Total Pageviews

Friday, December 15, 2017

திருமந்திரத் தேன்துளி 1திருமூலர் பெருமான் திருமந்திர மாலையில்  கதை ஒன்றைச் சொல்லி ஆத்மா, உயிர் ஆகியிவற்றின் இடையேயுள்ள உறவு முறையை அழகாக விளக்குகின்றார். இரண்டு அன்னங்கள் ஓர் ஆற்றில் இருக்கின்றன. இரண்டும் ஒன்றையன்று ஆழமாக நேசிக்கின்றன. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. ஒன்று சீவன். மற்றொன்று சிவன். சிவனாகிய அன்னம் தான் வேறுபட்டது என்கிற உணர்வில் இருக்கும்பொழுது சிவத்தின் நிலையை அடையாது. ஆற்றங்கரை என்பது ஆற்று நீர். இரண்டு அன்னங்களும் ஆற்று நீரில் வாழ்கின்றன. சீவனாகிய அன்னம் நீரில் ஆனந்தமாய் நீந்தி அங்கும் இங்கும் சென்று மீன் போன்ற இரைகளைக் கவர்ந்து உண்கிறது. தன் செயலால் இன்பம், துன்பம் இரண்டினையும் நுகர்கிறது. சிவன் என்னும் மீன் நீரில் இருந்தாலும், உப்பு நீரில் வாழும் மீனின் உடலில் உப்பு ஏறாதது போல், தான் தானாய் இருந்து கொண்டு, எதனையும் நுகராமல், சீவ அன்னத்தின் செயல்களை சாட்சியாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சீவ அன்னத்திற்கு அருளால் பாதுகாப்பாக இருந்து விடுகிறது. சிவ அன்னத்திற்கு ஆற்று நீரின் நிலையாமை தெரியும். சீவ அன்னமோ நிலையற்ற வாழ்வை நிலையானதாகக் கருதிக் கொண்டிருக்கின்றது. தன் போக்கிலேயே போய்கொண்டிருந்தால், தனக்குத் துணையாக, தன்னைப் பிரியாதிருக்கும் சிவ அன்னத்திடமிருந்து பெறக்கூடிய பெரும்பயனை இழந்து விடுகிறது. குருவருளால் ஒருநாள் சீவனாகிய அன்னம் இந்தக் கலக்கத்திலிருந்து தெளிவடைந்து விடுகிறது. தான் தேடும் இரையைவிடத் தான் வாழும் இடத்தைவிட மேலான இன்பத்தையும், இடத்தையும் வழங்கும் பேராற்றலுடையது தன்னைப் பிரியாதிருக்கும் அன்னம் என்று தெளிந்து அதனை ஆதாரமாகக் கொள்கிறது. அடைதற்கரிய பேரின்பத்தை அடைகிறது. குருவின் திருவருளாலே இது நடைபெறகிறது.
"அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்
துன்னி யிரண்டுங் துணைப்பிரி யாதன்னந்
தன்னிலை யன்னந் தனியன்ற தென்றக்கால்
பின் மடவன்னம் பேறணு காதே". (திருமந்திரம் - 2006)

சீவனென்ன சிவனென்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவன் ஆயிட்டிருப்பரே

Sunday, July 2, 2017

திரி சூலம்
மனித சரீரத்தின் வெளிப்பாடே கோவிலிலுள்ள கோபுரமும், கொடிமரமும்,  ஒருவகையில்  நமது       புராணங்களும்,   இதிகாசங்களும்   உருவச்சிலைகளும் ,அவற்றிற்குத் தொடர்புடைய சமயச்சின்னங்களும், சரீரம், மனம் மற்றும்  உயிர் இவற்றோடு தொடர்புடையவையே,,,,,,,


.  

வெறுமனே கோவிலுக்குச் செல்வதோடு  நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு 
மறுஆய்வுக்கு உட்படுத்தி உண்மையை உணர வேண்டியது அவசியமாய் இருக்கிறது.அன்பு என்பது ஓர் அகஉணர்வு. உயிர்கள் மட்டுமே இந்த உணர்வை அனுபவிக்க முடியும். உயிராகிய சிவமும் இந்த அன்பும் வேறு வேறு அல்ல  அதனால்தான் "அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்" என்று சொல்லப்பட்டது ...........
 அகத்தில் அன்புபொங்க புறத்தில்  உடல் மூலமாக அது செயல்படுத்தப்படுகிறது.

வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை உயிர் அனுபவிக்கிறது.

ஆக அன்போ அல்லது அதற்கு அபரமான காமமோ,
 மாற்றான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
தோன்றி சரீரத்தின் மூலமாக செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது . இவை அனைத்துக்கும்    
சாட்சியாக ஆன்மா சாட்சியாக   "சும்மா' இருக்கிறது.

அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை உணர முடியுமா..?   சிவச் சின்னங்களில் ஒன்றான திரி சூலத் தத்துவத்தை  உணர்ந்து கொண்டால் உணர்வு உயிருக்குள் பயணிக்கும் உள்அனுபவத்தை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும்.


திரிசூலத்தைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.மனிதனின் ஆறறிவும் உடலில் ஒவ்வொரு புலனையும், பஞ்சபூதத்தையும் ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.

நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையைக் கேட்டல்)

ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.

ஆறாவது அறிவு எது-  அது பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர

அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்

செயல்படவில்லை.

இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
தொல்காபபியன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை.
மனதின் ஊடகம் மூளை.(இரண்டாவது மூளை; முதுகுத்தண்டு) மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான தலங்களிலிருந்து செயல்படுத்துகிறது.வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
இப்படிகூடச் சொல்லாம்
இடகலை-பிங்கலை-சுழுமுனை.

இந்த மூன்று முனைகளைக் குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.

இரண்டு முனைகள் வலதிடதாய் இருக்க நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது

என்ன செய்கிறோம்..?

phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?

இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.


திரிசூலத்தின் தலைப் பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் கிடைக்கிற அனுபவம் இன்பம் அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.


எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்உறுப்புகளுக்கு ஆணையிட- அங்கங்கள் அதை செய்யும்.


இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருக்கும் மூன்று மூளையையும் உடலின் அனைத்து உறுப்புகளோடும் இணைத்து வைத்திருப்பது நரம்பு மண்டலம்.

அந்த நரம்பு மண்டலம் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.

தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசாரப்

பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.

அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி

நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.

சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?

இதுவும் உடல் தத்துவமே.

உடுக்கையைப் பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள், தோலை வைத்து இறுக்கக் கட்டப்பட்டிருக்கும் விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல. வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும், இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.

இடது பக்கம் முழுவதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.

உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்

அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை

எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.(மணி என்றால் காற்று அதாவது நமது சுவாசம் எனப்பொருள்கொள்ளவேண்டும்)

அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு

நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.

நம் ஒவ்வொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.

நமக்குள் இருக்கும் நம்க்குச் சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..
.

Sunday, May 14, 2017

நாதம் என் ஜீவனே...

