Total Pageviews

Saturday, July 30, 2011

"குண்டலினி" கிலோ என்ன விலை?
ஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா?

"குண்டலினி"

ஆம் நண்பர்களே!........மாறிவரும் ஆன்மீகச் சந்தையில் "குண்டலினி கிலோ என்ன விலை?" எனும் பாணியில் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

பாரதப் பாரம்பரியத்தில் தன்னையுணர, சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம், எனும் ஆறுவிதமான பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோகப் பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு படிநிலைகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்மயோகம் மற்றும் ராஜ யோகம் என பல பிரிவுகள் யோகத்தில் உண்டு. 

நண்பர்களே! பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மையில் பதஞ்சலி நேரடியாகக் குண்டலினியைப் பற்றி ஏதும் கூறவில்லை...! 


ஹதயோகப் பிரதீபிகா, சிவயோக சம்கிதா போன்ற நூல்களில் "குண்டலினி" பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

சிவராஜ யோகம் என்ற யோகப் பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் உண்டு. உண்மையில் குண்டலினி என்பது மூலப்பிராண சக்தியே, இதனை பயிற்சி முறைகளால் விழிப்படையச் செய்தால் ஞானம் ஏற்படும் என்பதை யோக நூல்கள் விவரிக்கிறது. 


நம் மூலாதாரத்தில் மூன்றரைச் சுற்றுகளாகக் குண்டலினிச் சக்தி படுத்து உறங்குகிறது. மூலாதாரத்தில் இருக்கும் சக்தியைப் பிரணாயாமத்தால் விழிக்கச் செய்து தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்கரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது ராஜயோகத்தின் அடிப்படை. 


காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின் மூன்றரைச்சுற்றுப் பிரகாரம். ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள மூன்றரைச் சுற்று பாம்பணை, ஸ்ரீரங்கத்தின் ஏழு பிரகாரங்கள், திருப்பதியின் ஏழு மலைகள், மற்றும் பகவான் கிருஷ்ணனின் புல்லாங்குழலில் உள்ள ஏழு துளைகள் ஆகியவை இந்த குண்டலினி சக்தி மற்றும் ஏழு ஆதாரங்களைத்தான் குறிக்கின்றன. 

ஔவையார் தனது விநாயகர் அகவலில், 


“குண்டலினி அதனில் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறிவித்தே.”

என்று பாடுகிறார் 

யோகக் கலாசாரத்தில் சிவராஜயோகத்தை பயில விரும்புபவர்கள் குருவை நாடி, தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள். யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதாலும் ,ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது சிவராஜயோகம் என பெயர் பெற்றது. ராஜாங்க விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ அதுபோல சிவராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்தால் போதுமானது. ஆனால் தற்சமயம் ராஜயோகம் பலசரக்குக் கடையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது. 

எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா? இதுக்கும் ரகசியமா? உயர்ந்த ஜாதி என்பது போன்ற கட்டுப்பாடுகள் உண்டா என நீங்கள் நினைத்தால் அது தவறு..! 


குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்குக் கற்று கொடுக்கும் விஷயமல்ல. ஒரு தகுதியான குரு தன்னுடைய தகுதி வாய்ந்த சிஷ்யனுக்கு தான் அனுபவித்த உணர்வை கடத்திக் கொடுக்கும் ஒரு அனுபவம். அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.ஆனால் தற்சமயம் குண்டலினி யோகத்தை ஒருவர், 
பலநூறு நபர்களுக்கு ஒரே வகுப்பாக நடத்திச் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள். ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு அமுதூட்டும் இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள். தாய், சேய் இருவருக்குள்ளும் ஏற்படும் இந்த உறவு இயல்பானது, இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும் , அவர்களிடம் உங்களுக்குள் நடந்த விஷயத்தைப் படிப்படியாக கூறுங்கள் எனக் கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும். அதனால் தான் சொல்லுகிறேன், இது நிகழவேண்டியது அல்ல அனுபவமாக உணர வேண்டியது. 

தற்போது சிலர் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தை விளக்க முற்பட்டு வார்த்தைகள் கிடைக்காமல் நெளிவதைப் பார்த்திருக்கிறேன். பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே இதனை வார்த்தைகளால் விளக்க முற்பட்டு முடியாமல் போனதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 


குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்களும் உண்மை. ஆனால் அதற்காகத் தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது. உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி மட்டுமல்ல வேறு எந்த மாற்றமும் நிகழாது. 

சில யோகப் பள்ளிகள் தலைமைக்கானக் குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கானக் குண்டலினி யோகம், குழந்தைகளுக்கானக் குண்டலினி யோகம், என நடத்துகிறார்கள். இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா? 

தினமும் வீட்டிலும், வாரம் தவறாமல் கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும், தினமும் புகைப்பிடிப்பவர்களும், தங்களின் உடலை சிறிது கூட அசைக்காமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகளும். இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏழு நாளில் குண்டலினியை உயர்த்திகாட்டுகிறார்களாம். 


இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் பலர் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என ஒருபோதும் கூறுவதில்லை. பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என்பதுடன், வலது புறமாக சுற்றியது இடது புறமாக சுற்றியது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது எப்படி நிகழ முடியும்????????????????

 யோக வகுப்பில் யோகப்பயிற்சிகளை முடித்தபின் எல்லோரையும் சவாசனத்தில் கிடத்தி உடல் ஓய்வு பெறுவதற்கானக் கட்டளைகளைக் கூறிக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவர் எழுந்து, தனது குண்டலினி எழுந்து விட்டதாகக் கத்திக்கொண்டு ஆட ஆரம்பித்தார். அவருக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அவசரமாக அவர் அருகில் சென்று "ஐயா, உங்கள் குண்டலினி எழுந்ததென்னவோ உண்மையென்றே வைத்துக்கொள்வோம், ஆனால் இப்படி சப்தம் போட்டீர்கள் என்றால் உங்கள் குண்டலினி வாய் வழியாகப் போய்விட வாய்ப்பிருக்கிறது எனவே சப்தம் போடாமல் படுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினேன். நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது, அந்த நபர் ஆரவாரமில்லாமல் படுத்துக்கொண்டார். என்ன நடந்திருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? 


இந்த நண்பர் குறிப்பிட்ட யோகப்பள்ளியில் ஏற்கனவே ஒருவார குண்டலினி யோகப் பயிற்சி முடித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்குப் போயாகி விட்டது. தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான். பயிற்சி முடித்தபின்பு நாம் மட்டும் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ எனத் தன்னைத் தானே பலர் இப்படி ஏமாற்றிக் கொள்கிறார்கள். 


ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு தாம்பத்யம் பற்றிக் கற்றுக்கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அதுபோலத்தான் தகுதி இல்லாதவர்களுக்குக் குண்டலினி பற்றிக் கற்றுக் கொடுப்பதும். ஐந்து வயது சிறுவனுக்கு உடலாலும், மனதாலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, கற்றது பயன்படாது. அது போன்றதே “ராஜ யோகம்” என்பதை உணருங்கள். ஒரு "பியுஷ் கேரியரில்" இத்தனை வாட் மின்சாரம் தான் செலுத்த முடியும் என வரையறுக்கப் பட்டிருக்கிறது. அதையும் மீறி அதிக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைத் தெரிந்திருக்கிறோம். அதுபோல குண்டலினி என்பது உயர் அழுத்த மின்சாரம் போன்றது, உடலைப் பக்குவப் படுத்தாமல் குண்டலினியை எழுச்சி பெறச் செய்வதால் உடல் நோய்கள் மட்டுமல்லாது மன நோய்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். 
இன்றைய சூழலில் சிலருக்கு யோகப் பயிற்சிகள் செய்யவும் விருப்பமில்லை, ஆனால் குண்டலினியும் ஏற வேண்டும்.(இவர்கள் எதற்காகக் குண்டலினியை ஏற்ற நினைக்கிறார்கள் என்பதற்கு ஒரு தனிப் பதிவே போட வேண்டும்) பணம் கொடுத்து "பீசா" வாங்குவது போல, குண்டலினியையும் வாங்க நினைப்பதால்தான் தகுதியுள்ள குருமார்கள் மறைந்து கொள்கிறார்களோ??????

7 comments:

suganya shankar said...

Sir very well explained about kundalini yoga.

In this current generation we try to get things by short cut methods. It is like fast food life!!

I think this explanation should be translated in english.

Shankar Ganesh

Yoga Yuva Kendra said...

நன்றி சங்கர்.

Ram kumar said...

sir,i dont know very well about kundalilni yoga, just heard of it. this message should create awareness i think, thanq sir.

Yoga Yuva Kendra said...

தங்கள் வருகைக்கு நன்றி ராம்குமார்

manjushiva said...

KUNDALINI YOGAM ENGALUKU KIDAIKA MUYARCHI SEIVOM NANDRI GURUVAE.....

Venkat said...

யமம் நியமம் தாரணை ஆசனம் ப்ரத்யாஹாரம் பிராணாயாமம் தியானம் சமாதி எனும் அஷ்டாங்க யோக வழிமுறைகளை பின்பற்றிநிலான்றி குண்டலினி கை கூடா என்பதை எளிமையான முறையில் கூறியதற்கு மிக்க நன்றி மாஸ்டர்.

பாம்பாட்டி சித்தரின் "ஆடு பாம்பே" பாடல்களும் (மற்றும் எல்லா சித்தர்களாலும் பாட பெற்றதும்), திருமூலரின் திருமந்திரமும் நான் குண்டலினி பற்றி அறிய உதவின. மற்றும் விவேகானந்தரின் "ஞான தீபம் (சுடர் 3 : ராஜ யோகம்)" மிகவும் அழகாக எனது குறிகிய அறிவுக்கு எட்டும்படியாக விளக்கின.

thirumurugan murugan said...

very very useful

Post a Comment