Total Pageviews

Sunday, February 27, 2011

ராஜ யோக யாத்திரை- ஸ்ரீ ஐயப்ப வழிபாடு


யோகிகள் தனக்குள் தேடிக்கண்டுகொண்ட இறை அனுபவத்தைச் சாமான்யர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற கருணையால் கோவில்களை உருவாக்கினர். அந்தக் கோவில்களுக்கு வருபவர்களுக்கெல்லாம் இயல்பாகவே இறை அனுபவம் சித்திக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான வெளிச்சூழ்நிலையைக் கோவில்களில் உண்டாக்கினர்.

     பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா போன்ற ஏழு சிரஞ்ஜீவிகளில் ஒருவரான பரசுராமர், தான் கற்றறிந்த யோக வித்தையைத் தனது மாணவர்களுக்குக் கற்றுத்தருவதற்கானக் களமாக மேற்குத்தொடர்ச்சி மலையைத் தேர்வு செய்தார். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏழு இடங்களில் பயிற்சிக் களங்களை ஏற்படுத்தி யோக தவத்தால் தனக்குக் கிடைத்த பிராண சக்தியை இந்த ஏழு இடங்களிலுள்ள சாஸ்தாகோவில்களில் பிராணப் பிரதிஷ்டையாக்கியுள்ளார். இந்த கோவில்களே ஐயப்பனுக்கான முக்கிய கோவில்களாகப் போற்றப்படுகிறது.. இந்தக் கோவில்கள் எல்லாம் ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.


யோக பாடத்தில், மனித உடலிலுள்ள யோகச்சக்கரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் போற்றப்படுகிறது.  இந்த ஏழு யோகச்சக்கரங்களே ஒரு மனிதனின் உடல் நிலையையும் மனநிலையையும் நிர்ணயிக்கிறது. 


உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்பதிற்கிணங்க, உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் விழிப்படையும் வகையில் வெளிச்சூழ்நிலையை உருவாக்கி அதனை ஏழு கோவில்களாக வடிவமைத்தனர் யோகிகள். அந்த வகையில் சிவனுக்கானச் சக்கரக் கோவில்கள் ஏழு. அவை முறையே, மூலாதாரம் - திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் - திருவண்ணாமலை, அனாகதம் - சிதம்பரம், விசுத்தி - காளத்தி, ஆக்ஞை - காசி, சஹஸ்ரகாரம் - கைலாசம்.

அதுபோல ஐயப்பனுக்கும் ஏழு சக்கரக் கோவில்கள் யோகி பரசுராமரால் உருவாக்கப்பட்டது. அவை முறையே மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன் கோயில், மணிபூரகம் - ஆரியங்காவு, அனாகதம் - குளத்துப்புழை, விசுத்தி - பந்தளம், ஆக்ஞை சபரிமலை, சஹஸ்ரகாரம் - காந்தமலை. இந்த வகையில் சபரிமலை சாஸ்தாவுக்கு முதல் முதலில் கோயில் தோன்றியதாக கூறப்படுவது பாபநாசத்திலுள்ள சொரிமுத்தையனார் கோயில் ஆகும். இந்த மூலாதாரக் கோவிலிலுள்ள பிராண சக்தியைக் கிரஹித்தால் மட்டுமே பிற கோவில்களில் உள்ள சக்தியையும் அனுபவிக்கமுடியும். தாமிரபரணியில் நீராடி இந்தக் கோவிலில் தியானம் செய்தால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் என்பதும்,சுவாச சம்பந்தமான வியாதிகள் விலகும் என்பதும் யோக ரகசியம்.

அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில்

அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்தத் தலம் அமைந்துள்ளது. அச்சத்திற்குப் பஞ்சபூதத் தத்துவத்தின்படி நீர் பூதமே காரணமாகிறது. நீர் பூதத்தை வைத்து வேலை செய்யக்கூடிய சிறுநீரகமே பய உணர்விற்குக் காரணமாகிறது. இந்தக் கோவிலில் தியானம் செய்தால் சிறுநீரகம் சக்தியடைந்துப் பய உணர்வு குறையும். 

