Total Pageviews

Wednesday, February 22, 2012

வாழ்த்துங்கள் வளர்கிறோம்......

சிவராத்திரியன்று நடந்த அரவிந்தின் யோக நிகழ்ச்சிக்கு நேரிலும்,அலைபேசியிலும், மின்னஞ்சலிலுமாக வாழ்த்துத் தெரிவித்த அன்பு உறவுகளுக்கும் சத்குருவின் பெயரால் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறது யோகயுவகேந்திரா.........
 
Monday, February 13, 2012

சிவ ராத்திரி....invitationயோகங்கடந்த மெய்யுணர்வில் திளைக்க 
அன்புடன் அழைக்கிறதுயோக யுவ கேந்திரா 

கண்ணப்பன் கதை.........சிவராத்திரி ஸ்பெஷல்..


இலை அமரும்
கிளை ஒன்று
மழை அமரும்
முகிலை முட்டும்
மரங்கள் அடர்ந்த காடு
அந்தக் காடு தான் -நம்
கதாநாயகன் வீடு

அவன் பெயர் கண்ணப்பன்
கண்ணப்பனுக்கு அப்பன்
அந்த விண்ணப்பன்
தென்னப்பன் என்று
தேவாரம் புகழும்
மண்ணப்பன்!

இவன்
அடவி விலங்கை
அம்பால் அடிப்பவன்
இருந்தாலும் அடியவர்
பிறவி விளங்கைப்
பிய்க்கும் பரமனின்
அன்பால் துடிப்பவன்

புலி உலவும் காட்டில் வாழ்ந்தாலும்-இவன்
அம்புலி உலவும் ஐயனை மறவான்
கரி உலவும் காட்டில் அலைந்தாலும் -இவன்
சங்கரி உலவும் மெய்யனை மறவான்

இவன்
மானை அடித்தாலும்
மானைப்
பிடித்தவன்
மகிமை
யை மறக்கவில்லை
முயலைப் பிடித்தாலும்
முயலை மிதித்தவன்
மேன்மை
யை மறக்கவில்லை

ஒரு நாள் கண்ணப்பன்
தன் சாகாக்களுடன்
பன்றி ஒன்றை துரத்திப் போனான்
பன்றியோ
அகப்படாமல் போக்குக் காட்டியது
அவன் நாக்கு
எனக்கு நீர் தர மாட்டாயா
என்று
மேலண்ணத்தில் போய்
தூக்கு மாட்டியது

ஒரு கட்டத்தில்
பன்னி வேண்டாம்
தண்ணி போதும் என்று
நீர் தேட மூவரும் விளைந்தனர்.
தண்ணீர் தேடி தாள் நோக
அலைந்தனர்...

தூரத்தில் ஒரு குன்று
தென்பட்டது
அங்கே 'பொன் முகலி' ஆறு
இருப்பதாக நாணன் சொன்னதும்
அவர்கள் தாகம்
பாதி போய் விட்டது

தாகம் தீர்ந்து திரும்பும் வழியில்
திருக்காளத்தி மலை வந்தது
அதை நோக்கிச் செல்கையில்
கண்ணப்பன் மனதில்
இனம் புரியாத உணர்வொன்று தோன்றி
மனம் நிறைந்து
மகிழ்வைத் தந்தது

குன்றின் உச்சியில் -சிவன்
கோவிலொன்று இருந்தது
கோவிலின் உள்ளே
சிவலிங்கம் ஒன்று தனிமையில்
தவம் பூண்டிருந்தது

அதைக் கண்டதும்
அடியவனுக்கு அன்பு பொங்கியது

அய்யா
உம்மைக் கவனிப்பார் இல்லையா?
ஆனை உலாவும் மலையில்
உம்மை
அம்போ என்று விட்டுவிட்டு
அம்பிகை
அப்பன் வீடு போனாளா?

உலகின்
உறுபசி தீர்க்கும் உந்தன்
சிறுபசி தீர்க்க இங்கோர்
சீவனும் இல்லையா?

காலாடை அணிந்த
காசினி காக்கும் நீர்
மேலாடை இன்றி
மேனி நடுங்கவா ?

குளிர் அடித்தால்
சாம்பலைப் பூசிக் கொள்ளட்டும் என்றார்களா?
கங்கை சுமந்த தலைமேல்
மழை பொழிந்தால் என்ன என்று
மேற்கூரை கட்டாது விட்டார்களா?

உன் மைத்துனன் அங்கே
பாற்கடலில்
பாம்பின் மேல் படுத்திருக்க
நீர் இங்கு
பாம்புகளுடன் படுத்திருப்பதா?
பிரம்மன்
தாமரை மலர் மேல் வாசம் செய்ய
நீர் இங்கு
முட்களின் மீது மவுனித்திருப்பதா?

