Total Pageviews

Sunday, February 27, 2011

ராஜ யோக யாத்திரை- ஸ்ரீ ஐயப்ப வழிபாடு


யோகிகள் தனக்குள் தேடிக்கண்டுகொண்ட இறை அனுபவத்தைச் சாமான்யர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற கருணையால் கோவில்களை உருவாக்கினர். அந்தக் கோவில்களுக்கு வருபவர்களுக்கெல்லாம் இயல்பாகவே இறை அனுபவம் சித்திக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான வெளிச்சூழ்நிலையைக் கோவில்களில் உண்டாக்கினர்.

     பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா போன்ற ஏழு சிரஞ்ஜீவிகளில் ஒருவரான பரசுராமர், தான் கற்றறிந்த யோக வித்தையைத் தனது மாணவர்களுக்குக் கற்றுத்தருவதற்கானக் களமாக மேற்குத்தொடர்ச்சி மலையைத் தேர்வு செய்தார். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏழு இடங்களில் பயிற்சிக் களங்களை ஏற்படுத்தி யோக தவத்தால் தனக்குக் கிடைத்த பிராண சக்தியை இந்த ஏழு இடங்களிலுள்ள சாஸ்தாகோவில்களில் பிராணப் பிரதிஷ்டையாக்கியுள்ளார். இந்த கோவில்களே ஐயப்பனுக்கான முக்கிய கோவில்களாகப் போற்றப்படுகிறது.. இந்தக் கோவில்கள் எல்லாம் ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.


யோக பாடத்தில், மனித உடலிலுள்ள யோகச்சக்கரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் போற்றப்படுகிறது.  இந்த ஏழு யோகச்சக்கரங்களே ஒரு மனிதனின் உடல் நிலையையும் மனநிலையையும் நிர்ணயிக்கிறது. 


உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்பதிற்கிணங்க, உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் விழிப்படையும் வகையில் வெளிச்சூழ்நிலையை உருவாக்கி அதனை ஏழு கோவில்களாக வடிவமைத்தனர் யோகிகள். அந்த வகையில் சிவனுக்கானச் சக்கரக் கோவில்கள் ஏழு. அவை முறையே, மூலாதாரம் - திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் - திருவண்ணாமலை, அனாகதம் - சிதம்பரம், விசுத்தி - காளத்தி, ஆக்ஞை - காசி, சஹஸ்ரகாரம் - கைலாசம்.

அதுபோல ஐயப்பனுக்கும் ஏழு சக்கரக் கோவில்கள் யோகி பரசுராமரால் உருவாக்கப்பட்டது. அவை முறையே மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன் கோயில், மணிபூரகம் - ஆரியங்காவு, அனாகதம் - குளத்துப்புழை, விசுத்தி - பந்தளம், ஆக்ஞை சபரிமலை, சஹஸ்ரகாரம் - காந்தமலை. இந்த வகையில் சபரிமலை சாஸ்தாவுக்கு முதல் முதலில் கோயில் தோன்றியதாக கூறப்படுவது பாபநாசத்திலுள்ள சொரிமுத்தையனார் கோயில் ஆகும். இந்த மூலாதாரக் கோவிலிலுள்ள பிராண சக்தியைக் கிரஹித்தால் மட்டுமே பிற கோவில்களில் உள்ள சக்தியையும் அனுபவிக்கமுடியும். தாமிரபரணியில் நீராடி இந்தக் கோவிலில் தியானம் செய்தால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் என்பதும்,சுவாச சம்பந்தமான வியாதிகள் விலகும் என்பதும் யோக ரகசியம்.

அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில்

அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்தத் தலம் அமைந்துள்ளது. அச்சத்திற்குப் பஞ்சபூதத் தத்துவத்தின்படி நீர் பூதமே காரணமாகிறது. நீர் பூதத்தை வைத்து வேலை செய்யக்கூடிய சிறுநீரகமே பய உணர்விற்குக் காரணமாகிறது. இந்தக் கோவிலில் தியானம் செய்தால் சிறுநீரகம் சக்தியடைந்துப் பய உணர்வு குறையும். 

ஆரியங்காவு

ஐயப்பன் கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இந்தத் ஸ்தலம் நெருப்புப் பிராண சக்தியை உள்ளடக்கியது.இந்தக் கோவிலில் தியானம் செய்தால் தடைபட்டத் திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பதும் கண் சம்பந்தமான வியாதிகள் தீரும் என்பதும் யோக ரஹஸ்யம்.

படிப்பு தரும் குட்டி சாஸ்தா

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் காற்று பிராண சக்தியை உள்ளடக்கியது. இங்கு தியானம் செய்தால் நுரையீரலுக்கு சக்தி கிடைக்கிறது. நுரையீரலே புரிந்து கொள்ளும் தன்மைக்கு பொறுப்பாகிறது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை. இங்குள்ள கல்லடையாறு என்னும் புனித நதியில் குளித்து,தியானம் செய்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பதோடு ஒவ்வாமை நோய்களும் தீரும் என்பது யோக ரஹஸ்யம்..

ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித உடலை இயக்குபவை வாத, பித்த கபங்களே. இந்த திரிதோஷங்களும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும்.. இந்த விகிதாச்சாரம் சம நிலையில் இல்லாமல் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. திரிதோஷங்களை சமப்படுத்தும் மூலிகைகள் எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன.

வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதா நதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோகத்தைச் சமப்படுத்தக்கூடிய மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன.

சபரி மலை யாத்திரையில் மேற்படி மூலிகைகளின் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் நிறைந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலை உடலில் பூசிக்கொள்வதாலும் நோய்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள்


சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18படிகள்.இருமுடிகட்டியவர்கள் மட்டுமே 18 படிகளில் ஏறத் தகுதிடையவர்கள். யோகத்திலும் இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளையும் கட்டத்தெரிந்தவர்களால் மட்டுமே 18 வகையான சுவாச ஓட்டங்களையும்( 18 சுவாச கதி)உணரமுடியும். இந்த 18 வகையான சுவாச ஓட்டங்களையும் உணர்ந்தவரே யோகத்தில் குருசாமி எனப்படுகிறார்

18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு , சரணாகதியாகப் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும். கடுத்து, கருப்பு என்பதெல்லாம் "காற்றின்" வேறு வேறு பெயர்கள். சரம் என்றால் மூச்சு எனப்பொருள்(மூச்சுக் கலைக்கு சரக்கலை எனப் பெயருண்டு).கதி என்றால் நிலை எனப்பொருள்.

யோக சரணாகதி என்றால் மூச்சை நிலைப்படுத்துதல் என்றே பொருள்

"தத்வமஸி':

ஐயப்ப சன்னிதான வாசலில் "தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ""ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன்'' என்பது இந்தச்சொல்லுக்குள்
அடங்கியுள்ள தத்துவம். 

ஐயப்பனின் 4 ஆசனங்கள்:

தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரையிலும், கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராண முத்திரையிலும், குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கறார். இப்படி நான்கு வித ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஸ்வாமி ஐயப்பன் மட்டும் தான்.

ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது, சுவாச பந்தத்தையே குறிக்கிறது.யோக பாடத்தில் கால் என்றால் மூச்சு என்று பொருள். ஐயப்பன், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார்(மூலபந்தம்). மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.

யோகாசன நிலையில் , வயிற்றை உள்ளிழுத்து (உட்டியானபந்தம்), மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்தக் கிரியா சக்தியை ஞான சக்தியாக மடைமாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் (நயன தீட்ஷை) நிலையில் இருப்பதால் தான், கலியுகத்தில் இவ்வளவு அதிகமானப் பக்தர்களைத் தன்பக்கம் ஈர்க்கமுடிகிறது.சாமான்ய மனிதனும் சாமியாகும் ராஜ யோக வழிமுறையே ஐயப்ப வழிபாடு.

"சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்"

Wednesday, February 23, 2011

ஓ மனமே....


அன்றைய இறுதி நாளில்
நன்றி ஒளிர்ந்த விழிகளோடும்
இமையோரம் கசிந்த
கண்ணீர்த் துளிகளோடும்…
பல கிளைகளாய்
பிரியும் 
புகைவண்டித் தெருவில்
ஒரு சிறு கையசைப்போடு
ஆளுக்கொருத் திசையாக
தொலைந்தேதான் போனோம்!
இனி எந்த வழியிலும்
எந்தச் சந்தர்ப்பத்திலும்
இறுகக் கைகள் குலுக்கி
சந்திக்கச் சாத்தியமே இல்லை!
இருந்த போதிலும்
இதய தேசத்தில்
நினைவின் பாதையில்
இன்னும் பல தடங்கள்
அழியாமல் கண்ணீர் சிந்தியபடி
நிழலாகத்தான் தொடர்கின்றன!!

இன்னும் இருக்கிறேன்


கடந்து சென்ற காலங்களின்
அனுபவப் பயணங்கள் யாவும்
வெறும் காயங்களாகி
உள்ளே அணைந்து அணைந்து
எரியும் ஞாபகங்களாய்…

மனம் பூத்துக் குலுங்கும்
மரமாய் பூத்துக் குலுங்கி
கல்லெறி பட்டுப் பட்டு
காயங்கள் மட்டும் மிஞ்ச…

முகம் தொலைத்த
மனித முகங்களோடு
தினம் புண்ணாகித் தவித்து
மனசு இறுகி....

உதடுகளில் ஓசை தொலைத்து
ஏதோ ஓர் வலித்த புள்ளியில்
திசை தெரியாமல் நிற்கிறேன்.

உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!

பாசத்தை எதிர்பார்த்து
பாரமாய் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!

மன மரணம் 
இவனுக்குமட்டும் 
.முரண்டு பிடிக்கிறது

Tuesday, February 22, 2011

மனநோய் பைபிள்


இந்த முறை திருவண்ணாமலை சென்றிருக்கும்போது மருத்துவ நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு "பயங்கரச் செய்தி" நமது மொபைல் போனில் ஏராளமான பாக்டீரியாக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கிறதாம். நமது கழிவறையில் இருப்பதை விட நமது மொபைல் போனில் இருக்கும்` கிருமிகளின் எண்ணிக்கை, அதிகமாம்! ,
(இனி ஃபோனைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பேச வேண்டும் போல)