கோவில் என்பதை உலக வாழ்வை மட்டுமே மையப்படுத்திப் பார்த்து வருகிறோம். கோவிலைப் பொதுவாகப் பொருள்சார்ந்த புறவாழ்க்கைக்கான தளமாகவேப் பார்க்கிறோம். கோவிலை உலகம் கடந்த நிலையில் அகநிலை கொண்டும் கொஞ்சம் பார்ப்போம். பொதுவாகக் கோவிலை கர்ம சித்திக்கானக் கோவில், யோக சித்திக்கானது, ஞான சித்திக்கானது என வகைப்படுத்த வேண்டும். என்றாலும், கோவில்களுக்கான பொது அமைப்பைக் கொண்டு நாம் பார்க்கலாம். கோவிலுக்குள் நுழைவதை வான்வெளியில் நுழைவதாகப் பாவித்துக் கொள்வோம். துவக்கத்தில் ஒன்பது கோள்களைக்(நவகிரகங்கள்) கடக்கும் நாம் அவற்றுக்கு அடிப்படையான கதிரவனையும், சந்திரனையும் பார்க்கிறோம். பிறகு, அவற்றைக் கடந்திருக்கும் அண்டங்களையும், பேரண்டங்களையும் மண்டபங்களாகவும், பிரகாரங்களாகவும் பார்க்கிறோம். இறுதியாக நாம் பார்ப்பது கருவறை. கருவறை என்பது இருட்டான அறை. அதுதான் கோவிலின் முதன்மையான, முக்கியமான பகுதி. வெட்டவெளியையேக் கருவறை குறிக்கிறது. கருவறையில் நிகழும் வழிபாட்டைக் கவனிப்போம். தீபம் ஏற்றப்பட்டு உள்ளிருக்கும் சிலைக்குக் காட்டப்படுகிறது. அந்நேரத்தில் பூசை செய்பவர் மணியையும் ஒலிக்கிறார். வெளிச்சத்தில் நாம் அச்சிலையைப் பார்க்கிறோம். அதாவது நம்மால் காணமுடியாத வெட்டவெளியின் பெருந்தோற்றத்தைக் கண்டுகொண்டதானப் பரவசம் அங்கு சாத்தியப்படுகிறது. வெட்டவெளி, மணி ஒலி, தீப ஒளி எனப் பிரபஞ்சம் தாண்டிய பெருவேளிக்கே சென்று விட்டதாய் ஒரு பேருணர்வு. வழிபாட்டில் ஐம்பூதங்களும் மதிக்கப்பெறுவது நம் கலாச்சாரத்தின் சிறப்பம்சம். வழிபாட்டின்போது தரப்படும் திருநீறு, மற்றும் திருமண்(மண் பூதம் ), தீர்த்தம்(நீர்பூதம்), சாம்பிராணி மணம் ( காற்று பூதம்) மலர்கள் மற்றும் திருவமுது போன்றவற்றைக் கவனிப்போம். வழிபாட்டில் மந்திரங்கள் முக்கியம் என்பது நம் ஆன்றோர்களின் கருத்து. இந்த நடைமுறைகளெல்லாம் எதற்காக??? . கோவிலின் கருவறைக்குள் சேமித்து வைத்திருக்கும் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வருவதற்குத்தான்.. ஆனால் எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வரக்கூடிய ஒரு யுக்தி உண்டு எனில் அது பாடல் பாடுவதுதான். ஆம் நண்பர்களே , கோவிலின் கருவறையில் இருக்கும் ஆகாய சக்தியை நமது உடலில் ஊடுருவச்செய்வதற்கு பாடுவது ஒரு எளிய மார்க்கம் . ஆகாய பூதத்தில் பிறபூதங்கள் அடக்கம் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில் எவ்விதச் சடங்குகளும் செய்தாலும் பாடல்கள் பாடினாலே வழிபாடு நிறைவுறும் என்பதும் நம் சமயத்தில் இருக்கிறது. கோவில்கள்தோறும் பயணித்த நம் சான்றோர் பெருமக்கள் பாடிவைத்திருக்கும் பாடல்களே அதற்குத் தகுந்த சான்றாக இருக்கின்றன. மனம்விட்டுப் பாடும் ஒருவனிடமிருந்து உளவியல் சிக்கல்கள் தானாக நீங்கி விடுகின்றன எனும் நவீன அறிவியலின் கருத்து கவனத்தில்கொள்ளத்தக்கது. ஆனால் எல்லாப்பாடல்களையும், எல்லாக் கோவில்களிலும் பாட முடியாது.

நாதயோகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டுப் பாடப்படும் பாடல்களினால் நமக்குள் இருக்கும் வெட்டவெளியையும், கருவறை வெட்டவெளியையும் இணைக்க முடியும்...இது சாத்தியப்பட்டால் நாத தலைவனை நம்முள் தரிசிக்க முடியும்.... பாடிப்பெறலாம் பரலோக நாதனை....

