Total Pageviews

Monday, September 26, 2011

எல்லா மரத்தடியிலும் புத்தன்





.
.
வழக்கமாய்
தன் நிழலில் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவர்கள்
குறித்துக் கவலையேதும் கொள்ளாமல்
நெடிதுயர்ந்து நிற்கிறது
ஊரோரத்து வேப்பமரம்..

அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
அது பக்குவப்பட்டிருந்தது..

தன்னில் வந்தமரும் பறவைகள்
தனக்கானதல்ல என்பதையும்
அது அறிந்தேயிருந்தது..

எல்லாத் திசைகளிலும் நீண்டிருந்த
கிளைக்கரங்களால்
அது தன் இறைவனைத் தேடிக்கொண்டிருக்கவில்லை..

தன் பெருநிழல் குறித்தான
பெருமித உணர்வில்
அதன் தலைக்கனமும் கூடியிருக்கவில்லை..

தன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
அது மறுப்பேதும் சொல்லவில்லை..

தன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
தன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
அது எதிர்ப்பேதும் காட்டவில்லை..

அது அதுவாகவேயிருந்தது-
வெய்யில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..

அது அதுவாகவேயிருந்தது-
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..

ஒரு மரம்
முதலில் தானேயிருக்கிறது ஒரு புத்தனாய்;
அதைக் கண்டடைந்தவன்
பின் தானுமாகிறான்  ஒரு புத்தனாய்..

புத்தன் அறிந்திருப்பான்
ஒரு மரம்
உலகின் மற்ற எல்லா மரங்களின்
மூலங்களையும் தன்னுள் கொண்டிருப்பதை..

புத்தனுக்குரியவை
போதி மரத்தடிகள் மட்டுமல்ல ;
இந்த வேப்பமரத்தடியிலும்
உருவாகலாம் ஒரு நவீன புத்தன்...

ஆயினும்
ஒரு புத்தன்
உலகிற்கு அறிவித்துக் கொள்வதில்லை
தன்னை புத்தனென்று..

உலகை அறிந்து கொள்கிறான் புத்தன்;
உலகமோ அறிந்து கொள்வதேயில்லை புத்தனை..!





Saturday, September 24, 2011

லங்கா-தகனம்--------ஓர் யோக ஆய்வு






மாஸ்டர், நமது புராணங்கள் உண்மையா? , ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுளர்கள் பொய்யா? ...எத்தனையோ கேள்வி கேட்டுட்டேன். இதுக்காவது பதில் எழுதுங்க மாஸ்டர்!.............தனலட்சுமி











ஞானபூமி என உலக ஞானிகளால் போற்றப்படும் நம் பாரதத்தின்பழம்பெரும் இதிகாசங்களும் புராணங்களும் கதைகளா? அல்ல உண்மையில் நடந்தேறியவையா? என ஆராய்வதை விட அந்த இதிகாசப் புராணங்களுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் யதார்த்த, நடைமுறை வாழ்வுக்குத் தேவைப்படும் தத்துவங்களை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே யோக யுவ கேந்திராவின் நோக்கம்.

நமது யோகிகளும், ஞானிகளும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்வுக்குத் தேவையானத் தத்துவங்களையே இதிகாசப், புராணமாக்கினார்கள். 

மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலத்தில் புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் தேவை ஏற்படவில்லை. மனித மனம் விகாரமாகி காமவயப்பட்டபோது அதில் துன்பமும் குடியேறியது. தாம்பத்யம் மட்டுமே காமம் என நினைக்க வேண்டாம் நண்பர்களே! மனம் தன் நிலையிலிருந்து வெளிமுகமாகிப் பிறிதொருப் பொருளின் மீது, உலகப்பொருள்களின் மீது மையல் கொள்வதையும் காமம் என்றே நமது யோகிகள் கருதினார்கள். 

வெளிமுகமாகிய மனத்தினாலேயேத் துன்பம் ஏற்படுகிறது என்பதைத் தனது தவப்பயனால் உணர்ந்து கொண்ட ஞானிகள், தாம் கண்ட உண்மைகளையும் இந்த மாயா மனத்தை மீண்டும் உள் முகமாகத் திருப்பும் யுக்திகளையும் நமக்காகச் சூத்திரங்களாக்கி யோக சூத்திரங்கள் எனும் பெயரில் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த சூத்திரங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய மேம்பட்ட அறிவு எல்லோருக்கும் வாய்த்திருக்கவில்லை. எனவே இந்த சூத்திரங்களைத் தொகுத்துக் கொடுத்தவர்கள் மறைபொருளாளர்கள் என்று கருதியதொடு மட்டுமில்லாமல் புரட்சிக்காரர்கள், என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். சிலர் தூக்கிலிடப்பட்டர்கள். எனவே மனதை வசப்படுத்தும் இந்த சூட்சும அறிவியலைப் பக்குவப்பட்டவர்களின்றி மற்றவர்களுக்கு மறைமுகமாக புராணங்களாகவும், இதிகாசங்களாகவுமாக வெளிப்படுத்தினர் யோகிகள். 

