Total Pageviews

Sunday, July 21, 2013யோகயுவகேந்திராவின் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்........

Wednesday, July 10, 2013

பள்ளிக்கூடம்.....
பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிற இடம் என்பது தான் பொதுவான புரிதல். அது சரியும் கூட. ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் அதுவும் தனியார் பள்ளிக்கூடங்கள் பணம் பிடுங்கும் பகல் கொள்ளைக்காரர்களின் கூடாரங்களாக இருக்கின்றன என்று தான் பெரும்பாலும் அனுபவப்பட்டவர்களின் கூற்றாக இருக்கின்றன. இன்று இருக்கிற அமைப்பில் பள்ளிக்கூடங்கள் உருவாவதற்கு முன் நம் ஊர்களில் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் மூலம் தான் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இன்றைக்கு கற்பிக்கப்படும் இந்தக் கல்வி முறை மெக்காலே என்ற ஆங்கிலேய அதிகாரியால் உருவாக்கபட்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இந்த கல்வி முறையை அமல் படுத்த வேண்டிய அவசியம் குறித்து மெக்காலே அன்றைய ஆங்கிலேய அரசுக்கு அனுப்பிய குறிப்பு ஒன்று இப்படி சொல்கிறது. -1835ல் மெக்காலே பிரபு அனுப்பிய குறிப்பின் கருத்தின் சுருக்கம்!

”இந்தியாவில், நீள அகலத்திலும் குறுக்கு நெடுக்கிலும் நான் பயணித்திருக்கிறேன். ஒரே ஒரு திருடனையோ, ஒரு பிச்சைக்காரரையோ நான் நான் கண்டதில்லை. அப்படியொரு, செல்வத்தை, உயர் அற மதிப்பீடுகளை, செம்மாந்து வாழும் மக்களை இங்கு காண்கிறேன். இந்த நாட்டை, ஒருபோதும் நம்மால் வெற்றிகொள்ள முடியாது. அவ்வாறு வெற்றி கொள்ளத்தான் வேண்டுமெனில், இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கும், அக ஒழுக்கத்தை, பண்பாட்டு மரபுச் செழிப்பை முறிக்க வேண்டும். 

ஆகவே, இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை, பண்பாட்டுக் கூறுகளை அகற்றிவிட்டு, அவற்றிற்கு பதிலாக நமது முறைகளைக் கொண்டுவர வேண்டும். எவையெல்லாம், அயல்நாட்டிலிருந்து வருகின்றனவோ அவை எல்லாம் தம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை என இந்தியர்கள் நம்பும்படிச் செய்ய வேண்டும். தங்கள் மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் உயர்வானது என எண்ணச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மாறத் துவங்கிய பின்னால், தமது சுய பெருமிதத்தை இழப்பார்கள்; தமது சொந்தப் பண்பாட்டை இழப்பார்கள்; பின்னர் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள். இந்தியா, ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும்!” 


இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சிக்குத் தேவையான அடிமை குமாஸ்தாக்களை உருவாக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட மெக்காலே கல்வி முறை தான் இன்று நமது பள்ளிக்கூடங்களில் பின்பற்றப் பட்டு வருகிறது. இன்று நாம் காண்கின்ற இந்தப் பள்ளிக்கூடம் என்பதற்கும் நமது மரபில் செயல்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்தத் திண்ணை பள்ளிக்கூடத்திற்குஅமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் விடுமுறை விடப்படும். அவற்றுக்கு முன் பின் நாள்களும் விடுமுறை நாள்களே. முதல் நாள் உச்சிப்பள்ளி என்று பெயர். உச்சியில் சூரியன் வருகிற நேரம் வரை மட்டும் பள்ளிக்கூடம் இருக்கும் அதனால் அது உச்சிப்பள்ளி என்றானது. அன்று மாணவர்கள் பள்ளிக்கூடத்தை மொழுகிப் பெருக்கி சுத்தம் செய்வர். அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்கு வந்துள்ள காய்கறிகளையும் அரிசியையும் ஆசிரியருக்குக் காணிக்கையாக்க் கொண்டு வந்துக் கொடுப்பார்கள். பலர் அவற்றுடன் காசும் கொண்டுவந்து தருவார்கள். 

இந்தக் கொடை பொருட்கள் தான் ஆசிரியருடையை குடும்ப வாழ்க்கைக்கு பெரும் துணையாக இருக்கும். இன்று போல பகல் கொள்ளை அன்றைய பள்ளிகளில் இல்லை. சனி எண்ணெய் என்று ஒன்று உண்டு. சனிக்கிழமை தோறும் எல்லா மாணவர்களும் அவரவர் வீட்டிலிருந்து சிறிதளவு நல்லெண்ணெய்யை கொண்டு வந்து ஆசிரியருக்கு கொடுக்கும் வழக்கம் இருந்த்து. இதுவே சனி எண்ணெய் என்பதாகும். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் பைய பைய மறைய கொஞ்சம் கொஞ்சமாக பெருகியது இன்றைய கொள்ளைப் பள்ளிக்கூடங்கள்.