Sunday, May 7, 2017

உத்தம குருவும் , சீடனும்....
எதைப்பற்றி பலராலும் கேட்க முடியவில்லையோ, கேட்கும் பலராலும் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம். ஆன்மா, ஆன்மீகம், கடவுள், அக வளர்ச்சி, உணர்வு போன்ற உயர்உண்மைகளைப்பற்றி கேட்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கும் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நாம் உயர் உண்மைகளை உணர்வதற்கானத் தகுதி பெறும்போது, நமது மனம் அதற்கான பக்குவம் பெறும்போது அந்த உண்மைகளை உபதேசிப்பவர் வந்து சேர்வார் என்பதே உண்மையிலும் உண்மை. வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறிய இயலாத நியதியாகும்........ நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் வருத்தப்பட்டுக் கொள்ளும்போது, நமது முதல் கடமை, நம்முடைய  உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமோ என்று கண்டுபிடிக்கவேண்டும். பெரும்பாலோர் விஷயத்தில் நாம் இன்னும் தகுதி பெறவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம். 


தகுதியான ஒருவர் வந்து அவரிடம் உபதேசம் பெற்றாலும், நமது நம்பிக்கை திடமாக இல்லாவிட்டால் பயனில்லை. என்னால் உயர்உண்மைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இவரால் எனக்கு வழி காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த வழி என்னை என் லட்சியத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை வேண்டும். இவற்றுள் ஒன்று ஊசலாடினாலும் சாதகனின்  முன்னேற்றம் தடைபடும்.  சீடனுக்குத் தகுதி வாய்ந்த குரு கிடைப்பது  அபூர்வம், அதைவிட ஒரு உத்தம குருவிற்குத் தகுதி வாய்ந்த சீடன்  கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம் என்று  உபநிசதங்கள் கூறுகிறது. ஆன்மீகத்தைப் போதிப்பவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும். இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக  இருக்கும்போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் அகவளர்ச்சி ஏற்படாது. இவர்களே உண்மையான குருமார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடுகிறார்கள்; தங்கள்   அறிவை வளர்த்துக்கொள்ளவே பயிற்சி பெறுகிறார்கள். பின்பு அறிவாற்றலைச் சேர்த்துக்கொண்டு அவசரத்தில் பிறருக்கும் பயிற்சி கொடுக்கிறார்கள்  ; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; இதனால் உண்மையில்  சீடனும், குருவும் இதயக்குகையில்  நுழைந்து  ஆன்மாவை உணரமுடியாமல்  வெளிவிளிம்பில் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறார்கள் ....

Wednesday, April 26, 2017

வெட்டவெளி ரகசியம்தவசீலர்களுக்கு ஆத்ம வணக்கம்!
பிரபஞ்சம் என்றால் ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்தது’ எனப்பொருள். ஒளியிலிருந்து விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கே பிரபஞ்சம் எனப்பெயர். இது ஒரு சமகிருத பதம். தமிழில் இந்த சொல்லை பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை ஒருபோதும் இந்த ஊனக்கண்களால் ழுமையாக புறத்தில் கண்டுவிடவே முடியாது. அறிவியல் கூட அனுமானத்தினால் மட்டுமே அதனை வரையறுத்திருக்கிறது. ஆக, பிரபஞ்சத்தின் வடிவம் உத்தேசமானது என்பதையும் விஞ்ஞானத்தாலும் அதனுடய முடிந்த முடிவை உறுதிசெய்ய முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பிரபஞ்சம் மட்டுமல்லாது நாம் காணுகின்ற தரிசனத்திற்கோ, காட்சிக்கோ, அல்லது காணாத காட்சிக்கோ எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது வெளி ஆகும். (இங்கு வெளி என குறிப்பது பஞ்ச பூதங்களிலுள்ள ஆகாயம் அல்ல) இதனை வெட்டவெளி எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதுவே மெய்ப்பொருள் அல்லது ஆதிமூலம் என்றும் நம்பப்படுகிறது. 