புராணங்களிலுள்ளக் கதாபாத்திரங்களைக் கடவுளர்களாகவேப் பார்க்கும் பக்தியும், புராணங்களை வெறும் கதைகளாகப் பார்க்கும் பரிகாசப் பக்குவமும், யோகத் தத்துவங்களாகப் பார்க்கும் விசாரமும், பகுத்தறிவு எனக் கூறிக்கொண்டு புராணங்களைப் புரட்டுகளாக நோக்கும் அனாயசமும் அவரவர் மன நிலைக்கு உட்பட்டது. 

அறிவு நிலையில் உயர்ந்த மனிதன் இன்னும் கண்டுபிடிக்க முடியாத ஒரே ரகசியம் மரணம் பற்றியதே. அவன் தன்னுடைய அறிவைக்கொண்டு உணர நினைப்பதும் ..மரணம் தாண்டிய உணர்வைத்தான்.......... 

ஆதி மனிதர்களும் இதையே எண்ணியிருக்கக் கூடும். 

மரணம் பற்றிய உண்மைகளை உணர்ந்தவர்களே அக்காலக் கதாநாயகர்களாகப் போற்றப்பட்டனர். நாளடைவில் அக்கதாநாயகர்களுக்கு தனி மனிதத்துதி நடந்தேறி, ஆலயங்களும் நிறுவப்பட்டது. 

எந்த இதிகாசமும்,புராணமும்,தத்துவமும் மனிதனின் உடல்,உள்ளம,உயிர், கடந்து ஆன்மாவை உணர்வதற்காகத்தான் சொல்லப்பட்டவையே என்பது என் கருத்து. 


கண் இல்லாதவர்,காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்,சிந்திக்க முடியாதவர் இவர்களுக்கானக் கடவுளைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" எனப் பக்த மார்க்கண்டேயன் நந்தியம்பெருமானிடம் ஒரு வரம் யாசித்தானாம் 


விஷயம் இதுதான். 



பார்வை உள்ளவர்கள் தம் கடவுள் என்று ஒரு உருவத்தை காட்டி விட முடியும். பேசக்கூடியவர்கள் குறைந்தது ஒரு திருப்பெயரையாவது சொல்லிவிடக்கூடும்.பார்க்கவும்முடியாமல்,பேசவும்முடியாமல்,
கேட்கவும் முடியாமல் வாழும் மனிதர்களுக்கும் கடவுள் இருக்கிறான் எனில் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற மார்க்கண்டேயனின் ஆர்வமும் அக்கறையும் பாராட்டத்தக்கது. 

இராமாயணக் கதையை "மேம்பட்ட அறிவுடைய" ஒரு மாணவருக்கு நான் சொல்ல நேரிட்டால் இப்படித்தான் சொல்லுவேன். 

ஒரு ஊரில் மூன்று பேர் இருந்தாங்க! இரண்டு பேர் ஆண், ஒருவர் பெண். ஒரு ஆணோட பேரு அறிவு, இன்னொருத்தனோட பேரு உடம்பு, அந்தப் பெண்ணோட பேரு மனசு. 

இந்த மூன்று பேரும் சேர்ந்து ஒரு தூரதேசத்துக்குப் பயணப்பட்டாங்க. நடந்தே போனாங்க, நாடு நகரம் கிராமம் எல்லாம் கடந்து நடந்து போயிட்டே இருந்தாங்க திடீர்னு பார்த்தாப் பாதையேத் தெரியாத மாதிரி ஒருபக்கம் கல்லும் முள்ளும் மண்டிக்கிடக்குது, இன்னொரு பக்கம் பெருக்கெடுத்து வெள்ளமா ஓடுது, எல்லோரும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம விழிக்கிறாங்க. 

அறிவு யாருக்கும் தொந்தரவு தராம போகணும்னு யோசிக்குது. 

உடம்பு தனக்குக் காயம் எதும் ஆயிடாம இருக்கணும்னு யோசிக்குது. மனசு தனக்கு எவ்வித துன்பமும் வந்திடாம இருக்கணும்கிறதுல குறியா இருக்கு. 

அறிவு யோசிச்சி ஒரு முடிவு பண்னி இந்த பக்கமா போகலாம்னு சொல்லுது, அதைக்கேட்ட உடம்போ, நான் மாட்டேம்பா. அந்த வழி போனா எனக்கு கீறல் காயம் உண்டாகும்னு சொல்லுச்சி, . மனசு கேக்கவே வேணாம் அந்த வழியில "நான்" வரவே மாட்டேன்னு, ஒரே அடம். 

