Total Pageviews

Sunday, May 14, 2017

நாதம் என் ஜீவனே...

கோவில் என்பதை உலக வாழ்வை மட்டுமே மையப்படுத்திப் பார்த்து வருகிறோம். கோவிலைப் பொதுவாகப் பொருள்சார்ந்த புறவாழ்க்கைக்கான தளமாகவேப் பார்க்கிறோம். கோவிலை உலகம் கடந்த நிலையில் அகநிலை கொண்டும் கொஞ்சம் பார்ப்போம். பொதுவாகக் கோவிலை கர்ம சித்திக்கானக் கோவில், யோக சித்திக்கானது, ஞான சித்திக்கானது என வகைப்படுத்த வேண்டும். என்றாலும், கோவில்களுக்கான பொது அமைப்பைக் கொண்டு நாம் பார்க்கலாம். கோவிலுக்குள் நுழைவதை வான்வெளியில் நுழைவதாகப் பாவித்துக் கொள்வோம். துவக்கத்தில் ஒன்பது கோள்களைக்(நவகிரகங்கள்) கடக்கும் நாம் அவற்றுக்கு அடிப்படையான கதிரவனையும், சந்திரனையும் பார்க்கிறோம். பிறகு, அவற்றைக் கடந்திருக்கும் அண்டங்களையும், பேரண்டங்களையும் மண்டபங்களாகவும், பிரகாரங்களாகவும் பார்க்கிறோம். இறுதியாக நாம் பார்ப்பது கருவறை. கருவறை என்பது இருட்டான அறை. அதுதான் கோவிலின் முதன்மையான, முக்கியமான பகுதி. வெட்டவெளியையேக் கருவறை குறிக்கிறது. கருவறையில் நிகழும் வழிபாட்டைக் கவனிப்போம். தீபம் ஏற்றப்பட்டு உள்ளிருக்கும் சிலைக்குக் காட்டப்படுகிறது. அந்நேரத்தில் பூசை செய்பவர் மணியையும் ஒலிக்கிறார். வெளிச்சத்தில் நாம் அச்சிலையைப் பார்க்கிறோம். அதாவது நம்மால் காணமுடியாத வெட்டவெளியின் பெருந்தோற்றத்தைக் கண்டுகொண்டதானப் பரவசம் அங்கு சாத்தியப்படுகிறது. வெட்டவெளி, மணி ஒலி, தீப ஒளி எனப் பிரபஞ்சம் தாண்டிய பெருவேளிக்கே சென்று விட்டதாய் ஒரு பேருணர்வு. வழிபாட்டில் ஐம்பூதங்களும் மதிக்கப்பெறுவது நம் கலாச்சாரத்தின் சிறப்பம்சம். வழிபாட்டின்போது தரப்படும் திருநீறு, மற்றும் திருமண்(மண் பூதம் ), தீர்த்தம்(நீர்பூதம்), சாம்பிராணி மணம் ( காற்று பூதம்) மலர்கள் மற்றும் திருவமுது போன்றவற்றைக் கவனிப்போம். வழிபாட்டில் மந்திரங்கள் முக்கியம் என்பது நம் ஆன்றோர்களின் கருத்து. இந்த நடைமுறைகளெல்லாம் எதற்காக??? . கோவிலின் கருவறைக்குள் சேமித்து வைத்திருக்கும் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வருவதற்குத்தான்.. ஆனால் எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வரக்கூடிய ஒரு யுக்தி உண்டு எனில் அது பாடல் பாடுவதுதான். ஆம் நண்பர்களே , கோவிலின் கருவறையில் இருக்கும் ஆகாய சக்தியை நமது உடலில் ஊடுருவச்செய்வதற்கு பாடுவது ஒரு எளிய மார்க்கம் . ஆகாய பூதத்தில் பிறபூதங்கள் அடக்கம் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில் எவ்விதச் சடங்குகளும் செய்தாலும் பாடல்கள் பாடினாலே வழிபாடு நிறைவுறும் என்பதும் நம் சமயத்தில் இருக்கிறது. கோவில்கள்தோறும் பயணித்த நம் சான்றோர் பெருமக்கள் பாடிவைத்திருக்கும் பாடல்களே அதற்குத் தகுந்த சான்றாக இருக்கின்றன. மனம்விட்டுப் பாடும் ஒருவனிடமிருந்து உளவியல் சிக்கல்கள் தானாக நீங்கி விடுகின்றன எனும் நவீன அறிவியலின் கருத்து கவனத்தில்கொள்ளத்தக்கது. ஆனால் எல்லாப்பாடல்களையும், எல்லாக் கோவில்களிலும் பாட முடியாது.

நாதயோகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டுப் பாடப்படும் பாடல்களினால் நமக்குள் இருக்கும் வெட்டவெளியையும், கருவறை வெட்டவெளியையும் இணைக்க முடியும்...இது சாத்தியப்பட்டால் நாத தலைவனை நம்முள் தரிசிக்க முடியும்.... பாடிப்பெறலாம் பரலோக நாதனை....

Sunday, May 7, 2017

உத்தம குருவும் , சீடனும்....
எதைப்பற்றி பலராலும் கேட்க முடியவில்லையோ, கேட்கும் பலராலும் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம். ஆன்மா, ஆன்மீகம், கடவுள், அக வளர்ச்சி, உணர்வு போன்ற உயர்உண்மைகளைப்பற்றி கேட்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கும் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நாம் உயர் உண்மைகளை உணர்வதற்கானத் தகுதி பெறும்போது, நமது மனம் அதற்கான பக்குவம் பெறும்போது அந்த உண்மைகளை உபதேசிப்பவர் வந்து சேர்வார் என்பதே உண்மையிலும் உண்மை. வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறிய இயலாத நியதியாகும்........ நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் வருத்தப்பட்டுக் கொள்ளும்போது, நமது முதல் கடமை, நம்முடைய  உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமோ என்று கண்டுபிடிக்கவேண்டும். பெரும்பாலோர் விஷயத்தில் நாம் இன்னும் தகுதி பெறவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம். 


தகுதியான ஒருவர் வந்து அவரிடம் உபதேசம் பெற்றாலும், நமது நம்பிக்கை திடமாக இல்லாவிட்டால் பயனில்லை. என்னால் உயர்உண்மைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இவரால் எனக்கு வழி காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த வழி என்னை என் லட்சியத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை வேண்டும். இவற்றுள் ஒன்று ஊசலாடினாலும் சாதகனின்  முன்னேற்றம் தடைபடும்.  சீடனுக்குத் தகுதி வாய்ந்த குரு கிடைப்பது  அபூர்வம், அதைவிட ஒரு உத்தம குருவிற்குத் தகுதி வாய்ந்த சீடன்  கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம் என்று  உபநிசதங்கள் கூறுகிறது. ஆன்மீகத்தைப் போதிப்பவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும். இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக  இருக்கும்போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் அகவளர்ச்சி ஏற்படாது. இவர்களே உண்மையான குருமார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடுகிறார்கள்; தங்கள்   அறிவை வளர்த்துக்கொள்ளவே பயிற்சி பெறுகிறார்கள். பின்பு அறிவாற்றலைச் சேர்த்துக்கொண்டு அவசரத்தில் பிறருக்கும் பயிற்சி கொடுக்கிறார்கள்  ; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; இதனால் உண்மையில்  சீடனும், குருவும் இதயக்குகையில்  நுழைந்து  ஆன்மாவை உணரமுடியாமல்  வெளிவிளிம்பில் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறார்கள் ....