வெட்டவெளி 
 பேரண்டங்கள் 
 அண்டங்கள் 
 விண்மீன் குடும்பங்கள் 
சூரியக்குடும்பம் 
பூமி 
உயிரினங்கள் 
 மனிதன் என்பதாகவே இங்கு பரிமாணம் நடந்தேறியிருக்கிறது என்பதை ஓரளவு விளங்கிக் கொள்தல் அவசியம். வெட்டவெளியில் பிரபஞ்சம் தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் மூலமாக அறிவியலாரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பெருவெடிப்புக்கு சில வினாடிகள் முன்பு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அறிவியல் இன்றும் ஆய்வாக மட்டுமே வைத்திருக்கிறது. மெய்ஞானமோ முடிந்த முடிவை சித்தாந்தம் ஆக்கியிருக்கிறது.

பேரண்டத் தோற்றத்தை எளிமையான வழியில் புரிந்து கொள்ளப் பார்ப்போம். எவ்வித அசைவும் இல்லாதிருக்கும் வெட்டவெளியில் திடீரென ஒரு அசைவு நிகழ்கிறது. அந்த அசைவு ஏற்பட எந்த இயக்கம காரணமோ அவ்வியக்கமே பேரண்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிப்படையாகவும் அமைகிறது. வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் இந்த அசைவு பெரிதாகிறதுது. அவ்விரிவால் அண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் முளைக்கின்றன. அசைவின்றி இருக்கும் வெட்டவெளியில் திடும்மென்று நிகழும் அசைவைக் காட்சியாக்கிக் கொண்டால் பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் நமது அறிவால் உணர்ந்துகொள்ள முடியும்.
வெட்டவெளி, பேரண்டம் உள்ளிட்டவற்றை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ள . சிவம், சக்தி எனும் குறியீடுகளைப் பார்ப்போம். சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது என நாமறிவோம். அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சவத்தை இன்னும் நுட்பமாக சிந்தித்தால் உயிரற்றதோடு அசைவற்றது எனத் தெரிந்து கொள்ளலாம். சிவத்தை நுட்பமாக சிந்தித்தால் இயக்கமற்று ஆனால் உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம். திடீரென வெளியில் நிகழும் அழுத்தமே வெடிப்பு அல்லது விரிவாகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். அந்நிலையில் சிவம் உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. அவ்விடத்தில் அதன் பெயர் சிவமல்ல, சக்தி. உயிருள்ள இயக்கமற்ற வெளியான சிவம் இயக்கத்திற்கு வரும்போது சக்தி எனச்சொல்லப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம்.

வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் இந்த அசைவால் உண்டாகும் சத்தமும்(நாதம்), வெளிச்சமும்(ரூபம்) பேரண்டத்திற்கான தோற்றப்புள்ளிகள். நமது மதங்களில் அவ்வொலியை ஓங்காரம் என்றும், ஆமென், ஆமீன், என்றும், வெளிச்சத்தை சோதி என்றும் குறிப்பிடுகிறார்கள். இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்துவது அவசியமாக இருக்கிறது. வெளிச்சம் வேறு, ஒளி என்பது வேறு, பேரொளி என்பது வேறு, சுயம்சோதி என்பது வேறு. மீண்டும் ஒலி, ஒளிக்கு வருவோம். நாதம், விந்து என இரண்டு சொற்களை சமயத்தில் தோற்றக்குறியீடுகளாகக் குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. ”நாத விந்து கலாதி நமோநம” எனும் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒரு சான்று. நாதம்(ஒலி) முதலிலும், விந்து(ஒளி) பிற்பாடும் என்பதாகவே அப்பாடலே சொல்கிறது. சமயத்தில் இறைவனை நாதன் என்றே குறிப்பிடுகிறார்கள், சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி,சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி என்றும், நாதன் நாமம் நமச்சிவாயவே எனச்சொல்வதையும் இங்கு நினைவுகூரவும். ஆக பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன்.