நன்றி;வெள் உவன்

Tuesday, April 30, 2013

சிவராஜயோக நடனம்.....நடராஜரின் ஒளி நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார்.

மகாவிஷ்ணுவும், ஈசனின் ஆனந்த ஒளி நடனக் கோலத்தை வர்ணிக்க....... தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய் ஆதிசேஷன் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் ஆகாய ஸ்தலமான சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிமகரிஷிக்கும், அனுசூயைக்கும் மகனாய் பிறக்கின்றார் , இந்தக் குழந்தையே பதஞ்சலி மகரிஷி.......... உலகமே திரும்பிப் பார்க்கும் யோகக் கலையின் தந்தை இவர்தான்..யோகம் என்றவுடன் ஏதோ கை கால்களை அசைத்து செய்யும் ஒரு உடற்பயிற்சி என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கி நிற்கிறது.....சாதாரண மனிதர்கள் இவ்வாறு புரிந்து கொள்வதில் வருத்தமில்லை ஆனால் ஒரு சில வேதாந்திகளும், சில சித்த வித்யார்த்திகளும்,சில சன்மார்க்கிகளுமே..........யோகம் என்றவுடன் அதனை கிள்ளுக்கீரையாக நினைத்து கேலி பேசுவது....அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது..

நண்பர்களே! உடல், உள்ள நோயை தீர்க்கும் பயிற்சி முறைகளை மட்டும் உள்ளடக்கியதல்ல யோகம்........சாதகனுக்கு ஞானத்தெளிவை உண்டாக்கி நோய்களில் எல்லாம் தலையான, பிறவி நோயைத்தீர்ப்பதற்கானப் பயிற்சி முறைகளை உள்ளடக்கியதே யோகம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் .....வெறும் ஹட யோகப் பயிற்சிகளை மட்டும் யோகமென்றோ, அல்லது வேதாந்தக் கருத்துகளை மட்டும் தெரிந்து கொண்டு அதனுடைய உள் அர்த்தங்களை உணராமல் ஹட யோகப்பயிற்சிகளை யோகமில்லை எனக்கூறி எள்ளி நகையாடுவதும் அறிவுடைமையாகாது. சித்தர்கள் முறைப்படுத்திக்கொடுத்த அட்டாங்க யோகத்தை முழுவதுமாக தெரிந்துகொள்ளாமல் யோகத்தினால் ஞானம் கிடைக்காது எனக் கூறுவதும் அர்த்தமுடையதல்ல.

வான் போற்றும் நாயகன், என் மார்க்கம் அது சன்மார்க்கம் என கர்ஜித்த வடலூர் வள்ளல், சிதம்பர ரகசியம் எனக் கூறப்படும் தகர வித்தையை சிதம்பரத்தில் உணர்ந்து, ..... அந்த ஒளி நடன ரகசியத்தை தனது அடியார்களானத் திருக்கூட்டதிற்கு கருணையோடு வழங்கியிருக்கிறார். 

பதினெண் சித்தர்களும் கண்ணுற்ற அதே ஒளி நடனக் காட்சியை .....சன்மார்க்கத்தை, எம்பெருமான் வள்ளலாருக்கு முன்பே பார்த்தவர் தானே பதஞ்சலி மகரிஷி.....அதனால் தானே வள்ளல் பெருமானும், வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டத்தில் நானும் ஒருவன் என்கிறார். 


பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் பதஞ்சலியும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய யோகசூத்திரத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

“பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலைக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். தனது கூட்டமான பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர். தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர் பதஞ்சலி. 

“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்

என்றிவர் என்னோடு எண்மருமாம்!” ...........திருமந்திரம்


சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். 

“பதஞ்சலி என்னுடைய தாத்தா!

மேலே ஏறிப் பார்!

ஆனால் என்னைப் பிறப்பித்தவர்

காலங்கி நாதர்!

பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது

பார், இதுவே சரியான வழி!

"அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் எப்படி திரும்புவது என்றும் எனக்குச் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி (வாலைத்தாய்)காட்சி கொடுத்துச் சொன்னாள்.”அப்பா நீ தேடினாயே இது தான் அது!” என்று.

குண்டலினி யோகம் சாதனை செய்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடைத்ததும் பிறந்தது “போகர் 7,000″. அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.


மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வெளி வந்தது தான் அவ்ருடைய யோகசூத்திரம்
இப்போது ஒரு சுவாஸ்யமானக் கதையைப் பார்ப்போம்.


அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்த சித்தர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் அடங்குவர் ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ, தான் பூக்களைப் பறிப்பதற்காக இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால், புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம், மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும், கால்களும் இருப்பதால், ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள், தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு, பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம்.


அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தாராம். இப்படி நந்தி தன் "கொம்பை" நினைத்துப் பெருமையிலேயும், வியாக்ரபாதர் தன் புலிக் "கால்களை" நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள், ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப் படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார்.


