Total Pageviews

Monday, January 28, 2013

பசித்திரு.....


"௧டை விரித்தேன் கொள்வாரில்லை " என ஒரு மகான் சொன்னாரே அவர் யாருன்னு உனக்குத் தெரியுமா?.


"ஓ......தெரியுமே......நம்ம வள்ளலார்...!"


"வெரிகுட்....வள்ளலார் சொன்ன எதாவது ஒரு விசயத்தை சொல்லு பார்க்கலாம்."


"தனித்திரு,விழித்திரு,பசித்திரு"


"வெரிகுட்...வெரிகுட்...பசித்திருன்னு வள்ளலார் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?”

“அதுவும் தெரியும், .....நீங்க என்ன சொல்லப் போறேங்கன்னும் தெரியும்”

“ஒண்ணொண்ணா சொல்லு”

“பசித்திருன்னா ........அறிவார்ந்த விஷயங்களுக்காகப் பசித்திருன்னு அர்த்தம்”

“சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்?”

“பசித்திருன்னா எதையாவது தின்னுகிட்டே இருன்னு அர்த்தமில்லைன்னு சொல்ல வந்தீங்க”

“தப்பு. நான் சொல்ல வந்தது அது இல்லை”

“சரி, நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க"

“இப்போ, நீ பசியா இருக்கே. யாராவது சாப்பிடக் குடுக்கறாங்க. என்ன ஆகும்?”

“இது என்ன கேள்வி, பசி ஆறும்”

“அப்புறம் பசிக்கவே பசிக்காதா?”

“அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே. சாப்பிட்டது ஜீரணமானா திரும்பப் பசிக்கும்”

“ஜீரணம் ஆகல்லைன்னா?”

“ஆகல்லைன்னா வயித்தை வலிக்கும், வயித்தால போகும் சில சமயம் ஜுரம் கூட வரும். மூணு நாலு நாளைக்கு எதுவும் சாப்பிடவே முடியாது”

“எப்ப அந்த மாதிரி ஆகும்?”

“தப்பான உணவைச் சாப்பிட்டா அப்படி ஆகும்”

“சீக்கிரம் ஜீரணமாகிற உணவைச் சாப்பிட்டா?”

“அஞ்சாறு மணி நேரத்தில் ஜீரணமாகி மறுபடி பசிக்கும்”

“அது மட்டும்தானா?”

“சரி, சக்கையெல்லாம் வேஸ்டா மாறி வெளியேறும். அப்படி வெளியேற வெளியேற மறுபடியும் பசிக்கும்”

“அதாவது தப்பான உணவைச் சாப்பிடக் கூடாது. சரியான உணவைச் சாப்பிட்டாலும் சக்கை வெளியேறணும். அப்பத்தான் மறுபடி பசிக்கும், திரும்ப சாப்பிடலாம்; அப்படித்தானே?”

“பெரிய்ய கண்டு பிடிப்பு............அப்படித்தான்”

“அப்போ அறிவுப் பசிக்கும் "சத்"தான,அறிவார்ந்த விஷயங்களைத்தான் சாப்பிட்டுப் பசியாறணும். அதுலயும் சக்கைகள் இருக்கும்; அதை வெளியேற்றி "சத்"தை மட்டும் வெச்சிக்கணும். அப்பத்தான் மறுபடியும் பசிக்கும். தப்பான விஷயங்கள்,ஜீரணமாகாம நமக்குத் தொந்தரவு தர்றது மட்டுமில்லை, மேலும் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதையும் தாமதப்படுத்தும். சரிதானா?”

“அட.. பசித்திருங்கிற வார்த்தையில இவ்வளவு விஷயம் இருக்கா?”

“இன்னும் கூட இருக்கு”

“என்னது?”

“பசித்து + இரு"....ன்னு அர்த்தம் எடுத்தா இந்த அர்த்தம். பசி + திரு .....ன்னு அர்த்தம் எடுத்தா இன்னொரு அர்த்தம்”

“அதென்ன?”“திரு"ன்னா செல்வம். பசியே ஒரு செல்வம். வேளா வேளைக்குப் பசிக்கிறதே ஒரு செல்வம். பசியே இல்லைன்னு தவிக்கிறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா?”