கடைசியில் மனசு பிடிவாதமா ஒரு பாதயைக் காட்டி இந்த வழிதான் எனக்கு சரின்னு தோணுது அதுலதான் எல்லோரும் போகனும்னு சொல்ல,அறிவும்,உடம்பும் வேற வழி இல்லாம பயணப்பட்டாங்க." 

அந்தப் பயணத்துல சோதனைக்கு மேல சோதனை. மனசு ஒரு பக்கம் போயிடுச்சி. உடம்பு ஒரு பக்கம் போயிடுச்சி.அறிவு படாத பாடு பட்டுடிச்சி. 



அந்த அறிவுதான் ராமன். உடம்புதான் லட்சுமணன்- மனசுதான் சீதை" 



மனசு சொல்வதை அறிவு கேட்டு நடந்த கதைதான் ராமாயணம். ஆனால் நாம துக்கப்படாம சந்தோசமா இருக்கணும்னா, அறிவு சொல்வதை மனசு கேக்கணும். அதுக்கு என்ன செய்யணும்னு கேக்கிறீங்களா?........ அந்த அறிவை 'மேம்பட்ட அறிவா" மாத்திக்கணும். அதற்கான பயிற்சி முறைகளை உள்ளடக்கிய அறிவியல்தான் "யோகம்" 



ராமன் பேரறிவுக்கடவுள். தம்பி லட்சுமணன், ராமனை உடல் மாதிரிப் பிரியாதவன். .சீதை ஆசை எனும் மாயையில் சிக்கி அறிவைத் திண்டாட வைத்த மனம். 



இந்த ராம காவியத்தை உடலோடு தொடர்பு படுத்தி என்னால் அக்குவேரு ஆணிவேராகப் யோகப் படையிலிட முடியும். 



உதாரணத்துக்கு ராமாயணத்துல இருந்து ஒரு காட்சி. 

ராவணன் சீதையைத் தூக்கிட்டுப் போயிட்டான். ராமன் பொண்டாட்டியைக் காணாத சோகத்துல?!.... நொந்து போயிருக்காரு. ஜடாயு ஒரு திசையைக் காட்டிட்டுச் செத்துடுறாரு. அந்தத் திசையில ராமன் அனுமனை அனுப்பி வைக்கிறாரு. அனுமன் இலங்கைக்குப் போனான் சீதையைப் பார்த்தான். கணையாழியைக் குடுத்தான். தன் நெஞ்சைத் திறந்து காட்டினான். திரும்பி வரும்போது அந்த இலங்கைக்கேத் தீ வச்சிட்டான்.. 



இதிலிருந்து ஒரு உண்மையை நாம் உணர வேண்டியதிருக்கு. 



ராவணன் வில்லன். சீதை கதானாயகி. ராமன் கதானாயகன்.அனுமன் வெறும் குணசித்திரம்தான். 



இலங்கா தீவுக்கு நெருப்பு வைக்கும் உரிமை பாதிக்கப்பட்ட பெண் அப்படிங்கற முறையில சீதைக்குத்தான் உண்டு. சரி, பரவாயில்லை சீதை பெண் என்பதால் முடியவில்லை என வைத்துக் கொண்டாலும்கூட பாதிக்கப்பட்டப் பெண்ணின் கணவர் அப்படிங்கற முறையில் சீதையின் கணவன் ராமன் கொளுத்தி இருக்கலாம். சீதையும் இல்லாம ராமனும் இல்லாம போனா லட்சுமணனாவது எரிக்கலாம். ஏன்னா இரண்டு பேருக்குமே அவன் ரத்த சம்மந்தம் உள்ளவன். ஆனா ஆஞ்சனேயன் ஏன் இலங்கையை தகனம் செய்யணும். இது என் கேள்வி..? 



என் முடிவுப்படி ராமாயணத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நம் உடலில் உள்ளார்கள் என்பதே உண்மை. 



அறிவு நிலையில் நாம் ராமனாகவும், கடமை நிலையில் லட்சுமணனாகவும், காமவசப்படுகையில் ராவணனாகவும்,மாயை வசப்படுகையில் சீதையாகவும், பிரம்மசர்யம் அனுஷ்ட்டிக்கையில் அனுமனாகவும் ஆகிறோம். 



இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நண்பர்களே! காமம், என்பதையும், பிரம்மசர்யம் என்பதையும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. மறுபடியும் கூறுகிறேன் காமம் என்பது தாம்பத்யம் மட்டுமல்ல, மனம் தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளிக்கிளம்பி பிற உலகப்பொருள்களின் மீது மையல் கொள்வதும் காமம் எனவேக் கருதப்படுகிறது. மனம் தன்னுடய மூலமாகிய பிரம்மனைச் சார்ந்து இருப்பதே பிரம்மச்சர்யம். ரமண வழியில் சொல்வதாக இருந்தால் "உதித்த இடத்தில ஒடுங்கியிருப்பதே" பிரம்மசர்யம். 