இப்போது பிள்ளையார், முருகன் குறியீடுகளுக்கு வருவோம். சிவசக்தி என்பது வான்காந்த ஆற்றல் தத்துவம் இந்தப் பிள்ளையார் முருகன் என்பது மின்னாற்றல் தத்துவம், வான் காந்தத்திலிருந்தே மின் காந்தம் தோன்றி அது மின்னற்றலாகிறது. (இந்த ஆற்றல்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்) ஓங்கார வடிவாகச் சொல்லப்படுபவர் பிள்ளையார். வெட்டவெளிக்குள் நிகழும் இயக்கத்தின் துவக்கமாய் வெளிப்படும் ஒலியைச் சுட்டி நிற்பவர் அவர். அதனால் அவர் நாத முதல்வர். ஒலியைத் தொடர்ந்து உதிக்கும் ஒளியைச் சுட்டும் குறியீடே முருகன். “ஆதிநடுஅந்தம் கடந்த நித்தியானந்தப் போதமாய் பந்தம் தண்ந்த பரஞ்சுடராய்” எனும் குமரகுருபரரின் கந்தர்கலி வெண்பா வரிகளைக் கவனியுங்கள். ”சோதிப்பிழம்பதோர் மேனியாக” எனும் கந்தபுராண வரியையும் நினைவு கூர்வோம். ”ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு” என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

பிள்ளையார் , முருகன் எனும்போது அதனை ஆற்றல்களாக புரிந்துகொள்ளாமல் நபர்களாகப் புரிந்துகொள்ளும் அபக்குவ நிலையே இங்கு தன்னை அறிவதற்குத் தடையாக இருக்கிறது. வெட்டவெளியின் ஓரிடத்தில் திடீரென நிகழும் அசைவு அல்லது விரிவே பிரபஞ்சத்தோற்றத்துக்கான அடிப்படை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவோம். “ஓமென்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு நம்வீடும் அந்த இடமே” எனும் கண்ணதாசனின் எளிய பாடல்வரிகளை அக்காட்சியோடு பொருத்திப்பார்ப்போம். அறிவியல் விளக்கங்களால் பெற்றுவிட முடியாத ஆனந்தத்தை நாம் உணரலாம். அதுதான் நம் குருமார்களின் விருப்பமும் .

விஞ்ஞானத்தை அறிவு எனக்கொண்டால், மெய்ஞானத்தை அனுபவம் எனக்கொள்ளலாம். விஞ்ஞானம் தான் கண்ட அறிவை பொதுப்படையானதாக மாற்ற முயல்கிறது. அந்த அறிவை அனுபவத்தைத் தனிப்பட்டதாக உணரச்செய்வது மெய்ஞானம். விஞ்ஞானக் கலைச்சொற்கள்(வாக்கு) நேரிடையானவை; அதனாலேயே நமக்குச் சலிப்பூட்டுபவை. மெய்ஞானச் சொற்கள் (எழுத்து) உருவகங்களாலும், உவமைகளாலும் ஆனவை. அதனாலேயே நமக்குத் தொடர்ந்து உற்சாகம் தருபவை. பொருள்சார் உலகத்திற்கு வேண்டுமானால் புறத்தில் வளர அறிவியல் முக்கியமானதாக இருக்கலாம். தனிமனிதனுக்கோ அகத்தில் வளர மெய்ஞானமே முக்கியம். மெய்ஞானம் என்பதை தயவுசெய்து நவீனகால மதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஒருவனை அவனிலிருந்து விடுவித்து வெட்டவெளியின் சிறுதுகளாக அவனை உணரச் செய்வதே உண்மையான மெய்ஞானமாக இருக்க முடியும். மற்றவை எல்லாம் – எப்படிப்பட்ட புனித அடையாளங்களை முன்வைத்தாலும் – போலிகளே.

நமது குருமார்கள் நமக்களித்திருக்கும் மெய்ஞானத்தை அறிவியல் துணைகொண்டு இங்கு நிரூபிக்க முயலவில்லை. அப்படியாக முயற்சிப்பது நம்மை நாமே கேவலப்படுத்தும் செயல் என்பதும், மெய்ஞானத்திலிருந்தே இந்த விஞ்ஞானம் தோன்றியது என்பதும் நமது தீர்மானமான முடிவு. இருப்பினும் நமது குருமார்கள் நமக்களித்திருக்கும் குறியீடுகளைக் கொண்டும், நமது குருமார்கள் நமக்களித்த மெய்யறிவைக் கொண்டும் பிரபஞ்சம் உள்ளிட்டவை குறித்த என் பார்வையை உங்கள் முன்வைக்கிறேன், அவ்வளவே.......

