Total Pageviews

Tuesday, March 29, 2011

வாழ்க்கை வேதம்


இருபதுகளில்...........................

எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விடாமல்
யதார்த்த அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்கக் காதலி!
காதலைச் சுகி!
காதலில் தோற்றுப்போ!
காதலில் அழு!
இதில் தோற்காதவன்-
வென்றதில்லையாம்
சரித்திரம் சொல்கிறது
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்... இன்னும்...
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்...
**
முப்பதுகளில்........................
சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.
**
நாற்பதுகளில்...........................
இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவின் முதிர்ச்சிக்காக
செலவழி..
எதிரிகளை இனம் அறி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..
**
ஐம்பதுகளில்...
வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
உயிர்கறி குறை
காய்கறி கீரைகொள்!
கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
**
அறுபதுகளில்...
இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயுடன் தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..........
**
எழுபதுக்கு மேல்...
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ.

Monday, March 28, 2011

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு!

 1. படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…
 2.  இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.
 3. மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.
 4. கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.
 5.  இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.
 6. ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.
 7.  பொதுவாக காலையில் மனம், தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.இந்த நேரம் நுரைஈரலுக்கான நேரம் என்பதால் படிப்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
 8.  ஒரு கேள்விக்கானப் பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.
 9.  முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.
 10.  நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.வெண்டைக்காய் சாப்பிடலாம். பிராமி என்றொரு மூலிகை நினைவாற்றலைப் பெருக்கும் என்பதில் ஐயமில்லை.
 11. படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.
 12.  பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.
 13.  எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.
 14. படிக்கும் முன் செய்யும் "நாடி சுத்தி " மனதை அமைதிப் படுத்தி படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
 15. விபரீத கரணி என்றொரு முத்திரைப் பயிற்சி நுரையீரலுக்கு சக்தி அளித்து புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிகப் படுத்தும். 
 16. நினைவாற்றலை அதிகப்படுத்தப் புஜங்காசனம் செய்யலாம்.
 17. சாதிக்க வேண்டும் என்ற உறுதியை, வைராக்கியத்தை வளர்த்திக் கொள்ள சலபாசனம் செய்யலாம்.
 18. படிப்பதை மனம் ஊன்றிப் படிக்கத் தனுராசனம் செய்யலாம்.
 19. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் கூட"நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்" என்று தள்ளிப் போடும் சோம்பேறித்தனத்திற்கு அயோடின் பற்றாக்குறைக் காரணாமாக இருக்கலாம். சர்வாங்காசனம் இக்குறையை நிவர்த்தி செய்யும்.
 20. கணக்குப் பாடங்களைப் படிப்பதற்கு முன்பாக இடது மூளையை செயல்படுத்தும் மூச்சுப் பயிற்சிகளையும், அறிவியல் பாடங்களைப் படிப்பதற்கு முன்பாக வலது மூளையைச் செயல்படுத்தும் மூச்சுப்  பயிற்சிகளையும் செய்யலாம்.

Saturday, March 26, 2011

காத்திருப்புகாத்துக் கிடப்பதிலேயே
வாழ்வின் காலம் கழிந்தபடி.

கருப்பை தாண்டி வெளி உலகம் வர
அம்மாவின் முகம் காண
அப்பாவைச் சந்திக்க
இயற்கையைச் சுவாசிக்க
நடக்கப் பயில
பேசிப் பழக
பாடசாலை போக
கல்லூரி போக
காதலி தேட
வானத்தை வில்லாய் வளைக்க
காற்றோடு ஊர்வலம் போக
உத்தியோகம் பார்க்க
கல்யாணம் பண்ணிக்கொள்ள
கனவுகளைத் தூரம் தள்ள
குழந்தை பெற்றுக்கொள்ள
பணம் சேர்க்க
வீடு கட்ட
உறவுகளுக்காக
உரிமைகளுக்காக என்றபடி
எத்தனை...எத்தனையோ...

இதற்குள்...
இறைவனும் காத்திருக்கிறான்
தந்த உயிரைத்
திரும்பவும் எடுத்துக் கொள்ள.