ஆக நம் உடம்பின் காமத்தை அழிக்க வல்லது பிரம்மச்சர்யம் மட்டுமே. அதனால்தான் லங்கா தகனம் அனுமனால் நடந்தது. லங்கா தகனம் என்பது சிவன் மன்மதனை எரித்ததற்கு ஒப்பானது... 



சென்னையில் உள்ளவர்கள் யாராய் இருந்தாலும் நங்கனல்லூர் ஆஞ்சனேயரைக் கண்டிப்பாகத் தரிசித்து இருப்பார்கள். 

ஆஞ்சனேயரின் பெயர் என்ன தெரியுமா? 

"ஆதி வியாதி ஹர ஆஞ்சனேயர்" 

ஆதி வியாதி எது? மனிதனுக்கு ஏற்பட்ட ஆதி வியாதி-'காமம்' 

ஆதி வியாதியை அறுப்பவன் அனுமன். . 

காமத்தைத் தீயிட்டு எரிப்பவன் அனுமன். 

அனுமன் நாம் பின்பற்றவேண்டிய பிரம்மச்சரியத்தின் ஒப்பில்லாத குறியீடு. 

மனமாகிய சீதை, பேரறிவான, ராமன் மீதே மையல் கொள்ள வேண்டும். அதை விட்டு மாயமான் மீது மையல் கொண்டதால் ஏற்படும் துக்கத்தை துடைக்கத் தூதுவனான அனுமன் தேவைப்படுகிறான். காமமாகிய 'உலகப்பற்றை" நீக்கி மனத்தை உள்முகப்படுத்தி பிரம்மத்தில் சார்ந்து நிற்க வாயுவின் மகனான அனுமன் தேவைப் படுகிறான். 

காமமும், ஆசையும் வாசத்தின் மூலம் வரக்கூடியது. அதனால்தான் அனுமன் வாயுவின் மகனாக்கப்பட்டு- காமத்தை உருவாக்கும் வாசத்தை ---சுவாஸத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அகற்றுகிறான். 

லங்கா தகனம்னா என்னன்னு கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால்!

யோக உடற்கூறுத் தத்துவப்படி, ஒரு மனிதனின் உடல், மற்றும் உள்ள ஆரோக்கியத்திற்குப் பொறுப்பாவது யோகச்சக்கரங்களே, சப்தச் சக்கரங்களில் கீழ் நிலையிலுள்ள மூன்று சக்கரங்களே உலகப் பற்றிற்குக் காரணமாகிறது. எனவேதான் இந்த மூன்று சக்கரங்களையும் "போகச் சக்கரங்கள்" என்கிறோம். இந்த மூன்று சக்கரங்களையும் சுத்தப்படுத்துவதால் மட்டுமே காமமாகிய உலகப்பற்றுகளிலிருந்து விடுபடமுடியும். இந்தச் சக்கரங்களைச் சுத்தப் படுத்த சுவாசமாகிய அனுமனாலேயே முடியும். 

நமது உடலில் தலைப்பகுதியே வடதிசை, நாபிக்குக் கீழுள்ளப் பகுதியே தென்திசை. இந்தப்பகுதியிலுள்ள மணிபூரகம், சுவாச அதிஸ்டானமாகிய சுவாதிஷ்டானம், மூலாதாரம் போன்ற பகுதிகளே தென்னிலங்கை. இந்தக் கீழ்நிலைச் சக்கரங்களைச் சுவாசப்பயிற்சியினால் சுத்தப்படுத்துவதே லங்காதகனம். 


இதனையேப் பட்டினத்தாரும்,

"முன்னை இட்டதீ முப்புரத்திலே
பின்னை இட்டதீ தென் இலங்கையில் 
அன்னை இட்டதீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே" என்கிறார்.


ஒளவையாரும் இதனையே,

"மூலாதார மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்கிறார்.

ராமனையும், கண்ணனையும் நமது உள்ளத்தில் உணர, "விசுவாசம்" வேண்டும். ஆம் நண்பர்களே "விஷேசமான-சுவாசம்" வேண்டும். அந்த விசேஷ சுவாசப்பயிற்சியே "மேம்பட்ட அறிவை" உண்டாக்கி ராமனையும், கண்ணனையும் நமக்குள் அடையாளம் காட்டும்.

உண்மையை உள்ளத்தில் உணர்ந்து, உண்மையான ராம ஜென்ம பூமியில், நமக்குள்ளேயே, ராமனுக்கும், அனுமனுக்கும் கோவில் கட்டுவோம். 


