Total Pageviews

Friday, January 26, 2018

யோகக்காவடி

யோகக்காவடி




அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்...

தமிழ் நாட்டை விடத் தெற்காசிய நாடுகளில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுக்கு வேண்டிக்கொண்டு  பால்.பன்னிீர்.,புஷ்பம்.,என பலவித காவடிகள் தூக்கி ஆடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்..ஆட்டம் சரி..ஆனால் எதற்காக என உணார்ந்தாடுகிறோமா என்பதே கேள்வி????. 


காவடிகள் தூக்கி, நற்பாவடிகள் பாடிஉந்தன்
சேவடிகள் நாடிவாறோம் ஓடி....

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்......எனப்பாடல்கள் பாடுகிறோம்

பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் 
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு. 

எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய சில பொதுவான ஆகம,தாந்திரிகநியமங்கள்,நெறிகள்,வழிபாட்டு முறைகள்  அவரவர் ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப இங்கு இருந்தன என ஒரு கருத்துண்டு. நம்மிடையே உருவ,அருவ,உருவருவ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அவரவர் அறிவுக்கேற்ப இங்கு வழிபாடும் இருந்து வருகிறது...இதனையே

அவரவர் தமதம அறிவறி வகைவகை 
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவரவர் விதிவழி அடியனின் றனரே!.... என்கிறார் நம்மாழ்வார்


நம் இந்திய வழக்காற்றில்..மதங்கள் என ஒன்றில்லை.சமயங்கள் மட்டுமே இருந்தன

1.சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட சைவம்(saivam)-இது இறைத்தன்மை ஒருமை நிலையில் இருக்கும் நிலை. 
2.சக்தியை வழிபடு தெய்வமாகக் கொண்ட சாக்தம்(saaktham)-இது இருமை நிலை 
3.விஷ்ணுவை வழிபடு தெய்வமாகக் கொண்ட வைணவம்(vainavam)-மும்மை நிலை. 
4.பிரம்மாவை வழிபடு தெய்வமாகக் கொண்ட சௌரம்(sauram)-நான்கு நிலை தன்மை. 
5.விநாயகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட காணபத்தியம்(ganapaththiyam) -ஐந்தாம் நிலை. 
6.முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்ட (kaumaaram)-இறை தன்மையின் ஆறாம் நிலை. 


இந்த சமயங்களின் முடிவான நிலைஎன்பதும், இதன் நோக்கமும் யாதெனில், மனிதன் இறையைத் தனக்குள் உணர்ந்து கடவுள் மயமாக வேண்டும் என்பதே....

சிவநிலை என்பது அடக்கமும்..ஒடுக்கமும்.


முருக நிலை என்பது அறிவும்,,விரிவும். 

சிவனிலை என்பது உடலையும்,உள்ளத்தையும்,  சகலத்தையும் கடத்தல்.

முருகநிலை என்பது..உடலுக்குள்ளும்..உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல்.

முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை. 
பின்னது..கையில் இச்சா சக்திஎனும் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டுத் தனக்குள் தன்னை முழுமை பெறவிடாமல் தடுக்கும் சூரத்தனங்களை எதிர்த்து நிற்கும்     நிலை. 


ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையை நோக்கி..ஆறாம் நிலைக்கு


உயர்வதே மனித வாழ்வு.. 


முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம் ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று. 
நெற்றி எனும் குன்றில் இளங்கும்..அறிவுக்கடவுளே முருகன். 
அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில்..அறிவை ஆட்டுவிப்பது மூளை. ஆம் 
மனித மூளை..நம் கபாலத்தில் காரணத்தோடு..மூன்று இடங்களில் 
பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது. 
வலது மூளை..இடது முளை..மையத்தில்..முகுளம். 
ஒருவன் மது அருந்தினால்..சாக்கடையில் விழுவான்.. 
அவனுக்குச் சாக்கடையில் இருக்கிறோம் எனத் தெரியும்..நாற்றமடிக்கிறது எனவும் தெரியும்.  இந்த இம்சையில்,இச்சையில்  
இருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும்..ஆனால் எழுந்து செயல்பட 
முடியாது.காரணம்..முகுளம் பாதிக்கப்படுவதே. 
நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும் 
விடைகளும்..மகிழ்ச்சியும்.சோகமும்..ஏற்றமும் இறக்கமும்..வலது இடதாய் 
இருக்கிறது. வலதில் ஒரு கருத்து..இடதில் அதற்கு எதிரான கருத்து.. 
எதை எடுத்துகொள்வது..