இதற்கு நடுவில்...
மனிதனின் காத்திருப்புக்கள்
அர்த்தமே இல்லாமல் !!!

Friday, March 25, 2011

சிவ ராத்திரி


படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா?
இல்லையில்லை
நானேதான்
இறுமாப்பின் எதிரொலி.
ஆளுமை...
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....
இன்னும் இன்னும்...

படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
காத்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்
நீயா...நானா வாக்குவாதம்.
சர்ச்சை தீர்க்க வந்த
ஈசனோ....
தான்தான் ஆள்பவன்.
தன்னை விட்டால்
யாருமே உயர்ந்தவர் உலகில்
இல்லையென்று தீர்ப்பு.

தன்னைக் காத்துக்கொண்டு,
அவர்களே அடிபட
ஆயுதமும்... யுக்தியும்
அருள்கிறாராம்.
"தேடிப்பிடியுங்கள்
என்...
அடியையும் முடியையும்
முடிந்தால்".
எத்தனை அகம்பாவம்
இறைவனுக்கே.

இவர் கூட்டணியில்
அவர்கள் மட்டும்
குறைந்தவர்களா என்ன?
பிரம்மன் அன்னப்பறவையில்
ஈசனின் முடி தேட
விஷ்ணு பன்றியில்
அடி தேடி ஓட,
இங்கே ஆரம்பம்
அரசியல் ஊழல் பொய்.

தாழம்பூவைச் சாட்சியாய் வைத்து
"ஈசன் முடி கண்டேன்.
சூடியிருந்த பூவும் பார்"பிரமன் கூற,
தாழம் பூவும்
ஆட்டியதாம் தலையை.
தீர்ப்பின் முடிவில்
ஆதிமூல நாயகனே
முதலானவன்.

பிரமனுக்குத்
தனிக் கோவிலில்லை.
தாழம்பூவோ
ஒவ்வாது பூஜைக்கு.

கல்கி யுகத்தில்
தர்மத்துக்கு மூன்றே காலம்
வெற்றிக்கு வேகம் குறைவாம்.
ஒரு கால் கொஞ்சம் நீட்டி
மூன்று கால் மடித்திருக்கும்
நந்தி சொல்லும்
கதையும் இதுவாம்!!!!

Wednesday, March 23, 2011

தப்பாட்டம்மனித தேகத்தை மண் பானைக்கு ஒப்பாய்ப் பார்க்கும் பார்வை சித்தர்களிடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

பச்சை மண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் 
பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.

இது ..................சிவ வாக்கியார்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.


இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.


ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே 
உதிரப்பு னலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும பாண்டம் 
வரையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே.

இது............நம்ம பாம்பாட்டிச்சித்தர்.


குயவன் தந்த பானையாகிய இந்த உடலைப் பாதுகாக்கும் முறை தெரியாமல் தவறி நாமே போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.

நாம் ஒருவர் மரணமாகியதை எப்படித் தெரியப்படுத்துகிறோம்..?

'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'

இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் நாம் நாசூக்காகச் சொல்லும் இன்னொரு சொல் 'தவறிட்டார்'


இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. எப்படித் தவறிட்டார்..? எதுலிருந்து தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எனக்குள்ளேயே கேட்டபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.

அவர் அடக்கத் தவறிட்டாராம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. .......... தனக்குள் தனது மூச்சை அடக்கத் தவறிட்டாராம்.

நமது இறப்பில் இருவகை இருக்கிறது. 

யோகசாதனையின் மூலமாக நமது உயிரை நமக்குள்ளேயே லயப்படுத்திக் கொள்வதற்கு அடக்கம் அல்லது ஒடுக்கம் எனப்பெயர். இதனையே ஜீவசமாதி என்கிறோம். இது "நான் யார்" என்பதை உணர்ந்து விழிப்புணர்வோடு கூடிய இறப்பு.

அவ்வாறில்லாமல்"நான் யார்"என்பதை உணர்ந்து கொள்ளாமல் இறப்பவர்களைத் தனக்குள் அடங்கத்தெரியாமல் இறப்பவர்கள் எனக்கொள்ளலாம்.  இவர்களை நாம் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும்.


அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.


இறந்தவர்களை கொண்டு செல்லும் வண்டியை "அமரர் ஊர்தி" எனச் சொல்கிறோமே இது தவறான பதமாகும். தன்னுயிரைத் தனக்குள் அடக்கத் தெரிந்தவர்களையே "அமரர்" எனக் கூறவேண்டும். அடக்கம் என்பது மூச்சடக்கம் மூலமாக பெறக்கூடிய,   புலனடக்கம்,மற்றும் மன அடக்கம்.

இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள்.   சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.   ஆரிருள் என்பது மீண்டும் இருட்டடைந்த கருப்பையில் ஜனிப்பது.

தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனைய
மண்ணுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா.?........ இல்லை.   நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்ல விடாமல் நமக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்ளுதல்.       விளக்கொளி, வேண்டும்- வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப் போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம் நமதுக் கட்டுப்பாட்டில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 

இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! 

வாழ்வை, யோக வாழ்வாய்த்,தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு............ வாழ்வை நிறைவாய்.,.பற்றற்று வாழ்ந்தவருக்கு.     "நான் யார்" என்னும் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டுணர்ந்தவர்களுக்கு,.............இது சாத்தியமாகியிருக்கிறது.

தனது உயிரைத் தனக்குள் ஒடுக்கத் தெரியாத வாழ்வின் முடிவு- மற்றொரு வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை.         புலன்களை அடக்கி, விழிப்புணர்வோடு, தனக்குள் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே.  அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்பு எனும் இசைக்கருவியை இசைக்கிறார்கள்.   அவர் தப்பாக இறந்துவிட்டார் என்பதைக் காட்டவே தப்படிக்கிறார்கள்.    இறந்தவரின் "பூ நூலை" மாற்றிப் போடுகிறார்களே ஏன் தெரியுமா?. இதுநாள் வரை இவன் ஒழுங்கான சுவாச ரகசியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்தத்தான்.


யோக வாழ்வில் ஆறு ஆதார சக்கரங்களைக் கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையைக் கேட்கலாம்.

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவுந்
தாடித்தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதகமங்களும்
நாடியி லுள்ளாக நான் கண்ட வாறே 

என்பது திருமூலர் வாக்கு.

வாழும்போதே இந்த ஓசைகளை உடம்பினுள் உணரவேண்டும்.          உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் இந்த ஓசைகளைக் கேட்கத் தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காகத் தான் சங்கு,சேகண்டி இதெல்லாம்.


எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- நான்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா? என தெரிய வில்லை.      இப்போதாவது கேள் என்பதாக வழிநெடுக கோஷமிடப்பட்டு........இறுதியில் அடங்கத் தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"


தனக்குள் தன்னுயிரை அடக்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரத்தை குருவருளால் பெறுவது ஒரு கலை,..... அதன் பெயரே யோகக்கலை.


பிறப்பை எடுப்பது பாவம்.............பிறப்பை அறுப்பது யோகம்.


நண்பர்களே! சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை .

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் 
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம் !

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம் !

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம் !

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம் !

Wednesday, March 9, 2011

ஒரே வினாடி


....ஒரே வினாடி !!!‘நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் அவதூதர்.

அவரது சீடர்கள் யோசித்தார்கள். ‘என்ன கேட்கறீங்க? சரியாப் புரியலையே!’

‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’

‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.

‘ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் அவதூதர்.

‘அப்படீன்னா? 90 வயசு?’

‘அதுவும் இல்லை!’

‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, அவதூதர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.


‘ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!’ என்றார் அவதூதர்.

‘என்ன சொல்றீங்க குருவே? ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்? குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்?’

‘அப்படியில்லை. ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’

‘அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’

‘சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் யோக வாழ்க்கை!’

