Total Pageviews

Friday, April 29, 2016

வாளால் வெல்லமுடியாத "வெளி"




சூரியன் தனது கதிர்களைச் சுருக்கி ஓய்வெடுக்கச் செல்லும் மாலை வேளை. தனது அணுக்கத் தொண்டர்கள் புடைசூழ நடந்து கொண்டிருந்தார் ஞானி பிரபுலிங்கா . அருகிலுள்ள கோகர்ணம் எனும் அந்த அழகிய நகரத்தை அடைவதே அவர்கள் இலக்கு.

இருள் கவியத் துவங்கியதும் சிஷ்யர்களுடன் அமர்ந்து, ஞான பாடங்களைப் போதிக்கத் துவங்கினார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆழமான அறிவுப்பூர்வமான பதில்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார் ஞான குரு....சித்துக்கள் பற்றியும் அதனால் ஆகக்கூடிய பயன் ஒன்றுமில்லை என்பதனையும் , "உள்ளபொருளை " அடைவதே உயர்ந்த சித்து என்பதனையும் தெளிவுபடக் கூறினார் ஞானபுருஷர்.

சிஷ்யன் ஆனந்தன் விடுவதாக இல்லை ............

“சாமி..,சித்தர்கள் தங்களது தவ வலிமையால் எண்ணற்ற சித்துக்களைப் பெற்றுள்ளனரே.........தவத்தின் பயன்தானே சித்திகள்..... இந்த ஊரில் வாழ்ந்து வரும் சித்தர் கோரக்நாத் என்பவர் பல சித்துகள் கைவரப்பட்டவர் , அவர் தங்களை நாளை சந்திக்க வரப்போவதாக தகவல் அனுப்பியிருக்கிறார்..........” என்றான்..


“அப்பனே எனக்கு எந்த சித்தியும் இல்லை.... நான் எந்த சித்திகளையும் விரும்பியதுமில்லை ...சித்தமாய் உள்ள பொருளுடன் ஒன்றிணைவதே உண்மையான சித்தி என்பதை உணர்ந்து கொண்டேன்...... இந்த உடல் நானல்ல........ இந்த உடல் என்னுடையதும் அல்ல.....இந்த சரீரம் பஞ்சபூதங்களுக்கு சொந்தமானது,  இந்த சரீரத்தை பயன்படுத்தலாமே தவிர இதனை உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்ந்து கொள்வதே உண்மையான சித்தி"............என்று கூறிய ஞானி,
தனது உடலைச் சுட்டிக்காட்டி ,மேலும் தொடர்ந்தார் "இந்த உடலெனும் கூ ட்டுக்குள் உள்ள உருபொருளை உணர்ந்து கொள்வதும் ......, ..இதற்கு அன்னியமான வஸ்து எதுவும் வெளியில் இல்லை என தெரிந்து கொள்வதுமே உண்மையான சித்தி "எனக்கூறிய ஆத்மஞானி ஆத்மவிசாரத்தில் இலயிக்கத் துவங்கினார்...........




சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை.




மறுநாள் அதிகாலை பிரம்மமுகூர்த்தம்.........




தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் ஒருவர் ஞானியைப்பார்க்க வந்தார் ....தன்னை சித்தர் கோரக்நாத் என அறிமுகப்படுத்திக்கொண்டு தனது  சித்திகளைப் பற்றியும் பெருமையாகப் பேசத்துவங்கினார்...................


ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.


“என்ன ஞானியாரே தவம் செய்கிறீரா??.........நான் தவம் செய்து சாகாவரம் பெற்றிருக்கிறேன்.......எனது பெயர் கோரக்நாத், என்னைப் பற்றித் தெரியாதவர்களே இந்த ஊரில் இருக்க முடியாது .........என்னைப் பற்றியும் என் சித்துக்கள் பற்றியும் கூறவே இங்கு வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பெற்றவன் நான். ...........அறுநூறு வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .......எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்பில் குத்தினார்....

அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...

ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிடக் கடினமாக மாறியிருந்தது.


கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா? என்று கேட்பது போல இருந்தது..........சிஷ்யன் ஆனந்தன் ஆச்சர்யத்தில் அசந்து போயிருந்தான்.


ஞானி மெல்ல புன்முறுவல் பூத்தார்.........தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வரச் சொன்னார். அதை கோரக்நாத்திடமேக் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....சிஷ்யர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்....


முழுவேகத்துடன் வாளைச் சொருகினார் சித்தர் கோரக்நாத்.... வாள் அந்த ஞான புருஷரின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...

வேகமாக வாளைச் சுழற்றினாலும் அது காற்றில் சுழலுவதைப் போல சுழன்றதே தவிர அவர் உடலைக் காயப்படுத்தவில்லை ...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதைத் தொட முடியவில்லை...


ஞானி பிரபுலிங்காவின் முகம் ஆணவமற்று, பறித்தெடுத்தப் பங்கஜத்தைப் போல் இருந்தது....அந்த அன்றலர்ந்த தாமரை மெதுவாகப் பேசத்துவங்கியது............





"சித்தரே..................சித்த நிலை என்பது உமது சித்தத்துடன் நின்றுவிடுவது, ஞான நிலை என்பது "நான்" எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தைக் கடந்த சுத்த வெளியில் சுதந்திரமாக இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல சுத்தமாகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது.....சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்............ஞானியோ எல்லை அற்றவன்..............உமக்கும் உலகத்தாருக்கும் ஞானிக்கு சரீரம் இருப்பதாகத் தெரிகிறதேத்தவிர.....உண்மையில் ஒரு ஞானியின் நிலையில் அந்த ஞானிக்கு உடலில்லை........மேலும் தவத்தின் பயன் இந்த சரீரம் சாகாமல் இருப்பதற்காக எனத் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள்............தன்னை அறியும் பயணத்தில் இந்த சரீரம் ஒரு வாகனம்.....அவ்வளவே..........தன்னை அறிவதே இங்கு இலட்சியம்......"தான்" ஒரு முக்த புத்த, சுத்த, வஸ்து எனத் தெரிந்தபின் ...இங்கு வாகனம் ஒரு சுமையானப் பொருளாகி விடுகிறது.".

..........ஞானியின் உபதேசத்தால் சித்தரின் கண்கள் குளமாகின............


சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...


சத்குரு பிரபுலிங்கா பிரம்ம வித்தையை அவருக்கு கற்றுக்கொடுக்க ஆயத்தமானார்.......


சித்தமாய் உள்பொருளைத் தேர்ந்து இருத்தல் சித்தி 
பிற சித்தி எல்லாம் சொப்பனம் ஆர் சித்திகளே - நித்திரை விட்டு 
ஒர்ந்தால்  அவை மெய்யோ?  உண்மைநிலை நின்று பொய்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்..........................................................பகவான் இரமணர்