் போலவே தலையில் சொருகிக்கொண்டான். வெகு நேரம் குளக்கரையில் தன் பிம்பத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்


அன்றும் அவன்தான் வேட்டைக்குச் சென்றது, ஒரு மானை துரத்தி கொண்டு வெகுதூரம் கானகத்தில் சென்றுவிட்டு இருந்தான். எல்லாம் முடித்து திரும்ப அந்திப்பொழுது ஆகி இருந்தது. அட இது என்ன புது மிருகம்.. சற்று நீல நிறமாய், காது சென்னிறமாய். அருகில் சென்று பார்க்கலாமா? அந்தி கருக்கிருட்டில் சரியாக எதுவும் தெரியவில்லை. வேண்டாம்.. அந்த மிருகம் பயந்து ஓடிவிடலாம் இல்லை கொடியமிருகமாய் இருந்து நம்மைத் தாக்கவும் செய்யலாம்.... அருகில் செல்ல சிறுவன் பயந்தான்.


நேராக தந்தையிடம் ஓடினான்.. தான் பார்த்ததை எடுத்துச் சொன்னான்.


"நீ இங்கேயே இரு!"


மகனுக்கு ஆணையிட்டு அவன் குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடந்தான். அதென்ன புது மிருகம்.. நமக்குத்தெரியாமல்... யோசித்துக்கொண்டே அந்த இடம் சேர்ந்தான்.


அய்யோ இது என்ன கொடுமை.. இங்கே சாய்ந்து கிடப்பது கண்ணனைப் போல் இருக்கிறதே.. நம் மகன் தெரியாமல் கொன்றிருப்பானோ? மனம் பதைத்தான். அருகில் சென்று உற்று நோக்கினான். மாலை முழுதும் மங்கி இருந்தது. பக்கத்தில் இருந்த சருகுகளை ஒன்று குவித்து.. இரு கற்களை உரசி நெருப்பு உண்டாக்கினான் வெளிச்சத்தில் நன்றாக ஆராய்ந்தான். தன் மகனாய் இருக்காது.. அவன்தான் கண்ணனை பார்த்திருக்கிறானே. அதுவும் இல்லாமல் இது வெகு ஆழமாய் பாய்ந்திருக்கிறது. சிறுவனால் இதை செய்திருக்க முடியாது. ஆனால் யார் கண்ணனைக் கொன்றிருப்பார்கள்.


அவனுள் போர்க்களக் காட்சி ஓடியது. பாரதப் போர் பற்றி அடிக்கடி நாடு சென்று திரும்புவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருந்தான், என்ன கொடூரமானவர்கள் இந்த மனிதர்கள். ஒரு சிறுவனிடம் பத்து பேர் சேர்ந்து கொண்டு போர் புரிவார்களா? நினைக்கையில் அந்த சிறுவன் மேல் அபரிதமான ஒரு மரியாதை தோன்றியது. தன் குருவைக் கொன்ற த்ருஷ்டதுய்மன் மேல் கோபம் வந்தது. என்ன மனிதன் இவன்? யோக நித்திரையில் அமர்ந்த ஒருவனை கொல்வது எத்தனை பாதகமான செயல் என்று.


கண்ணனைக் கொன்றது ஒருவேளை போர்களத்தில் தப்பிய எதிரிகள் வேலையாய் இருக்குமோ?


கண்கள் பனித்தன.. யாராய் இருந்தால் என்ன, என் கண்ணன் இனி இல்லை, கண்ணனைப் பார்த்து கொண்டே அழுது கொண்டு இருந்தான்.


"நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நிச்சயிக்கப்பட்டது. எதுவும் யாராலும் மாற்ற முடியாது."


கண்ணனின் உபதேசம் மனதில் வந்தது. மரணமும் தவிர்க்க முடியாதது. அது உரிய நேரத்தில் அனைவர்க்கும் வந்து சேரும். கண்ணன் உடலுக்கு வேண்டிய மரியாதையைச் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பினான்.


மனம் முழுக்க கண்ணனின் எண்ணம் மட்டுமே வியாபித்து இருந்தது.


அந்தி நேரத்தில் யாரோ ஒரு வேடன் ஏதோ ஒரு மானின் மேல் அம்பு எய்ததும், அது குறி தவறி மான் நின்றிருந்த இடத்தின் பின்னால் சற்றே மறைவாக படுத்து இருந்த கண்ணன் மேல் பாய்ந்த்ததும், எய்தவனுக்கும் தெரியாது.. அது பாவம் இவனுக்கும் தெரியாது.


o o o-


"என்னதுப்பா அந்த மிருகம்?"