உங்கள் சிந்தனைக்கு

  • சூர்ப்பனகையின் உடம்பில் எத்தனையோ அவயங்கள் இருக்க, ராமன் ஏன் சூர்ப்பனகையின் மூக்கை மட்டும் அறுத்தான்?
  • ஐந்தறிவு உடைய வானரம் "பேரறிவுக்கடவுளான ராமனுக்குத் தூது போவது சாத்தியமா?
  • "ஜடாயு" என்பவர் யார்?
  • வசிஷ்டர் ராமனுக்கு உபதேசம் செய்த "பலா, அதிபலா" மந்திரத்தின் பொருள் என்ன?
  • அகத்தியரால் ராமனுக்கு உபதேசம் செய்யப்பட்ட "ஆதித்ய ஹிருதயத்தின் " பொருள் என்ன?



Tuesday, September 20, 2011

ஆதவனைச் சுட்ட அக்னி





மாவீரன் அலெக்சாண்டரின் மனம் பைத்தியம் பிடித்த வானரம் போல அமைதியின்றித் தவித்தது.,  பாரதப் பூமியை  வெல்ல வேண்டும்அதில் தனது ஆட்சி அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்இதுவே அவனது சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அது சாத்தியமாபாரதத்தைத் கூடப் படை பலத்தால் வீழ்த்தி விட  முடியும். மௌரிய பேரரசையும் அதன் கட்டுக் கோப்பான படை பலத்தையும் கூட அழித்துவிட முடியும்.  ஆனால் அதற்குத் தடையாக இருக்கும் சாணக்கியனின் கூர்ந்த அறிவை மழுங்கடிக்க வேண்டுமே!அது இயலுமா


 சாணக்கியனின் அறிவுக்கூர்மையை யாராலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்கிறார்களே! அவர் ஆயிரம் அரிஸ்டாடிலுக்கு இணையானவர் என்கிறார்களே! அந்த மகா ஞானியின் மதி நுட்பத்திற்கு முன்னால் தனது படையின் பலம் சின்னாபின்னமாகி விடாதாஎன்றெல்லாம் யோசித்து குழம்பினான்எதற்குமே அஞ்சாத அந்த மாவீரனின் நெஞ்சம்  சாணக்கியரின் அறிவாயுதத்தை நினைத்த போதே சற்று நடுங்கியது.
   


கூடாரமடித்து மதிய வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த படைவீரர்களையும் படுத்துப் புரண்டு கொண்டு இருந்த குதிரைகளையும்  பார்த்துகொண்டே  நடந்து கொண்டு இருந்த அலெக்சாண்டருக்குத் தூரத்தில் நதிக்கரை மணலில் ஒரு நிர்வாணப் பக்கிரிப் படுத்திருப்பது கண்ணில் பட்டதுஅந்த மனிதனிடம் செல்லவேண்டும்அவனோடு பேசவேண்டும் என்ற உள்ளுணர்வு  சட்டென  ஏற்பட்டதுதனது நடையை வேகமாக்கி அந்த மனிதன் அருகில் சென்றான் அலெக்சாண்டர்.


      
 அலெக்சாண்டர் வந்ததையோ தனது அருகில் ராஜ உடையில் ஒருவன்வந்து நிற்பதையோ அந்த மனிதன் சட்டை செய்யவே இல்லை,  அவன் தன்பாட்டிற்குக் கண்களை மூடுவதும் தனக்குள் எதையோ எண்ணிச் சிரிப்பதுமாக இருந்தான்.

         
 அலெக்சாண்டர் அந்த மனிதனை உற்று கவனித்தான், குறுகிய தோள்களுடன், ஒல்லியான தேகமாக இருந்தாலும் அவன் கண்களிலிருந்து வெளிப்பட்ட அறிவுக் கூர்மையும், அவன் முகத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு வித தேஜசும் அவனிடம் மரியாதையை ஏற்படுத்தியது, ஆனாலும் அவனது அலட்சியமும், தன்னைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்த போக்கும் அலெக்சாண்டருக்கு மனதிற்குள் சிறிது கோபத்தை ஏற்படுத்தியது.