ஸ்படிக மருத்துவம்


கிறிஸ்டல் சிகிச்சை என்றால் என்ன?
இன்றைய அறிவியல் உலகில் அனைத்து கருவிகளும் இயங்குவதற்கு அதி முக்கியமாக தேவைபப்டுவது குவார்ட்ஸ் கிரிஸ்டல்கள் எனப்படும் ஸ்படிகக் கற்கள். இவைகள் பூமிக்கு அடியில் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் உருமாறியுள்ளன. நம் முன்னோர்கள் ஸ்படிகம் எனப்படும் கிரிஸ்டல் கற்களை மாலைகளாக அணியும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் உடலுக்கு எப்போதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. பல நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக கிறிஸ்டல் கற்கள் தன்னுள் இருந்து நொடிக்கு நான்கு லட்சம் அதிர்வு அலைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கற்கள் எந்த ஓர் சக்தியையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. சக்திகளை எப்போதும் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்த மூன்று குணங்களும் தன்னுள் அடக்கி, அற்புத ஆற்றல் பெற்ற இந்த கற்களை எலக்ட்ரானிக் கருவிகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.சீன நாட்டில் பரவலாக மனித உடலில் காணப்படும் ஏழு ஆதார சக்கரங்கள் எனும் புள்ளிகளான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா எனும் ஏழும் இடங்களில் ஏழு வித வண்ணக் கற்களை வைத்து நோய்களை தீர்க்கின்றனர். வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களும் முறையே தலையில் இருந்து முதுகுத் தண்டின் அடிப்பக்கம் வரை நம் உடலில் உள்ள ஏழு ஆதாரப் புள்ளிகளில் இருந்து வெளிப்படுகிறது. உடலின் எல்லா உறுப்புகளின் இயக்கங்களும் இntha ஆதாரப் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளவை. உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதோ அதன் தொடர்பு உள்ள ஆதாரப் புள்ளியை நோக்கும்போது அப்புள்ளியில் இருந்து வெளிப்படும் நிற அலைகள் மங்கிவிடும். இதை கிரில்லியன் படமுறையில் நிரூபித்துள்ளனர். இவ்வாறு மங்கிய நிறம் வெளிப்படும் புள்ளியில் அந்தப் புள்ளியின் நிறத்தை உடைய மணிக் கற்களை பதினைந்து நிமிடம் தினசரி காலை, மாலை வைத்து வந்தால் அந்த நிறங்களைப் பெற்று அப்புள்ளிகள் பலம் பெற்று, நோய் நீங்குகிறது.


சீன நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இம்முறையில் வைக்கப்படும் நவமணியை சார்ந்த இக்கற்கள் விலை அதிகம். க்ரோமோ தெரபி எனும் வண்ண மருத்துவத்தில் வண்ணங்களை செலுத்தி நோயை நீக்கும் முறை வட இந்தியாவில் பரவலாக பயன்படுகிறது. இம்முறையில் ஏழு வண்ணங்களை தன்னுள் அடக்கியுள்ள, சக்தி மிகுந்த ஸ்படிக கற்கள் தற்போது சிகிச்சைக்காக எளிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

Tuesday, March 1, 2011

நானும் சூரியனும்


உடலின் தேவைகளோ
உணர்வின் தேவைகளோ அற்ற
சூன்ய வெளியில்
என்னை முழுதாக்க
உடைந்து கிடக்கும் தன் துண்டங்களாலேயே
பொருத்தியபடி சூரியக் கைகள்.

சுவாசம் சிதறி ஒடுங்கிய குடுவைக்குள்
ஒத்துழைக்காத ஆன்மாவைத்
திணிக்க முயல்கையில்
இசைந்து தராத போராட்டம்
உடைந்த சூரியனுக்கும்
எனக்குமானதாய்.

துருவங்களின் இடைவெளியை
நிரப்ப முயல்கிறேன் நான்.
உணர்வாகிச் சூரியனும்
உடலாகி நானும்
ஒன்றைவிட்டு ஒன்று பிய்தல் குறித்து
சத்தம் போட்டு கதறுகிறேன்
சார்ந்திருத்தலைக்(யோகத்தைக்) குறித்தே சொல்கிறேன்.

புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்.

உடல்,உணர்வு,உள்ளம்,உயிர்
அனைத்தின் தேவைகளையும்
வைத்துக்கொண்ட அது
நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!