உடனே
கண்ணப்பன் செயலில் இறங்கினான்
மகேசனுக்குப் பசிக்கும்
முதலில் நல்ல
மாமிசம் சமைக்கலாம் என்று மனத்தில் இயம்பினான்

பன்றி ஒன்றை
வேட்டையாடி
அதன் சதையைக்
கரத்தில் நிரப்பினான்
'பொன் முகலி' நதிக்குச்
சென்று அதன்
நீரை உறிஞ்சி
வாயில் நிரப்பினான்
காட்டு மலர்களைக் கொய்து
தன் முரட்டு மண்டையில்
முடிந்து கொண்டான்

கோவில் திரும்பி
சிவன் தலையில் இருந்த
பழைய மலர்களை-செருப்புக்
காலால் தள்ளினான்
தன் சாமிக்குச்
சேவை செய்யும் பேறை
எண்ணி
சந்தோஷத்தில் துள்ளினான்

தன் வாய்நீரை
லிங்கத்தின் மேல் துப்பினான்
கையில் வழிந்த ரத்தத்தை
திலகம் போல் அதன்
நுதலில் அப்பினான்

தான் முடிந்து வந்த மலர்களைத்
தன்
தலைவனுக்கு முடிந்தான்
பன்றி இறைச்சியை-கொஞ்சம்
தின்று பார்த்து விட்டு
பரமனுக்கு நிவேதனம் செய்தான்

நெடுச்சா
ண் கிடையாக
நீல கண்டன் முன் விழுந்தான்
'தேவா நீயே கதி' என்றுரைத்து
தூசி தட்டாது எழுந்தான் !


அவன் சகாக்கள்
அவனுக்கு சித்தம் கலங்கி விட்டது
என்று எண்ணினர்!

ஆனால் அன்று தான்
அவன் சித்தம் தெளிந்திருந்தது
ஆம்
ஆண்டவன்
அன்புக்கன்றோ மயங்குவான்!
ஆடம்பரம் காட்டி
ஆண்டவா என்றால்
நம்மை நோக்கி ஓர்
அடிவைக்கவும் அவன் தயங்குவான்

கொடிய மிருகங்கள்
கடவுளைத் தாக்கலாம் என்பதால்
இரவு முழுதும்
வில்லேந்தி
காவலுக்கு நிற்பதாய்க்
கண்ணப்பன் முனைந்தான்
காவலுக்கே காவலா என்று
கைலாச நாதன்
தன் இதழ்க் கடையோரம்
ஒரு புன்னைகையை உதிர்த்தான்!

ஆம்
அவன் விளையாட்டை
ஆறறிவு இருந்தாலும்
ஆர் தான் அறிவார்?


அடுத்த நாள்
அதிகாலையில்
வேட்டையாடிவிட்டு விரைவில் வருவேன் என்று
கண்ணப்பன் நகர்ந்தான்

அப்போது-

அந்தக் கோயிலின்
அர்ச்சகர்
ஒன்றும் அறியாதவராய்
உள்ளே நுழைந்தார்
அங்கு கிடைத்த
காட்சியைக் கண்டு
உள்ளம் நடுங்கி
நிலை குலைந்தார்

அபச்சாரம்
நிகழ்ந்து விட்டதாய்
அழுதார்
மன்னிக்க வேண்டும் என்று
மகேசனை
மருகித் தொழுதார்

பஞ்சாமிர்தம்
படைக்க வேண்டிய உனக்கு
பன்றி இறைச்சியா?
வில்வப் பூக்களுக்கு பதில்
வனப் பூக்களா?

இந்தப்
பாவச் செயலைச் செய்யும்
புல்லன் யார் என்று
மறைந்திருந்து பார்ப்பதாய்
முடிவு பண்ணினார்
அவனை அங்கேயே
அடித்துப் போடவேண்டும் என்று
ஆவேசமாய் எண்ணினார்

வழக்கம் போல
கண்ணப்பன் வந்தான்
தான் கொண்டு வந்திருந்த
இறைச்சியை
நீலகண்டனுக்கு
நிவேதனமாய்த் தந்தான்


பாவம் அந்தணர்
வேடனின் வில்லையும்
வேலையும் கண்டு
மனதிற்குள் அஞ்சினார்
இந்த அவசெயலைப்
பொறுக்கும் படி
அரனிடம் கெஞ்சினார்

அன்றிரவு
அய்யன்
அந்தணர் கனவில் தோன்றினான்
கண்ணப்பன் பக்தி
கடலினும் பெரியது
என்பதை அவர் கருத்தில் ஊன்றினான்

நாளை நடக்க இருப்பதை
மறைந்திருந்து பார்க்கும் படி
திருவாய் மலர்ந்தான்
பின்
அருவாய் மறைந்தான்!

ஆம் அடுத்தநாள்
கண்ணப்பன்
பக்திக்கு ஒரு சோதனை!