அறிவுக் கண்கொண்டு பார்த்தால்..
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை. 
சதா நம் கபாலத்தில்..வலது மூளையும்..இடது மூளையும்..செய்யலாமா 
வேண்டாமா..எனப் போராடியே..ஒரு முடிவை எடுக்கிறது. 
நம் எண்ண அலைகள்..கபாலத்தில்..வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம்.. 
கொஞ்சம் விழிப்புணர்வுடன் பார்த்தால்..ஒரு அரைவட்ட நாண் போல 
தெரியும்..அதாவது..காவடியின் மேற்பகுதி போல. 
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான். 
in very simple words..kaavadi aattam is the balancing the thing in 
between left and right. 

எந்தப் பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல்..நடுனிலையான அறிவுநிலையில்..நாம் வாழவேண்டும்..என்கிற உட்புற மன பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட உள்நிலை விஞ்ஞானமே காவடி தூக்குதல்....




காவடி ஆட்டம்.......


இது முகுளத்தை பக்குவமாக்கும் சுழிமுனைப் பயிற்சி,
  


.....இது நமக்குள் இருக்கும் சூரத்தனங்களை வென்று   இச்சைகளின் வசப்பட்டு வாடிக்கிடக்கும் மனத்தை விடுவித்து ஒருமையாற்றலுடன் மனதை வீறுகொண்டு எழச்செய்யும் பயிற்சி.    எனவேதான்   காவடி ஆட்டம் கெளமாரத்திற்குறிய யோகசாதனையாக இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது 

இச்சையை வெற்றி கொண்டு இச்சா சக்தியாக்கிக்கொள்ளும் அற்புத உள்நிலை விஞ்ஞானம்  காவடி தூக்குதல்....காவடி என்பது  சரியையில் யோகம்.

தமிழ் மொழியில் காவுதல் என்றால் தூக்குதல் என்று பொருள். காவு+அடி = காவடி!!! அதாவது இறைவனின் தூக்கிய திருவடியைப் பிடித்து மேலேறிச் செல்வதற்கே காவடி எனப்பெயர்...


இயற்பியலில் Fulcrum,lever என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம். A lever is a beam connected to a hinge,called a fulcrum. அதுவே Human Fulcrum ஆகும்போது அதே Lever காவடி ஆகின்றது! அதாவது இருபுறமும் எடை சமன் செய்தல் =  Balancing!  (mechanical advantage of a lever(MA) = Balance ofTorque,about the fulcrum; MA= m1/m2= a2/a1)



சம்காரம் செய்த கடவுளர்களில்..எதிரியை..மன்னித்து தன்னிடமே வைத்துக்கொண்ட 
ஒரே கடவுள் முருகன் மட்டுமே. 
அன்பும்..அறிவும்..விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. 
எனவே..வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்றுமுதல்...நமக்குள் ஆடிப் பழகுவோம். 
வேண்டுதலிலும் விழாமல்..வேண்டாமையிலும் விழாமல்..நடு நிலையில்..நம் 
அறிவுக்காவடியை ஏந்தி பிடிப்போம். 
நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்..தைப்பூசமே. 

அரோகரா. 


Wednesday, January 10, 2018

பல்லாங்குழி....

பல்லாங்குழி....