ஆரியங்காவு

ஐயப்பன் கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இந்தத் ஸ்தலம் நெருப்புப் பிராண சக்தியை உள்ளடக்கியது.இந்தக் கோவிலில் தியானம் செய்தால் தடைபட்டத் திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பதும் கண் சம்பந்தமான வியாதிகள் தீரும் என்பதும் யோக ரஹஸ்யம்.

படிப்பு தரும் குட்டி சாஸ்தா

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் காற்று பிராண சக்தியை உள்ளடக்கியது. இங்கு தியானம் செய்தால் நுரையீரலுக்கு சக்தி கிடைக்கிறது. நுரையீரலே புரிந்து கொள்ளும் தன்மைக்கு பொறுப்பாகிறது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை. இங்குள்ள கல்லடையாறு என்னும் புனித நதியில் குளித்து,தியானம் செய்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பதோடு ஒவ்வாமை நோய்களும் தீரும் என்பது யோக ரஹஸ்யம்..

ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித உடலை இயக்குபவை வாத, பித்த கபங்களே. இந்த திரிதோஷங்களும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும்.. இந்த விகிதாச்சாரம் சம நிலையில் இல்லாமல் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. திரிதோஷங்களை சமப்படுத்தும் மூலிகைகள் எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன.

வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதா நதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோகத்தைச் சமப்படுத்தக்கூடிய மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன.

சபரி மலை யாத்திரையில் மேற்படி மூலிகைகளின் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் நிறைந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலை உடலில் பூசிக்கொள்வதாலும் நோய்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள்


சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18படிகள்.இருமுடிகட்டியவர்கள் மட்டுமே 18 படிகளில் ஏறத் தகுதிடையவர்கள். யோகத்திலும் இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளையும் கட்டத்தெரிந்தவர்களால் மட்டுமே 18 வகையான சுவாச ஓட்டங்களையும்( 18 சுவாச கதி)உணரமுடியும். இந்த 18 வகையான சுவாச ஓட்டங்களையும் உணர்ந்தவரே யோகத்தில் குருசாமி எனப்படுகிறார்

18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு , சரணாகதியாகப் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும். கடுத்து, கருப்பு என்பதெல்லாம் "காற்றின்" வேறு வேறு பெயர்கள். சரம் என்றால் மூச்சு எனப்பொருள்(மூச்சுக் கலைக்கு சரக்கலை எனப் பெயருண்டு).கதி என்றால் நிலை எனப்பொருள்.

யோக சரணாகதி என்றால் மூச்சை நிலைப்படுத்துதல் என்றே பொருள்

"தத்வமஸி':

ஐயப்ப சன்னிதான வாசலில் "தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ""ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன்'' என்பது இந்தச்சொல்லுக்குள்
அடங்கியுள்ள தத்துவம். 

ஐயப்பனின் 4 ஆசனங்கள்:

தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரையிலும், கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராண முத்திரையிலும், குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கறார். இப்படி நான்கு வித ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஸ்வாமி ஐயப்பன் மட்டும் தான்.

ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது, சுவாச பந்தத்தையே குறிக்கிறது.யோக பாடத்தில் கால் என்றால் மூச்சு என்று பொருள். ஐயப்பன், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார்(மூலபந்தம்). மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.

யோகாசன நிலையில் , வயிற்றை உள்ளிழுத்து (உட்டியானபந்தம்), மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்தக் கிரியா சக்தியை ஞான சக்தியாக மடைமாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் (நயன தீட்ஷை) நிலையில் இருப்பதால் தான், கலியுகத்தில் இவ்வளவு அதிகமானப் பக்தர்களைத் தன்பக்கம் ஈர்க்கமுடிகிறது.சாமான்ய மனிதனும் சாமியாகும் ராஜ யோக வழிமுறையே ஐயப்ப வழிபாடு.

"சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்"

1 comment:

suganya shankar said...

Namaskaram Sir

I am not sure if this question is appropriate to ask you. Why is it only males are allowed to visit Lord Ayyapan?

Shankar Ganesh

Post a Comment