நந்தியும், வியாக்ரபாதரும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தான் மட்டுமே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். “புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதை நான் பார்ப்பதை விடவா நீ பார்த்துவிட்டாய்? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனம் தெரியுமே. சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?” என்று சொன்னார்.

இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, “உனக்குக் கொம்பும் இல்லை, புலிக் கால்களும் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?” என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.

தான் ஆத்மார்த்த அனுபவத்தில் திளைத்து ஈசனின் ஆட்டத்தில் ஒன்றிப் போகவில்லையோ? இவர்கள் சொல்வது தான் சரியோ? ஒரு வேளை புலிக்கால்களும், நந்தியெம்பருமானைப் போல் கொம்புகளும் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்கும் பக்குவம் வருமோ? என நினைத்தார் பதஞ்சலி.

அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க ஈசன் வந்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, “பதஞ்சலி, இன்று யாம் "பாதம்" தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் "பதம்" பாடப் போவது நீயே தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்.” என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

மேலும் கூறுகின்றார் ஈசன், “பதஞ்சலி, இன்றைய பாடலில் "கொம்பும், காலும்" வரக் கூடாது!”என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப் பதஞ்சலி முனிவரோ “அப்படியே ஆகட்டும் ஈசனே!” என வணங்கி நின்றார். வியாக்ரபாதரின் முகத்திலும், நந்தியினின் முகத்திலும் ஈ ஆடவில்லை. பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடிக்கு துதி ஒன்றைப் பாடினார். கெ, பெ, போ, ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும், கா, பா, சா, லா, ளா போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடிய அந்த நடராஜர் துதி 

“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!”

இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.   இந்த நாட்டிய தரிசனமே "தகரவித்யா"எனும் பெயரில் யோகிகளால் போற்றப்படுகிறதுஎன்ன நண்பர்களே!  இந்தக் கதையில் என்ன தெரிஞ்சுகிட்டீங்க?????
கொம்பு என்ன? புலிக்கால் என்ன? புரிகிறதா????


யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ

Tuesday, April 23, 2013

“உடம்பு சூட்டுக்கு நல்லது கண்ணு…”,எவ்வாறு அந்த முக்கண்ணணுக்கு நம் மரபில், தேவாதி தேவன்’, மஹாதேவன் என்ற ஒரு தனி இடம் உண்டோ, அதேபோல் இந்த முக்கண்ணணுக்கும், நம் வாழ்வில் இன்றளவும் ஓரு முக்கிய இடம் இருக்கிறது.

“சமையலுக்குத் தேங்காய், கோவிலுக்குத் தேங்காய், பண்டிகைக்குத் தேங்காய், ஏன் இறுதிக் காரியத்திலும் தேங்காய்…”

இவ்வாறு நம் அன்றாட சந்தோஷத்திலும், துக்கத்திலும் தேங்காய் பிணைந்திருப்பது கண்டிப்பாக காரணமில்லாத தற்செயல் அல்ல.

நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் எந்தவொரு விஷயத்தையும், அரைவேக்காட்டுத் தனத்துடன் நம்மில் பெரும்பாலனோர் அலட்சியப்படுத்துவதும், அந்த விஷயங்களிலுள்ள மேன்மையை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தறியும் மேற்கத்தியர்கள், அதற்குக் காப்புரிமை பெற்றவுடன் குய்யோ முறையோ என்று நம்மவர் புலம்புவது இன்றைய தேதியில் புதிதல்ல.

பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளுக்குச் சொந்தமான தென்னை மரத்தின் தேங்காய் நமக்கு கயிறாகவும், படுக்கையாவும், உடையாகவும் மாறிவிட்டது. அதன் வழுக்கையும், இளநீரும் வெறும் பானமாகவும், உணவாகவும் அல்லாமல் நோய்களை தடுத்து விரட்டும் சஞ்சீவியாகவும் இருக்கின்றன.நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் எந்தவொரு விஷயத்தையும், அரைவேக்காட்டுத் தனத்துடன் நம்மில் பெரும்பாலனோர் அலட்சியப்படுத்துவதும், அந்த விஷயங்களிலுள்ள மேன்மையை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தறியும் மேற்கத்தியர்கள், அதற்குக் காப்புரிமை பெற்றவுடன் குய்யோ முறையோ என்று நம்மவர் புலம்புவது இன்றைய தேதியில் புதிதல்ல.