மேலைநாட்டு வழக்கப்படி விளையாட்டுகளை..உள்ளரங்க விளையாட்டு, வெளியரங்க விளையாட்டு என பிரிப்பதுண்டு. அவ்வகையில் பல்லாங்குழி உள்ளரங்க விளையாட்டு . இருவராக ஆடக்கூடிய விளையாட்டுக்கள் நிறைய உண்டு. நம் விஸ்வனாதன்ஆனந்த் ஆடும் சதுரங்கம் முதல், உலகையே கலக்குதே அந்த கேரம் வரைக்கும் நிறைய ஆட்டம் இருந்தாலும்.. அவற்றிற்கெல்லாம் இல்லாத தனிபெரும் பழமையும், தத்துவ தன்மையும் பல்லாங்குழிக்கு உண்டு.
இருவராக விளையாடும் எல்லா ஆட்டங்களுமே எதிரில் விளயாடுபவர்களை வீழ்த்தும் ஆட்டம். பல்லாங்குழி மட்டுமே வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு ஞானத்தையே உணரவைக்கும் ஆட்டமாகும். பல்லாங்குழி மனையின் அமைப்பை கவனித்தால் பெரும் வியப்பு தோணும் நமக்கு. ஆம்..ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு.
ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவரவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழேழு குழிகள். ஒன்று கூடாது..ஒன்று குறையாமல். ஏழேழு குழிகள். மூடிய போது ஏழு முழுக்குழிகளாய் இருந்தவை ஆட்டம் துவங்கியதும்..ஏழு அரைக்குழிகளாக பிரிந்துவிட்டது.
இந்த ஏழு என்றதும் பலருக்கும் பல உண்மைகள் தோன்றலாம்..அதென்ன மிக சரியாய் ஏழு என்று..?ஆம் நம் கலாச்சரத்தில் ஏழுக்குள் இருக்கும் முக்கியத்துவத்தை யாராலும் மாற்றமுடியாது. நாம்தான் இன்னும் உணராமல் இருக்கிறோம்.
இந்த பல்லாங்குழிமனையே ஒரு மனித உடல்தான். மனித உடல்தான் என்ற பிறகு அதைபோய் பிரிப்பானேன்..? பிரிக்கத்தான் வேண்டும். காரணம்..ஒவ்வொரு மனிதனும் அண்டமும் , பிண்டமுமாக இரண்டாகத்தான் இருக்கிறோம். மேலும்..இவ்வுலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணுமே அர்த்தனாரிகள்தான். நம் உடலில் உச்சந்தலை சகஸ்ரம் உட்பட இருக்கும் ஆறு ஆதாரசக்கரங்களே இந்த ஏழு குழிகள். சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்துவிட்ட கதை நமக்கு தெரியும். இதை நம் ஒவ்வொருவரின் வாழ்கையோடு பொருத்திபார்க்க முடியுமா..?
நிச்சயமாக முடியும். இந்த உலகமே ஈர்ப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் சரிபாதி பெண்மை இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சரி பாதி ஆண்மை இருக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இதை காலம் உணர்த்தும்போது ஒரு ஆண் தனக்குள் இல்லாததான பெண்மையை ஒரு பெண்ணிடம் தேடுவதும், ஒரு பெண் தன்னிடம் இல்லையென கருதும் ஆண்மையை ஒரு ஆணிடம் தேடும் தன்மைதான் உடல் ஈர்ப்புக்கான அடிப்படை.
அந்த ஈர்ப்பு ஒரு முடிவுக்கு வந்து பந்தத்தில் நிறைவுறும்போது - இணைகளாய் மாறிய அவர்கள் அர்த்தநாரிகள் ஆகிறார்கள்.தம் நேசங்களை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு அன்பு காட்டுபவர்களாகவும், விட்டுதருபவர்களாகவும் மாறுகிறார்கள்.தனி தனி உடல் ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு தளங்களில் மனதால் இணைந்தே அவர்கள் முடிவெடுத்து வாழவேண்டியிருக்கிறது.
சரி பல்லாங்குழி ஆட்டத்திற்கும் இந்த தன்மைகளுக்கும் என்ன தொடர்பு...?
நம் வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் நம் ஆதாரசக்கரங்கள் ஆண் - பெண்ணாய் பிரிந்து அதே நேரத்தில் ஒத்த முடிவில் இணைந்து செயல்படும் தன்மையதாய் உள்ளதன் குறியீடே பல்லாங்குழியாட்டம்.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் - கோவில் அரசமரத்தடியில் இருக்கும் 'நாகல்' போல, நம் உடலின் ஆறு ஆதார மையங்களை உச்சி சகஸ்ராரத்தில் இணைப்பதான குண்டலினி பாம்பின் மடித்துவைத்த தோற்றமே பல்லாங்குழி மனை. மிக பழமையான பல்லாங்குழி மனைகளில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதை நீங்களே பார்க்கமுடியும்.
ஆணின் குண்டலியினில் பெண்ணின் ஆளுமை, மற்றும் பெண்ணின் குண்டலியினில் ஆணின் ஆளுமை , இவற்றின் அடிப்படை அத்தியாவசியமே.. பல்லாங்குழி ஆட்டத்துக்கான மூலக்கரு. ஒரு ஆண் தனியாக முடிவெடுப்பதும், ஒரு பெண் தனியாக முடிவெடுப்பதும்..வாழ்வில் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவை இல்லை . மகாபாரதத்தில் சூதாடியபோது ஆண்கள் முடிவெடுத்தார்கள். இராமயணத்தில் மானுக்கு ஆசைப்பட்டு கணவன் ராமனையும், இலக்குவனையும் இயக்கியபோது சீதை முடிவெடுத்தாள்.
அரிச்சந்திரபுரானத்தில்- தன் உண்மை பேசும் கொள்கையிலிருந்து தவறக்கூடாது என்பதற்காக மன்னன் அரிச்சந்திரனும் - அவனது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
இருவர் ஒத்திசைந்து முடிவெடுத்து காலவோட்டத்தில் துன்பம் வந்தாலும் நிலையான இறுதி இன்பத்தை அடைய இப்படி எடுக்கப்படும் முடிவுக்கு பல்லாங்குழியாட்டத்தில் நிருபணம் உள்ளதா..?
உள்ளது.
அந்த ஏழு குழிகள் சொன்னோமல்லவா..? அவை வேறெதுவுமில்லை..
1.சகஸ்ராரம்

