Total Pageviews

Friday, December 14, 2012

இ-மெயில் தமிழன்!
இ-மெயில் தமிழன்!

இமெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்...

இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் 
என்று.

தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில்.

'டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்தி பெற்றதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (Smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இமெயிலையும் மதிப்பிட வேண்டும்!'' என்று வர்ணிக்கிறது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் விஷ§வலைசேஷன் (Systems Visualization) மற்றும் கம்பேரடிவ் மீடியா ஸ்டடீஸ் (Comparative Media Studies) ஆகிய இரு துறைகளில் பேராசிரியராக இருக்கும் சிவா அய்யாதுரை, நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வுசெய்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்... அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை).

ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய மிக நீண்ட 'ஸ்கைப்’ உரையாடல் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ''ஹாய் பாரதி... வணக்கம்'' என்று அன்புத் தமிழுடன் வந்து அமர்கிற சிவா அய்யாதுரைக்கு 48 வயது.

''நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கு இருந்தீர்கள்?'' 

''ஹா... ஹா... என் அப்பா அய்யாதுரைக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர். அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பரமன்குறிச்சி. இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே எனக்குப் படிப்பின் மீது மிகப் பெரிய ஆர்வம் உண்டாகியது. மும்பையில் வசித்த எங்கள் குடும்பம், என்னை மேற்கொண்டு நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதைப் போன்ற... ஒரு சம்மர் கிளாஸில் 'ஃபோர்ட்ரான் 4’ ­(FORTRAN IV) என்ற புரொகிராமிங் மொழியைக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்ததால், பள்ளியைவிட்டு நிற்கப்போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துகொண்டு இருந்தார். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணினி வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் முயற்சி யில் இருந்தார். அவர் என்னைத் தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். சவால் நிறைந்த அந்தப் பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.

அப்போது அந்த மருத்துவ மனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 'மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளிபற்றிய விவரம், மருத்துவர்பற்றிய விவரம், டூ, ஃப்ரம், சப்ஜெக்ட் எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோ ரண்டத்தை அங்கு இருக்கும் தபால் பெட்டி மூலம் மருத்துவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே மின்மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கணினியில் இருந் தும், மற்றொரு கணினிக்கு எலெக்ட்ரானிக் வடிவத் தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.

இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இமெயில் சிஸ்டம். 'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் 50 ஆயிரம் வரிகள்கொண்ட அந்த புரொகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு இமெயில் (email) என்று பெயரிட்டேன். எலெக்ட்ரோ மெயில் என்பதன் சுருக்கம் அது. 'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் ஒரு புரொகிராமில் அதிகபட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன் படுத்த முடியும் என்பதாலும், இமெயில் என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்தப் பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு இமெயில் என்ற வார்த்தையே கிடையாது!''

''ஆனால், டேவிட் க்ராக்கர், ரே டாமில்சன் ஆகியோர் பெயர்கள்தான் இமெயில் கண்டுபிடித்தவர்கள்பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றனவே?'' 

''அதெல்லாம் அப்போது. நான்தான் இ மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இமெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரொகிராமிங் கோடு, இப்போதும் ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடிச் சாட்சியாக இருக்கிறார்.

டேவிட் க்ராக்கர் கண்டுபிடித்தது 'டெக்ஸ்ட் மெசேஜ்’ அனுப்பும் தொழில்நுட்பத்தை. ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா? அதைப் போல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதைக் கண்டறிந்தார். அதை இமெயில் என்று சொல்ல முடியாது. அதோடு ஒப்பிடுவதானால், நாம் தந்தி அனுப்புவதைத்தான் இமெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். மாறாக, இமெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராஃப்ட்ஸ், டு, ஃப்ரம், சப்ஜெக்ட், டேட், பாடி, சிசி, பிசிசி, கம்போஸ், அட்டாச்மென்ட்ஸ், க்ரூப்ஸ், உள்ளிட்ட 86 வகையான இ மெயில் புரொகிராம்களை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இமெயில் சிஸ்டம். ரே டாமில்சன் இமெயிலில் இன்று பயன்படுத்தும் '@’ குறியீட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை.''

''ஆனால், இமெயிலைக் கண்டறிந்தவர் நீங்கள்தான் என்பது ஏன் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை?'' 

''அமெரிக்காவில் பலருக்குத் தெரியும். ஒருவேளை தமிழ்நாட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். 1981-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்ற இமெயிலுக்கான 'காப்பிரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கு கண்டுபிடிப்பு என்பது வேலையின் ஒரு பகுதி. ஆனால், எனது கண்டுபிடிப்பை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சர்ச்சை ஏற்படுத்தக் காரணம், புலம் பெயர்ந்த; கறுப்பு நிறத் தோல் உடைய; 14 வயதுச் சிறுவன் ஒருவன்... இமெயிலைக் கண்டுபிடித்தான் என்பதை இவர்கள் நம்ப மறுப்பது தான். 50 ஆயிரம் வரிகளைக்கொண்ட ஒரிஜினல் புரொகிராமிங் கோட் வெள்ளைத் தோல் உடைய ஒருவரிடம் இருந்தால், இந்தச் சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை!''

''இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?'' 

''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்டி. ஆய்வில் ஈடுபட்டு இருந்தபோது, கிளின்டன் அமெரிக்க அதிபர். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இமெயில்கள் வந்து குவியும். அதை நிர்வகிக்கும் வேலை சிக்கலானதாக இருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகைவாரியாகப் பகுத்துப் பிரிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. 147 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் கண்டறிந்த 'எக்கோ மெயில்’ (Echo Mail) என்ற தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. பிறகு, இந்த 'எக்கோ மெயிலை’ ஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். இன்று 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம், உலகின் மிக முக்கியமான நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகக்கொண்டு இருக்கிறது. அதுபோக, வேறு சில நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்கத் தபால் துறையில் எனது புதிய இமெயிலிங் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது லாபகரமாக மாறியது. அப்போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைக் கொண்டாடின. ஆனால், எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். அதே சமயம், அங்கு எனக்குக் கிடைத்தவையோ கசப்பான அனுபவங்களே...'' 

''என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டீர்கள் என்று அறிகிறேன்...'' 

''ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) துறையில் என்னைக் கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன் சிங். சில காலம் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழலே அங்கு இல்லை. இதைப் பற்றி 'கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரம் வேண்டும்’ என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4,000 விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது பெரிய விவாதமானது. உடனே, இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி, திடீரென ஒரு நாள் என் வீடு முடக்கப்பட்டது. நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கு இருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது!''

''உங்கள் பேச்சை வைத்துக் கேட்கிறேன்... நீங்கள் சயின்டிஸ்ட்டா, கம்யூனிஸ்ட்டா?'' 

''எம்.ஐ.டி-யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். இலங்கையில் நம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த சமயத்தில், அப்போது இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவை எதிர்த்து இங்கு போராடியது உட்பட. 'த ஸ்டூடன்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். அதனால், நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட். இன்று தொழில்நுட்பத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும் செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராகக் கைகோத்துக்கொள்கின்றன. சமீபத்தில், எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தடைசெய்து ஒடுக்க முயன்றதே இதற்குச் சிறந்த உதாரணம்!''

''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?'' 

''எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும். அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக மாறி மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதைக் கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு. இன்றைய கார்ப்பரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலை யும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோ ருக்கும் கைவராத கலை என்பதைப் போலச் சித்திரிக்கிறது. ஆனால், அப்படி அல்ல. உலகத்தில் ஆயிரமாயிரம் சாம்ஸ்கிகள், சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி சொல்லும் வாசகத்தையே இங்கும் சொல்கிறேன்: புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்!''

Vikatan ...

ஒரு தங்கை தாயாகிறாள்....
ஒரு கொத்துக் குளிர்த்தென்றல்
சட்டென்று சறுக்கி வந்து
என்உயிர் கொத்திச் சென்றதாய் ஓர்
பிரம்மாண்டப் பனிச்சரிவு எனக்குள்.

நினைவுகளும் நினைவுகளும்
நிர்ப்பந்தச் சண்டையிட,
என் கண்களுக்குள்
வானவில் ஒன்று
நிறுத்தாமல் நர்த்தனமிடும் சலங்கைச் சத்தம்.
என் தங்கை
தாயாகப் போகிறாள்.
ஒரு ஜனனச் சன்னல்
இதோ
பூமியின் பூபாளத்துக்காய் திறக்கப் போகிறது.
உற்சாக அலை ஒன்று
உள்ளுக்குள் உருள்கிறது.
அது
துள்ளும் கடலலையை எல்லாம்
உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொள்ளச் சொல்கிறது.
விரலிடுக்கில் விண்மீன் பறித்து
அதை
மின்மினிக்குப் பரிசளிக்கச் சொல்கிறது.
தோட்டத்தில்
தானியங்களை விலக்கிவிட்டு
வெள்ளைப்பூக்களும்
வண்ணத்துப் பூச்சிகளும் மட்டுமே
வளர்க்கச் சொல்கிறது.
பீலி பெய் சாகாடும் நிலை எனக்கு.
என் இதயக் குமிழுக்குள்
இத்தனை ஆனந்தத்தை
இறுக்கித் திணிக்க முடியவில்லை.
என் விரல் பிடித்து நடக்க
ஓர்
மழலை ரோஜா மலரப்போகிறது.
என் மொத்த மகிழ்ச்சிக் கொடிகளும்
ஒற்றைப்புள்ளியில்
ஓர் ஜீவ முடிச்சிடப் போகிறது.
ஒரு
பச்சைப்பிள்ளையின் முதல் சத்தத்துக்கு
ஓர் புதுத் தாயின் முதல் முத்தம்
புன்னகைப் பரிசாய் விழப் போகிறது.
பிரிய தங்கையே.,
நேற்றுவரை உன்னை பூவாய்த் தான் பார்த்தேன்.
நீ செடியான சேதியே
இன்றுதான் எனக்குள்
ஓர் சங்கீதமாய் விழுகிறது.
கிளைகளுக்குப் பூக்கிரீடம் சூட்டும் போது
வேர்களுக்குள் விழா நடக்குமென்று
இன்று தான்
விளங்கிக் கொண்டேன்.