 மற்றொரு படு பயங்கரச் செய்தி நம் கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கிருமிகள், டாய்லெட்டில் இருப்பது போல பத்து மடங்காம். கீ போர்டைத் தொட்ட விரல்களைத் தெரியாத்தனமாக வாயில் வைத்து விட்டால் ஃபுட் பாய்சனிங்தானாம். இந்த வயிற்று வலிக்கு "க்வெர்ட்டி டம்மி" என்று நாகரீகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்களாம். (இப்ப தான பிளாக் எழுத ஆரம்பிச்சோம் அதுக்குள்ளேவா?.)
 டாய்லெட் ஸீட்டை விட அதிகமான கிருமிகள் நம் டூத் ப்ரஷ்ஷிலும் இருக்கிறதாம். இனி பழையபடி வேப்பங்குச்சிகளுக்கு கிராக்கி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இனி டூத் ப்ரஷ்ஷில் பல் தேய்க்கவா? வேண்டாமா?என யோசித்துக்கொண்டிருக்கும் போதே,  மனோதத்துவ டாக்டர்களிடமிருந்து மற்றொரு செய்தி, குழந்தைகள் லேஸ் வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிப்பது முதல், என்றோ ஒரு நாள் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அஜீரணத்தில் அவஸ்தைப் படுகிறோமே அது வரை,  அனைத்துமே மனோ வியாதி என்றே இந்த மருத்துவர்களால் அடையாளம் காட்டப்படுகிறது.

அமெரிக்காவின் மனோதத்துவ வைத்தியர்கள் கழகம் வெளியிடக்கூடிய ஒரு முக்கியமான புத்தகம் DSM. ,  மன நோய் வைத்தியத்திற்க்கான பைபிள் என்று இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறதாம். வியாதிகளின் அறிகுறிகள்,அதைப் பற்றிய விவரங்கள், எப்படி எடுத்துச் சொன்னால் நோயாளியைப் பயமுறுத்தலாம் என்று சகல தகவல்களும் அடங்கிய புத்தகம்.  வெளிவர இருக்கும் இதன் ஐந்தாம் பதிப்பில் ஏகப்பட்ட புதிய வியாதிகள் சேர்க்கப்படவிருக்கின்றனவாம்.
உதாரணமாக, நமக்கு பிடித்தவர்களை நீண்ட நாள் பார்க்காமல் திடீரென பார்க்கும்போது வரும் படபடப்புக்கு ‘மைல்ட் ஆங்ஸைட்டி டிப்ரஷன்’ என்று பெயராம். நமக்குப் பிடித்தவர்களிடம் செல்லச்சண்டைப் போட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து மீண்டும் போன் வராதா எனக் காத்துக் கொண்டிருப்போமே! - இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’.என்று பெயராம். எல்லாவற்றையும் விட மோசமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவதாம்.பயப்படாதிங்க! இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான்!
இந்த மன நல பைபிளின்படி பார்த்தால் இனி நானும் நீங்களும் பைத்தியந்தான். கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், கார்டிஃப் பல்கலைக் கழகம் போன்றவற்றின் மனோ தத்துவப் பேராசிரியர்களே இதைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்குப் ‘பைத்தியம்’ என்று அடையாளப் படுத்திவிட்டால் அப்புறம் இயல்பான மனிதர்களின் எண்ணிக்கையே மிகச் சுருங்கிவிடும் என்கிறார்கள் இந்தப் பேராசிரியர்கள்.
 இனி மெடிக்கல் செக்கப் எனப்போனால் நமக்கு பைல்ஸ் உண்டா, சர்க்கரை வியாதி உண்டா என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, கடைசியில் ‘உனக்குக் கோபம் வருவதுண்டா ?’ என்று கேட்பார்களாம். ஆமாம் என்று சொன்னால் போச்சு - டெம்ப்பரமண்ட்டல் கண்ட்ரோல் டிஸார்டர் என்ற நோயின் பெயர் சொல்லி பீஸை ஏகத்துக்கு ஏற்றிவிடுவார்களாம்.. தொடர்ந்து நோய் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்றால் அதற்கான சிகிச்சையை ஒழுங்காகச் செய்துகொள்ள வேண்டுமாம். டிஸார்டரைக் கட்டுப்படுத்த தினம் மூன்று வேளை குழாய் மாத்திரைகள், ஒவ்வொன்றின் விலை ரூபாய் எண்பதாம்!

DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD - அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் - என்று ஒன்றைச் சேர்த்தார்களாம். நமக்கு பிடித்தவர்கள் வேறு யாரிடமாவது பேசினால் நமக்கு ஒரு சின்னப் பொறாமை வருமே
அதற்குதான் இந்தப்பெயர். (அய்யய்யோ...........இந்த நோய் நமக்கு உண்டா?. நமக்கும் கொஞ்சம் பொறாமை இருக்கே!)
இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்களாம்.. ஒரு கால கட்டத்தில் அமெரிக்காவில்ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியதாம்.

.குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை,DSM பரிந்துரைக்கிறது.  2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்காம்.
இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் மருந்தை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு.
பல்லி மிட்டாய் கேட்டுக் குழந்தை அழுதால் அது ஒரு மன வியாதி. மனைவி ஏதோ கடுப்பில் வெண்கலப் பானையை ‘ணங்’கென்று இறக்கி வைத்தால் அது ஒரு வியாதி… இப்படிக் கண்டுபிடித்துக்கொண்டே போய்க் களைத்துப் போன மனநல மருத்துவர்கள் இப்போது மற்றொரு அருமையான வியாதி சொல்லியிருக்கிறார்கள்: ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கூட ஒரு வகை மன நோயாம்.
உண்மை! விளையாட்டுக்குச் சொல்லவில்லை! இந்த வியாதிக்கு ‘ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா’ என்று பெயர். இந்த நோயாளிகள் எண்ணெய் பலகாரங்களைச் சாப்பிட மாட்டார்கள். இனிப்பு, கொழுப்பு, உப்பு உறைப்பைக் கூடிய வரையில் தவிர்ப்பார்கள். டால்டா, மைதா, பிஸா, சிப்ஸ் போன்ற "நல்ல உணவுகளை!" எல்லாம் தவிப்பார்களாம்.. பச்சைக் காய்கறிகள், பழங்கள், கைக் குத்தல் அரிசி போன்ற "மோசமான உணவுகளை"! தாமும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுப்பார்களாம்.
இதெல்லாம் ஒரு வகை மன வியாதியாம். ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா! (பெயர் நல்லா இருக்கே!)
  அதிகமான பூச்சி மருந்து தெளித்தக் காய்கறிகள், மரபணு செய்யப்பட்ட பயிர்களை விலக்கி வைத்தால் நாமெல்லாம் பைத்தியமாம்!ஆக்ஸிடோஸின் ஊசி போட்டுக் கறந்த பாலைக் குடிக்க மறுத்தால் நாமும் கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆக வேண்டியதுதானாம்!
செயற்கை ரசாயனங்களில் ஊற வைத்து மாதக் கணக்கில் டப்பாவில் அடைத்து வைத்த உணவைச் சாப்பிட்டால்தான் நார்மலான மனிதன் என்று DSM மருத்துவர்கள் வாதாடுகிறார்கள்.
இயற்கையான, உயிரோட்டமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் தான் உடலும் மனமும் லேசாக இருக்கும். தன்னம்பிக்கையும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். ஆன்மீக உணர்வுகள் மேலே எழும்பும். மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் டப்பா உணவு சாப்பிட்டுக்கொண்டு சரிந்து கிடப்பவர்கள், சோம்பலும் மந்தத்தனமுமாகத்தான் இருப்பார்கள். இவர்கள் தான் DSM மனிதர்களாகப் போகிறார்கள்.

"பித்தம் இல்லாது சித்தம் கெடாது"முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்,
எப்பிணி தீர்ப்பாரடி - குதம்பாய்
எப்பினித் தீர்ப்பாரடி ............குதம்பைச்சித்தர்.

Friday, February 18, 2011

பாரதப் பாரம்பரியம்


நமது பாரம்பரியம்


இந்திய நாகரிகம்:


 நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடி நமது மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகமே. இந்த நகரங்களில் கிட்டத்தட்ட 40,000 மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 8000 வருடங்களுக்கு முன்பே நாகரிகத்தில் சிறந்திருக்கிறார்கள். ரோம் நகரத்தின் செழுமையும், வசதிகளும் மொகஞ்சதாரோவிலும் இருந்தது என்று ஆச்சரியப்படுகிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.வெள்ளத்தைத் தடுக்கும் கட்டிட அமைப்பு, கழிவுநீர்க் கால்வாய்கள், உயரமான தடுப்புச் சுவர்கள் இவை இந்தியக் கட்டிட நுணுக்கங்களுக்கு உதாரணம். பெண் சிலைகள் நிறைய இருந்திருக்கிறது. பெண் தெய்வங்களை வழிபட்டிருக்கலாம். பெண்களுக்கு மதிப்புக் கொடுத்த முதல் நாகரீகம் நம்முடையதே. அரபிக் கடல் முதல் இமயமலை வரை சிந்துசமவெளி நாகரிகத்தின் தாக்கம் இருந்திருக்கிறது.

இந்திய நூல்:


ரிக்வேதம் பழமையான நூலாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. ரிக்வேதம்.இந்தியக் கவிதை:

உலகின் முதல் கவிதையாக ராமாயணம் கருதப்படுகிறது. அதேபோல் உலகின் மிகப் பெரிய கவிதையாகக் கருதப்படுவது மகாபாரதம்!


இந்தியப் பல்கலைக்கழகம்

500 - 1300 AD நாலந்தா பல்கலைக்கழகம். ஒரு மைல் நீளம், அரை மைல் அகலம். கற்களால் ஆன இருக்கைகள். 300 வகுப்பறைகள். வான ஆராய்ச்சிக்கூடம், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை. கடுமையான தேர்வு விதிகள். அப்படியும் 10,000 மாணவர்களும், 200 ஆசிரியர்களும் இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார் ஹியன் சாங் என்னும் சீனப் பயணி.


இந்தியக் கணிதம்:       


                                         1 முதல் 9 வரையிலான எண் அமைப்பு அரபுமுறையல்ல; இந்தியர்களின் கண்டுபிடிப்பு. இதை ஆமோதிக்கும் அரபுக் கணித மேதைகளும் உண்டு! பூஜ்யத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது நாம்தான். தசம எண் அமைப்பிலும் நாம் முன்னோடிகள். Billion, Trillion, Tera இவற்றைவிட அதிக ஸ்தானங்களை அப்போதே கணக்கிட்டுப் பெயரிட்டவர்கள் நாம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய அதிகபட்சம் 106. இந்தியர்கள் 1053. இதெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு 5000 வருடங்களுக்கு முன்!இன்று கணினியில் பயன்படும் Binary (0,1) பிங்கள அரசில் (450 BC) பாடல்களின் நீளத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டது! அதற்குப்பிறகு அதிகம் பயன்படுத்தப்படாமல் மீண்டும் 1678 ல் கண்டுபிடிக்கப்பட்டு முன்னேற்றங்கள் நிகழ்ந்தன.Geometry, Algebra,Calculus Trigonometry இவையும் நாம் உலகிற்கு வழங்கியவை!