2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது. நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில் சுட்டிக்காட்டபட்டுள்ளன.
சகஸ்ரஹாரம் துவங்கி விசுத்தி வரை - ஆகாயம் அல்லது மேலோகம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம்வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்போது பல்லாங்குழி மனையை விரித்துவைத்துக்கொள்ளுங்கள். சோவிகளை எடுங்கள். எவ்வளவு சோவிகள் தெரியுமா ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு. இது எண்குணத்தின் குறியீடு. இந்த எட்டு குணங்களைக்கொண்டுதான் நாம் நம் ஒவ்வொரு உணர்வுகளையும் இந்த உலகை நோக்கி பிரதிபலிக்கிறோம்.
விளையாட இருவர் அமர்ந்தாயிற்று. அவர்தம் முறையே இடது பக்கம் ஒருவருக்கும் வலது பக்கம் ஒருவருக்குமாக இருக்கும் முதல் குழியே சகஸ்ரஹாரம். ஆட்டத்தை துவங்குபவர் எந்த குழியில் இருந்தானாலும் விளயாட்டை துவங்கலாம்.
permutation and combination தத்துவப்படி- முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் - மேலோகம் என்று சொல்லக்கூடிய முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும் ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால் கண்கூடாக அனுபவிக்கலாம்.
இந்த வாழ்வு எதிர்மறைகளுக்கு இடையில் ஒத்திசைந்து நேர்மறையாய் வாழவேண்டியதன் தேவையை பல்லாங்குழி ஆட்டம் உணர்த்துவதை நீங்களே உணரமுடியும்.
சிறு வயதில் என் காது கேட்காத பாட்டி - என்னோடு விளையாடும்போது ஜெயித்துக்கொண்டே இருப்பாள். நான் அழுவேன். ஒரு முறை சொன்னாள்.."இந்த குழியிலேர்ந்து எடுத்து ஆடு..நீயும் ஜெயிப்பே.."என்று .......ரகசியம் அதுதான். நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே.