Total Pageviews

Wednesday, August 31, 2011

தோப்புக் கரணம் போடுங்க!

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

"பிள்ளையார் சதுர்த்திக்கு என்ன செய்ய வேண்டும் ?" இப்படி மின்னஞ்சலில் ஒரு கேள்வி!


உருப்படியா ஒரு காரியம், தோப்புக்கரணம் போடுங்க!

உடலின் பிரதான பகுதி மூளை. அதில் மிக முக்கியப் பகுதி, 'டெம்போரல் லோப்'. ஞாபகசக்தியைப் பராமரிப்பது இந்தப் பகுதிதான், அதுபோல

உடலின் முக்கிய நரம்புகளின் செயல்பாட்டைச் சீராக்கும் சக்தி மையம், நமது காதுகளின் கீழ்ப்பகுதியில் உள்ள மடல்கள்.

இந்த இரு பகுதிகளையும் சீராக இயங்க வைக்க ஈஸியான வழி : தோப்புக்கரணம் போடுதல்!

பிள்ளையார் முன்பு நின்று தோப்புக்கரணம் போட்டு வழிபடச் சொல்கிறது, நமது பாரம்பரிய ஆன்மிகம். 'இது வெறும் வழிபாடு மட்டுமல்ல. ஆரோக்கியம் அறிவுக்கான மருத்துவ முறை' என்று நம்மவர்கள் சொன்னால், கேட்பது யார்? இப்போது, சர்வதேச்ப் புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் இதே விஷயத்தைச் சொல்கிறது...

தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்த இந்தப் பல்கலை., டாக்டர்கள் குழு, 'தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். காது மடல்களைப் பிடித்து நெற்றியில் குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். அதோடு, மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும்; உடல்நலனும் மேம்படும்' என்று அறிவித்துள்ளது. இதோடு, இதற்கு 'சூப்பர் பிரைன் யோகா' என்று ஒரு புதுப் பெயர் சூட்டி, மருத்துவப் பாடத்திட்டத்திலும் இணைத்துள்ளனர். ஆரோக்கியம், அறிவு அதிகரிக்கணும்னா, இந்த பிள்ளையார் சதுர்த்தியிலிருந்து தினமும் தோப்புக்கரணம் போடுங்க!










Monday, August 22, 2011

கோகுலாஷ்டமி......யோகப்பார்வை



"
வாழ்க்கையேத் திருவிழா! அதை ஆனந்தமாக அனுபவியுங்கள்" என்றார் பகவான் ரஜனீஷ். பல சமயங்களில் வாழ்க்கை போரடித்தாலும் சில தருணங்களில் "எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" எனப் பாரதி பாணியில் வாழ்க்கையைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. சுற்றுகின்ற வாழ்க்கைக் சக்கரத்தில் சுழன்று சதா சலித்துக்கொண்டிருக்கிற மனிதனுக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கத்தோடு உண்டாக்கப்பட்டவையேத் திருவிழாக்கள். அந்த திருவிழாக்களில் ஒரு முக்கியமான திருவிழா, கோகுலாஸ்டமி. 



துக்கப்பட்ட மனத்தை உழுது பண்படுத்தி "கிருஷி" செய்யப்படுவதற்காக அவதரித்த அவதாரமே " ஸ்ரீகிருஷ்ணன்".
யோக கலாசாரத்தில் உச்சக்கட்ட சந்தோசத்தோடு கூடிய மனமே "கிருஷ்ணன்" எனக் கூறப்படுவதுண்டு. அந்த உச்சக்கட்ட சந்தோசத்துடன் கூடிய மனத்தைக் கண்டு கொண்டவர்களால் கொண்டாடப்படக்கூடிய திருநாளே கோகுலாஷ்டமி எனும் கண்ணன் பிறந்த நாள் விழா. நமது யோக யுவகேந்திராவிலும் ராஜபாளையத்தில் வைத்து கோகுலாஷ்டமிக் கொண்டாடினார்கள். ராஜபாளையத்தில் "விழா" என்றால் சொல்லவா வேண்டும்! வழக்கம் போல சமாய்ச்சிட்டாங்க! செண்டருக்குள் போவதற்கு முன்னால் வழியிலேயே ஒரு குட்டி கிருஷ்னர் சாலையில் நடந்து கொண்டிருந்தார். நெருங்கிப்பார்த்தால்........ அட! ..........இது நம்ம "தனுஷா" இல்ல! 