"எவ்வளவுதான் ஆத்ம விசயங்களைக் கேட்டாலும் ...அது சரியாய் ஜீரணிச்சு மேலும்..மேலும் ஆத்ம பசி ஏற்படணும் இல்லைனா அஜீரணம் ஏற்பட்டு....மனம் விட்சேபமாகி....தமோ குணத்தில் மறுபடியும் தள்ளிவிடும்"


“சூப்பர்….மாஸ்டர்”


“என்ன தேடறே?”


“உங்க பின்னாலே ஒளிவட்டம் தெரியுதான்னு பார்க்கறேன்”


“ஆக்ச்சுவலா ஒளி ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?”


“ஐய்யய்யோ… போதும் மாஸ்டர் இன்னைக்கு இது போதும்; இது ஜீரணிச்சு மறுபடி பசிக்கிறப்போ....மறுபடி வர்றேன்..”

Tuesday, January 22, 2013

நான் இறந்து போயிருந்தேன்.....நான் இறந்து போயிருந்தேன்...

நாற்பது மூன்று வருடம்
யோகம் செய்து பாதுகாத்த உடம்பு
அசைவற்றுக் கிடக்கிறது.


நான் என்பது தொலைந்து
"
அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..

மெல்ல தகவல்
பரப்பப் பட்டது.
தங்கள் பயணத்திட்டங்களை
மாற்றி என் இறுதிப் பயணத்திற்காக
குவிந்தனர்.

காற்றில் அசைந்த
சாமியானாவில் காத்திருந்த
மனிதர்களுக்கு
"
வரக்காப்பி"
வழங்கப்பட்டது.

நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
அப்போது கூட
அவர்கள் மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கிறதென
என்னால்
கணிக்க முடியவில்லை.

பலர் பரபரப்பாக
நடமாடிக்கொண்டிருந்தனர்.
சிலர் மணி
பார்க்கத்துவங்கியிருந்தனர்..

என் கால் மாட்டில்
மனைவி மயங்கிக்கிடக்கிறாள்.
மகன் செய்வதறியாது கண்ணீர் மல்க..


சேதி கேட்ட என் தங்கை
விமானம், ரயில் என மாறி மாறி
பயணித்து
வந்து கொண்டிருக்கிறாள்.

எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்

கொஞ்சம் சீக்கீரம் எடுத்தா
பரவாயில்லை…….”

இப்படியாய்….
இன்னுமாய்….
எந்த வித
நிகழ்வுகளையும்
உருவாக்காமல்
யாருக்கும்
சிரமமின்றி….


எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை
 

Thursday, January 17, 2013

பகவான் பேசுகிறார் -1கே: ஸர்வவியாபியான ஈசுவரனைக் காண்பதெப்படி?

ப: கடவுளைக் காண்பதென்பது கடவுளாயிருப்பதே. வியாபித்தற்கு அவருக்கு அன்னியமாக ‘எல்லாம்’ என்பது இல்லை. அவரே இருக்கிறார்.

கே: நான் சரணாகதி அடைந்தால் ஈசுவரனை வேண்டுதல் தேவையில்லையா?

ப: சரணாகதியே மகத்தான பிரார்த்தனை.

கே: ஆனால் சரண்புகு முன் அவரது தன்மை இன்னதென்று அறிய வேண்டாமா?

ப: நீ விரும்புவதையெல்லாம் ஈசன் உனக்காகச் செய்வாரென்று நம்பினால், நீ உன்னை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் அவரைச் சும்மா விட்டு விடு.

கே: யோகிக்குப் பூர்வஜன்மமெல்லாம் தெரியுமா?