அந்த லிஸ்டில் நம் இளநீரும் சேர்ந்துவிடுமோ என்கிற பயம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஏனெனில், நம் இளநீரில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் நவீன அறிவியலின் முத்திரை குத்தப்பட்ட உண்மைகள் சில:
இளநீரால் இரத்தத்தின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கச் செய்து, இதயத்தைக் காக்க முடியும்.
மதுவினால் பாதிப்படைந்த கல்லீரலுக்கு இளநீரால் புத்துணர்வு அளிக்க முடியும்.
பழங்களுக்கு ஈடான கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மேக்னீசியம், துத்தநாகம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் என இவற்றுடன் பொட்டாசியமும் செரிவுடன் இருப்பதால், கோடை காலத்திலும் வயிற்றுப்போக்கின் போதும், நாம் இழக்கும் தாது உப்புக்களை மிக விரைவில் சமன்படுத்தும் மிகச் சிறந்த திரவம் இளநீர்.
கீழை நாடுகளில் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ட்ரிப்சுக்கு பதிலாக, இளநீரையே நேரடியாய் நரம்பில் செலுத்தி மருத்துவம் செய்து உயிர் காக்கின்றார்கள்.

சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட மனித இரத்தத்துடைய சாரத்தின் (பிளாஸ்மாவின்) கட்டமைப்புகளுக்கு மிக நெருங்கிய இயற்கைத் திரவம் இளநீர் மட்டுமே!!

ஒரு தலைமுறைக்கு முன்னர், இளநீர் நம் வாழ்வில் எப்போதும் பின்னிப் பிணைந்திருந்த்தது, இப்போதோ உடல் நலமில்லாதபோது மட்டுமே இளநீரைத் தேடுகிறோம்.

சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட மனித இரத்தத்துடைய சாரத்தின் (பிளாஸ்மாவின்) கட்டமைப்புகளுக்கு மிக நெருங்கிய இயற்கைத் திரவம் இளநீர் மட்டுமே!!

இப்போதுள்ள இளைஞர்கள், நவீனம் என்ற பெயரில், இன்றைய விளம்பர யுகம், வெறும் சர்க்கரைத் தண்ணீரோடு வாயுவைச் சேர்த்து, புட்டியில் அடைத்து, ஒரு சினிமா ஸ்டாரையோ, நாம் நேசிக்கும் விளையாட்டு வீரரையோ முன்னிருத்தி நம் ஆழ்மனதில் நாம் அறியாமலே, “அக்கா மாலாக்களையும்,” “கப்சிக்களையும்” புகுத்தி விடுவது என்னவோ நம் கஷ்டகாலம்தான்.“சம்மருக்கு என் சாய்ஸ், …ப்ஸி, …கோலா தான்!” என்று பீற்றிக் கொள்ளும் நவநாகரிக யுவ, யுவதிகள் பலருக்கு அவர்கள் விரும்பி அருந்தும் பானங்கள், மிக அதிக அமிலத்தன்மை (pH < 2.0 – Acidity) கொண்டவை என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஏனெனில், அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் (Artificial Sweeteners) Acidity ஐ மறைக்கின்றன.

“சரி சார்… Acidity அதிகமானா அப்படி என்ன பெருசாக் கெட்டுப்போகப் போகுது?,” என்கிற வீராப்பு வீராசாமிகள் குறைந்தபட்சம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகள்:

உடலில் (pH < 2.0 – Acidity) க்கும் குறைவான அமிலத்தன்மையை சமாளிக்கும் திறன் உடலில் வயிற்றைத் தவிற வேறெந்த பகுதிக்கும் கிடையாது.

கழிவறையைக் கூட ‘பளிச்’னு சுத்தம் செய்யும் திறன் நம்ம கோலாக்களுக்கு உண்டு என்பதை நீங்களே பரிசோதிக்கலாம்.
இத்தனை ‘ஸ்ட்ராங்கான’ அமிலம், நம் பற்களையும், எலும்புகளையும் அரித்து (எலும்புத் தேய்மானம்) பதம் பார்ப்தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

“இந்த நோய் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்கிற ரேஞ்சுக்கு, சீறுநீரகக் கல், கணைய பாதிப்பு, டயாபெடிஸ், உடற்பருமன், கல்லீரல் நோய், தூக்கமின்மை, மன அழுத்தம், பதட்டம் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

“உடம்பு சூட்டுக்கு நல்லது கண்ணு…”, “அடிக்கிற வெயிலுக்கு ஒரு இளநீய சீவித் தாரேன் குடிதாயி!” எனப் பாசம் பொங்க, நம் பாட்டன்கள் கூறுவதை, ஒரு சச்சினோ, ஷாரூக், தோனியோ டிவியில் தோன்றி சொன்னால்தான் குடிப்பேன் என்று இப்போது நீங்கள் அடம்பிடித்தால், ஒரு நாள் வரும், அப்போது நீங்கள் நினைத்தாலும், உங்கள் தோப்பு இளநீரை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட புட்டியில்தான் குடிக்க நேரிடும்.

ஸோ, இந்த சம்மருக்கு உங்கள் சாய்ஸ்???!

நம் தோட்டங்களில் குலை குலையாய் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் இயற்கை அமுதமா? அல்லது காசு கொடுத்தால் கேடு கொடுக்கும் ஸ்லோ பாய்ஸன்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்!

Friday, April 12, 2013

மச்ச எந்திரம்துரௌபதையின் சுயம்வரத்தில் முக்கியமான போட்டியொன்று இருந்தது. 

