Total Pageviews

Monday, October 31, 2016

ரிலாக்ஸ் உடலுக்கா??? மனதுக்கா???லெட் அஸ் கம் டு சாந்தி ஆசனா" யோகாசனப்பயிற்சியின் முடிவில் இந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷம்....உண்மையில் சாந்தி ஆசனத்தில் உடல் மட்டுமல்லாது உள்ளமும் சாந்தி பெறவேண்டும்...... உ டல் உறுதி பெறுவது மட்டுமே யோகத்தின் இறுதி இலட்சியமல்ல , மனம் அமைதிபெறுவதே இங்கு உயர்வான இலட்சியம் ........ மனம் பல வார்த்தைகளாலும் , காட்சிகளாலும் நிரம்பியிருக்கிறது. நமது கம்ப்யூட்டரை வேண்டியநேரத்தில் நிறுத்தவும், இயக்கவும் தெரிந்த நமக்கு, வேண்டியநேரத்தில் நமது மனத்தை நிறுத்தத் தெரிவதில்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓய்வில்லாமல் சதா சலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒளியாற்றலாகிய உயிரும் சதா குறைந்துகொண்டே இருக்கிறது...

இந்த தொடர் மன அசைவிற்கு நமது கல்வி முறையும் ஒரு காரணமாகிறது. . இந்தக் கல்விமுறையால் எப்படி முழுவதுமாக மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே கற்றுத் தரமுடிகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக......... நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுக்க முடிவதில்லை. எனவே இந்த மனம் சிலருக்குத் தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கல்விமுறையால் மனதை முழுவதுமாகப் பயன்படுத்தி ஒரு திறமையான பொறியாளனை உருவாக்க முடிகிறது, ஆனால் மனதை ஓயவு பெறச்செய்து மீண்டும் அவனை இயல்பான மனிதனாக்க முடிவதில்லை....
நம்மால் மனத்தை ஓய்வுபெறச் செய்வது எப்படி???எனக்கற்றுக் கொடுக்க முடிந்தால்...... நமது உயிராற்றலை சேமிக்கமுடியும்.....ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்குவதும் சாத்தியம்தான். இந்த விசேஷக் கல்வி முறையைத்தான் "யோகம்" என்கிறோம்.... . யோகக் கல்வியால் மனம் தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும்.

Thursday, September 1, 2016

நுண்மான் நுழைபுலம்........நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.  


நண்பர்களே , 

கல்லாமை எனும் அதிகாரத்தில்  ஞான ஆசான்  வள்ளுவன்  கூறிய   குறுகத்தரித்த  குறளே   இது.....

இந்தக் குறளுக்கு   நமது  பெரியவர்கள் கொடுத்த தெளிவுரையை  கூகுளாரின் உதவியோடு   இங்கு காண்போம்.......
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
கலைஞர்
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புணையப்பட்ட பாவை போன்றது.
மு.வரதராசன்

'கல்லாமை" எனும் "அதிகாரத்தில்"  ஐயன்  வள்ளுவன் கொடுத்த இந்தக்   குறளை  "யோகக் கண்கொண்டு "பார்க்கும் பொழுது  எனக்கு உணர்த்தப் பட்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம்....

அறிவு என்றால் என்ன????

வள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்....

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண். (421) 


இறுதிக்காலம் வரையும் மரணத்தருவாயிலிலும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; எம படராகிய பகைவர் இந்த உடலுக்குள் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையே "அறிவு "...........நண்பர்களே, கல்வி என்றால் என்ன??????

ஜீவனை சிவமாக்கும் "சாகாக்கல்வியே " இங்கு கல்வியாகப் போற்றப்படுகிறது.....  சாவை வெல்லமுடிகிற அறிவே இங்கு அறிவாகப் போற்றப்படுகிறது....பிற அறிவெல்லாம் இங்கு வெற்று அறிவாகவேப் பார்க்கப்படுகிறது.....

"நுண்மான் நுழைபுலம் " என்றால் என்ன?????

இங்குதான்  யோக ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்  வள்ளுவர்...

எண்சான் உடலுக்கும் பிரதானமாகிய சிரசில்  ,.....அதாவது நம்முடைய தலையில்  நுண்ணிய  மாட்சிமையுடைய  ஒரு துவாரம் ,  ஒரு சிறிய துளை உள்ளது....அந்தத்  துளையில்  "வாசியாகிய"  பிராணனை  நுழைத்துச் செலுத்தக்கூடிய  அறிவினைப் பெற்ற யோகியர் "மரண மடைவதில்லை"   .....ஜீவனை  சிவமாக்கி    ஆதியாகிய சிவத்துடன்  ஒன்றி   ஜீவ  சமாதியாகி விடுகின்றனர்.....