ப: இந்த ஜன்மத்தைப் பற்றி முதலில் உனக்குத் தெரியுமா? பூர்வஜன்மமெல்லாம் தெரியவேண்டுமென்கிறாயே! இந்த ஜன்மத்தைப் பற்றிய உண்மையை இப்பொழுது தெரிந்துகொள்; மற்ற ஜன்மங்களைப் பற்றிய உண்மையெல்லாம் தானே தெரியும். இப்போதுள்ள இச்சிற்றறிவை வைத்துக் கொண்டே இவ்வளவு கஷ்டப்படுகிறாய். இன்னும் அதிக அறிவை மனத்தில் ஏற்றிக் கொள்வானேன்! இன்னும் அதிகக் கஷ்டப்படவா?கே: படித்தவனுக்குக் குருகிருபை தேவையில்லாததால் அவன் ஞானோதயத்துக்கு விசேஷ யோக்கியதையுடையவனல்லவா?

ப: படிப்பற்ற ஞானியின்முன் பண்டிதனும் பணிய வேண்டியதுதான். எழுத்து வாசனையில்லாதது அறிவின்மைதான். படிப்போ, கற்றும் அறிவின்மை. இரண்டு பேரும் உண்மை லக்ஷியத்தை அறிந்தவரல்லர். வேறோர் விதத்தில் ஞானியும் அறியாதவனே; ஏனென்றால் அவனுக்கு ஒரு லக்ஷியமுமில்லை.

கே: ஆத்ம ஞானமடையக் குரு உதவி செய்வாரா?

ப: குரு உன் கையைப் பிடித்துக்கொண்டு காதில் ஓதுவாரா? நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே அவரும் இருப்பதாக நீ எண்ணிக் கொள்ளலாம். உனக்கு உடம்பிருப்பதனால் அவருக்கும் உடம்பிருக்கிறதென்றும் உனக்கு அவர் ஏதோ பிரத்தியக்ஷ அனுகூலம் செய்வாரென்றும் நீ கருதுகிறாய். ஆனால் அவர் வேலை அந்தரங்கத்தில் ஆத்ம சம்பந்தமானது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

பகவான் பேசுகிறார் 2 (உண்மையான ஜெயந்தி)
ரமணபகவான் ஸ்கந்தாச்ரமத்தில் இருந்த காலம் .பகவான் யாரையும் தனது சீடர்கள் என யாரையும் அறிவித்தது இல்லை. ஒருசில பக்தர்களே அவருடன் இருந்தனர். பல நாட்கள் உணவே கிடைக்காது. சிலநாள் பிக்ஷையெடுக்கச் செல்வர். அன்று பிக்ஷையில் என்ன கிடைத்ததோ அந்த அளவுதான் அனைவருக்கும் உணவு. குஞ்சு ஸ்வாமி முதலான பக்தர்களோ 19, 20 வயதுள்ள இளைஞர்கள். பிக்ஷையெடுத்துக் கிடைக்கும் உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் பகவான் அந்த உணவில் நிறைய தண்ணீர் விட்டு கஞ்சி போலக் காய்ச்சி எல்லோருக்கும் கொடுப்பார். சில நாட்களில் காஞ்சியில் தண்ணீர் அதிகமாகி உப்பு கம்மியாகிவிடும், உப்பும் குறைவாகவே இருக்கும் ஆளுக்கொரு உப்புக்கல்லைக் கையில் வைத்துக்கொண்டு அந்தக் கஞ்சியை  உண்டு அவர்கள் மன நிறைவுடனே அங்கு வாழ்ந்து வந்தனர்.


ஒருநாள் வசதி மிகுந்த ஈசானிய மடம் திருஞான சம்பந்தரின் ஆராதனை விழா கொண்டாடப் போகிறது என்று அறிந்த பக்தர்கள், விழாவையும் அங்கு கிடைக்கப் போகும் விருந்தையும் முன்னிட்டு மலையிலிருந்து இறங்கி ஈசானிய மடத்துக்குப் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். ரமணரிடமும் அது பற்றிக் கூறினர். 

உடனே ரமணர், “ஒரு ஞானியின் ஆராதனை நாளை எப்படிக் கொண்டாடுவார்கள்?” என்று கேட்டார். 

“சம்பந்தரின் சிலைக்குப் பூசை, தீபாராதனை செய்வித்த பின் அருமையான விருந்து எல்லோருக்கும் கிடைக்கும்” என்றனர் பக்தர்கள்.

இதைக் கேட்ட பகவான், குஞ்சு ஸ்வாமியிடம் தேவாரப் புத்தகத்தை எடுத்து வருமாறு பணித்தார். 