வழக்கம் போல
வாயில் நீர் நிரப்பிக்
கையில் ஊண் நிரப்பி
தலையில் மலர் நிரப்பி
பூசை செய்ய
ஆசை கொண்டு
கண்ணப்பன் வந்தான்
நொடிக்கு நொடி
நமசிவாயா ! எந்தாய்! என்றான்

வழக்கம் போல்
இறைச்சியை சுவைத்துப் பார்த்து
'சாப்பிடு சாமி' என்றான் !
கயிலை நாதன்
கனக மேனியைக் கண்டு
காயம் மறந்து நின்றான்

சிவ லிங்கத்தில்
அதுவரையில்
கருணையைச் சுரந்து கொண்டிருந்த
கண்களில் ஒன்று
குருதியைச் சுரந்தது!

ஆம்
லிங்கத்தின் கண்களில்
குருதி வெளிப்பட்டு விரைந்தது!
இதைப் பார்த்த
கண்ணப்பன் இதயத்தில்
குருதி திடுக்கிட்டு உறைந்தது

ஐயோ சாமி
உன் கண்ணில் கண்ணீர் வடிந்தாலே
எனக்கது கலவரம்
செந்நீர் வடிகிறதே
சொல்லாயோ நிலவரம்


அய்யா
இறைச்சி நன்றாய் இல்லையா?
என் சதையைக் கீறித்
தரவா?
நான்
உமிழ்ந்த தண்ணீர் உனக்கு
உபத்திரம் தந்ததா?
என் குருதியால்
உன்னைக் குளிப்பாட்டி விடவா?

ஐயா ஏழை நான்
என்ன பாவம் செய்தேன்
ஏன் உன் விழி சிவந்தது?

கண்ணப்பன் செய்வதறியாது
அரற்றினான்!
தரையில் விழுந்து
புரண்டான்!

உடனே ஓடிப் 
போய்

காட்டுப் பச்சிலைகளைப்
பறித்துக் கைகளில் ரொப்பினான்
கல்லில் அரைத்துக்
கடவுளின் கண்ணில் அப்பினான்

ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது

தன் ஆடை கிழித்து
ஆண்டவன்
கண்களில் கட்டினான்
முரட்டுக் கைகளால்
மகேசன்
முகவிழி ஒற்றினான்..
ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது
ஏதோ ஒரு
முடிவெடுத்தவனாக
வேடன் தன் கூரிய
அம்பை எடுத்தான்
தன் விழியைத் தோண்டி
வலியை மறந்து
அதை
வில்வப் பிரியனுக்குக் கொடுத்தான்

கண்ணப்பன்
விழி இருந்த குழியில்
ரத்தம் வடிந்து கொண்டிருக்க
இப்போது
தென்னப்பன் விழியில்
ரத்தம் நின்று விட்டிருந்தது

கண்ணப்பன்
வலி மறந்து கூவினான்
மூன்று கண்ணன் முன்
ஒற்றைக் கண்ணன்
உவகை பொங்கக் கூத்தாடினான்

ஈசனுக்கு
இரக்கமில்லை போலும்!
அவன் இன்னொரு
கண்ணிலிருந்து இப்போது
குருதி வடிந்தது!
கண்ணப்பன் இதயம் இடிந்தது

அய்யா இது என்ன
சோதனை?
அடியவனுக்கு ஏன்
வேதனை மேல் வேதனை

கண்ணில் குருதி வடியும்
அளவு நான்
குரூரக் காரனா?
வேல் பிடித்த நான் உன்
தாள் பிடித்தல் பாவமா?

புலம்பினால் ஆகாது என்று
எழுந்து நின்றான் வேடன்
தன் இதழில் இருந்து
ஒரு புன்னகைப் பூவை உதிர்த்தான்
கைலாய நாடன்!

தன் செருப்பணிந்த காலால்
நெருப்பணிந்த கையன்
நீளக்கண்களில் அடையாளம் வைத்தான்...
அம்பு கொண்டு-தன்
அடுத்த கண்ணைப் பிய்த்தான்

அப்போது
'நில் கண்ணப்பா நில்' என்று 
ஓர்
அசரீரி ஒலித்தது!
அதைக் கேட்டு
காற்றுக்கே காது வலித்தது!

ஆம்
காம்போதிப் பிரியன்
கண்ணப்பனை ஆட்கொண்டான்
கண்ணப்ப நாயனாரும்
கைலாய நாடேகி
கணங்களில் ஒன்றாகக் கலந்தான்...

கண்ணப்பன் புகழ் பாடுவோம்
கண்ணப்பனைத் தடுத்தாட்கொண்ட
தென்னப்பன்
காளை ஏறும் சம்புவை நம்
கருத்தில் ஏற்றி
அர அர மகாதேவா என்று
அகம் மகிழ்ந்து ஆடுவோம்!

இந்த இரவு
இந்துவை தரித்தவன் இரவு !
இன்பனை எரித்தவன் இரவு!
காலனை உதைத்தவன் இரவு!
ஆலம் வேண்டி உண்ட
அரனின் இரவு!


இந்த இரவில்
ஈசனைப் பாடுவோருக்கு வருமோ
மறுபடி
இந்த
மண்ணுலகின்
உறவு?

நன்றி; சமுத்ரா

Friday, February 10, 2012

திருவண்ணாமலைச் சித்தன்....
இன்று பௌர்ணமி....., கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்திற்கு அருகில் இருக்கிறேன். இந்தமுறை "குருத்தன்மை" என்றால் என்ன?, தத்தாத்ரேய மஹரிஷி எப்படிக் குருத் தன்மையை தன்னுள் உணர்ந்து கொண்டார் என்பது போன்ற சில ஆழ்ந்த உண்மைகளை சாமி கூறிக்கொண்டிருந்தார்கள்.


இதோ, கிரிவல நெடுஞ்சாலையின் முதுகை லட்சக் கணக்கானப் பக்தர்கள் இஸ்திரி செய்து கொண்டிருக்கிறார்கள். குபேர லிங்கத்தைத் தரிசிக்க ஒரு பெரிய நீ........ண்ட வரிசை நின்று கொண்டிருக்கிறது. சாமியும், நானும் பஞ்ச முக தரிசனம் நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். அதிகாலை 2 மணிக்குக் கூட இடுக்குப் பிள்ளையாரை யாரும் ஓய்வெடுக்க விடுவதாகத் தெரியவில்லை. இங்கேயும் ஒரு பெரிய வரிசை நின்று கொண்டிருக்கிறது........


அதிகாலை 5 மணியளவில் பஞ்சமுக தரிசனத்தில் சாமி பிரிந்து உள்கிரிவலப் பாதையில் சென்று விடுகிறார்கள்..... சாமியிடம் விடைபெற்ற நான் அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்கிறேன். தூக்கம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கிறது. தூங்கிப்போனேன்
எழுந்தபோது ஏழு மணி இருக்கும். சூரியன் உதயமாகிக் கொண்டிருக்கிறான். 


லேசான பசி வயிற்றை கிள்ளுகிறது. சாமி கூறிய யோக பாடங்களை அசை போட்டபடி ஹோட்டல் ராமகிருஷ்ணாவை நோக்கி நடக்கத் துவங்குகிறேன். "அவனவனுக்கு அவனவன் மனமே குரு.....தனக்குள் இருக்கும் குருத்தன்மையை உணர்ந்து கொண்டவர்களே வெளியில் உள்ள "காரிய குருவையும்" உணர்ந்து கொள்ள முடியும்.  யோகசாதனைகள் தனக்குள் உள்ள குருத் தன்மையை உணர்ந்து கொள்ளவேப் பயன்பட வேண்டும். அவ்வாறில்லாமல் தலைவலிக்கும், வயிற்றுவலிக்கும் மட்டுமே யோகப்பயிற்சி என நினைப்பது அறிவுடைமையாகாது.  தன்னுள்ளேயுள்ள குருத்தன்மையை உணர்ந்த காரணத்தாலேயேத் தத்தாத்ரேய மஹரிஷியால் ,பஞ்சபூதங்களையும், பாம்பையும், சிலந்தியையும் கூடக் குருவாக ஏற்றுக்கொள்ள முடிந்தது."


ஹோட்டல் வாசலில் “அண்ணே பலகாரம் வாங்கிக்கிறீங்களா?” என்ற ஒரு குரல் என் சிந்தனையைச் சிதறடிக்கிறது.


அறிமுகம் இல்லாத சிறுவன் ஒருவன் என்னை நோக்கி வருவதைக் காண்கிறேன். கசங்கியச் சட்டை, சற்றே கலைந்த முடி, முட்டி அளவிளான அரை காற்சட்டை, ஒட்டி உலர்ந்து போன உடல், இவையாவும் அவன் வறுமையை எடுத்துரைத்தது.


இப்பொழுது அவன் என் எதிரில் என்னை நோக்கி புன்சிரிப்புடன் கேட்கிறான். அவன் கையில் இருந்த பிஸ்டிக் கூடையை என் முன் காட்டுகிறான். பலகார வகைகள் சிறு சிறு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருகின்றன.


“வேண்டாமப்பா” இது எனது பதில்.


அவன் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான். சாப்பிட்டு முடித்து வெளியில் வருகிறேன் மறுபடியும் அச்சிறுவன் என் கண்ணில்படுகிறான். ஒரு காரில் ஆணும் பெண்ணுமாக இருவர் அமர்ந்து இருகிறார்கள். கணவன் மனைவி என நினைக்கிறேன். பலகாரக் கூடையை அவர்களிடமும் நீட்டுகிறான். அவர்களும் வேண்டாம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைக்கவும், சிறுவன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து மறுபடியும் என்னிடமே வருகிறான்.“சாப்டாச்சா அண்ணே, பலகாரம் வாங்கிக்கிறீங்களா”, மறுபடியும் என்னை நோக்கிக் கேட்கிறான்.


“வேண்டாம்பா, வயிறு நிறைய சாப்பிட்டாச்சி”, எனக் கூறியவாறு நடக்க ஆரம்பிக்கிறேன்.சிறுவனோ பக்கத்திலிருந்தப் பெட்ரோல் பங்கினுள் நுழைந்து, கையிலிருந்த பலகாரக்கூடையைக் கீழே வைத்துவிட்டு, அந்த பக்கம் வந்து போவோரிடம் பலகாரம் வேண்டுமா? என அதே பல்லவியை படித்துக் கொண்டிருக்கிறான்.


அவன் பேச்சில்தான் எத்தனை மரியாதை. கனிவான பார்வை. எவ்வளவு நேரமாகியும், கொஞ்சமும் சலிப்புத் தட்டாமல் அதே தொனியில் அடுத்தவரிடம் கேட்கிறான். “அக்கா பலகாரம் வேணுமா”, “அங்கில் பலகாரம் வேணுமா”. மிஞ்சி போனால் அச்சிறுவனுக்கு 10 வயது தான் இருக்கும். என்ன ஒரு துடிப்பு. தளர்ச்சியில்லா விடா முயற்சியோடு காரியத்தில் கருத்தாய் இருக்கிறான்.


நான் அவனைக் கவனிப்பதை அவனும் பார்த்து விட்டான் போலும். முகத்தில் அதே இளஞ்சிரிப்போடு மறுபடியும் இதோ என்னை நோக்கி வருகிறான்.

“வீட்டில இருக்கிறவங்களுக்கு பலகாரம் வாங்கிட்டுப் போறிங்களா அண்ணே, தம்பி தங்கச்சிக்குக் கொடுக்கலாம், பாருங்க எல்லாம் சைவம்தான்”, கூடையை மறுபடியும் நீட்டுகிறான்.

அவன் முகத்தை பார்க்கிறேன். முன்பிருந்த அதே புன்னகையை பரிசளித்துக் கொண்டிருகிறான்.

“தம்பி, பலகாரம் எதுவும் வேண்டாம், இந்தா, இந்த காச வச்சிக்க” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவன் சட்டை பையில் சொருகுகிறேன். நன்றி கூறி நான் கொடுத்த நூறு ரூபாயோடு மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு ஓடுகிறான்.

இப்போதுஅவனது செயலைக் கண்டு அதிர்ந்து போகிறேன். நான் கொடுத்த பணத்தை வேறோருவனிடம் நீட்டிக் கொண்டிருக்கிறான்.

“தம்பி, இங்க வா”.


“பலகாரம் வேணுமாண்ணே”, ஒன்றூம் தெரியாதவன் போல் கேட்டுக் கொண்டு என்னருகே வருகிறான்.

“நான் கொடுத்த ரூபாய எதுக்கு அந்த ஆளுகிட்ட கொடுத்த?”.

“பாவம் அண்ணே அவரு, கண் தெரியாதவரு, இந்த பக்கம் தான் சுத்திகிட்டு இருப்பாரு, சாப்டாரா இல்லையானு கூடத் தெரியல”,


பணம் வாங்கிய அந்த மனிதனை நோக்கினேன். தூரத்தில் இருந்த அவனது நடை பாவனை அவன் குருடன் என்பதை நிச்சயப்படுத்தியது.

சிறுவன் மீண்டும் தொடர்ந்தான், “சில சமயம் விற்றது போக மீதம் இருக்கும் பலகாரத்தை கொடுப்பேன், இன்னிக்கு காலையில் இருந்தே எந்த வியாபாரமும் இல்லை. நீங்க கொடுத்த காச மட்டும் கொண்டு போனால் அம்மா திட்டுவாங்க. முன்னே ஒருத்தர் இப்படிதான் காசு கொடுத்துட்டுப் போனாரு. வீட்டுக்குக் கொண்டு போனப்ப அம்மா கேட்டாங்க. என்னடா பலகாரம் விக்காம இருக்கு, காச மட்டும் கொண்டுவந்திருக்கியேனு. உள்ளத சொன்னேன். உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது. நாம திடகாத்திரமா இருக்கோம். உழைச்சி வாழ முடியும். அடுத்தவர் கொடுப்பதை வாங்குவதுக்குப் பேர் பிச்சை. உழைக்க முடியாதவங்கதான் பிச்சை எடுப்பாங்க அப்படினு சொன்னாங்க. நான் இன்னும் தெம்பாக இருக்கேன் அண்ணே” எனக் கூறினான்.


அவன் மன உறுதியைப் பார்த்து நெகிழ்ந்துப் போகிறேன்.

“எல்லாம் எவ்வளவு தம்பி?”

“நானூத்தி இருபது ரூபாதாண்ணே”,


“எல்லா பலகாரத்தையும் நீங்களே வங்கிக்க போறீங்களா அண்ணே”,

நான் சரி என்பதற்கு அடையாளமாக தலை அசைக்கிறேன். பலகாரங்கள் அனைத்தையும் ஒரு பையில் போடுகிறான்.பலகாரம் நிறப்பப்பட்ட பையை "நான்" வாங்கிக் கொண்டு, பணத்தைக் கொடுக்கிறேன். நன்றி கூறிய அவன் மீண்டும் ஒரு சிரிப்பை பரிசளித்துவிட்டு சட்டென அங்கிருந்து கிளம்புகிறான். அவன் என் பார்வையிலிருந்து மறையும் வரை அவனைப் பரர்த்துக் கொண்டிருக்கிறேன்.