மச்சயந்திரம் என்றொரு யந்திரம் . உயரத்தில் ஒரு தூணில் குறுக்குக் கம்பத்தில் நிறுவப்பட்ட யந்திரம் அது. அதில் ஒரு "மீன்" பதுமை வேகமாகச்சுழன்று கொண்டிருக்கும். 

அதன் கண்ணைப் பார்த்து அதனை அம்பால் அடிக்கவேண்டும். சுலபமாகத் தோன்றக்கூடும். ஆனால் அவ்வளவு சுலபமில்லை நண்பர்களே......!!   அந்த மீன் பதுமைக்குக் கீழே இரண்டு சக்கரங்கள் சுழன்றுகொண்டிருக்கும். அவற்றில் "துவாரங்கள்" இருக்கும். 

இந்தச் சக்கரங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமாகச் சுழன்றுகொண்டிருக்கும். இந்த இரண்டு சக்கரங்களின் துவாரங்கள் ஒன்றாகச் சேரும்போது அவற்றின் நேரே "மீனின் கண்ணும் "வரவேண்டும். 

அந்த இரு சக்கரங்களின் துவாரங்களின் வழியாக மீனின் கண்ணில் அம்பு எய்யவேண்டும். 

அத்துடன் விட்டார்களா?      இல்லை. 

அந்த மச்ச யந்திரத்துக்கு நேர் கீழே ஒரு தடாகம். அதில் நிர்மலமான நீர்; அசைவற்று இருக்கும். அந்த நீரில் மேலேயுள்ள மச்சயந்திரத்தின் பிரதிபிம்பம் தெரியும். 

மேலே மச்சயந்திரத்தைப் பார்க்காமல் கீழே தண்ணீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டு மேலே அம்பைக் குறிவைத்து எய்யவேண்டும். 

அவ்வளவுதானா? 

இல்லை. 

இன்னும் இருக்கிறது. 

அந்தத் தடாகத்தில் ஒரு பெரிய தராசு இருக்கும். அந்தத் தராசின் இரு தட்டுகளிலும் தட்டுக்கு ஒரு "காலாக" வைத்து ஊன்றி அதில் "இசகாமல் பிசகாமல்" நின்று அங்கிருந்து கீழே பார்த்துத் தண்ணீரில் தெரியும் பிம்பத்தின் மூலம் குறியைக் குறித்துக்கொண்டு, மேலே வில்லைத் தூக்கிப்பிடித்து  நாணை இழுத்துவிட்டு மீனின் கண்ணைச் "சுழலும் சக்கரங்களின் துவாரங்களின்" வழியாக அடிக்கவேண்டும்.

இப்படிக் குறிபார்த்து, மச்ச யந்திர மீனின் கண்ணில் அம்பை எய்து தான் துரௌபதையின் கரத்தை வென்றானாம் அர்ஜுனன்.

அர்ஜுனன் வென்றவுடன் ஐந்து பேருக்கும் மனைவி ஆகிவிட்டாளாம் அந்தக் "குமரி"

என்ன நண்பர்களே ! கதை புரிகிறதா?

இதில் அர்ஜுனன் யார்?.........துரெளபதை யார்?..........மச்ச எந்திரம் எது? .....மீனின் கண் எது?.....சுழன்று கொண்டிருக்கும் சக்கரம் எது?......தடாகம் எது?........தராசு எது?.....கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!!!!!!!!!!


Monday, January 28, 2013

பசித்திரு.....


"௧டை விரித்தேன் கொள்வாரில்லை " என ஒரு மகான் சொன்னாரே அவர் யாருன்னு உனக்குத் தெரியுமா?.


"ஓ......தெரியுமே......நம்ம வள்ளலார்...!"


"வெரிகுட்....வள்ளலார் சொன்ன எதாவது ஒரு விசயத்தை சொல்லு பார்க்கலாம்."


"தனித்திரு,விழித்திரு,பசித்திரு"


"வெரிகுட்...வெரிகுட்...பசித்திருன்னு வள்ளலார் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?”

“அதுவும் தெரியும், .....நீங்க என்ன சொல்லப் போறேங்கன்னும் தெரியும்”

“ஒண்ணொண்ணா சொல்லு”

“பசித்திருன்னா ........அறிவார்ந்த விஷயங்களுக்காகப் பசித்திருன்னு அர்த்தம்”

“சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்?”

“பசித்திருன்னா எதையாவது தின்னுகிட்டே இருன்னு அர்த்தமில்லைன்னு சொல்ல வந்தீங்க”

“தப்பு. நான் சொல்ல வந்தது அது இல்லை”

“சரி, நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க"

“இப்போ, நீ பசியா இருக்கே. யாராவது சாப்பிடக் குடுக்கறாங்க. என்ன ஆகும்?”

“இது என்ன கேள்வி, பசி ஆறும்”

“அப்புறம் பசிக்கவே பசிக்காதா?”

“அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே. சாப்பிட்டது ஜீரணமானா திரும்பப் பசிக்கும்”

“ஜீரணம் ஆகல்லைன்னா?”

“ஆகல்லைன்னா வயித்தை வலிக்கும், வயித்தால போகும் சில சமயம் ஜுரம் கூட வரும். மூணு நாலு நாளைக்கு எதுவும் சாப்பிடவே முடியாது”

“எப்ப அந்த மாதிரி ஆகும்?”

“தப்பான உணவைச் சாப்பிட்டா அப்படி ஆகும்”

“சீக்கிரம் ஜீரணமாகிற உணவைச் சாப்பிட்டா?”

“அஞ்சாறு மணி நேரத்தில் ஜீரணமாகி மறுபடி பசிக்கும்”

“அது மட்டும்தானா?”

“சரி, சக்கையெல்லாம் வேஸ்டா மாறி வெளியேறும். அப்படி வெளியேற வெளியேற மறுபடியும் பசிக்கும்”

“அதாவது தப்பான உணவைச் சாப்பிடக் கூடாது. சரியான உணவைச் சாப்பிட்டாலும் சக்கை வெளியேறணும். அப்பத்தான் மறுபடி பசிக்கும், திரும்ப சாப்பிடலாம்; அப்படித்தானே?”

“பெரிய்ய கண்டு பிடிப்பு............அப்படித்தான்”

“அப்போ அறிவுப் பசிக்கும் "சத்"தான,அறிவார்ந்த விஷயங்களைத்தான் சாப்பிட்டுப் பசியாறணும். அதுலயும் சக்கைகள் இருக்கும்; அதை வெளியேற்றி "சத்"தை மட்டும் வெச்சிக்கணும். அப்பத்தான் மறுபடியும் பசிக்கும். தப்பான விஷயங்கள்,ஜீரணமாகாம நமக்குத் தொந்தரவு தர்றது மட்டுமில்லை, மேலும் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதையும் தாமதப்படுத்தும். சரிதானா?”

“அட.. பசித்திருங்கிற வார்த்தையில இவ்வளவு விஷயம் இருக்கா?”

“இன்னும் கூட இருக்கு”

“என்னது?”

“பசித்து + இரு"....ன்னு அர்த்தம் எடுத்தா இந்த அர்த்தம். பசி + திரு .....ன்னு அர்த்தம் எடுத்தா இன்னொரு அர்த்தம்”

“அதென்ன?”“திரு"ன்னா செல்வம். பசியே ஒரு செல்வம். வேளா வேளைக்குப் பசிக்கிறதே ஒரு செல்வம். பசியே இல்லைன்னு தவிக்கிறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா?”


"எவ்வளவுதான் ஆத்ம விசயங்களைக் கேட்டாலும் ...அது சரியாய் ஜீரணிச்சு மேலும்..மேலும் ஆத்ம பசி ஏற்படணும் இல்லைனா அஜீரணம் ஏற்பட்டு....மனம் விட்சேபமாகி....தமோ குணத்தில் மறுபடியும் தள்ளிவிடும்"


“சூப்பர்….மாஸ்டர்”


“என்ன தேடறே?”


“உங்க பின்னாலே ஒளிவட்டம் தெரியுதான்னு பார்க்கறேன்”


“ஆக்ச்சுவலா ஒளி ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?”


“ஐய்யய்யோ… போதும் மாஸ்டர் இன்னைக்கு இது போதும்; இது ஜீரணிச்சு மறுபடி பசிக்கிறப்போ....மறுபடி வர்றேன்..”

Tuesday, January 22, 2013

நான் இறந்து போயிருந்தேன்.....நான் இறந்து போயிருந்தேன்...

நாற்பது மூன்று வருடம்
யோகம் செய்து பாதுகாத்த உடம்பு
அசைவற்றுக் கிடக்கிறது.


நான் என்பது தொலைந்து
"
அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..

மெல்ல தகவல்
பரப்பப் பட்டது.
தங்கள் பயணத்திட்டங்களை
மாற்றி என் இறுதிப் பயணத்திற்காக
குவிந்தனர்.

காற்றில் அசைந்த
சாமியானாவில் காத்திருந்த
மனிதர்களுக்கு
"
வரக்காப்பி"
வழங்கப்பட்டது.

நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
அப்போது கூட
அவர்கள் மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கிறதென
என்னால்
கணிக்க முடியவில்லை.

பலர் பரபரப்பாக
நடமாடிக்கொண்டிருந்தனர்.
சிலர் மணி
பார்க்கத்துவங்கியிருந்தனர்..

என் கால் மாட்டில்
மனைவி மயங்கிக்கிடக்கிறாள்.
மகன் செய்வதறியாது கண்ணீர் மல்க..


சேதி கேட்ட என் தங்கை
விமானம், ரயில் என மாறி மாறி
பயணித்து
வந்து கொண்டிருக்கிறாள்.

எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்

கொஞ்சம் சீக்கீரம் எடுத்தா
பரவாயில்லை…….”