சிரசில்  உள்ள  இந்த நுண்ணிய  மாண்புடைய  துவாரத்தில்  "வாசியாகிய" பிராணனை நுழைவிக்கும் அறிவைப்  போதிக்கும்   யோகக்கல்வியே   இங்கு உண்மைக்கல்வியாக , "நுண்மான் நுழைப்புலமாக"   'சாகாக் கல்வியாகப்" போற்றப்படுகிறது.....பிற  கல்வி கற்றவர்கள்  இங்கு நிரம்பக்   கற்றிருந்தாலும்   கல்லாதவர்களாகவேப்  பார்க்கப்படுகிறார்கள்.....

மண்ணால்  செய்யப்பட்ட இந்த உடலை  விண்ணாய் , ஒளியாய் ... மாற்றுவதே  இந்த  சாகாக்கல்வியின்   இலட்சியம்......பரிமாணத்தில்  பிற உயிர்களுக்கு  இல்லாமல்  நமக்கு  மட்டும்  மனித  சரீரம்   வாய்க்கப்பெற்றதே இந்த இலட்சியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளத்தான் .........அறியாமையினால் வயிறு  வளர்க்கும்  ("மெக்காலே" ) பாடத்தைப்   பயில்பவர்கள்  அழகிய  மண் பொம்மைக்கு  ஒப்பானவர்கள்  என்கிறர்  அய்யன்  வள்ளுவர்....


நமது  தலையில்  உள்ள  இந்த  சிறிய  துவாரம் சித்தர்களால்  
"மயிர்ப்பாலம் "   "சுழிமுனைக்கதவு"  "நெருப்பாறு"  "நூல்பாலம்" "ஞானவாசல்"  என வர்ணிக்கப்பபடுகிறது....


நெற்றிக்கு நேர் உள் நின்றதும் 

நேரான உட்பாறை யுடைத்ததும் 

நெருப்பாறு மயிர்ப்பாலம் கடந்ததும் 

நெஞ்சில் யமவாதை நீக்கியதும் நாமே! நாம்.   

                                                                              என்கிறர்  ,....பரஞ்சோதி மகான்...


வல்லோர்கள் பார்ப்பார்கள் வாட்டியன்தானாய் வாய்க்குமோ யெல்லோர்க்கும் எளிதாச்சோஞானம்
பல்லோர்கள் மாயமாய்கை வாட்டியத்தான்பார் பாங்கான மயிர்ப்பாலம் செதுப்பாதுந்தாண்டித்
தல்லோர்கள் வாசினையைத் தவிடுபொடியாக்கி தரிக்கின்ற வாசியைத்தான் சாதனம்பண்ணி
மல்லோர்கள் மார்க்கமாய் ஆறுதளம் தாண்டி மந்திரியாமர்க்கடக மழிந்துபோமே
                                                                                 
                                                                         என்கிறார்     போகமகரிஷி........


அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்

சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்

நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்

எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.


                                                                                என்கிறார் சிவவாக்கியார்..........


நண்பர்களே,......நுண்மான் நுழைபுலம்  தெரிந்து கொண்டோம்........தக்க ஞான குருவை அணுகி  "உணர்ந்து"  கொள்ளுங்கள்.....

Friday, April 29, 2016

வாளால் வெல்லமுடியாத "வெளி"
சூரியன் தனது கதிர்களைச் சுருக்கி ஓய்வெடுக்கச் செல்லும் மாலை வேளை. தனது அணுக்கத் தொண்டர்கள் புடைசூழ நடந்து கொண்டிருந்தார் ஞானி பிரபுலிங்கா . அருகிலுள்ள கோகர்ணம் எனும் அந்த அழகிய நகரத்தை அடைவதே அவர்கள் இலக்கு.

இருள் கவியத் துவங்கியதும் சிஷ்யர்களுடன் அமர்ந்து, ஞான பாடங்களைப் போதிக்கத் துவங்கினார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆழமான அறிவுப்பூர்வமான பதில்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார் ஞான குரு....சித்துக்கள் பற்றியும் அதனால் ஆகக்கூடிய பயன் ஒன்றுமில்லை என்பதனையும் , "உள்ளபொருளை " அடைவதே உயர்ந்த சித்து என்பதனையும் தெளிவுபடக் கூறினார் ஞானபுருஷர்.

சிஷ்யன் ஆனந்தன் விடுவதாக இல்லை ............

“சாமி..,சித்தர்கள் தங்களது தவ வலிமையால் எண்ணற்ற சித்துக்களைப் பெற்றுள்ளனரே.........தவத்தின் பயன்தானே சித்திகள்..... இந்த ஊரில் வாழ்ந்து வரும் சித்தர் கோரக்நாத் என்பவர் பல சித்துகள் கைவரப்பட்டவர் , அவர் தங்களை நாளை சந்திக்க வரப்போவதாக தகவல் அனுப்பியிருக்கிறார்..........” என்றான்..