எனக்குள் இருக்கும் "குருத்தன்மையை" உணரத் துவங்குகிறேன்........ யாரோ என்னை "பிச்சைக்காரா,பிச்சைக்காரா" என அழைப்பதுபோல் உணர்கிறேன்.  இவனும் எனக்குக் குருதானோ!!!!!!!


வாழ்க்கையின் எதார்த்தங்கள் இனிமையானது. துரோகங்களும், எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் ஏமாற்றமுமே வாழ்வை வளப்படுத்துகிறது. நாம் சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலரை எப்பொழுதோப் பார்த்திருப்போம், ஆனால் அவர்களின் நினைவுகள் நீங்காமல் நம்முடன் எப்பொழுதும் இருக்கும். இதற்குக் காரணம் நாம் அவர்களால் பெறப்பட்ட அனுபவங்களாகக் கூட இருக்கலாம். 


இந்தச் சிறுவனை மறுபடியும் என் வாழ்வில் சந்திப்பேனா என்பது சந்தேகம்தான். அவனது பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நிகழ்வு என்னிலிருந்து என்றும் மறையாது. அவன் என்றென்றும் எனக்குப் போதனை செய்த திருவண்ணாமலைச் சித்தன் தான்.

Saturday, February 4, 2012

மீண்டும் ஒரு தேடல் 12

உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?
“உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?” என்ற கேள்விக்கு டெஹ்ரா பே விரிவான விளக்கம் தந்தார்.


”ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவைப் போல எகிப்திலும் இது போன்ற சாகசங்கள் சர்வ சாதாரணமாகச் செய்யப்பட்டன. அந்தக் காலத்தில் இன்றைய காலத்தைப் போல பணம், பகட்டு, பொருள் மீது மக்களின் கவனம் அதிகமாய் செல்ல ஆரம்பித்திருக்கவில்லை. ஆத்மஞானத்தை அனைவரும் நம்பினார்கள். அதனால் இது போன்ற சாகசங்கள் குறித்து அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.


ஆத்மா உடலல்ல என்பதையும் அது உடலை விட்டும் இருக்கக் கூடிய சக்தி என்பதையும் உடலையும், விழிப்புணர்வையும் இயக்கும் சக்தி என்பதையும் அனைவரும் நம்பினார்கள். உடல் அழிந்து அதன் வேதியியல் அணுக்கள் கார்பன், பொட்டாசியம், ஹைடிரஜன், ஆக்ஸிஜன் ஆகிய வடிவங்களில் திரும்ப மண்ணிற்கே திரும்பச் செல்லும் போது அதை இயக்கிய ஆன்ம சக்தி தன் மூலசக்தியாகிய நாம் முழுவதும் அறியாத, என்றும் நிலைத்திருக்கக் கூடிய, அந்த பெரும் சக்திக்கே திரும்புகிறது. இதை லௌகீகத்தில் மூழ்கி விட்ட இன்றைய மனிதர்கள் உணரத் தவறி விடுகிறார்கள்.


என்னுடைய தந்தை இது போன்ற செயல்களுக்காக என்னை நான் நான்கு மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்தே தயார்ப்படுத்த ஆரம்பித்து விட்டார். அதனால் இன்று என் விருப்பப்படி பல நாட்கள் மண்ணில் புதைந்திருந்து எந்த பாதிப்பும் அடையாமல் திரும்புவது முடிகிறது”.


பால் ப்ரண்டன் சொன்னார். “ஆனால் சந்தேகப்படுபவர்கள் கேட்கிறார்கள்- “மனிதனால் மூச்சு விடாமல் மண்ணுக்கடியில் வழ்வது எப்படி முடிகிறது?”என்று”


டெஹ்ரா பே பல உதாரணங்களைச் சொன்னார். “கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டிய கடல்களில் முத்து எடுப்பவர்கள் கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது நிமிடங்கள் மூச்சு விடாமல் கடலுக்கடியில் தங்குகிறார்கள். தவளை வேகமாக மூச்சு விடக்கூடியது ஆனால் அது தண்ணீருக்கடியில் இருக்கையில் நான்கு மணி நேரம் மூச்சு விடாமல் இருக்க முடிகிறது. வெளியே இருக்க முடிந்த கடல் ஆமைகளும் அப்படியே சில மணி நேரங்கள் கடலுக்கடியில் இருக்க முடிகிறது. ஆனால் கடல் ஆமையைக் கட்டாயப்படுத்தி தண்ணீருக்குள் அழுத்தி வைத்தால் அது மூச்சு முட்டி இறந்து போகும். காரணம் கடல் ஆமை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் இருக்க முன்னமே தன்னை தயார் செய்து கொண்ட பிறகு தான் அப்படி மணிக்கணக்கில் இருக்க முடியும்....”


அப்படியே முதலைகளையும் வவ்வால்களையும் கூட மூச்சு விடாமல் நீண்ட காலத்திற்கு அப்படியே இயக்கமில்லாமல் இருக்க முடிவதை டெஹ்ரா பே விளக்கிய போது பால் ப்ரண்டனுக்கு வியப்பாக இருந்தது.


டெஹ்ரா பே கேட்டார். “விலங்குகளாலேயே முடிகிற விஷயம் மனிதனால் ஏன் முயன்றால் முடியாது? அதை எங்களைப் போன்ற பக்கிரிகள் செய்தும் காட்டி நிரூபித்து இருக்கிறோம். ஆனால் கடல் ஆமையைச் சொன்னது போல நானும் முன்னமே தயாராகி அரை மயக்க நிலைக்குச் சென்றால் தான் அப்படி புதைந்து கிடக்க முடியும். இல்லா விட்டால் நானும் பத்து நிமிடங்களில் மூச்சுமுட்டி செத்து விடுவேன்.”


பால் ப்ரண்டன் சற்று யோசித்து விட்டு ஒரு பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டார். ”அப்படி புதைந்து கிடக்கையில் உங்கள் ஆத்மா உடலை விட்டு வெளியேறுகிறதா? அப்படி வெளியேறி நீங்கள் சொன்னது போல மூலமான பெரும் சக்தியுடன் கலக்கிறதா? அந்த சமயத்தில் என்ன தான் நடக்கிறது?”


டெஹ்ரா பே நேர்மையுடன் அந்த நேரத்தில் நிகழ்வது என்ன என்பதை தன்னால் சொல்ல முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். ”புதைந்த நிலையில் மிக ஆழமான உறக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறோம். நினைவு திரும்பும் போது எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. அந்த மயக்க நிலையில் ஆன்மா நாமறிய முடியாத பயணங்களை மேற்கொண்டு இருக்கக் கூடும். ஆனால் விழிப்புணர்வு முடக்கப்பட்ட அந்த நிலையில் நடப்பது எதுவும் நினைவுக்கு வந்ததில்லை.”


பல முறை அப்படி மண்ணில் புதைந்த மனிதனாலேயே கூட அந்த மயக்க நிலையில் ஆன்மாவின் செயல்பாடு என்ன என்பதைச் சொல்ல முடியவில்லை என்பது பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது.


அதைப் புரிந்து கொண்ட டெஹ்ரா பே சொன்னார். “சில யதார்த்த உண்மைகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கிட்டத்தட்ட மரணத்தைப் போன்ற நிலையில் விலகி மறுபடி அந்த உடலில் ஆன்மா சேரமுடிவதே அது மரணமில்லாதது, நிலையானது என்பதற்கு ஆதாரமாக எனக்குத் தெரிகிறது”


பால் ப்ரண்டனுக்கு அவருடைய நேர்மை பிடித்திருந்தது. தெரியாததைத் தெரியாது என்று அந்த அளவு சாதனை புரிந்த மனிதரால் சொல்ல முடிந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று எண்ணிக் கொண்டார்.


டெஹ்ரா பே இப்படி உயிரோடு மண்ணில் புதைவதில் இருந்த வெற்றி தோல்விகளையும் மற்ற சாதனையாளர்களை உதாரணம் காட்டி சொன்னார். “நான் சிறுவனாக இருந்த போது எங்கள் நகரத்தில் ஒரு பக்கிரி மண்ணில் புதைந்து பல வருடங்கள் கழித்து குறிப்பிட்ட நாளில் தன்னை எழுப்பச் சொன்னார். அப்படியே பல வருடங்கள் கழிந்து தோண்டி எடுத்த போதும் அவர் உயிரோடு இருந்தார். ஆனால் பேச்சு சக்தி மட்டும் இழந்திருந்தார். ஆறு மாத காலம் கழித்து இறந்து போனார். மூச்சு இல்லாமல் சில நாட்கள் இருப்பது விரத சமயத்தில் வயிற்றைப் பட்டினி போடுவது போல உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி எழும் போது உடலுக்கு அருமையான ஓய்வு கிடைத்திருப்பதால் எத்தனையோ வியாதிகள் கூட குணமாகி இருப்பதைக் கண்டிருக்கிறோம் ஆனால் இப்படி வருடக்கணக்கில் அப்படிச் செய்யும் போது சில அபாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன.”


“எனக்குத் தெரிந்த சையது என்ற 18 வயது பக்கிரி சரியான பயிற்சி பெற்று பல முறை மண்ணில் புதைந்து மறுபடி எழுந்தவன். ஒரு முறை அவன் ஆறு வருடங்கள் மண்ணில் புதைந்து காட்ட முடிவெடுத்து அப்படியே ஒரு பிரத்தியேக சமாதியில் புதைக்கப்பட்டான். அவனுடைய முஸ்லீம் நண்பர்கள் வருடா வருடம் ரம்சான் நோன்பு சமயத்தில் அவன் உடலை எடுத்துப் பார்த்து மறுபடி புதைத்தனர். முதலிரண்டு வருடங்களில் அவன் உடல் நன்றாகவே இருந்தது. மூன்றாம் வருடம் திறந்து பார்க்கையில் அவன் உடல் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.”