Monday, October 31, 2016

ரிலாக்ஸ் உடலுக்கா??? மனதுக்கா???லெட் அஸ் கம் டு சாந்தி ஆசனா" யோகாசனப்பயிற்சியின் முடிவில் இந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷம்....உண்மையில் சாந்தி ஆசனத்தில் உடல் மட்டுமல்லாது உள்ளமும் சாந்தி பெறவேண்டும்...... உ டல் உறுதி பெறுவது மட்டுமே யோகத்தின் இறுதி இலட்சியமல்ல , மனம் அமைதிபெறுவதே இங்கு உயர்வான இலட்சியம் ........ மனம் பல வார்த்தைகளாலும் , காட்சிகளாலும் நிரம்பியிருக்கிறது. நமது கம்ப்யூட்டரை வேண்டியநேரத்தில் நிறுத்தவும், இயக்கவும் தெரிந்த நமக்கு, வேண்டியநேரத்தில் நமது மனத்தை நிறுத்தத் தெரிவதில்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓய்வில்லாமல் சதா சலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒளியாற்றலாகிய உயிரும் சதா குறைந்துகொண்டே இருக்கிறது...

இந்த தொடர் மன அசைவிற்கு நமது கல்வி முறையும் ஒரு காரணமாகிறது. . இந்தக் கல்விமுறையால் எப்படி முழுவதுமாக மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே கற்றுத் தரமுடிகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக......... நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுக்க முடிவதில்லை. எனவே இந்த மனம் சிலருக்குத் தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கல்விமுறையால் மனதை முழுவதுமாகப் பயன்படுத்தி ஒரு திறமையான பொறியாளனை உருவாக்க முடிகிறது, ஆனால் மனதை ஓயவு பெறச்செய்து மீண்டும் அவனை இயல்பான மனிதனாக்க முடிவதில்லை....
நம்மால் மனத்தை ஓய்வுபெறச் செய்வது எப்படி???எனக்கற்றுக் கொடுக்க முடிந்தால்...... நமது உயிராற்றலை சேமிக்கமுடியும்.....ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்குவதும் சாத்தியம்தான். இந்த விசேஷக் கல்வி முறையைத்தான் "யோகம்" என்கிறோம்.... . யோகக் கல்வியால் மனம் தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும்.

Thursday, September 1, 2016

நுண்மான் நுழைபுலம்........நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.  


நண்பர்களே , 

கல்லாமை எனும் அதிகாரத்தில்  ஞான ஆசான்  வள்ளுவன்  கூறிய   குறுகத்தரித்த  குறளே   இது.....

இந்தக் குறளுக்கு   நமது  பெரியவர்கள் கொடுத்த தெளிவுரையை  கூகுளாரின் உதவியோடு   இங்கு காண்போம்.......
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
கலைஞர்
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புணையப்பட்ட பாவை போன்றது.
மு.வரதராசன்

'கல்லாமை" எனும் "அதிகாரத்தில்"  ஐயன்  வள்ளுவன் கொடுத்த இந்தக்   குறளை  "யோகக் கண்கொண்டு "பார்க்கும் பொழுது  எனக்கு உணர்த்தப் பட்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம்....

அறிவு என்றால் என்ன????

வள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்....

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண். (421) 


இறுதிக்காலம் வரையும் மரணத்தருவாயிலிலும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; எம படராகிய பகைவர் இந்த உடலுக்குள் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையே "அறிவு "...........நண்பர்களே, கல்வி என்றால் என்ன??????

ஜீவனை சிவமாக்கும் "சாகாக்கல்வியே " இங்கு கல்வியாகப் போற்றப்படுகிறது.....  சாவை வெல்லமுடிகிற அறிவே இங்கு அறிவாகப் போற்றப்படுகிறது....பிற அறிவெல்லாம் இங்கு வெற்று அறிவாகவேப் பார்க்கப்படுகிறது.....