“அப்பனே எனக்கு எந்த சித்தியும் இல்லை.... நான் எந்த சித்திகளையும் விரும்பியதுமில்லை ...சித்தமாய் உள்ள பொருளுடன் ஒன்றிணைவதே உண்மையான சித்தி என்பதை உணர்ந்து கொண்டேன்...... இந்த உடல் நானல்ல........ இந்த உடல் என்னுடையதும் அல்ல.....இந்த சரீரம் பஞ்சபூதங்களுக்கு சொந்தமானது,  இந்த சரீரத்தை பயன்படுத்தலாமே தவிர இதனை உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்ந்து கொள்வதே உண்மையான சித்தி"............என்று கூறிய ஞானி,
தனது உடலைச் சுட்டிக்காட்டி ,மேலும் தொடர்ந்தார் "இந்த உடலெனும் கூ ட்டுக்குள் உள்ள உருபொருளை உணர்ந்து கொள்வதும் ......, ..இதற்கு அன்னியமான வஸ்து எதுவும் வெளியில் இல்லை என தெரிந்து கொள்வதுமே உண்மையான சித்தி "எனக்கூறிய ஆத்மஞானி ஆத்மவிசாரத்தில் இலயிக்கத் துவங்கினார்...........
சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை.
மறுநாள் அதிகாலை பிரம்மமுகூர்த்தம்.........
தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் ஒருவர் ஞானியைப்பார்க்க வந்தார் ....தன்னை சித்தர் கோரக்நாத் என அறிமுகப்படுத்திக்கொண்டு தனது  சித்திகளைப் பற்றியும் பெருமையாகப் பேசத்துவங்கினார்...................


ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.


“என்ன ஞானியாரே தவம் செய்கிறீரா??.........நான் தவம் செய்து சாகாவரம் பெற்றிருக்கிறேன்.......எனது பெயர் கோரக்நாத், என்னைப் பற்றித் தெரியாதவர்களே இந்த ஊரில் இருக்க முடியாது .........என்னைப் பற்றியும் என் சித்துக்கள் பற்றியும் கூறவே இங்கு வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பெற்றவன் நான். ...........அறுநூறு வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .......எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்பில் குத்தினார்....

அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...

ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிடக் கடினமாக மாறியிருந்தது.


கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா? என்று கேட்பது போல இருந்தது..........சிஷ்யன் ஆனந்தன் ஆச்சர்யத்தில் அசந்து போயிருந்தான்.


ஞானி மெல்ல புன்முறுவல் பூத்தார்.........தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வரச் சொன்னார். அதை கோரக்நாத்திடமேக் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....சிஷ்யர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்....


முழுவேகத்துடன் வாளைச் சொருகினார் சித்தர் கோரக்நாத்.... வாள் அந்த ஞான புருஷரின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...

வேகமாக வாளைச் சுழற்றினாலும் அது காற்றில் சுழலுவதைப் போல சுழன்றதே தவிர அவர் உடலைக் காயப்படுத்தவில்லை ...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதைத் தொட முடியவில்லை...


ஞானி பிரபுலிங்காவின் முகம் ஆணவமற்று, பறித்தெடுத்தப் பங்கஜத்தைப் போல் இருந்தது....அந்த அன்றலர்ந்த தாமரை மெதுவாகப் பேசத்துவங்கியது............

"சித்தரே..................சித்த நிலை என்பது உமது சித்தத்துடன் நின்றுவிடுவது, ஞான நிலை என்பது "நான்" எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தைக் கடந்த சுத்த வெளியில் சுதந்திரமாக இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல சுத்தமாகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது.....சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்............ஞானியோ எல்லை அற்றவன்..............உமக்கும் உலகத்தாருக்கும் ஞானிக்கு சரீரம் இருப்பதாகத் தெரிகிறதேத்தவிர.....உண்மையில் ஒரு ஞானியின் நிலையில் அந்த ஞானிக்கு உடலில்லை........மேலும் தவத்தின் பயன் இந்த சரீரம் சாகாமல் இருப்பதற்காக எனத் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள்............தன்னை அறியும் பயணத்தில் இந்த சரீரம் ஒரு வாகனம்.....அவ்வளவே..........தன்னை அறிவதே இங்கு இலட்சியம்......"தான்" ஒரு முக்த புத்த, சுத்த, வஸ்து எனத் தெரிந்தபின் ...இங்கு வாகனம் ஒரு சுமையானப் பொருளாகி விடுகிறது.".

..........ஞானியின் உபதேசத்தால் சித்தரின் கண்கள் குளமாகின............


சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...


சத்குரு பிரபுலிங்கா பிரம்ம வித்தையை அவருக்கு கற்றுக்கொடுக்க ஆயத்தமானார்.......


சித்தமாய் உள்பொருளைத் தேர்ந்து இருத்தல் சித்தி 
பிற சித்தி எல்லாம் சொப்பனம் ஆர் சித்திகளே - நித்திரை விட்டு 
ஒர்ந்தால்  அவை மெய்யோ?  உண்மைநிலை நின்று பொய்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்..........................................................பகவான் இரமணர்