Total Pageviews

Thursday, January 17, 2013

பகவான் பேசுகிறார் 2 (உண்மையான ஜெயந்தி)




ரமணபகவான் ஸ்கந்தாச்ரமத்தில் இருந்த காலம் .பகவான் யாரையும் தனது சீடர்கள் என யாரையும் அறிவித்தது இல்லை. ஒருசில பக்தர்களே அவருடன் இருந்தனர். பல நாட்கள் உணவே கிடைக்காது. சிலநாள் பிக்ஷையெடுக்கச் செல்வர். அன்று பிக்ஷையில் என்ன கிடைத்ததோ அந்த அளவுதான் அனைவருக்கும் உணவு. குஞ்சு ஸ்வாமி முதலான பக்தர்களோ 19, 20 வயதுள்ள இளைஞர்கள். பிக்ஷையெடுத்துக் கிடைக்கும் உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் பகவான் அந்த உணவில் நிறைய தண்ணீர் விட்டு கஞ்சி போலக் காய்ச்சி எல்லோருக்கும் கொடுப்பார். சில நாட்களில் காஞ்சியில் தண்ணீர் அதிகமாகி உப்பு கம்மியாகிவிடும், உப்பும் குறைவாகவே இருக்கும் ஆளுக்கொரு உப்புக்கல்லைக் கையில் வைத்துக்கொண்டு அந்தக் கஞ்சியை  உண்டு அவர்கள் மன நிறைவுடனே அங்கு வாழ்ந்து வந்தனர்.


ஒருநாள் வசதி மிகுந்த ஈசானிய மடம் திருஞான சம்பந்தரின் ஆராதனை விழா கொண்டாடப் போகிறது என்று அறிந்த பக்தர்கள், விழாவையும் அங்கு கிடைக்கப் போகும் விருந்தையும் முன்னிட்டு மலையிலிருந்து இறங்கி ஈசானிய மடத்துக்குப் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். ரமணரிடமும் அது பற்றிக் கூறினர். 

உடனே ரமணர், “ஒரு ஞானியின் ஆராதனை நாளை எப்படிக் கொண்டாடுவார்கள்?” என்று கேட்டார். 

“சம்பந்தரின் சிலைக்குப் பூசை, தீபாராதனை செய்வித்த பின் அருமையான விருந்து எல்லோருக்கும் கிடைக்கும்” என்றனர் பக்தர்கள்.

இதைக் கேட்ட பகவான், குஞ்சு ஸ்வாமியிடம் தேவாரப் புத்தகத்தை எடுத்து வருமாறு பணித்தார். 

அவர் அதைக் கொணர்ந்ததும் அனைவரும் வரிசையாக அமர்ந்து நூற்றுக் கணக்கான தேவாரப் பதிகங்களைப் படிக்க ஆரம்பித்தனர். நேரம் மதியம் கடந்து, மாலையானது. யாருக்கும் பசி உணர்வே எழவில்லை. களைப்பும் தெரியவில்லை.

இறுதியில் பகவான் ரமணர் “பிறப்பும் இறப்பும் கடந்த ஒரு ஞானியின் பிறந்த தினத்தையோ (ஜயந்தி), மறைந்த தினத்தையோ (ஆராதனை) கொண்டாடுவது எப்படியென்றால் அவரது உபதேசங்களை நினைவு கூர்வதுதான். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன உபதேசித்தார் என்பனவற்றை நினைவு கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ஆராதனை” என்றார்.

பக்தர்களும் உண்மை உணர்ந்தனர். மகிழ்ந்தனர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

No comments:

Post a Comment