கிருஷ்ண வேடம் கண கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. 




செண்டருக்குள் நுழைந்தவுடன் முதலில் கண்ணில் பட்டது மேடை அலங்காரம்.  இத்தனை கிருஷ்ணனையும் எங்கப்பா தேடிப்பிடீத்தீர்கள்! ................ராஜபாளையம் யோகயுவகேந்திரா சகோதரிகளுக்கு சபாஷ் போடலாம் போல இருந்தது. மனம் எனும் கிருஷ்ணனுக்கு எத்தனை அவதாரங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்வதாகப் பட்டது எனக்கு. 



நடக்கும் நிகழ்வுகளைச் சாட்சியாக நின்று கவனிக்கத் துவங்கினேன். "அதுரம் மதுரம்" மனதிற்கு இதமாய் இருந்தது. நிகழ்ச்சியின் இடையில் கிருஷ்ணனைத் தேடுவதாக ஒரு பாடல். சூட்சுமமாய் நம்முள் மறைந்திருக்கும் கிருஷ்ணனைத் தேடுவதற்காகத்தான் கோகுலாஷ்டமி என்பதை எனக்குள் ஞாபகப் படுத்துவதாக இருந்தது. மாயக் கண்ணனானக் கிருஷ்ணனனை நம்முள் தேடிக் கண்டுபிடிக்கச் சில யுக்திகளை நாமும் தந்திரமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அத்தகைய யுக்திகள்தான் நாமசங்கீர்த்தனமும், கும்மியாட்ட, கோலாட்டமும். 





கோலாட்டம் நடைபெற்றபோது சாட்சியாக இருந்த என்னுள் ஏதோ ஒரு பொறிதட்டியது. நமது முன்னோர்கள் எவ்வளவு பெரிய ஆன்மீகச் சூட்சுமத்தை விளையாட்டாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி வியக்க முடிந்தது


நாம் கோயிலுக்கு போகும்போதேல்லாம் அர்ச்சகர் சாமிக்கு தீபாராதணைக் காட்டும் முறையை உன்னிப்பாக கவனித்து இருக்கிறோம் அல்லவா? சிலாரூபத்தின் திருமுடி துவங்கி.....திருவடி வரை - ஒரு பாம்பு வளைந்திருப்பது போன்ற பாவனையில் நமக்கு தீபாதரணைக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? அந்த சிலாரூபத்தில் பிராணன் பாம்பு வடிவத்தில் இருக்கிறது என்பதை அடையாளம் காட்டி - கற்பூர ஆரதியை கீழிருந்து மேல் உயர்த்தி எடுத்துச் சென்று மூர்த்தியின் முகத்தைக் காட்டுவார் அர்ச்சகர். பிராணசக்தியைப் பற்றிய அறிவியலும் அதன் முக்கியத்துவமும் ,  சூட்சுமமும்,   மதப்பார்வையில் பார்க்கப்படுகிற காரணத்தால் அதன் இன்றியமையாதத் தன்மையையும் நம்மால் உணரமுடியாமல் போய்விட்டது.



சிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளப் பிராணசக்தியை - யோகஅறிவியலின் துணையுடன் - உளவியல் ரீதியான பார்வையில் பார்ப்போமேயானால் "தனிமனிதனுக்குள்ளும் இந்தப் பிராணசக்தி வளைந்து வளைந்து தான் எழுச்சி கொள்ள வேண்டும் -என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 



யோகவாழ்வு மூன்று முக்கியமான பரிமாணங்களைத்தான் சார்ந்துள்ளது. நாம் ஒவ்வொருவரும் நமது குருவுடன் சேர்ந்து அவரது வழிகாட்டலின் உதவியுடன் நமது பிராணசக்தியை எழுச்சி பெற செய்வது  - பின்பு நமது தனிப்பட்ட முயற்சியினால் நம் தனி மனிதப் பிராண எழுச்சிக்கு முயற்சி செய்வது  - அதன் பின் நம் சமூக பங்களிப்பை உனர்ந்து பெறப்பட்ட பிராணசக்தியை பகிர்ந்தளிப்பது. இந்த சூட்சுமமான உண்மையை நாம் உணர்ந்துகொள்வதற்காகவே முன்னோர்கள் இத்தத்துவங்களை கோலாட்டம் , கும்மியாட்டம் எனும் விளையாட்டிற்குள் பதுக்கி வைத்தார்கள்.



அரசமரத்தடியில் இருக்கும் கால நாகம் நம் ஆறு ஆதார சக்கரங்களை குறிக்கும் அடையாளம் என ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அங்கு அது வணங்கி ஏற்றம் பெறுவதற்கு,  இங்கு கோலாட்டமும், கும்மி ஆட்டமும் உணர்ந்து, விளையாடி ஏற்றம் பெறுவதற்கு.


கும்மியாட்டத்தில் வெறும் கைகளைத் தட்டி ஓசையெழுப்புவதையும், குனிந்து நிமிர்ந்து விளையாடுவதையும், கூட்டமாக, குழுவாக ஆண், பெண் என ஆடுவதையும் மட்டும்தான் மிக சாதாரணப் பார்வையில் பார்த்திருக்கிறோம்.


இப்போது யோகமுறையில் இந்த விளையாட்டை அணுகிப் பாருங்கள் அதில் பொதிந்த ஞானம் புலப்படும்.



கும்மியாட்டத்தில், கீழே மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை குனிந்து - அங்கிருந்து எழுப்பி - ஒவ்வொரு ஆதாரமாக உயர்த்தி -இறுதியில் தலை உச்சிக்குக்கொண்டுபோய் தட்டி முடிப்பது ஒரு சுற்று.- அதன் பின் அப்படி தட்டி முடித்த நிலையில் - அப்படி எழுச்சியின் நிலைக்குப் போன ஒவ்வொருவரும் தமக்குள் அதாவாது தம் எழுச்சியை பிறரின் கைகளைத்தட்டி பங்கிட்டுக்கொள்வதான ஒரு சுற்று - கீழ் நிலையிலிருந்து மேலுக்கு உயரும்போதே அடுத்தவரோடு இணைந்து, பகிர்ந்து ஒத்திசைவகளோடு கூட்டமாய் மூன்னேறும் வகையிலான ஒரு சுற்று.  - குருவோடு, குழுவாகக் கற்றல்- தனியாகக் கற்றல்-கற்றதை பகிர்தல் - என்கிற யோகப்பார்வை எவ்வளவு சூட்சுமமாய் இருக்கிறது பார்த்தீர்களா..?

இதையே இன்னும் கொஞ்சம் விளக்கி சொல்வதனால் தனிமனித சக்தியை உயர்த்தியதன் விளைவை - குருவோடு,குழுவாக பெறுதல் - தனியாகப் பெறுதல், ஒவ்வொருவரோடும் பகிர்தல் .

கும்மியாட்டத்தில் மனிதனின் இட- பிங்கலை நாடிகள் பெருக்கல் குறியாய் அடையாளம் காட்டப்பட - கைகள் தட்டி ஓசை எழுப்பப்படுகிறது. கோலாட்டத்தில் வெறும் கைகளுக்குப் பதிலாக இரண்டு குச்சிகள் - நம் பிராணசக்தி பெருக்கல் குறி வடிவத்தில் இயங்குவதை அடையாளமாகக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.




மனித வாழ்வில் ,உளவியலும்,யோகஅறிவியலும் பிரிக்க முடியாத அம்சங்கள்.  நமது யோகயுவகேந்திராவின்  நோக்கம் மனிதம் எழுச்சிப் பெற வேண்டும். அந்த எழுச்சி ஆன்மிகயோகம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, உளவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, மதம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி. இம்மூன்று பாதைகளையும்   இணைத்துத்தான் நம் முன்னோர்கள் கோகுலாஷ்டமி, கும்மியாட்டதையும் கோலாட்டத்தையும் தந்துவிட்டு போயிருக்கிறார்கள்.அடுத்த யோகயுவகேந்திரத் திருவிழாவில் கோலாட்டதையும், கும்மியாட்டத்தையும் புதுப்புது யோக உத்திகளுடன் புரிந்துகொண்டு விளையாடுவோம்......!


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (
கம்பர்)









Wednesday, August 17, 2011

அரங்கசாமி ராஜா





1932 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி காந்தியடிகள் தனது இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தினைத் துவக்கினார். மறுநாள் ஆங்கிலேய அரசு காந்தியடிகளைக் கைது செய்து எரவாடா சிறைக்கு அனுப்பியது. காந்தியடிகளின் திடீர் கைது நாடெங்கிலும் கொந்தளிப்பை உருவாக்கியது.


கைதுக்கு அடுத்த நாள் 5 ஆம்தேதி ராஜபாளையம் நகரம் முன்னெப் போதைக் காட்டிலும் பரப்பரப்புடன் காணப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டுக் கிளர்ந்தெழுந்த தேசபக்தர்கள், 6 ஆம் தேதி ராஜபாளையம் நகரம் முழுக்க ‘கதவடைப்பு’ நடத்த முடிவு செய்தனர்.


போராட்ட அறிவிப்பையடுத்த 5ஆம்தேதி நள்ளிரவு முதல் ராஜபாளையம் நகரில், ஒருமாத காலத்திற்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6ஆம் தேதி காலையில் ராஜபாளையத்தில் ஒரு கடைகூட திறக்கப்படவில்லை. கதவடைப்பு பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றது.


ராஜபாளையம் தாலுகாவின் அன்றைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் கைது செய்யப்பட்டார்.


ராஜபாளையம் நகர காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்டது.


8ஆம் தேதி மீண்டும் கதவடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.


அரசின் ஒவ்வொர் அடக்குமுறை அறிவிப்பும் அச்சமூட்டுவதற்குப் பதிலாக எழுச்சியை உண்டாக்கியது.


பிப்ரவரி 13 ஆம் தேதி மீண்டும் ராஜபாளையம் நகரில் ஊர்வலம் நடந்தது. மாலை 4 மணியளவில் ஜவகர் மைதானத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.அந்த ஊர்வலத்திற்கு பிள்ளையார்சாமித் தேவர் தலைமையேற்றார்.


ஊர்வலத்தில் வருவோர் நகர காவல் நிலையத்தைக் கடக்கும்போது, சிவகாசி சப்கலெக்டர் தலைமையில் காவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஊர்வலத்தினரை வழிமறித்தனர். தொண்டர்கள் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் நினைவிழந்து சுருண்டு விழுந்தனர். ரத்தம் சிந்தி கொண்டிருந்த இந்தச் சுழலிலும் அடுத்தகட்ட ஊர்வலம் புறப்பட ஆயத்தமானது.


4.30 மணிக்கு, அடுத்தச் ஊர்வலம் அதே ஜவகர் மைதானத்திலிருந்து புறப்பட்டது. இந்த சத்தியாக்கிரகப் படைக்கு அரங்கசாமி ராஜா தலைமையேற்றார். இந்த ஊர்வலம் அதே காவல் நிலையத்தைக் கடக்கும் வேளையில், ஆத்திரத்தின் உச்சகட்டத்திலிருந்த காவல்துறை இளம் ஆய்வாளர் முத்தையா பிள்ளை, ‘லத்தி சார்ஜ்’ என்று காவலர்களை நோக்கி ஆவேசமாகக் கத்தினான்.


களம் இறங்கிய காவலர்கள் முதலில் அரங்கசாமி ராஜாவின் கையிலிருந்த மூவர்ணக் கதர் கொடியைப் பிடுங்கினர். கொடியை இறுகப் பற்றிக்கொண்டு, “வந்தே மாதரம்” , “வந்தே மாதரம்” என்று வீரமுழக்கமிட்ட அரங்கசாமி ராஜாவை நையப் புடைத்தனர். மற்ற தொண்டர்களையும் அடித்து நொறுக்கினர்.


“சப் இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு போலீசார் அரங்கசாமி ராஜாவைத் துவம்சம் செய்தனர். அரைமணி நேரத்திற்கும் மேலாக அடிபட்டுக் கொண்டிருந்தவர்களின் கதர்ச் சட்டைகள் அனைத்தும் இரத்தக் கறைபட்டு வண்ணம் மாறிக் கொண்டிருந்தது.


அரங்கசாமி ராஜாவின் கையை போலீசார் பூட்ஸ் கால்களால் மிதித்துக் கொண்டே அவர் கையிலிருந்த கொடியை பறித்துக் கிழித்தனர். அதை அவர் எதிர்க்க முயன்றபோது பூட்ஸ்கால்களால் அவரது வாயிலும் தலையிலும் மிதித்து அவர் சுயநினைவிழக்கின்ற அளவிற்கு அடித்தனர்” என்று ராஜபாளையம் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள பேராசிரியர் வி.வென்ங்கட்ராமன் குறிப்பிடுகிறார்.