பராசக்திநகர்அப்போதெல்லாம்
வெறும் ஐயாயிரம் தான்
நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால்
நான் கோடீஸ்வரன்
அங்கலாய்த்தார் ஒருவர்

அப்போதெல்லாம்
இங்கே
ஆள் நடமாட்டமே இருக்காது
பயங்களின்
பதுங்கு குழிதான் இந்த இடம்
என்றார் இன்னொருவர்.

எங்கே மழை பெய்தாலும்
இங்கே தான்
வந்து தேங்கும்.
இது
வயலாய் கிடந்த இடமப்பா
என்றார் மற்றொருவர்

அதோ அந்த இடத்தில்
இருந்தது
ஒரே ஒரு ஒற்றையடிப்பாதை
சைக்கிளில் வரவே
சங்கடப்படவேண்டும் அப்போதெல்லாம்

இதோ இந்த ஏரியா
நான்கு ரவுடிகளின்
தீர்மானத் தளங்கள்னா நம்புவியா ?
இது
கொலைகளின் கூடாரமாமப்பா !

ஆளாளுக்கு
காலாட்டிக் கொண்டே
கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம்
கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
நாலு வாங்கிப் போட்டிருக்கலாம்
என
பிற்காலத்தில் பேசக் கூடும்
நான்
என் "அரவிந்திடம்"

இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை--பாரதியார்

[20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புதுமனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, “இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை” என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]


இன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக் கொணர்ந்திருக்கும் தமிழ்ப்பாட்டை இங்கு வாசித்துக்காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் ‘பாத்திஹா’ (ஜபம்) ஓதி முடிந்துவிட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்.

பல்லவி
அல்லா, அல்லா, அல்லா!
சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்,
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ் ஜோதி
(அல்லா, அல்லா, அல்லா!)

கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்
நல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)

எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதன் காரணம் பின்வருமாறு:

பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.

மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரம்மாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தக் கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது. முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்கிரஹாரதலையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக்கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தார் கோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிக கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்: “நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர் தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்) அவர் நம்மைப்போல் தோலுடம்பும் கைகால் முதலில் உறுப்புக்களும் உடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக் காத்து எல்லாவற்றையும் வடிவு மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவும் உடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதே சரியான பூஜை, இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராத மாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி “இஸ்லாம்” என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள். ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்துவாழ முதற்பட்டு வாருங்கள்” என்று முஹம்மது நபியாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து, “மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா, முஹம்மதுர்ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது” என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.

இரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தம் குமாஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்து பிறகு அவருக்கே மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்துகொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதினின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே இருந்து, நீ நோய் வேதனை பொறுக்க மாட்டாமல் அழுவதையும், இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்ப வேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றப்படி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புக்களாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே, இங்கிலீஷில், “எந்த மனிதனும் தன் சொந்த ஊரில் தீர்க்கதரிசியாக மாட்டான்” என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.

முஹம்மது நபியை முதல்முதல் அலியும், அதைக் காட்டிலும் ஆச்சர்யம் தோன்றும்படி, கதீஜா பீவியும் கடவுளின் முக்கிய பக்தரென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும், பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்த மஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி என்பதும், பக்த குல சிரோமணி என்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.

மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்துவிட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்கிரகாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும் மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டிவிட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப்படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டு வழியே போகையில், பின்னே குதிரைப்படை வரும் சத்தம் இவர்களுடைய காதிற்பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த சீடர்: “ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத்தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!” என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸ்ல்லம்) அவர் சொல்லுகிறார்;

“கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறைவேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும்வரை, என்னை உலகத்து மன்னர்களெல்லோரும் ஒன்று கூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கு ஒரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்த போதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸ்ர்வ வல்லமையுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்த ஜகத்தில் வேறில்லை. ஆதனால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது.

இந்த ஸமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே, என் மனத்தில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று. ஸாதாரண காலங்களில் தைர்யத்துடன் இருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கி வரும்போது, “கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை” என்று மனத்துடன் சொல்வோன் உண்மையான தெய்வபக்தன். தெய்வ பத்தி ஒன்றைத் தவிர வேறெந்தச் சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறிவரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்தப் பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. “பாம்பென்றால் படையும் நடுங்கும்.” இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கள் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணை கொண்டு முஹம்மது நபி வென்றார். ‘கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கையும்’ அவரிடத்தே இருந்தன. ஆதலால் அவருக்கு,

எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
விடுத்ததாய் மொழிக் கொங்கணும் வெற்றி
வேண்டு முன்னர் அருளினர் அல்லா.

இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலைவனத்தில் நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின்மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின்மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும் நெடுங்காலத்து பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை. அப்போது அங்கு ஞான ஒளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று.

அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ
எங்கும் ஏன் ஏன் என்ற தென்னே, பராபரமே

என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.

இந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷி காட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமேலீட்டால், “கடவுளே கடவுளே” என்று கதறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டியிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும், “ஏன், ஏன்” என்று மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகிக தந்திரி. வியாபாரமானாலும் யுத்தமானாலும் முஹம்மது நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்.

எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினினும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலஹி வஸ்ல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸ்த்யத்திற்கும் அல்லாவிற்கும் முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர்.

இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதை நோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார்.

அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கும் அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நம் நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்பு இல்லை. கேள்வியால் மஹா பண்டிதரானார்; ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாத பக்தியால் அரசனும், கலீபும் தீர்க்கதரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும் வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூ பக்கரின் குமாரியான ஆயிஷா பீவியைப் பிரதான நாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி. 632-இல் இந்த மண்ணுலகை விட்டு முஹம்மது வானுலகம் புகுந்தார்.

மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸ்ஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவ பண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரனை செய்வது வழக்கம். அதனின்றும் விக்கிரஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய “பழைய ஏற்பாடு” என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்துகொண்டார். கிருஸ்துவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின் அவதாரமாக ஒப்புக் கொள்ளவில்லை. விக்கிரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கும் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும், அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும் அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமே யல்லது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்து பின்வருமாறு:

இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸூக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன், மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.

அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம் யாது? சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூல ரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை எனினும் ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக்கரணத்துக்கு நன்றாக விளங்கும் வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவிபோலே ஆக்கிக்கொண்டு, புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ண சைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத் திருவுளம் பற்றுவராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்து நாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.

இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத்திற்குப் பின்பு முஸல்மான்களிலே, ஷியா ஸுந்நி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின.

குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும் தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.

Wednesday, December 12, 2012

எப்படி இருக்கும் முதுமை????

எப்படி இருக்கும்

முதுமை

இறப்பை எதிர்நோக்கிய

தனிமை?

அனாயாசமான
அனிச்சை சுவாசம்
பிரயாசையாகிப் போகுமோ? - மூச்சு
இழுக்கவும் விடவும்
முயற்சி தேவைப்படுமோ?


ஓடியாடியது போதுமென
ஓய்ந்திருக்கத் தோன்றுமோ ?- உடல்
ஒவ்வோர் இடத்திலும்
விட்டுவிட்டு வலிப்பது
பழகித்தான் போகுமோ?

நடக்க முடியாமல்
உட்கார்ந் திருக்க விரும்புமோ?
இருப்புக் கொள்ளாமல் - மனம்
படுத்துறங்க நாடுமோ?

படுக்கை முட்களாகி
புரட்டிப்புரட்டிப் போடுமோ?
உறக்கம் இமைக்கு வெளியே
விளையாட்டுக் காட்டுமோ?

வாழ்ந்ததெல்லாம்
விழித்திரையில்
வரிசையாகத் தோன்றுமோ? - வாழ்ந்த
வாழ்க்கை வந்து நின்று
பரிகாசம் செய்யுமோ?

பார்வை மங்கிப்போய்
பரிச்சயம் பிழையாகுமோ? - நில்லாமல்
அலைபாய்ந்த விழியிரண்டும்
நிலைகுத்திப் பார்க்குமோ?

குழந்தைகளின் ஆரவாரம்
கூச்சலென வதைக்குமோ?
சப்தம்கூட்டிப் பேசச்சொல்லி – கை
காதுமடல் தாங்குமோ?

சுமந்து சென்ற கால்களிலும்
சுணக்கம்தான் நிலைக்குமோ? - இனி
மூன்றாம் காலொன்று
முதற்கையில் முளைக்குமோ?

மறுமையை மறந்து மனம்
மருந்துகளை நாடுமோ? - வெறுத்து
ஒதுக்கிவைத்தச் சொந்தபந்தம்
ஒன்றுகூட ஏங்குமோ?

பயணச் சுமைதனிலே
பாவங்கள் கூடிடுமோ ?- இல்லை
மரண நினைப்பு மிகுந்து
பயம் வந்து சேருமோ?

எப்படி இருக்கும்
முதுமை - உறுதியாகிவிட்ட
இறப்பை எதிர்நோக்கி நிற்கும்
ஒருமை?