இந்திய அறிவியல்:
              
ஐசக் நியூட்டன் புவியீர்ப்புவிசையைக் கண்டறிவதற்கு முன்பே கண்டறிந்த நாடு இந்தியா. சுமார் 1,200 வருடங்களுக்கு முன்னால்! கண்டறிந்தவர் பாஸ்கராச்சார்யா! நியூட்டனால் “மீண்டும்” கண்டறியப்பட்டது கி.பி. 1687 ல்!4,000 வருடங்களுக்கு முன்பே வான ஆராய்ச்சியில் நாம் சிறந்தவர்கள். நம்ப முடிகிறதா? நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை! மிகச் சிறந்த கணித மற்றும் வானசாஸ்திர நிபுணர் ஆர்யபட்டா சொன்னது (அதாவது கோபர்நிகஸ் தனது கண்டுபிடிப்புகளைச் சொன்ன வருடத்திலிருந்து (1543)ஆயிரம் வருடங்களுக்கு முன்!) : ”பூமி வட்ட வடிவம். சூரியனைச் சுற்றிவருகிறது. படகில் செல்லும்போது கரையிலுள்ள மரங்கள் நகர்வதுபோல் நமக்குத் தோன்றுகிறதல்லவா?, அதுபோல பூமியிலுள்ள நமக்கு சூரியன் நகர்வதுபோல் தோன்றுகிறது”. இந்திய மருத்துவம்: 

மேற்குலகம் உலகின் முதல் மருத்துவராக ஹிப்போக்கிரட்டஸைக் (460 - 377 BC) குறிப்பிடுகிறது. ஆனால் இவருக்கு முன்பே மகரிஷி சரகர் (500 BC) எழுதிய சரக சம்ஹிதா எனும் மருத்துவக் கையேடு புகழ்பெற்றது. இந்த நூலில் பல்வேறு வியாதிகளுக்கான தீர்வுகள் காணப்பட்டது. மருத்துவ முறைகள், முதலுதவிகள் குறித்த தெளிவான கையேடு இது .   இந்த நூல் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மருத்துவர் சரகா ரோம, அரபு நாடுகளில் மிகவும் மதிக்கப்பட்டார்.


அடுத்தது ஆச்சரியத்துக்கெல்லாம் ஆச்சரியம்! கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன்பே சுஷ்ருதர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்! சிதைந்த மூக்கு, உதடு,காதுகள் இவற்றைத் தனது அறுவைசிகிச்சைத் திறனால் சரிசெய்திருக்கிறார்.  சுஸ்ருதர் அறுவை சிகிச்சையை 8 வகைகளாகப் பிரிக்கிறார். 125 வகையான மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். அறுவை சிகிச்சைகளின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.

இந்தியக் கட்டிடக்கலை: 
உலகிலேயே கிரனைட் கற்களால் கட்டப்பட்ட முதல் கோயில், தஞ்சை பெரிய கோயில். ஐந்தே வருடங்களில் கட்டப்பட்ட நிரந்தர ஆச்சரியம்! சந்திரகுப்த மௌரியர் காலத்தில் மலைகளுக்கிடையில் செயற்கையாகப் பாதை அமைக்கப்பட்டு சுதர்சனா என்ற ஏரி ஏற்படுத்தப்பட்டது. மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை, கும்பகோணம், காஞ்சிபுரம் இன்னும் இன்னும் எத்தனை உதாரணங்கள் தேவை நம் கலைப் பெருமை சொல்ல?


இந்திய விளையாட்டு:

 சதுரங்கம், சீட்டு, பரமபதம் போன்ற விளையாட்டுகள் இந்தியர்கள் உலகிற்கு அளித்த கொடைகள்.           இவை 
வெளிநாடுகளில் வேறு முலாம் பூசப்பட்டு வேறு பெயர்களில் வெளியானது.

இந்தியத் தற்காப்புக் கலைகள்:


ப்ரூஸ்லீயும், ஜாக்கிசானும் என்றென்றும்  நமக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். கராத்தே, ஜூடோ போனற கலைகளின் பிறப்பிடம் இந்தியா. இதுதவிர சிலம்பம், குஸ்தி, களரி, வர்மம் போனற கலைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் முன்னோர்கள்.இந்திய இசையும், நடனமும்:

ராகங்கள் சாம வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்று பிரபலாமய் இருக்கும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைவடிவங்கள் பிறந்தது சாமவேதத்திலிருந்துதான் என்கிறது ஆராய்ச்சி முடிவு.2000 வருடங்களுக்கும் முந்தையது நமது பாரத பாரம்பரியம். பாவம், ராகம்,தாளம் ஆகிய மூன்றும் இணைந்துதான் பாரதம் என்றாகியது.,ராகம், பாவம், தாளம், இசைக்கருவிகள், குரல் இவற்றின் பின்னணியில் நம்மை மகிழ்விக்கும் நடனக்கலை இந்தியர்களின் நுட்பமான ரசனைக்கு சிறந்த சான்று.