இப்படியாய்….
இன்னுமாய்….
எந்த வித
நிகழ்வுகளையும்
உருவாக்காமல்
யாருக்கும்
சிரமமின்றி….


எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை
 

Thursday, January 17, 2013

பகவான் பேசுகிறார் -1கே: ஸர்வவியாபியான ஈசுவரனைக் காண்பதெப்படி?

ப: கடவுளைக் காண்பதென்பது கடவுளாயிருப்பதே. வியாபித்தற்கு அவருக்கு அன்னியமாக ‘எல்லாம்’ என்பது இல்லை. அவரே இருக்கிறார்.

கே: நான் சரணாகதி அடைந்தால் ஈசுவரனை வேண்டுதல் தேவையில்லையா?

ப: சரணாகதியே மகத்தான பிரார்த்தனை.

கே: ஆனால் சரண்புகு முன் அவரது தன்மை இன்னதென்று அறிய வேண்டாமா?

ப: நீ விரும்புவதையெல்லாம் ஈசன் உனக்காகச் செய்வாரென்று நம்பினால், நீ உன்னை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் அவரைச் சும்மா விட்டு விடு.

கே: யோகிக்குப் பூர்வஜன்மமெல்லாம் தெரியுமா?

ப: இந்த ஜன்மத்தைப் பற்றி முதலில் உனக்குத் தெரியுமா? பூர்வஜன்மமெல்லாம் தெரியவேண்டுமென்கிறாயே! இந்த ஜன்மத்தைப் பற்றிய உண்மையை இப்பொழுது தெரிந்துகொள்; மற்ற ஜன்மங்களைப் பற்றிய உண்மையெல்லாம் தானே தெரியும். இப்போதுள்ள இச்சிற்றறிவை வைத்துக் கொண்டே இவ்வளவு கஷ்டப்படுகிறாய். இன்னும் அதிக அறிவை மனத்தில் ஏற்றிக் கொள்வானேன்! இன்னும் அதிகக் கஷ்டப்படவா?கே: படித்தவனுக்குக் குருகிருபை தேவையில்லாததால் அவன் ஞானோதயத்துக்கு விசேஷ யோக்கியதையுடையவனல்லவா?

ப: படிப்பற்ற ஞானியின்முன் பண்டிதனும் பணிய வேண்டியதுதான். எழுத்து வாசனையில்லாதது அறிவின்மைதான். படிப்போ, கற்றும் அறிவின்மை. இரண்டு பேரும் உண்மை லக்ஷியத்தை அறிந்தவரல்லர். வேறோர் விதத்தில் ஞானியும் அறியாதவனே; ஏனென்றால் அவனுக்கு ஒரு லக்ஷியமுமில்லை.

கே: ஆத்ம ஞானமடையக் குரு உதவி செய்வாரா?

ப: குரு உன் கையைப் பிடித்துக்கொண்டு காதில் ஓதுவாரா? நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே அவரும் இருப்பதாக நீ எண்ணிக் கொள்ளலாம். உனக்கு உடம்பிருப்பதனால் அவருக்கும் உடம்பிருக்கிறதென்றும் உனக்கு அவர் ஏதோ பிரத்தியக்ஷ அனுகூலம் செய்வாரென்றும் நீ கருதுகிறாய். ஆனால் அவர் வேலை அந்தரங்கத்தில் ஆத்ம சம்பந்தமானது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

பகவான் பேசுகிறார் 2 (உண்மையான ஜெயந்தி)
ரமணபகவான் ஸ்கந்தாச்ரமத்தில் இருந்த காலம் .பகவான் யாரையும் தனது சீடர்கள் என யாரையும் அறிவித்தது இல்லை. ஒருசில பக்தர்களே அவருடன் இருந்தனர். பல நாட்கள் உணவே கிடைக்காது. சிலநாள் பிக்ஷையெடுக்கச் செல்வர். அன்று பிக்ஷையில் என்ன கிடைத்ததோ அந்த அளவுதான் அனைவருக்கும் உணவு. குஞ்சு ஸ்வாமி முதலான பக்தர்களோ 19, 20 வயதுள்ள இளைஞர்கள். பிக்ஷையெடுத்துக் கிடைக்கும் உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் பகவான் அந்த உணவில் நிறைய தண்ணீர் விட்டு கஞ்சி போலக் காய்ச்சி எல்லோருக்கும் கொடுப்பார். சில நாட்களில் காஞ்சியில் தண்ணீர் அதிகமாகி உப்பு கம்மியாகிவிடும், உப்பும் குறைவாகவே இருக்கும் ஆளுக்கொரு உப்புக்கல்லைக் கையில் வைத்துக்கொண்டு அந்தக் கஞ்சியை  உண்டு அவர்கள் மன நிறைவுடனே அங்கு வாழ்ந்து வந்தனர்.