“ஏன் அப்படி ஆயிற்று?” பால் ப்ரண்டன் கேட்டார்.


“இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் முன் தகுந்த முன்னேற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். உடலை மென்மையான மெழுகால் பூச வேண்டும். சவப்பெட்டியில் உள்ள தூசிகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இது போன்ற முன்னேற்பாடுகளை சையது செய்யத் தவறி விட்டார். மூன்றாவது வருடம் எகிப்தில் உள்ள சிறிய சக்தி வாய்ந்த பாம்புகளில் ஏதாவது ஒன்று சவப்பெட்டியில் புகுந்திருக்கலாம். இப்படி அரை மயக்க நிலைக்குச் சென்ற உடலில் ஆக்சிஜன் சுத்தமாக இல்லாத போது எந்த மைக்ரோப்களும், பூச்சிகளும் தீண்டாமல் இருக்கும். சவப்பெட்டியில் புகுந்த சிறிய பாம்பு சையதின் மூக்கில் நுழைந்திருக்கலாம். அந்த நேரத்தில் சையதின் உடலில் சிறிது ஆக்சிஜன் புகாமலிருக்கும் அளவு கட்டுப்பாட்டை வைக்கத் தவறி இருக்கலாம். அதன் விளைவாக உடல் தன் பாதுகாப்பை இழந்திருக்கலாம். அது புழுக்களும் பூச்சிகளும் படையெடுத்து உடலை உண்ண வழி செய்திருக்கலாம்”


சிறிது ஏமாந்தாலும் இதில் எப்படிப்பட்ட அபாயங்கள் எல்லாம் உள்ளன என்பதை உணர்ந்த பால் ப்ரண்டன் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த மம்மிகளின் உடலைப் பாதுகாத்திருந்த விதத்தையும், அவற்றை மிக உறுதியான கற்களால் மூடியிருந்த விதத்தையும் நினைவுகூர்ந்தார்.


டெஹ்ரா பே சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். “நான் புதையுண்டிருந்த சமயங்களில் ரகசிய பைப்கள் வழியாக காற்று வரும்படி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டவர்களின் சந்தேகம் அர்த்தமில்லாதது என்பதை நீங்கள் தற்போது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்”


பிறகு பால் ப்ரண்டன் அவரிடம் இது போன்ற அற்புதங்களைச் செய்யும் சிலர் அதற்கு மத ரீதியாக விளக்கம் அளிப்பது பற்றி கேட்டார்.


டெஹ்ரா பே தன் கருத்தை வெளிப்படையாகச் சொன்னார். “இது போன்ற சாகசங்கள் உடலியல் அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு செய்பவை. இதில் ஆழ்மன சக்தியும் சேரும் போது அற்புதங்களாக தோன்றுகின்றன. இதில் மதத்தையோ, மூட நம்பிக்கைகளையோ சேர்த்து விளக்கம் அளிப்பது உண்மை சார்ந்ததாக இருக்காது. அவர்கள் செய்கின்ற அற்புதங்கள் உண்மையானவை என்றாலும் விளக்கங்கள் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதங்களில் இருந்து விடுகிறதை நான் அதிகம் பார்க்கிறேன். அவர்களில் சிலர் தாங்களே இதை நம்புகிறார்கள். பலர் மற்றவர்கள் முன்னால் அசாதாரண மனிதர்களாகவும், கடவுளருள் பெற்றவர்களாகவும் காட்டிக் கொள்ள அப்படி செய்கிறார்கள். உள்ளதை உள்ளபடியே பார்க்க வேண்டுமே ஒழிய இதில் கற்பனைகளை சேர்ப்பதையும், மூட நம்பிக்கையை வளர்ப்பதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை”


டெஹ்ரா பே ஆன்மாவையும் ஆழ்மனசக்தியையும் நம்பிய அளவிற்கு மதக்கோட்பாடுகளை பெரிதாக நம்பவில்லை. அதில் ஈடுபட்டு உண்மையான தெய்வீக உணர்வுகளை அனுபவித்தவர்கள் ஒருசிலர் இருக்கக்கூடும் என்று ஒத்துக் கொண்ட அவர் தன் ஆராய்ச்சிகளும், பயிற்சிகளும் மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்ததாகச் சொன்னார்.


இப்படியாக டெஹ்ரா பேயிடம் பேசிய போது பால் ப்ரண்டன் கேட்டறிந்தது எல்லாமே அறிவியல் ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது. எந்த இடத்திலும் டெஹ்ரா பே தன்னை தெய்வீக மனிதராகச் சொல்லிக் கொள்ளவில்லை என்பதோடு எதிலும் கற்பனை கலக்காமல் தெரிந்ததை விளக்கமாகச் சொல்லியும் தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொண்டும் பால் ப்ரண்டன் மதிப்பில் உயர்ந்து போனார்.
தேடல் தொடரும்