ஏகலைவன் யோசித்தான். நேற்று கண்ட ஒருவன் இன்று இறந்து விட்டான் என்று சொல்வதா?.. இல்லை பொய் சொல்வதா? உண்மை சொன்னால் மகன் தாங்குவானா? கண்ணன் என்றால் மகனுக்கு ரொம்பப் பிடிக்குமே? மெல்ல தெரிந்து கொள்வான்.. கண்ணன் சிந்தனை, இந்த உள்ளத்தை வேறு திசையில் திருப்பக்கூடாது.


"எனக்கு எதுவும் தெம்படலையே.. நீ எதைப் பார்த்தியோ என்னமோ.. போய்த் தூங்கு"


"ஆமாம் நீ தினமும் அந்த மரத்தடியில போய் தூங்குறியே.. வீட்ல தூங்கக் கூடாதா?"


"அது தூக்கம் இல்லையப்பா... அதன் பெயர் தியானம்.."


"அப்படின்னா ... "


ஏகலைவன் விவரிக்க தொடங்கினான். அந்தப் பிஞ்சு உள்ளம் மெல்ல மெல்ல அதை உள்வாங்கத் தொடங்கியது. ஈரக் களிமண்ணை போன்று மனதிருக்கும்போதே தேவையான வடிவத்தை வடிக்கவேண்டும். அது கடினப்பட்டு கல் போலானபின் ஏதும் நடக்காது. ஏகலைவன் சொல்லச் சொல்ல அவன் மகனின் மனம் சரியான வடிவமைப்புக்கு மாறத்துவங்கியது.


இதோ மற்றும் ஓர் நல்ல உள்ளத்தின் சந்ததி உருவாகிக் கொண்டு இருக்கிறது.







நன்றி; ஐயப்ப கிருஷ்ணன்

வில்லாளிக்குள் விளைந்த வித்தை-பாகம் 1



மார்கழி மாத பனிபடர்ந்த காலைப் பொழுது, 




மார்கழிக் குளிரிலும் வியர்வையில் குளித்த பசும்புற்கள். மரங்கள் அடர்ந்த காடு. ஆங்காங்கே மூங்கில் கழி கொண்டு இரவு நேரத்தில் விலங்குகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள,,,, மரத்தின் மேலும் மரத்தினிடையிலும் கட்டப்பட்ட குடில்கள். விஸ்வாமித்ரப்புற்கள் கொண்டு வேயப்பட்டக் கூரை. வெய்யில் காலத்தில் வெப்பமோ,மழை காலத்தில் குளிரோ அதிகம் தாக்காத வண்ணம் கட்டப்பட்ட குடில்கள். இயற்கையோடு இயைந்து வாழும் வேடுவர் குலம் வாழும் காடு.



"அப்பா! அப்பா!!"

தந்தையுடன் வேட்டைக்குச் சென்று கொண்டு இருந்த வேடுவகுலச் சிறுவனின் குரல். இடையில் கட்டப்பட்ட மான் தோல். தோளில் அவன் வயதுக்கேற்றவாறு செய்யப்பட்ட வில் மற்றும் அம்பராத்தூளி.

"அங்க பாரேன் சாமி ஒருத்தர் அதி காலையிலேயே உக்காந்து தூங்குறாங்க "

சிறுவன் சுட்டிì காட்டிய இடத்தைப் பார்த்தார் தந்தை

ஒரு முனிவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். வெளுத்த தாடி, ஒட்டி உலர்ந்திருந்தாலும் ஆரோக்யமான உடல். முகத்தில் காணும் ஒருவித தேஜோப்பிரகாசம் காணும் யாவரையும் வணங்க செய்யும் தோற்றம். "அவங்க தூங்கலை கண்ணு, அவங்க சாமி கும்புடுறாங்க வா போய் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்" அப்பா அவனை அழைத்து சென்றார்.

அவர் கண்விழிக்கும் வரை காத்திருந்தனர்

"ஏன் சாமி நீங்க கண்ணு மூடிட்டு என்ன பண்ணிங்க" சிறுவனின் கேள்வி

எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறுவனின் கண்களில் பளிச்சிட்டது. குவிந்த கை அவன் தந்தையை போலப் பணிவு

"மகனே அதற்குப் பெயர் தியானம்.. கடவுளைச் சேரும் வழி"

"அப்படின்னா எனக்கும் சொல்லி தருவிங்களா சாமி?"

முனிவர் ஆதரவாய் சிறுவனின் தலை தடவினார்.

"உன் ஆர்வத்திற்கு எதையும் நீ சீக்கிரமாகக் கற்று கொள்வாய்; இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்"

"அப்ப சாமி, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க"

"கொஞ்சம் *பஞ்சாட்சரம் தாங்க சாமி. நாங்க கெளம்பறோம் சாமி"



*(பஞ்சாட்சரம் = விபூதி ) 




வேடுவன் தன் மகனை அழைத்து கொண்டு சென்றான்.....


காலம் தன் கடமை மறக்கவில்லை. அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடங்கள் உருண்டோட சிறுவன் இப்போது இளங் காளை. யானை பலத்துடன் தோள் தினவெடுத்து நின்றான். வேடுவக் கூட்டம் கூட சற்று அதிகரித்திருந்தது.

"ஏகலைவா!". தந்தை அழைத்தார். சுற்றிலும் கவலை தோய்ந்த பல முகங்கள்.

"என்னப்பா?"

"எனக்கு.. வயசாய்டிச்சி.. இனிமே நீதான் என்னோட பொறுப்பெல்லாம் பார்த்துக்கனும்" மரணப்படுக்கையில் இருந்து கொண்டு அவன் தந்தை சொன்னார்.

"ஆனா எனக்கு எதுவுமே தெரியாதப்பா."

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்" தந்தையின் கடைசி வார்த்தை.

"சரிப்பா ஆன கடவுள் யாருப்பா?" அவன் சொன்னதைக் கேட்பதற்கு தந்தை உயிரோடு இல்லை. எல்லாம் முடிந்து விட்டது

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ஏகலைவன் தலைவன் பதவி வேண்டாம் என்று சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆகப்போகிறது.. ஊரெல்லாம் இதே பேச்சு

"ஏ புள்ளே, நம்ம தலைவரு பையன் ஏன் இப்படி இருக்குது.."

"அப்பா போன வருத்தம் புள்ளைக்கு இருக்காதா? எல்லாம் சரியாய்டும்.. நீ வா சாப்ட"

"நம்ம ஏகலைவன் பைத்தியம் மாதிரி திரியிறானே யாரு இனிமே தலைவரு?"

"அட நம்ம மருதப்பன் இருக்காருல்ல.."

"என்ன இருந்தாலும் இவருதாம்புள்ள வரணும்."

பல விமர்சனங்கள். ஏகலைவன் பித்தன் போல காடு மேடு எல்லாம் திரிந்தான். எதிர்வரும் எதையும் அறியவில்லை. யார் பேசியதையும் கேட்கவில்லை.

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்"

அப்பாவின் வார்தைகள் மட்டும் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் கடவுளை எப்படிப் பார்ப்பது?? எப்படிக் கேட்பது? அதுதான் புரியவில்லை.

"மரத்தடியில் உக்காந்திட்டு இருப்பாரே அந்த முனிவரைப் போய்ப் பார்த்தா என்ன?.."

மறுபடி கானகத்தை நோக்கி ஓடினான். முனிவரைத் தேடி அலைந்த்தான். அடடா அவரையும் காணலையே. அவர்கள் செய்தது போல நாமும் செய்தால் என்ன? அவர் இருந்த இடத்திலேயே கண்மூடி அமர்ந்து யோசித்தான்.

"அப்பாவின் பொறுப்பு மிகப் பெரியதாயிற்றே, அவர் பெரிய வேட்டைக்காரர்.. அவரை நம்பி பல குடும்பம் இருந்திச்சி.. இப்போ எல்லாம் நான் தானே பார்த்துக்கனும்.. எனக்கு அவ்வளவா வேட்டையாடத் தெரியாதே.. சே இந்த சாமி இங்க தானே இருந்தார், எங்க போனார் தெரியலை.. இருந்தா அவரையாவது கேக்கலாம்.. பல எண்ணங்கள் மனதுள் ஓட இன்னும் கண் மூடியே அமர்ந்திருந்தான்.

மனத்திற்க்கும் சுவாசத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. சுவாசம் கட்டுப்பட, சீரான மூச்சு மனதைக் கட்டுப்படுத்தும். கட்டுப்பட்ட மனதைத் தொடர்ந்து உற்றுப் பார்க்க மனம் வெளி நினைவுகளில் இருந்து விடுபடும். வெளி நினைவுகள் விடுபட்டால் உள்ளே ஒரு அமைதி தோன்றும். குருவருள் இன்றி அது யாருக்கும் எளிதாக வராது. அவனுக்கு எந்த குருவின் உதவியும் இல்லாமல் தானாக வந்தது. அது கடவுளின் அருள். தான் தியானிப்பது தெரியாமலே தியானத்தில் ஆழ்ந்தான்.

அவன் எப்போது தன்னை மறந்தான், அவனுக்கே தெரியவில்லை. விழிப்பு வந்த போது பொழுது அந்தி சாய்ந்து விட்டு இருந்த்தது. மனம் சற்று தெளிவாக இருப்பது அவனுக்கே புரிந்த்தது. ஏதோ ஒரு முகம் மட்டும் மனதில் வந்து போனது. அந்த முகம் தன்னை தலைமை ஏற்க சொன்னதாய் ஒர் உணர்வு இருந்தது அவனுக்கு. தினமும் அந்த இடத்தில் அமர்ந்து யோசிப்பது என முடிவு செய்தான். மெல்ல வீடு திரும்பினான்..

"எலே எங்க போன?.. இப்ப தான் ஊரு சனம் வந்து உன்னைத் தலைவரா தீர்மானமா முடிவு பண்ணிட்டு போனாங்க.. நீ பாட்டுக்கு நாளைக்கு எல்லார் முன்னாடியும் ஆவாதுன்னு சொல்லாதே.. இது பரம்பரை பரம்பரையா வர்றது. நீ மாத்திப்புடாதே.. அப்புறம் இந்தக் கிழவி சும்மா இருக்க மாட்டேன், ஆமாம்"

பாட்டியின் மிரட்டல் காதில் விழுந்தாலும் மனதில் விழவில்லை.

"சரி பாட்டி."

அவன் அறை நோக்கி சென்றான். அங்கே அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது எதோ ஒரு முகம் தெரிந்ததே.. யாருடையது.. சற்றே ஒடிந்த முகம் ஆனால் புன்னகையுடன் எளிதில் வசீகரிக்க கூடிய முகம்.. அந்தத் கையில் கூட ஏதோ, ஆம்! புல்லாங்குழல் இருந்தது.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அந்த முகத்தை நினைத்துக்கொண்டே உறங்கி விட்டான்.

ஏகலைவன் தலைவன் ஆகி இதோ பல மாதங்கள் ஆகி விட்டது. தந்தை சொல்லிக் கொடுத்த வில் பயிற்சி அவனுக்குப் போதாது போல் உணர்வு..

"எத்தனை பேர் என்னை நம்பிக்கினு இருக்கும் போது.. வெறும் வேட்டையாடறதுக்கா நானு? அதை இங்கு நெறைய பேர் செய்வாங்களே.. இவர்களைக் காப்பாத்த நான் நல்ல வில்லாளி ஆவணும். ஆனா யார் கிட்ட போய் கேட்கிறது? யார் சொல்லித் தருவாங்க... அடடா யோசிச்சிக்கினே ரொம்ப தூரம் வந்துட்டேன் போல் இருக்கிறது."

ஏகலைவன் திரும்ப எத்தனித்தான்..

நடுப்பகல், பசித்தது. எதிரே மாமரம் பொன்னிறத்தில் பழங்களுடன். அருகில் சென்று சில பழங்களை பறித்துச் சாப்பிட்டான். அந்த மரத்தின் பழம் ஓரளவு பசி தீர்த்தது.. அட இதென்ன ஆச்சர்யம்.. மரத்தின் அத்தனை இலைகளிலும் ஓட்டை? கீழே சிதறி கிடக்கும் அம்புகள்.. யார் செய்தது இந்த அதிசயத்தை.. யாரோ வருவது தெரிந்தது ...

"ஏன் சாமி இது என்ன புதுசா மாமரத்துல எல்லா எலையிலயும் ஓட்டை.. எப்படி வந்துச்சி?" எதிர்பட்டவரிடம் கேட்டான்..

"அதுவா.. நம்ம இளவரசர் அர்ஜுனன் இருக்காரில்லை அவர் பண்ணது.. இந்த வயசிலே வில்லு வச்சிட்டு என்ன ஒரு வேகம், தெகச்சி போய்ட்டேன் போ.. அவங்க குருவே அசந்துட்டாருன்னா" .. கேட்டதும் ஏகலைவன் மனம் குதூகலித்தது.

இவர் தான் என் குரு. இவரிடம் தான் நான் வில் கற்று கொள்ள வேண்டும்..

"ஏன் சாமி அவர் பேரு... "

"அட இது தெரியாதா தம்பி, நம்ம துரோணரப்பா, புது ஆச்சார்யார்"

"ரொம்ப நன்றிங்க சாமி!" உள்ளம் குதூகளிக்க துள்ளலுடன் நடந்து சென்றான்



அது அரச குமாரர்களுக்கான பாடசாலை. நிறைய மாணவர்கள். தயக்கத்துடன் வெளியே இருந்தான். அவனுடைய வித்யாசமான தோற்றம் உள்ளிருந்த்த மாணவர்களை கவர்ந்திருக்க வேண்டும். சிலர் பாடத்தை விட்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தனr. சில கண்கள் நகைத்தன. ஆச்சார்யாரின் பாடம் நின்றது.

"யாரப்பா நீ?"

"சாமி, எம்பேரு ஏகலைவன்"

"சொல்லப்பா, என்ன வேண்டும்?"

"சாமி நான் எங்க காட்ல இருக்கிற வேடர் தலைவனுங்க.. எங்க கும்பலை நான் காப்பாத்த எனக்கு நல்ல வில் பயிற்சி வோணும் சாமி, சாமி சாமி இங்க பாருங்க சாமிக்கு தட்சிணையா பாருங்க மலை தேனு .. ரொம்ப மேல இருந்துதுங்க சாமி.. உங்களுக்கா நானே எடுத்தேன் சாமி.. இங்க பாருங்க உயர்ந்த சாதி புள்ளி மான் தோலு, அப்புறம் இது ரொம்ப முத்துன சந்தனம், இது எல்லாம் எடுத்துகிட்டு எனக்கு வித்தை சொல்லித் தாங்க சாமி"

ஆச்சார்யார் அவனை உற்று பார்த்து கொண்டு இருந்தார்..

மிகுந்த வெகுளி முகம், உண்மை தவிர வேறொன்றும் பேசத் தெரியாத உள்ளம்.. மிகச்சிறிய வயது.. தனக்காக வித்தை கேட்காமல் தன் இனம் காக்க கேட்கிறான். இவன் வாழ வேண்டும்.. இவன் போன்றவர்கள் வாழத்தான் வேண்டும்.

"இல்லையப்பா... நான் இந்த அரச குமாரர்களுக்குத் தவிர யாருக்கும் சொல்லி தருவதில்லை என்ற விரதம் கொண்டு இருக்கிறேன்"

"சாமி அப்படி சொன்னா எப்படி.. நான் உங்களை நம்பி வந்துட்டேன்.. நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும்"

அர்ஜுனன் முகத்தில் கனல் தெரித்தது... இருந்தும் சும்மா இருந்தான்.. ஆனால் துரியன்..

"குருவே.. அரகுமாரர்களுக்கு இணையாய் ஒரு வேடுவன் பயில்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" துரியோதனன் வெளிநடப்பு செய்யும் வேகத்தில் இருந்த்தான்..

காலை முதல் துரோணர் அர்ஜுனனை வாழ்த்திப் பேசியது ஏற்கனவே மனதை அரித்திருந்தது. துரோணர் மெளனமாய் இயலாமையுடன் அந்த வேடுவன் தலை தடவி கொண்டு இருந்தார்..

"மகனே என்னால் உனக்குக் கல்வி சொல்லித் தர இயலாது.. சென்றுவா.."

வருத்தம் தோய்ந்த முகத்துடன் துரோணர் சொன்னார்.

"சாமி..."

"கடவுளைக் கேள் மகனே.. உனக்கு வேண்டியது கிட்டும்.. இப்போது நீ புறப்படு.. நான் பாடத்தைத் தொடர வேண்டும்.. நீ கொண்டு வந்த தட்சிணையையை எடுத்துச் செல்"

"இல்லை சாமி அது உங்களுக்காகக் கொண்டுவந்தது.."

கொண்டு வந்ததை அப்படியே வைத்துவிட்டு ஏகலைவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

"அர்ஜுனா எடு வில்லை.. அந்த மரத்தின் பின்னால் இருக்கும் பொம்மையை உன் ஒரு கணையால் வீழ்த்து!" பின்னால் குருவின் குரல் மெல்ல மெல்ல காதுகளில் ஒலி குறைந்து ஒலித்தது.



ஏகலைவன் தினமும் அமரும் மரத்தடி.. இப்போதும் கண் மூடி அமர்ந்திருந்தான். இப்போதெல்லாம் அந்த முகம் சற்று தெளிவாய் இருப்பதாய் உணர்ந்தான். தந்தையின் ஆணை மற்றும் குருவின் ஆணை.. கடவுளைக் கேட்க சொல்லி..

ஆனால் கடவுள் யாரென்று தெரியவில்லை. வெறும் சிலை வைத்து ஏதோ ஒரு உருவம் கொடுத்து வணங்குகிறோமே அது தான் கடவுளா? இல்லை அதைத் தாண்டி ஏதோ ஒன்று.. சிலை வெறும் வாயில். அதன் மூலம் கடவுள் நமக்கு அருள் செய்கிறார். உண்மையில் எது கடவுள்? அதுதான் யாரென்று தெரியவில்லை. ஒருவேளை அடிக்கடி மனதில் வந்து போகும் அந்த முகம்தான் கடவுளோ? அதையே கேட்டால் என்ன?

கட.......வுள்... கட......வுள்.. கட.......வுள்....

கடவுள் என்றதும் அவனுள் ஒரு பொறி தட்டியது. கடவுளை சிலையாய் வடித்துதானே கும்பிடுகிறோம், அந்த சிலை அருள் செய்யும் போது.. குரு அருள் செய்ய மாட்டாரா என்ன? மலர்ந்தான். குருவின் சிலை மெல்ல மெல்ல உருவானது. இராப்பகலாய் உழைத்தான்.. இதோ குருவின் சிலை தயாராகிவிட்டது. அடடா என்ன கனிவான முகம்.. என்ன ஒரு அருட்பொங்கும் பார்வை.. குருவைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவன் மனத்தின் அழகு..... சிலையில் வெளி வந்தது. பக்கத்தில் இருந்த மூங்கில் மரம் வளைந்து கொடுத்தது போல் இருந்த்தது.. எல்லாம் குருவின் ஆசிர்வாதம். அந்த மூங்கில் கொண்டு அழகான ஒரு வில் செய்தான்.


இரவு பகல் இல்லாத அசுரத்தனமான பயிற்சி. எல்லாம் வெகுவாய் இலகுவாய் வந்தது. இப்போது ஏகலைவன் சிறந்த வில்லாளி. சில நேரம் எதிர் வந்த பகையை வெகு இலகுவாய் ஒருவனாய் துரத்தினான். அவன் ஊரெல்லாம் அதே பேச்சு. இருந்தும் தினமும் அவன் செய்யும் தியானமும் குருவின் முன்னால் விற்பயிற்சியும் தவறுவதில்லை. இச்செய்தி அர்ஜுனன் காதில் தீயென விழுந்தது. பொறாமை மெல்ல உயிர்தெழுந்தது. அது குருவுடன் கானகம் செல்லத் தூண்டியது.

"குருவே இன்றைய பயிற்சியைக் கானகத்தில் வைத்து கொள்ளலாமா??"

குருவுக்கும் தெரிந்திருந்தது ஏகலைவன் புகழ். எப்படிக் கற்றுகொண்டான் இத்தனை அஸ்திரப்ரயோகம்.. நாம் தான் மறுத்து விட்டோமே, வேறு யாரவது? ஒருவேளை கிருபர் சொல்லித் தந்திருப்பாரோ.. சே சே.. இருக்காது.. சரி நேரில் சென்று கேட்டால் என்ன...

"சரி அர்ஜுனா.. அப்படியே ஆகட்டும்" ஆச்சார்யார் சம்மதித்தார்

ஒரு படை போல் திரண்டு சென்றனர் குருவும் மாணவர்களும். கூடவே கானகத்தில் வீழ்த்திய விலங்குகளை இழுத்து வர ஒரு நாயுடன்.

வழக்கம் போல் தியானத்தில் அமர்ந்திருந்தவன் காதில் தான் செல்லமாய் வளர்த்த மானின் அபயக்குரல். எழுந்து சென்று பார்த்தான்.. அங்கே ஒரு நாய் இடைவிடாது குரைத்து மானை பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஒரே ஒரு கணை.. நாயின் குரல் அடங்கியது. பின்னலிட்டு தைத்தார்போல் அதன் வாய் அந்தக் கணையால் கட்டுண்டது.

இது என்ன புது நாய், யாருடையது?.. விளங்காமல் அதன் பின்னே சென்றான். அங்கே, துரோணர் அர்ஜுனனுக்கு பயிற்றுவித்துக் கொண்டுஇருந்தார்.

"அர்ஜுனா.. இந்த அஸ்திரம் எந்த விலங்குகளின் வாயையும் கட்டக் கூடியது.. இதைத் தெரிந்தவர்கள் அதிகம் கிடையாது.. இதை உனக்கு சொல்லித் தருகிறேன்.. கேள்.. நான் சொன்ன மந்திரம் உச்சரித்து இந்த கணை செலுத்து.. "

அர்ஜுனன் கணை எய்ததோ ஒரு புலியின் மேல்.. வாய் தைக்கபட்டு வந்து எதிர் நின்றதோ அவன் அழைத்து வந்த நாய். தவறாய் எய்துவிட்டோமோ.. ஆனால் புலியும் வாய் கட்டுண்டு கிடந்தது. இது வேறு யாரோ எய்த அம்பு.



அர்ஜுனன் கோபம் கனலாய் இருந்தது..