தொண்டர்கள் ஆறு பேருக்கு அரசு மருத்துவமணையில் சிகிச்சை அளித்தனர். நல்ல நினைவு வந்த பிறகு தொண்டர்களைப் போலீஸ் ஜீப்பில் ஏற்றி , நகரைத் தாண்டி 4 கிலோ மீட்டருக்கு அப்பால் காட்டுப் பகுதியில் தூக்கிப் போட்டுவிட்டு வந்தனர்.


மீண்டும் அரங்கசாமி ராஜா தலைமையில் காட்டிலிருந்து தட்டுத் தடுமாறி, கைகால்களில் பலத்த அடி விழுந்த காரணத்தினால் நொண்டி நொண்டி நகரத்திற்குள் வந்தனர். இந்தக் கோலத்தில் இவர்களைப் பார்த்தவுடன் நகரமக்கள் ஆத்திரமடைந்தனர்.


மீண்டும் அதே காவல் நிலையத்தின் வழியே, கொதித்துப் போயிருந்த மக்கள் சூழ, அரங்கசாமி ராஜா தலைமையில் ஊர்வலம் பொனது. அரங்கசாமி ராஜாவின் மீது காவல்துறையின் கவனம் முழுக்கக் குவிந்தது.


இளம் ஆயவாளர் முத்தையா பிள்ளை அரங்கசாமி ராஜாவின் கால்களை கயிற்றால் கட்டினான். கயிற்றின் மறுமுனையை போலீஸ் ஜீப்பின் பின்பகுதியில் இறுக்கிக் கட்டினான். ஜீப்பின்மீது ஏறி ஜீப்பை எடுத்து ஆத்திரத்தில் வேகமாக ஓffஇனான். கயிற்றில் கட்டப்பட்ட அரங்கசாமி ராஜா ‘தரதர’ வென ரோட்டில் உரசிக் கொண்டே இழுத்து வரப் பட்டார்.


காவல் நிலையத்திற்கு வந்தவுடன் மயங்கிக் கிடந்த அரங்கசாமி ராஜாவின் உடல் மீது தண்ணீர் ஊற்றி, ஒரு நாற்காலிமீது சிரமப்பட்டு அமர வைத்தனர். உடல் பூராவும் ரத்தக் காயம். நெஞ்சில் ஈரமில்லாத காவலர்கள் வெளியிலிருந்து பொடிமணலை எடுத்து வந்து, அரங்கசாமி ராஜாவின் உடல் மீது தூவி, அவரை நாற்காலியில் கயிற்றால் இறுக்கிக் கட்டினர். அப்பொதும் ஆத்திரமடங்காத அவர்கள் அரங்கசாமி ராஜாவை காவல் நிலையத்திலிருந்த பரண்மீது தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மகிழ்ந்தனர்.


உயிர் போய்விடும் என்ற கடைசிக் கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அரங்கசாமி ராஜா சேர்க்கப்பட்டார். மயிரிழையில் உயிர் பிழைத்தார்!


பெரிய தலைவர்கள் மட்டுமல்ல, பெயர் தெரியாத எத்தனையாயிரம் பேர் இந்தியச் சுதந்திரத்திற்குத் தமது உயிரைக் கொடுத்து உரமேற்றியுள்ளனர். அத்தகு தியாகத்திற்கு அரங்கசாமிராஜா கண்முன் தெரிகிற சாட்சியாகும். அவரது தியாகத்திற்கு தலை வணங்குகிறது யோக யுவ கேந்திரா

Sunday, August 7, 2011

அவசர முகமூடி







ஒவ்வொருவருக்காகவும்
ஒவ்வொரு முகமூடி
அணிந்துகொண்டேன்,

அவசரத்தில்
முகமூடி மாற்றும்பொழுது
சில இழப்புகள்
நிறைய வரவுகள்

சில சமயங்களில்
முகமூடி அணிய மறந்தாலும்
மறக்க விரும்பினாலும்
அணியச் சொல்லி அறிவுறுத்தினார்கள்.

சுயம்
காணாமல் போகும்
பயம் வந்தது.

முகமூடிகளை
அவசரமாகக் களையத் தொடங்கினேன்

இன்று
முகமூடிகள் இல்லாது
சுயமாய் இருக்கிறேன்

சிலர்
முகமூடி
தயாரிப்பில்இருக்கிறார்கள்

அவர்களைத் தடுக்க
ஏதும் முகமூடி இருக்கிறதா!