இன்னும் யோகா, பௌத்தம், சமயங்கள் போன்ற சொல்லாத சாதனைகள் ஏராளம் இருக்கின்றன. இந்த மண்ணில்தான் அற்புதங்கள் ஏராளம் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியனாகப் பிறந்தது தற்செயல்நிகழ்வு. ஆனால் ஆயுள்முழுவதும் பெருமைப்படும் நிகழ்வு. வாழ்க நம் நாடு! ஜெய்ஹிந்த்!தேடுவதை நிறுத்து-ஜென் கதை
ஒரு பெரிய பணக்காரர். பிரம்மாண்டமான கோட்டைபோன்ற வீட்டில் சில நூறு வேலைக்காரர்களுடைய கவனிப்பில் ராஜாபோல வாழ்ந்தார். அழகான மனைவி. இரண்டு குழந்தைகள். குறையில்லாத வாழ்க்கை.ஆனால் ஏனோ, கொஞ்சநாளாக அவருக்கு மனத்தில் நிம்மதி இல்லை. ஞானத்தைத் தேடிப் பயணம் புறப்பட்டார்.சாதாரணமாக ஞானம் தேடிச் செல்கிறவர்கள் நடந்துபோவார்கள். இவர் பணக்காரராச்சே. பெரிய குதிரைவண்டியில் கிளம்பினார். ஒவ்வோர் ஊராகச் சென்று அங்குள்ள ஞானிகள், துறவிகள், ஆசிரியர்களைச் சந்தித்து அவர்கள் காலில் தங்கத்தையும் வைரத்தையும் கொட்டினார். தனக்கு ஞானம் பெற்றுத் தருமாறு வேண்டினார்.ஆனால் இவர்கள் யாராலும் அந்தப் பணக்காரருக்கு உதவ முடியவில்லை. காட்டின் உள்பகுதியில் வாழும் ஒரு அவதூதரைக் கை காட்டினார்கள். ‘அவராலதான் உன் பிரச்னையைத் தீர்க்கமுடியும்!’நம் ஆள் யோசித்தார். ஒரு மூட்டை நிறையப் பணத்தை எடுத்துக்கொண்டார். 

குதிரை ஒன்றில் ஏறிக்கொண்டார். காட்டுக்குள் சென்றார்.பல நாள் அலைச்சலுக்குப்பிறகு அவர் அந்த அவதூதர் வாழும் குகையைக் கண்டுபிடித்துவிட்டார். உள்ளே சென்று அவரை வணங்கி விஷயத்தைச் சொன்னார்.துறவி கேட்டார்.
‘நீ எப்படி இங்கே வந்தே?’

‘குதிரையில வந்தேன்!’

‘அப்படீன்னா நீ ஏன் ஞானத்தைத் தேடுறே? முதல்ல ஒரு குதிரையைத் தேடவேண்டியதுதானே?’’

என்ன சாமி புரியாமப் பேசறீங்க? என்கிட்டதான் ஏற்கெனவே குதிரை இருக்கே, அதைத் தேடி நான் ஏன் அலையணும்?’’


அதேமாதிரிதான் ஞானமும். அது ஏற்கெனவே உன்கிட்ட இருக்கு. அதைத்தேடி வெளியே அலைஞ்சு பிரயோஜனமில்லை. உனக்குள்ளேயே தேடத் தெரிஞ்சுக்கோ’ என்றார் அந்த ஞானி. 

அவர் கொண்டுவந்திருந்த பணம், நகைகளையெல்லாம் ஏறிட்டும் பார்க்காமல் குகைக்குள் திரும்பிச் சென்றுவிட்டார்!

Saturday, February 12, 2011

உணவும் உடலுள்ளுறுப்பும்தக்காளியும் இதயமும்
தக்காளி இதயத்துக்கு இதமானது என்பது எல்லாருக்கும் தெரிந்த சங்கதி. தக்காளியை இரண்டாக வகுந்தால் அதில் நான்கு  அறைகள் இருப்பது தெரியும். நம் இதயமும் நான்கு அறைகள் கொண்டதுதான். தக்காளியில் உள்ள லைக்கோபெனி என்ற சத்து இதய நோய் வராமல் இருக்க உதவுகிறது. கேன்சரை தடுப்பதிலும் இந்த சத்துக்கு பங்கு உண்டு. அமெரிக்க பெண்கள் 40 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட சோதனையில் ரத்தத்தில் லைக்கோபெனி சத்து அதிகமிருந்த பெண்களுக்கு அச்சத்து குறைவாகக் காணப்பட்ட பெண்களைவிட  இதயநோய் வருவதற்கான சாத்தியக்கூறு 30 சதவிகிதம் குறைவு எனத்தெரிய வந்திருக்கிறது.

கண்ணும் கேரட்டும்

கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

வால்நட்டும் மூளையும்.
வால் நட் பருப்பின் உள்கட்டமைப்பைக் கண்டால் நம் மூளையைப் போலுள்ளது. நம் நினைவுத்திறனை அதிகப்படுத்த உதவும் ஒமேகா-3 வால்நட்டில் அதிகமுள்ளது. வால்நட்டில் உள்ள புரதச்சத்து அல்சீமர் நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. வயதானாலும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவேண்டுமானால் வால்நட் பருப்பின் துணை நமக்கு  வேண்டும்.