   
 அலெக்சாண்டர் கோபத்தைத் தனக்குள் மறைத்துக் கொண்டு அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான்.
யார் நீங்கள்”?.
அலட்சியமாகத் திரும்பிய அந்த மனிதனின் பதில்
 நீ யாரோ! அவனே தான் நான்  .
இந்த பதிலின் அர்த்தம் அலெக்சாண்டருக்குப் புரியவில்லை,  ஆனாலும் தான் ஒரு மாமுனிவன் முன் நிற்பதாக உணர்ந்தான்,  அந்த உணர்வு அவனுக்கு  ஏற்பட்டவுடன் மண்டியிட்டு அவனை வணங்கினான்,


    “
 ஐயா நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது, உங்களது பதிலில் உள்ள ஆழமான பொருளால் நீங்கள் ஓர் மகாஞானியாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன், நெருப்பை வாரி இறைத்தது போல் மணற்பரப்பெங்கும் சூரியனின் தகிப்புப் பரந்து கிடக்கிறது,  ஆனாலும் நெடுநேரம் இதே இடத்தில் நீங்கள் இருப்பது போல் தெரிகிறது. , வெயில் உங்களை சுடவில்லையா?
நான் கிரேக்கச் சக்கரவர்த்தி என் உத்திரவுக்காக ஆயிரம் பேர் காத்து கிடக்கிறார்கள். நான் திரும்பும் இடமெல்லாம் செல்வத்தையும் அழகிய பெண்களையும் தவிர வேறு எதையும் நான் பார்த்தது இல்லை, நவரத்தினங்கள் பதித்தத் தங்கத் தொட்டியில் உலகிலேயே அதிக நறுமணமுள்ள திரவியத்தில் குளிக்கவேண்டும் என்று நான் நினைத்த மறுகணமே அதைப் பெற முடியும், ஏன்? உலகில் எந்த மூலையில் நான் விரும்புவது இருந்தாலும் அதை பெற்றுவிடும் சூழல் எனக்கு உண்டு  ஆனாலும் என் மனது குழம்புகிறது, அச்சப்படுகிறது, துயரத்தால் துடிக்கிறது, நீங்கள் பெற்று இருக்கும் முகத்தெளிவையும் உங்கள் குரலில் உள்ள உறுதியையும் என்னால் பெறமுடியவில்லை, எதுவுமே இல்லாமல் எப்படி நீங்கள் இந்த வரத்தை பெற்றீர்கள்?” என்று அலெக்சாண்டர் இன்னும் எவையவையோ பேசிக் கொண்டே, இல்லையில்லை புலம்பிக்கொண்டே இருந்தான்.  எல்லா பேச்சுகளையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதன் அலெக்சாண்டரைப் பார்த்து மெதுவாக கேட்டான்
   
 “ நீ யுத்தம் செய்து எதை சாதிக்கப் போகிறாய்? ” 
   
 “ என் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தப் போகிறேன்,”
    
“ அதன் மூலம் நீ பெறுவது என்ன, ”
   
 சக்ரவர்த்தி என்ற பட்டம்! 
   
 சக்ரவர்த்தி பட்டம் உனக்கா? உன் உடலுக்கா? ”
   
 அலெக்சாண்டர் மௌனமானான், அவனுக்குள் குதித்துக் கொண்டிருந்த அந்த உன்மத்த வானரம் இன்னும் அதிகமாகக் குதித்தாடியது, மன அலை இன்னும் அதிகமானது, ஒருபுறம் சாணக்கியனைப் பற்றிய எண்ணமும் மறுபுறம் இந்தக் கேள்வியின் தாக்கமும் அவனை  காகிதப்படகு போல் அலைகழித்தது. நீருக்குள் விழுந்தவன் மூச்சுக்கு துடிப்பது  போல் தவித்தான்.

    “
 ஐயா சக்ரவர்த்தி பட்டம் உயிருக்கா உடலுக்கா என்பது எனக்குப் புரியவில்லை, ஆயினும் உடலும் உயிரும் வேறு வேறானது என்பது புரிகிறது. ஆனால் உடலும் உயிரும் வேறு வேறு என்றால் உடல் இல்லாமல் உயிர்  எப்படித் தன்னை வெளிப்படுத்தும்? அல்லது உயிர் இல்லாமல் உடல் எப்படி இயங்கும்? எனது குரு அரிஸ்டாட்டிலின் உபதேசத்தில் இத்தகையக் கேள்வியும் இல்லை, இதற்குப் பதிலும் இல்லை அதனால்தான் எனக்கு எதுவும் விளங்கவும் இல்லை 
    அந்த மனிதன் சிரித்தான், புறாக்கள் படபடவென சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது அவன் சிரிப்பு,

வீரனே! உடலை ஆதாரமாக வைத்து சிந்திக்கும் போதுதான் பந்தபாசமும், பற்றும் வருகிறது, எங்கு பற்று வந்து விடுகிறதோ அங்கே துன்பமும் துயரமும் தானே வந்து விடுகிறது, அந்தப் பற்றினால் தான் கிரேக்கத்திலிருந்து சிந்து நதிவரை நீ ஓடிவந்திருக்கிறாய், அதோ அங்கே உனது பாசறையில் ஓய்வெடுக்கும் வீரர்களையும் குதிரைகளையும் பார்.