"குருவே.. எனக்கும் மேலான மாணவன் உங்களுக்கு கிடைத்துள்ளான் போலும்.. " பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அழுகையை விட கொடிய ஆயுதம் இல்லை. அர்ஜுனன் அதை அந்த நேரத்தில் நன்றாக பயன் படுத்திக்கொண்டான். கோபம் அழுகையாய் மாறியது..

துரோணர் பதைத்துப் போனார். அரச குல மக்கள் அழுவது நல்லதல்லவே... அது தனக்குத் தீங்காய் அல்லவா முடியும்... துரோணர் சுற்றிலும் பார்த்தார். அங்கே நிற்பது யார்?.. அடடா இது அந்த வேடுவன் அல்லவா.. அவனுக்கு எப்படித் தெரிந்தது இந்த வித்தை....

"நீ ஏகலைவன் தானே?.. இங்கே வா!"

அவர் அழைப்புக் குரல் கேட்டதும் அவர் காலடியில் இருந்தான் ..

"ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி!"

"எழுந்திரு மகனே.. நீடூழி வாழ். இந்த அத்திரப் பிரயோகம் மிகவும் அரிதாயிற்றே, உனக்கெப்படித் தெரிந்தது"

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் சாமி!"

"நான் உனக்கு எதுவும் சொல்லி தரவில்லையே, பின்பு எப்படி ??"

அவன் அந்த சிலை பற்றி விவரித்தான். அதற்குள் ஊர் திரண்டிருந்தது.





குரு அர்ஜுனன் முகம் பார்த்தார்.. தலை கவிழ்ந்து பொறாமையுடன் கோபத்தை மனதுக்குள் அடக்கிக் கொண்டு கண்களில் நீருடன் இருக்கும் அவனைப் பார்க்கும் போது முதன்முறையாக அவன்மேல் சிறு வெறுப்பு ஏற்பட்டது. இருந்தும் இவனால் தான் என் சபதம் நிறைவேற வேண்டும்... துரோணரின் மனமும் முகமும் இறுகியது.

"ஏகலைவா.. குருதட்சிணை இல்லாமல் பயில்வது தவறல்லவா... "

"என்ன வேண்டும் சொல்லுங்க சாமி.. என் உசுரு வோணும்னா கூட குடுத்துடுவேன்."

"உன்னுடைய வலது கை பெருவிரல் வேண்டும்"

பேரதிர்வுக்குள்ளான ஊர் மக்கள் கோபத்தால் ஏசினர்..

"ஏகலைவா இந்தாளு உனக்கு ஒண்ணும் சொல்லி தரலே.. நீயா கத்துக்கிட்டே.. அதனால நீ சும்மா எங்க கூட வா.. அவங்களை நாங்க பாத்துக்கறோம்"

அர்ஜுனன் கை வேகமாய் வில்லின் பக்கம் போனது.. ஏகலைவன் அலட்சியமாய் அர்ஜுனனைப் பார்த்தான். பின் தன் கூட்டத்தினரிடம் திரும்பினான்

"எல்லாரும் சும்மா இருங்க.. கடவுளை சிலையா வச்சித் தான் கும்புடுரோம்.. அதனால கடவுள் நமக்கு அருள் செய்யலைன்னு ஆயிடுமா அது மாதிரி தான் இதுவும் "

கண்ணை மூடினான்.. புல்லாங்குழலுடன் புன்னகை தவழும் முகம் பளிச்சிட்டது..

"சம்மதமா" கேட்டான்..

அந்த முகம் சம்மதம் எனத் தலையாட்டியது..

இடையில் இருந்த குறுவாள் மீதிப் பணி செய்தது. குருவின் காலடியில் அவன் பெருவிரல் துடித்தது. துரோணரின் இறுக்கமான முகம் எந்த சலனமும் இல்லாமல் அர்ஜுனனைப் பார்த்தது..

அர்ஜுனன் மகிழ்சியில் தத்தளித்துக்கொண்டு இருந்தான்.

அட இது என்ன துரோணச் சிலையின் கண்களில் நீர் துளிர்ப்பு?? காலைப் பனித்துளி இன்னும் காயலையோ இல்லை துரோணரின் மனத்தின் அழுகை சிலையின் கண்ணீராய் வெளிவந்ததோ? எதையும் பார்க்கும் நிலையில் ஏகலைவன் இல்லை. வலி உயிர் வரை பாய்ந்த்தது. மெல்ல மெல்ல நினைவிழந்தான்.



ஏகலைவனுக்கு மணமாகி ஒருகுழந்தைக்கு தந்தை ஆகிவிட்டான். தந்தையை கேள்வி கேட்கும் வயது அவன் குழந்தைக்கு. கேள்வி கேட்பது குழந்தைகள் குணம். எதையும் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்ளும். மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் வெளிப்பார்வைக்கு அர்த்தமற்றதாகத் தோன்றினாலும் ஏதேனும் தேடல் உள்பொதிந்து இருக்கும். இந்தப் பருவத்தில் எழும் கேள்விகளும் அதற்குக் கிடைக்கும் பதில்களுமே அவர்கள் வாழ்க்கையின் அத்திவாரங்கள்.

மகனுக்கு முதல் விற்பயிற்சி, குழந்தையின் கேள்விகளுடன் ஆரம்பம் ஆனது.


"முதலில் எந்த விலங்கு மீதும் அனாவசியமாக அம்பு செலுத்தக் கூடாது"

"அப்பா எது அவசியம்? எது அனாவசியம்?"

"உணவுக்காகவும் தற்காப்புக்காகவும் செய்வது அவசியம், விளையாட்டுக்காவும் வெறி கொண்டு கொல்வதும் தவறு"

"உணவுக்காகக் கொல்வது தவறில்லையா?"

"அது நம் குலதர்மம்."

"உங்கள் கட்டை விரல் எங்கே?"

"குருவுக்குக் காணிக்கையாய் வெட்டிக் கொடுத்துவிட்டேன்"

"அப்போது உங்களுக்கு வலிக்கவில்லலையா?"

"வலிச்சது.. மிகவும் வலிச்சது கண்ணா, உயிர் போறது போல வலிச்சது"

"கட்டை விரலுக்கே உனக்கு அவ்வளவு வலித்ததா?"

"ஆமாம் கண்ணு "

"அப்படியானால் நாம் அம்பு எய்து கொல்லும் உயிர்களுக்கும் வலிக்கும் தானே.. அது பாவமில்லையா?"

ஏகலைவன் அயர்ந்தான். என்ன சொல்வது.. கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றா? இல்லை கொல்லுதல் கூடாதென்றா?.. கொல்லாமல் உயிர் வாழ்வதெப்படி? சற்று நேரம் மௌனமாய் இருந்தான். அந்தக் கேள்வி வெகுவாய் பாதித்தது. சற்று நேரம் தேவையான அடிப்படை வித்தை சொல்லித்தந்து விட்டு அதனை மறுபடி செய்யச்சொல்லி சரிபார்த்தான். பரவாயில்லை.. வேகமாய் கற்றுக் கொள்கிறான்.. மனம் திருப்தி அடைந்தது.

மகனை அழைத்துக் கொண்டு அவன் அமரும் மரத்தடி சென்றான். இலை உதிர் காலம்.. மரம் எதையோ பறி கொடுத்தார் போல சோகமாய் இருப்பது போல் தெரிந்தது. அவன் மனம் இன்று ஒருமுகப்படவில்லை.. பிள்ளையின் கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது. சற்று காலாற நடந்தால் என்ன.. எழுந்து நடந்து சென்றான்.

அப்போது .....

( தொடரும் )






Saturday, November 3, 2012

"நான்"இருப்பின் நிஜம்


"நான்"இருப்பின் நிஜம்

உனைக் காண
எனைத் தொலைத்தேன்

புதியன கூடப்
பழையன கழிந்தேன்

தோல்விகளின் தோலுரித்து
காலத்தை வென்று
திமிர்ந்த ஞானச் செருக்கோடு
பூமியில் நடந்தேன்

தீட்சண்ய விழிகளில்
உன் நிஜங் கண்டு
நமைப் பிரிக்க எழுந்த
மாயச் சுவர்களைப் பிளந்து
உனைக் கூட வந்தேன்

ஊன விழி மூடி
ஞான விழி திறந்து
இல்லாது
நீ இருப்பதை உணர்ந்து
இருப்பதாய் நடிக்கும்
ஆணவத்தின் ஆர்ப்பாட்டம் முடித்தேன்

சுழியும் நெற்றியுள்
உன் முழுமை கண்டு
தொண்டையுள்
வழியும் சுழிக்குள்
என் மெய் சிக்க
பொய்யுலகக் கணக்கைக்
கழிந்தேன்

இருள் சேர் இரு வினையின்
கருவினைக் கலைத்து
ஒருமையில்
உனைச் சேர்ந்தேன்

பொய்த் தளைகளிலிருந்து
கவனம் கழல
மெய்ப் பொருளாம்
உன்னில் இலயித்தேன்
சத்குருவே!!!!
கனவுகள் கலைந்த
ஞான விழிப்பில்
பேதங்களற்று
நீயானேன்
"நானே"