ஒருநாள் வசதி மிகுந்த ஈசானிய மடம் திருஞான சம்பந்தரின் ஆராதனை விழா கொண்டாடப் போகிறது என்று அறிந்த பக்தர்கள், விழாவையும் அங்கு கிடைக்கப் போகும் விருந்தையும் முன்னிட்டு மலையிலிருந்து இறங்கி ஈசானிய மடத்துக்குப் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். ரமணரிடமும் அது பற்றிக் கூறினர். 

உடனே ரமணர், “ஒரு ஞானியின் ஆராதனை நாளை எப்படிக் கொண்டாடுவார்கள்?” என்று கேட்டார். 

“சம்பந்தரின் சிலைக்குப் பூசை, தீபாராதனை செய்வித்த பின் அருமையான விருந்து எல்லோருக்கும் கிடைக்கும்” என்றனர் பக்தர்கள்.

இதைக் கேட்ட பகவான், குஞ்சு ஸ்வாமியிடம் தேவாரப் புத்தகத்தை எடுத்து வருமாறு பணித்தார். 

அவர் அதைக் கொணர்ந்ததும் அனைவரும் வரிசையாக அமர்ந்து நூற்றுக் கணக்கான தேவாரப் பதிகங்களைப் படிக்க ஆரம்பித்தனர். நேரம் மதியம் கடந்து, மாலையானது. யாருக்கும் பசி உணர்வே எழவில்லை. களைப்பும் தெரியவில்லை.

இறுதியில் பகவான் ரமணர் “பிறப்பும் இறப்பும் கடந்த ஒரு ஞானியின் பிறந்த தினத்தையோ (ஜயந்தி), மறைந்த தினத்தையோ (ஆராதனை) கொண்டாடுவது எப்படியென்றால் அவரது உபதேசங்களை நினைவு கூர்வதுதான். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன உபதேசித்தார் என்பனவற்றை நினைவு கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ஆராதனை” என்றார்.

பக்தர்களும் உண்மை உணர்ந்தனர். மகிழ்ந்தனர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

Friday, January 11, 2013

வாழ்க்கைச்சுவடு


இன்று,இந்த நடுநிசியில் பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்.....மரணம் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டது....இந்த விஷயம் தெரிந்த மறுநிமிடம் உடலும் மனமும் பர பரத்தது. அவன் உயிர் அதன் கூட்டுக்குள் சிறகை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டது.இத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது. பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.

இனி? .........

அவனுக்கான மணித்துளிகள் இவை எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல் கரைந்து கொண்டே இருந்தன... 43 வருடங்களை இப்படி ஒன்றுமே இல்லாமலா கரைத்துவிட்டேன் என்று அவன் மனம் குற்றம் சாட்டியது...திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் இந்திரா,அழகாகச் சிரித்துப் பேசும் அசோக்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,பத்தாம் வகுப்பு பிரிவு விழா,முதல் பாராட்டு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... இரண்டாவது எதுவுமே நினைவுகளின் விளிம்புகளில் எப்படி ஒன்றுமில்லாமல் கரைந்து போயின?

இப்படி சம்பந்தமில்லாமல் மனம் தாவிக் கொண்டேயிருந்தது......

மனம்...... உடனடியாகச் சுவடுகளைப் பூமியில் பதிக்க குறுகிய காலத் திட்டம் போட்டது. முதல் வேலை மனத்தில் நினைவுகளின்  சேகரிப்பா? பணச் சேகரிப்பா?உறைந்திருந்த உயிர் திடீரென்று விழித்துக் கொண்டது.

அதுவா? இதுவா?எல்லாமேவா?

நாளை முதலில் எதைச் செய்வது?

உறவுகளைப் பார்த்து எத்தனை நாளாகிறது? ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறது?எங்கே என் மகன்??? கண்விழிக்கட்டும் உன்னைக் கன்னத்தோடு உரசி இறுக்கிக் கொள்கிறேன்....வாழ்க்கைத் துணையின் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறது???என்னவளே!!! நாளை பார்....உன்மேல் அன்பு மழை கொட்டப் போகிறேன்....என நினைத்துக் கொண்டான்

சில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானே????ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்??? காலத்தின் அருமை புரியவில்லையா?...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே????எனக் கவலைப் பட்டான்.

இந்த சுவாசம் இன்றே கடைசியோ??ஏன் இப்படி மூச்சு வாங்குகிறது?கண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றன? கடவுளே இன்னும் ஒரே ஒரு நாள் கொடு...தொலைத்த நொடிகளையெல்லாம் அந்த ஒரு நாளில் வாழ்ந்து முடித்துவிடுகிறேன்.....என வேண்டிக் கொண்டான்....அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்..... 

யார்மேலும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி இன்னும் ஒரே ஒரு நாள் அதிகம் கொடுக்காதக் கடவுளிடம் மட்டும் கோபித்துக் கொண்டே அந்த உயிர்ப் பறவைத் தன் சிறகுகளை உதிர்த்துவிட்டுத் தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......

இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....

நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன, இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????
"நான்" யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்..........நீங்கள்?????/