குதிரைகளின் முகத்தில் உள்ள மலர்ச்சி உன் வீரர்களுக்கு இல்லை ஏன்? ஒரு நிமிடம் சிந்தித்துப் பார், குதிரைகளுக்கு மரண பயம் இல்லை, உன் வீரர்களுக்கு நடைபெற போகும் யுத்தத்தில் ஏற்படப்போகும் சாக்காட்டைப் பற்றிய மரணபயம் முகத்தை வாடச்செய்திருக்கிறது, குதிரைகளுக்கு இல்லாத மரண பயம் மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சியாலா வருகிறது? இல்லை, மகனே இல்லை, சரீரத்தின் மேல் கொண்ட பற்றுதலால் வருகிறது, சரீரங்களால் தான் வாழமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதனால் தான் துக்கப்படுகிறார்கள்,

    “
 நீ வெறும் சரீரமல்ல, சரீரம் என்பது ரதம் போன்றது, அந்த ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரை ஆத்மாவாகும், குதிரை இழுக்கிறது, ரதம் செல்கிறது, ஆனாலும் ரதம் நினைத்துக் கொள்கிறது தன்னால் தான் குதிரை ஓடுகிறது என்று, உண்மையில்  குதிரைதான் ரதத்தை இழுக்கிறது அதே போன்று தான் உனது உடலை உன் ஆத்மா இயக்குகிறது, நீ உடல் அல்ல ஆத்மா என்பதை அறிந்து கொள் 
  
 ஐயா, ஆத்மா என்றால் என்ன? ”
   
 சிலர் அதை உயிர் என்கிறார்கள், வேறு சிலர் அது உயிரை இயக்கும் சக்தி என்கிறார்கள், இது வாதம்தான் ஆனால் ஆத்மாவை உணர்ந்தவர்கள் அது விவரிக்க முடியாத மாபெரும் சக்தி என்கிறார்கள், ஆத்மாவால் உயிர் இயங்குகிறதா? அல்லது உயிரே தான் ஆத்மாவா? என்பதை அறுதியிட்டுக் கூற பலபேர் முயன்று வருகிறார்கள், ”

    “
 ஆனாலும் இன்னும் முடிவுக்கு யாரும் வந்தபாடில்லை, இனிமேலும் யாரும் வரமுடியாது என்றே நான் கருதுகிறேன், என்னைப் பொருத்தமட்டில் ஆத்மா உயிராகவும் இருக்கிறது உயிரை இயக்குவதாகவும் இருக்கிறது,  ஆத்மாவை நான் கடவுள் என்கிறேன், காணும் பொருள் எல்லாம்-மரம், செடி, புழு பூச்சி, இந்த மணல், அந்த ஆறு, அங்கு நிற்கும் குதிரைகள், நீ, நான், எல்லாமே கடவுள் என்ற பேரத்மாவின் சிறு அம்சங்களே என்றே நான் உணருகிறேன், ”

    “
 அதாவது கடவுளின் தன்மை உனக்குள்ளும் உள்ளது எனக்குள்ளும் உள்ளது மற்ற எல்லா உயிரினங்களிலும் அந்தத் தன்மை உறைந்து மறைந்து கிடக்கிறது, அதை உணர வேண்டும், வைக்கோல் பொதிக்குள் ஊசியைக் தேடுவது போல் சரீரத்திற்குள் சென்று ஆத்மாவை தேடு, தேடி அதை அடைவது சற்று சிரமமான காரியந்தான், ஆனாலும் முடியாத காரியம் இல்லை, நீ வெற்றிகளை மட்டுமே இதுவரை கண்டு இருக்கிறாய், சரீர சுகத்திற்கானக் காரணங்கள் மட்டுமே உனக்கு காட்டப்பட்டு இருக்கிறது, நாடும் நகரமும் அதிகாரமும் பதவியும் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறாய், ”

    “
 உன்னைவிடச் சிறந்தவன் உன்னைவிடப் பராக்கிரமசாலி யாருமே இல்லை என்று உனக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது, அதனால் தான் உன்னை விட மேலான சாணக்கியனைப் பற்றி கேள்விப்படும் போது அச்சப்படுகிறாய், அதனால் துயரம் ஏற்படுகிறது, ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள், உனக்கு மேலானவர் எவரும் இல்லை, கீழாகவும் யாரும் இல்லை. வானத்திற்குக் கீழே பூமிக்கு மேலே எல்லாமே சமமானது, எவருமே சரி நிகர் சமமானவர்கள், இந்த சமநோக்கு உனக்கு வரவேண்டுமென்றால் உள்நோக்கு என்பது முதலில் வரவேண்டும், உன் ஆசைகளை உற்றுப் பார், உன் அழுகைகளை ஆழமாக நோக்கு, உன் அறிவைப் பகிர்ந்துபார், அப்போது புரியும் அவை எல்லாமே அர்த்தமற்ற ஒரு நாடகம் என்று,”
    