சீஸ் கட்டியும் எலும்பும்.
சீஸ் நம்முடைய எலும்பு உறுதியாக இருக்க உதவும். சீஸ்ஸின் அமைப்பு நம் எலும்பின் உள் அமைப்பை போலிருப்பது ஆச்சரியமான உண்மை. உறுதியான எலும்பிற்கு தேவையான கால்ஷியம் சத்து சீஸ்ஸில் நிறைய இருக்கிறது. மேலும் இதிலுள்ள பாஸ்பேட் சத்தும் நம்முடைய எலும்பின் உறுதிக்கு உறுதுணையாக இருக்கிறது. அத்துடன் எலும்பைச் சார்ந்த தசையின் உறுதிக்கும் இது உதவுகிறது. கால்ஷியம் சத்து நிறைந்த சீஸ்ஸை அவ்வப்போது நம் உணவில சேர்த்துக் கொள்வது உறுதியான எலும்புக்கு 
உத்தரவாதம் தரும்.

இஞ்சியும் வயிறும்.
இஞ்சி யின் அமைப்பு நம் வயிற்றின் உள்பகுதியை ஒத்திருக்கிறது. இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் இஞ்சி வயிற்றோடு சம்பந்தப்பட்ட அஜீரணத்தை ஒழிக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது என்பது. வயிற்றுக்கோளாறு மற்றும் தூக்கமின்மையைத்  தீர்க்கும் வல்லமைமிக்க இஞ்சியை சீனர்கள் 2 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சி மலச்சிக்கலையும் தீர்த்து வைக்கும். வயிற்றில் கட்டிகள் உருவாகாமல் இருக்கவும் இஞ்சி உதவுவதாக ஆராய்ச்சிகள் 
தெரிவிக்கின்றன.

வாழைப்பழமும் வாயும்.


வாழைப்பழத்தை வாயில் வைத்து சுவைத்தபடி சந்தோஷமாக ஒரு சிரிப்பு சிரியுங்கள் பார்க்கலாம். வாழைப்பழம் மனஅழுத்தத்தை தீர்த்து வைக்கும் மாமருந்தாம். வாழைப்பழத்தால் வாய்ப்புண் ஆறும்.இதில் உள்ள ட்ரைப்டோபான் என்ற புரதச்சத்து செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த செரோடோன் தான் நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவில் முக்கிய பங்காற்றுகிறது. மனநிலையை மாற்றுவதில் உதவும் முக்கிய அமிலங்களில் இது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மன நலத்திற்கு அளிக்கப்படும மருந்துகளில் செரோடோனின் உற்பத்தியை கூட்டும், குறைக்கும் அமிலங்கள் தான் உள்ளன. எப்போதும் அமைதியாக, சந்தோஷமாக இருக்கவேண்டுமானால் வாழைப்பழத்தை தவறாமல் 
சாப்பிடுங்கள்.காளானும் காதும்

காளானை பாதியாக வெட்டினால் கிடைக்கும் பகுதி நம் காதை போல் இருக்கும். நம்முடைய உணவில் காளானின் பங்கை அதிகமாக்கினால், நம்முடைய கேட்கும் திறனும் அதிகரிப்பது நிச்சயம். அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள வைட்டமின் ‘டி’ சத்து காளானில் அதிகமிருக்கிறது. வைட்டமின் ‘டி’ யின் உதவியில்லாவிட்டால் நம்முடைய 
காதுக்கு சங்கு ஊத வேண்டியதுதான்.

ப்ரோக்கோலியும் புற்றுநோயும்ப்ரோக்கோலி கிட்டத்தட்ட காலிஃப்ளவர் போல் இருக்கும். இதன் மேற்பகுதியை உற்று நோக்கினால் நூற்றுக்கணக்கான புற்றுநோய் செல்கள் கூடி கும்மாளவிடுவதுப் போல் இருக்கும். என்ன ஆச்சரியம் ஆளை அமுக்கும் புற்றுநோயை அமுக்குவதில் இந்த ப்ரோக்கோலி முக்கியப் பங்காற்றுகிறதாம். பிரிட்டனில், ப்ரோக்கோளி பயன்பாட்டால் புற்றுநோய் வருவது 45 சதவிகிதம் குறைகிறதாம்.

நுரையீரலும் திராட்சையும்

நம்முடைய நுரையீரல் சின்ன சின்ன காற்றறைகள் கொண்டது. இவை குறிப்பிட்ட தசைகளோடு ஒன்றிணைபவை.. இது ‘அல்வியோலி’ எனப்படுகிறது. இவற்றின் வழியாகத்தான் ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இதேபோன்ற அமைப்பில் தான் திராட்சையும் தோற்றமளிக்கிறது. குறைபிரசவ குழந்தைகளுக்கு சுவாசப்பிரச்னைகள் ஏற்படும். காரணம் அல்வியோலி அறைகள் உருவாக 23 ல் இருந்து 24 வாரங்கள் பிடிக்கும். திராட்சை மற்றும் பழங்களை நாம் அதிகம் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோய் மற்று்ம் எப்ஸிமா நோய் வராமல் தடுக்கலாம். அலர்ஜியால் ஏற்படும ஆஸ்துமாவின் தீவிரத்தை திராட்சைக்கொட்டையில் உள்ள ‘ப்ரோந்தோசைனடின்’ என்ற அமிலம் குறைக்கிறது.

