Total Pageviews

Thursday, January 17, 2013

பகவான் பேசுகிறார் -1



கே: ஸர்வவியாபியான ஈசுவரனைக் காண்பதெப்படி?

ப: கடவுளைக் காண்பதென்பது கடவுளாயிருப்பதே. வியாபித்தற்கு அவருக்கு அன்னியமாக ‘எல்லாம்’ என்பது இல்லை. அவரே இருக்கிறார்.

கே: நான் சரணாகதி அடைந்தால் ஈசுவரனை வேண்டுதல் தேவையில்லையா?

ப: சரணாகதியே மகத்தான பிரார்த்தனை.

கே: ஆனால் சரண்புகு முன் அவரது தன்மை இன்னதென்று அறிய வேண்டாமா?

ப: நீ விரும்புவதையெல்லாம் ஈசன் உனக்காகச் செய்வாரென்று நம்பினால், நீ உன்னை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் அவரைச் சும்மா விட்டு விடு.

கே: யோகிக்குப் பூர்வஜன்மமெல்லாம் தெரியுமா?

ப: இந்த ஜன்மத்தைப் பற்றி முதலில் உனக்குத் தெரியுமா? பூர்வஜன்மமெல்லாம் தெரியவேண்டுமென்கிறாயே! இந்த ஜன்மத்தைப் பற்றிய உண்மையை இப்பொழுது தெரிந்துகொள்; மற்ற ஜன்மங்களைப் பற்றிய உண்மையெல்லாம் தானே தெரியும். இப்போதுள்ள இச்சிற்றறிவை வைத்துக் கொண்டே இவ்வளவு கஷ்டப்படுகிறாய். இன்னும் அதிக அறிவை மனத்தில் ஏற்றிக் கொள்வானேன்! இன்னும் அதிகக் கஷ்டப்படவா?



கே: படித்தவனுக்குக் குருகிருபை தேவையில்லாததால் அவன் ஞானோதயத்துக்கு விசேஷ யோக்கியதையுடையவனல்லவா?

ப: படிப்பற்ற ஞானியின்முன் பண்டிதனும் பணிய வேண்டியதுதான். எழுத்து வாசனையில்லாதது அறிவின்மைதான். படிப்போ, கற்றும் அறிவின்மை. இரண்டு பேரும் உண்மை லக்ஷியத்தை அறிந்தவரல்லர். வேறோர் விதத்தில் ஞானியும் அறியாதவனே; ஏனென்றால் அவனுக்கு ஒரு லக்ஷியமுமில்லை.

கே: ஆத்ம ஞானமடையக் குரு உதவி செய்வாரா?

ப: குரு உன் கையைப் பிடித்துக்கொண்டு காதில் ஓதுவாரா? நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே அவரும் இருப்பதாக நீ எண்ணிக் கொள்ளலாம். உனக்கு உடம்பிருப்பதனால் அவருக்கும் உடம்பிருக்கிறதென்றும் உனக்கு அவர் ஏதோ பிரத்தியக்ஷ அனுகூலம் செய்வாரென்றும் நீ கருதுகிறாய். ஆனால் அவர் வேலை அந்தரங்கத்தில் ஆத்ம சம்பந்தமானது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

No comments:

Post a Comment