 நீனும் நானும் மற்ற எல்லா மனிதர்களும் இத்தகைய அர்த்தமற்ற நாடகத்தைதான் நடத்திக் கொண்டு இருக்கிறோம் அல்லது நடித்துக் கொண்டு இருக்கிறோம்,”

இப்போது அலெக்சாண்டர் கேட்டான்,

 வாழ்க்கை என்பது நாடகம் தானா? நாம் வெறும் நடிகர்கள் தானா? அப்படி என்றால் இந்த நாடகத்தில் கதாசிரியன் யார்? அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருப்பான்? ”

 
ஞானி மீண்டும் சிரித்தான்,



நான் முதலிலேயே சொன்னேன் பெரும் ஆத்மாவின் சிறு துளிதான் நாம் என்று அந்த பெரும் ஆத்மாதான் நாடக ஆசிரியன் அப்படி என்றால் நீனும் நானும் கூடக் கதாசிரியன் தான், பரமாத்மா பாத்திரங்களை உருவாக்கித் தருகிறான், நாம் பாத்திரத்தின் இயல்பறிந்து அதற்கு தகுந்தாற்போல் பாவனை செய்கிறோம், இந்த மரம் மரமாக நடிக்கிறது, நீ மன்னனாக நடிக்கிறாய், நான் ஞானியாக நடிக்கிறேன், மரம். மன்னன். ஞானி என்று பெயர்கள் வேறுபட்டாலும் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான், ”

    “
அதாவது சரீர சம்பந்தம் இருப்பதனால் எல்லாமே ஜீவாத்மாக்கள் தான், இதைப் புரிந்து கொள், இப்போது புரிந்ததை விட இன்னும் ஆழமாகத் தனிமையில் புரிந்து கொள், அப்போது ஞானம் பிறக்கும், அந்த ஞானம் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி காதல், மோதல் எல்லாமே ஒன்றுதான் என்பதை உணரவைக்கும், அப்படி உணரும் போது நீ ஏன் கவலைப்படுகிறாய், நான் ஏன் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கும், அவஸ்தைகள் என்பது உடம்புக்குத்தான் நமக்கு இல்லை என்ற புத்தி தெளிவு ஏற்படும் போது வெய்யில் உன்னை சுடாது பனி உன்னை குளிர்விக்காது எந்த மாற்றமும் இல்லாத சமுத்திரத்தைப் போல் எப்போதும் நீ ஆழமாக இருப்பாய் ஆனந்தமாகவும் இருப்பாய்,”

   
 “நான் மெலிந்தவன் என்று எண்ணும் போது வலிமையை கண்டு பயம் வரும், வலிவும் மெலிவும் ஒன்றுதான் என்ற ஞானம் வரும்போது துயரமும் துன்பமும் ஓடிப்போகும் உன் உடம்பிற்குள் இருந்து நீ வெளியில் வா அப்போதுதான் சாணக்கியனும் சாமான்யனும் ஒன்றாகப்படுவார்கள்,”
   
சந்திரனை மறைத்துக் கொண்டிருந்த மேகத்திரை விலகி குளிர்ந்த கதிர்கள் பரவுவதைப் போல் அலெக்சாண்டரின் மனக்குழப்பம் விலகியது, சாம்ராஜ்ய பெரும் கனவும், சாணக்கியனின் பேரச்சமும் ஓடி மறைந்தது,

ஞானியிடம் அலெக்சாண்டர் முடிவாக கேட்டான், ஐயா தாங்கள் யார்
ஞானி சொன்னான்

நான் சாணக்கியனின் உதவாக்கரைச் சீடன்

இப்போது அலெக்சாண்டருக்கு முற்றிலுமாக குழப்பம் நீங்கியது, சரீரபற்று விலகினால் துயரம் விலகும் என்பதை முழுமையாக நம்பினான்.



காலம் கடந்தது.

இதோ ஒரு சவ ஊர்வலம் போகிறதே யார் இறந்தது.
சவப்பெட்டிகூட வித்தியாசமாக இருக்கிறதே.  சவப்பெட்டியின் இருபக்கமும் சவத்தின் கைகள் திறந்தவண்ணம் தொங்கிக்கொண்டிருக்கின்றனவே. என்ன நடந்தது.

இது மாவீரன் அலெக்ஸ்சாண்டரின் இறுதி ஊர்வலம்.  அவனது கைகள் சவப்பெட்டியின் வெளியே தொங்க விடப்பட்டிருக்கிறது.  உலகையே வென்ற அவனது கைகள் போகும்போது எதையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதே அந்த சக்ரவர்த்தியின் இறுதி ஆசை