"நுண்மான் நுழைபுலம் " என்றால் என்ன?????

இங்குதான்  யோக ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்  வள்ளுவர்...

எண்சான் உடலுக்கும் பிரதானமாகிய சிரசில்  ,.....அதாவது நம்முடைய தலையில்  நுண்ணிய  மாட்சிமையுடைய  ஒரு துவாரம் ,  ஒரு சிறிய துளை உள்ளது....அந்தத்  துளையில்  "வாசியாகிய"  பிராணனை  நுழைத்துச் செலுத்தக்கூடிய  அறிவினைப் பெற்ற யோகியர் "மரண மடைவதில்லை"   .....ஜீவனை  சிவமாக்கி    ஆதியாகிய சிவத்துடன்  ஒன்றி   ஜீவ  சமாதியாகி விடுகின்றனர்.....

சிரசில்  உள்ள  இந்த நுண்ணிய  மாண்புடைய  துவாரத்தில்  "வாசியாகிய" பிராணனை நுழைவிக்கும் அறிவைப்  போதிக்கும்   யோகக்கல்வியே   இங்கு உண்மைக்கல்வியாக , "நுண்மான் நுழைப்புலமாக"   'சாகாக் கல்வியாகப்" போற்றப்படுகிறது.....பிற  கல்வி கற்றவர்கள்  இங்கு நிரம்பக்   கற்றிருந்தாலும்   கல்லாதவர்களாகவேப்  பார்க்கப்படுகிறார்கள்.....

மண்ணால்  செய்யப்பட்ட இந்த உடலை  விண்ணாய் , ஒளியாய் ... மாற்றுவதே  இந்த  சாகாக்கல்வியின்   இலட்சியம்......பரிமாணத்தில்  பிற உயிர்களுக்கு  இல்லாமல்  நமக்கு  மட்டும்  மனித  சரீரம்   வாய்க்கப்பெற்றதே இந்த இலட்சியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளத்தான் .........அறியாமையினால் வயிறு  வளர்க்கும்  ("மெக்காலே" ) பாடத்தைப்   பயில்பவர்கள்  அழகிய  மண் பொம்மைக்கு  ஒப்பானவர்கள்  என்கிறர்  அய்யன்  வள்ளுவர்....


நமது  தலையில்  உள்ள  இந்த  சிறிய  துவாரம் சித்தர்களால்  
"மயிர்ப்பாலம் "   "சுழிமுனைக்கதவு"  "நெருப்பாறு"  "நூல்பாலம்" "ஞானவாசல்"  என வர்ணிக்கப்பபடுகிறது....


நெற்றிக்கு நேர் உள் நின்றதும் 

நேரான உட்பாறை யுடைத்ததும் 

நெருப்பாறு மயிர்ப்பாலம் கடந்ததும் 

நெஞ்சில் யமவாதை நீக்கியதும் நாமே! நாம்.   

                                                                              என்கிறர்  ,....பரஞ்சோதி மகான்...


வல்லோர்கள் பார்ப்பார்கள் வாட்டியன்தானாய் வாய்க்குமோ யெல்லோர்க்கும் எளிதாச்சோஞானம்
பல்லோர்கள் மாயமாய்கை வாட்டியத்தான்பார் பாங்கான மயிர்ப்பாலம் செதுப்பாதுந்தாண்டித்
தல்லோர்கள் வாசினையைத் தவிடுபொடியாக்கி தரிக்கின்ற வாசியைத்தான் சாதனம்பண்ணி
மல்லோர்கள் மார்க்கமாய் ஆறுதளம் தாண்டி மந்திரியாமர்க்கடக மழிந்துபோமே
                                                                                 
                                                                         என்கிறார்     போகமகரிஷி........


அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்

சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்

நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்

எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.


                                                                                என்கிறார் சிவவாக்கியார்..........


நண்பர்களே,......நுண்மான் நுழைபுலம்  தெரிந்து கொண்டோம்........தக்க ஞான குருவை அணுகி  "உணர்ந்து"  கொள்ளுங்கள்.....