Friday, February 11, 2011

உடல் வலியா? கவளி வர்மமும் ,444 ம்- தெரிந்து கொள்வோமா?


செங்கோட்டை கிருஷ்ணன் வாத்தியார்.

கரையான் குழி(நாகர்கோவில்), டேவிட் ஆசான்.

குன்னிக்கோடு பாஸ்கரன் நாயர்.


இவர்கள் மூவரும் எனக்கு வர்மம் கற்றுக்கொடுத்த குருமார்கள். இவர்களுள் கிருஷ்ணன் தாத்தா எனக்கு வர்மத்துடன் சிலம்பமும் கற்றுக்கொடுத்தார். இப்போது இவர்கள் மூவருமே நம்முடன் இல்லை. இந்த ஜென்மத்தில் எனக்குக் கிடைத்த பொக்கிஷம் இந்த குருமார்கள். மனித உடற்கூறு ரகசியத்தை கல்லூரி சென்று படிக்காமல் சுயமாகவே உணர்ந்து கொண்ட "சுயம்பு" இவர்கள்.


சகோதரரின் சிகிச்சைக்காகத்தான் , டேவிட் ஆசானைப் பார்க்க போயிருந்தோம். எனது ஆர்வத்தைக் கவனித்து, அவராகவே வர்ம மருத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார். அது எனது பாக்கியம்.

ஒருமுறை அவருடைய வைத்தியசாலைக்கு, 
ஒரு பெண் தன்னுடய சிறு குழந்தையைக் கொண்டு வந்து, "குடல் ஏறி" இருப்பதாகக் கூறினார். 

ஆசான், அந்தக் குழந்தையின் பெரு விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையிலுள்ள இடத்தில் தனது விரல்களால் பரிசோதித்த பின் "குடல் தட்டி விட்டார்".
வழக்கமாக நாடிப்பரிசோதனை செய்யும் இடத்திலில்லாமல் இந்தக்"குறிப்பிட்ட" இடத்தில் பரிசோதனை செய்ததைப் பற்றி ஆசானிடம் கேட்டபோது ,இந்த இடத்தில் தான் பெருங்குடலின் சக்தி, மையம் கொள்வதாகக் கூறினார் .

நண்பர்களே! இந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஒரு வர்மம் இருக்கிறது. இதற்கு"கவளி வர்மம்" என்று பெயர். (பொதுவாகவெற்றிலைக்கட்டிற்கு,வெற்றிலைக்கவளி எனப்பெயர். கட்டை விரலுக்கும், மற்ற நான்கு விரல்களுக்கும் இடைப்பட்ட இடத்தில் எவ்வளவு வெற்றிலை பிடிக்குமோ அந்த அளவிற்குத்தான்  வெற்றிலைக்கட்டு இருக்கும்").

கவளி என்றால் என்ன பொருள் தெரியுமா?

க+வளி. அதாவது கவனிக்கப்படவேண்டிய வளியாகிய(வளி என்றால் காற்று) அபான காற்று.


கவளி வர்மம் என்பது, மனித உடலில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய அபான வாயு மையம் கொண்டுள்ள வர்மம்,இந்தக் கவளி வர்மத்தின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?. மனித உடலிலுள்ள வர்மங்களை இளக்க, முதலில் இந்தக் கவளி வர்மத்தை இளக்கினால் போதும். நாடி பரிசோதனைக்கு முன் இந்த கவளி வர்மத்தை இளக்கினால் நாடிகளைத் துல்லியமாகக் கணிக்கலாம்.
பின்னாளில் அக்குபஞ்சர் படித்தபோது ஒரு ஆச்சர்யம்!


அட! நம்ம கவளி வர்மம் தான், LI 4அக்குபஞ்சரில், இந்த LI 4 ன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?


உடலிலுள்ளக் கழிவுகளை வெளியேற்ற இந்த LI 4 ஒரு முக்கியப்புள்ளி. வாயுவால் வரக்கூடிய வலிகளில் இருந்து நிவாரணம் பெற இந்த LI 4 ஐ தூண்டினால் போதும்.

வாய்வுக்கோளாறுகளைத் தீர்க்க இந்த LI 4 ஒரு முக்கியப் புள்ளி.

மருத்துவ யோக முத்திரைகளில், வாயு முத்திரையும் வாய்வு நோய்களுக்கு முழு நிவாரணம் தரக்கூடியதுதான். இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், வாயு முத்திரை செய்யும்போதும் இயக்கப்படுவதும், இந்த "கவளி' வர்மமே.அக்குபஞ்சர் மருத்துவத்தில் 444 என்பது பிரசித்தம். அதாவது LI 4 ம் ST 44 ம் சேர்ந்து 444 என வழங்கப்படுகிறது. உடல் வலியோ, சோம்பலோ அதிகமாக இருக்கும் போது இந்த இரு புள்ளிகளிலும் அழுத்தம் கொடுங்கள். இந்த ST 44 என்பது வயிற்றுப் பாதையிலுள்ள water point.
                                                                                                                                      
என்ன? வலி போயிந்தியா!!!!!!!?

                                                                                                                                                                                                                                    இன்னும் சில அக்கு
புள்ளிகளுடன் பின்பு சந்திக்கிறேன்.