அவர் அதைக் கொணர்ந்ததும் அனைவரும் வரிசையாக அமர்ந்து நூற்றுக் கணக்கான தேவாரப் பதிகங்களைப் படிக்க ஆரம்பித்தனர். நேரம் மதியம் கடந்து, மாலையானது. யாருக்கும் பசி உணர்வே எழவில்லை. களைப்பும் தெரியவில்லை.

இறுதியில் பகவான் ரமணர் “பிறப்பும் இறப்பும் கடந்த ஒரு ஞானியின் பிறந்த தினத்தையோ (ஜயந்தி), மறைந்த தினத்தையோ (ஆராதனை) கொண்டாடுவது எப்படியென்றால் அவரது உபதேசங்களை நினைவு கூர்வதுதான். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன உபதேசித்தார் என்பனவற்றை நினைவு கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ஆராதனை” என்றார்.

பக்தர்களும் உண்மை உணர்ந்தனர். மகிழ்ந்தனர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

Friday, January 11, 2013

வாழ்க்கைச்சுவடு


இன்று,இந்த நடுநிசியில் பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்.....மரணம் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டது....இந்த விஷயம் தெரிந்த மறுநிமிடம் உடலும் மனமும் பர பரத்தது. அவன் உயிர் அதன் கூட்டுக்குள் சிறகை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டது.இத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது. பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.

இனி? .........

அவனுக்கான மணித்துளிகள் இவை எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல் கரைந்து கொண்டே இருந்தன... 43 வருடங்களை இப்படி ஒன்றுமே இல்லாமலா கரைத்துவிட்டேன் என்று அவன் மனம் குற்றம் சாட்டியது...திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் இந்திரா,அழகாகச் சிரித்துப் பேசும் அசோக்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,பத்தாம் வகுப்பு பிரிவு விழா,முதல் பாராட்டு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... இரண்டாவது எதுவுமே நினைவுகளின் விளிம்புகளில் எப்படி ஒன்றுமில்லாமல் கரைந்து போயின?

இப்படி சம்பந்தமில்லாமல் மனம் தாவிக் கொண்டேயிருந்தது......

மனம்...... உடனடியாகச் சுவடுகளைப் பூமியில் பதிக்க குறுகிய காலத் திட்டம் போட்டது. முதல் வேலை மனத்தில் நினைவுகளின்  சேகரிப்பா? பணச் சேகரிப்பா?உறைந்திருந்த உயிர் திடீரென்று விழித்துக் கொண்டது.

அதுவா? இதுவா?எல்லாமேவா?

நாளை முதலில் எதைச் செய்வது?

உறவுகளைப் பார்த்து எத்தனை நாளாகிறது? ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறது?எங்கே என் மகன்??? கண்விழிக்கட்டும் உன்னைக் கன்னத்தோடு உரசி இறுக்கிக் கொள்கிறேன்....வாழ்க்கைத் துணையின் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறது???என்னவளே!!! நாளை பார்....உன்மேல் அன்பு மழை கொட்டப் போகிறேன்....என நினைத்துக் கொண்டான்

சில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானே????ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்??? காலத்தின் அருமை புரியவில்லையா?...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே????எனக் கவலைப் பட்டான்.

இந்த சுவாசம் இன்றே கடைசியோ??ஏன் இப்படி மூச்சு வாங்குகிறது?கண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றன? கடவுளே இன்னும் ஒரே ஒரு நாள் கொடு...தொலைத்த நொடிகளையெல்லாம் அந்த ஒரு நாளில் வாழ்ந்து முடித்துவிடுகிறேன்.....என வேண்டிக் கொண்டான்....அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்..... 

யார்மேலும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி இன்னும் ஒரே ஒரு நாள் அதிகம் கொடுக்காதக் கடவுளிடம் மட்டும் கோபித்துக் கொண்டே அந்த உயிர்ப் பறவைத் தன் சிறகுகளை உதிர்த்துவிட்டுத் தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......

இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....

நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன, இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????
"நான்" யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்..........நீங்கள்?????/