Total Pageviews

Wednesday, March 23, 2011

தப்பாட்டம்மனித தேகத்தை மண் பானைக்கு ஒப்பாய்ப் பார்க்கும் பார்வை சித்தர்களிடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

பச்சை மண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் 
பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.

இது ..................சிவ வாக்கியார்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.


இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.


ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே 
உதிரப்பு னலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும பாண்டம் 
வரையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே.

இது............நம்ம பாம்பாட்டிச்சித்தர்.


குயவன் தந்த பானையாகிய இந்த உடலைப் பாதுகாக்கும் முறை தெரியாமல் தவறி நாமே போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.

நாம் ஒருவர் மரணமாகியதை எப்படித் தெரியப்படுத்துகிறோம்..?

'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'

இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் நாம் நாசூக்காகச் சொல்லும் இன்னொரு சொல் 'தவறிட்டார்'


இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. எப்படித் தவறிட்டார்..? எதுலிருந்து தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எனக்குள்ளேயே கேட்டபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.

அவர் அடக்கத் தவறிட்டாராம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. .......... தனக்குள் தனது மூச்சை அடக்கத் தவறிட்டாராம்.

நமது இறப்பில் இருவகை இருக்கிறது. 

யோகசாதனையின் மூலமாக நமது உயிரை நமக்குள்ளேயே லயப்படுத்திக் கொள்வதற்கு அடக்கம் அல்லது ஒடுக்கம் எனப்பெயர். இதனையே ஜீவசமாதி என்கிறோம். இது "நான் யார்" என்பதை உணர்ந்து விழிப்புணர்வோடு கூடிய இறப்பு.

அவ்வாறில்லாமல்"நான் யார்"என்பதை உணர்ந்து கொள்ளாமல் இறப்பவர்களைத் தனக்குள் அடங்கத்தெரியாமல் இறப்பவர்கள் எனக்கொள்ளலாம்.  இவர்களை நாம் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும்.


அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.


இறந்தவர்களை கொண்டு செல்லும் வண்டியை "அமரர் ஊர்தி" எனச் சொல்கிறோமே இது தவறான பதமாகும். தன்னுயிரைத் தனக்குள் அடக்கத் தெரிந்தவர்களையே "அமரர்" எனக் கூறவேண்டும். அடக்கம் என்பது மூச்சடக்கம் மூலமாக பெறக்கூடிய,   புலனடக்கம்,மற்றும் மன அடக்கம்.

இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள்.   சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.   ஆரிருள் என்பது மீண்டும் இருட்டடைந்த கருப்பையில் ஜனிப்பது.

தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனைய
மண்ணுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா.?........ இல்லை.   நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்ல விடாமல் நமக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்ளுதல்.       விளக்கொளி, வேண்டும்- வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப் போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம் நமதுக் கட்டுப்பாட்டில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 

இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! 

வாழ்வை, யோக வாழ்வாய்த்,தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு............ வாழ்வை நிறைவாய்.,.பற்றற்று வாழ்ந்தவருக்கு.     "நான் யார்" என்னும் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டுணர்ந்தவர்களுக்கு,.............இது சாத்தியமாகியிருக்கிறது.

தனது உயிரைத் தனக்குள் ஒடுக்கத் தெரியாத வாழ்வின் முடிவு- மற்றொரு வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை.         புலன்களை அடக்கி, விழிப்புணர்வோடு, தனக்குள் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே.  அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்பு எனும் இசைக்கருவியை இசைக்கிறார்கள்.   அவர் தப்பாக இறந்துவிட்டார் என்பதைக் காட்டவே தப்படிக்கிறார்கள்.    இறந்தவரின் "பூ நூலை" மாற்றிப் போடுகிறார்களே ஏன் தெரியுமா?. இதுநாள் வரை இவன் ஒழுங்கான சுவாச ரகசியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்தத்தான்.


யோக வாழ்வில் ஆறு ஆதார சக்கரங்களைக் கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையைக் கேட்கலாம்.

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவுந்
தாடித்தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதகமங்களும்
நாடியி லுள்ளாக நான் கண்ட வாறே 

என்பது திருமூலர் வாக்கு.

வாழும்போதே இந்த ஓசைகளை உடம்பினுள் உணரவேண்டும்.          உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் இந்த ஓசைகளைக் கேட்கத் தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காகத் தான் சங்கு,சேகண்டி இதெல்லாம்.


எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- நான்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா? என தெரிய வில்லை.      இப்போதாவது கேள் என்பதாக வழிநெடுக கோஷமிடப்பட்டு........இறுதியில் அடங்கத் தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"


தனக்குள் தன்னுயிரை அடக்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரத்தை குருவருளால் பெறுவது ஒரு கலை,..... அதன் பெயரே யோகக்கலை.


பிறப்பை எடுப்பது பாவம்.............பிறப்பை அறுப்பது யோகம்.


நண்பர்களே! சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை .

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் 
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம் !

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம் !

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம் !

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம் !

3 comments:

gayathri said...

மாஸ்டர் ,எல்லோருடைய மரணம் விழிப்புணர்வோடு நிகழவேண்டும் என்பதை மிகவும் தெளிவாக புரிய வைத்திருகிறீர்கள் .இதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் மரணம் தப்பாட்டம் ஆகாமல் கொண்டாட்டம் ஆகிவிடும் .அழியும் ஆணவ உடலுக்காக போராடாமல்,"நான் யார் " என்பதை உணர்வோம்,மரணத்தை வெல்வோம் .

abarnavijay said...

master,
in our school days ,teachers taught about 'thirukkural' as 'it is a best guide for us to lead our life in the right path '.
till now,up to my knowledge,i knew 'அடக்கம் 'means self control.
but, now in your golden meanings , i wonder now only thirukkural has gained its precious value with your descriptions.
master, we all would be more blessed,if we are able to read your description for every kural of thiruvalluvar in your golden words.

suganya shankar said...

Sir,

Many thanks for the wonderful explanation about death. After you explained the meaning of death I read it again and did understand the whole thing but could not follow the last three paragraph. Please explain?

Shankar Ganesh

Post a Comment