Total Pageviews

Sunday, May 14, 2017

நாதன் என் ஜீவனே...

கோவில் என்பதை உலக வாழ்வை மட்டுமே மையப்படுத்திப் பார்த்து வருகிறோம். கோவிலைப் பொதுவாகப் பொருள்சார்ந்த புறவாழ்க்கைக்கான தளமாகவேப் பார்க்கிறோம். கோவிலை உலகம் கடந்த நிலையில் அகநிலை கொண்டும் கொஞ்சம் பார்ப்போம். பொதுவாகக் கோவிலை கர்ம சித்திக்கானக் கோவில், யோக சித்திக்கானது, ஞான சித்திக்கானது என வகைப்படுத்த வேண்டும். என்றாலும், கோவில்களுக்கான பொது அமைப்பைக் கொண்டு நாம் பார்க்கலாம். கோவிலுக்குள் நுழைவதை வான்வெளியில் நுழைவதாகப் பாவித்துக் கொள்வோம். துவக்கத்தில் ஒன்பது கோள்களைக்(நவகிரகங்கள்) கடக்கும் நாம் அவற்றுக்கு அடிப்படையான கதிரவனையும், சந்திரனையும் பார்க்கிறோம். பிறகு, அவற்றைக் கடந்திருக்கும் அண்டங்களையும், பேரண்டங்களையும் மண்டபங்களாகவும், பிரகாரங்களாகவும் பார்க்கிறோம். இறுதியாக நாம் பார்ப்பது கருவறை. கருவறை என்பது இருட்டான அறை. அதுதான் கோவிலின் முதன்மையான, முக்கியமான பகுதி. வெட்டவெளியையேக் கருவறை குறிக்கிறது. கருவறையில் நிகழும் வழிபாட்டைக் கவனிப்போம். தீபம் ஏற்றப்பட்டு உள்ளிருக்கும் சிலைக்குக் காட்டப்படுகிறது. அந்நேரத்தில் பூசை செய்பவர் மணியையும் ஒலிக்கிறார். வெளிச்சத்தில் நாம் அச்சிலையைப் பார்க்கிறோம். அதாவது நம்மால் காணமுடியாத வெட்டவெளியின் பெருந்தோற்றத்தைக் கண்டுகொண்டதானப் பரவசம் அங்கு சாத்தியப்படுகிறது. வெட்டவெளி, மணி ஒலி, தீப ஒளி எனப் பிரபஞ்சம் தாண்டிய பெருவேளிக்கே சென்று விட்டதாய் ஒரு பேருணர்வு. வழிபாட்டில் ஐம்பூதங்களும் மதிக்கப்பெறுவது நம் கலாச்சாரத்தின் சிறப்பம்சம். வழிபாட்டின்போது தரப்படும் திருநீறு, மற்றும் திருமண்(மண் பூதம் ), தீர்த்தம்(நீர்பூதம்), சாம்பிராணி மணம் ( காற்று பூதம்) மலர்கள் மற்றும் திருவமுது போன்றவற்றைக் கவனிப்போம். வழிபாட்டில் மந்திரங்கள் முக்கியம் என்பது நம் ஆன்றோர்களின் கருத்து. இந்த நடைமுறைகளெல்லாம் எதற்காக??? . கோவிலின் கருவறைக்குள் சேமித்து வைத்திருக்கும் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வருவதற்குத்தான்.. ஆனால் எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல் ஆகாயத்தை நமக்குள் கொண்டு வரக்கூடிய ஒரு யுக்தி உண்டு எனில் அது பாடல் பாடுவதுதான். ஆம் நண்பர்களே , கோவிலின் கருவறையில் இருக்கும் ஆகாய சக்தியை நமது உடலில் ஊடுருவச்செய்வதற்கு பாடுவது ஒரு எளிய மார்க்கம் . ஆகாய பூதத்தில் பிறபூதங்கள் அடக்கம் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில் எவ்விதச் சடங்குகளும் செய்தாலும் பாடல்கள் பாடினாலே வழிபாடு நிறைவுறும் என்பதும் நம் சமயத்தில் இருக்கிறது. கோவில்கள்தோறும் பயணித்த நம் சான்றோர் பெருமக்கள் பாடிவைத்திருக்கும் பாடல்களே அதற்குத் தகுந்த சான்றாக இருக்கின்றன. மனம்விட்டுப் பாடும் ஒருவனிடமிருந்து உளவியல் சிக்கல்கள் தானாக நீங்கி விடுகின்றன எனும் நவீன அறிவியலின் கருத்து கவனத்தில்கொள்ளத்தக்கது. ஆனால் எல்லாப்பாடல்களையும், எல்லாக் கோவில்களிலும் பாட முடியாது.

நாதயோகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டுப் பாடப்படும் பாடல்களினால் நமக்குள் இருக்கும் வெட்டவெளியையும், கருவறை வெட்டவெளியையும் இணைக்க முடியும்...இது சாத்தியப்பட்டால் நாத தலைவனை நம்முள் தரிசிக்க முடியும்.... பாடிப்பெறலாம் பரலோக நாதனை....

Sunday, May 7, 2017

உத்தம குருவும் , சீடனும்....
எதைப்பற்றி பலராலும் கேட்க முடியவில்லையோ, கேட்கும் பலராலும் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம். ஆன்மா, ஆன்மீகம், கடவுள், அக வளர்ச்சி, உணர்வு போன்ற உயர்உண்மைகளைப்பற்றி கேட்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கும் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நாம் உயர் உண்மைகளை உணர்வதற்கானத் தகுதி பெறும்போது, நமது மனம் அதற்கான பக்குவம் பெறும்போது அந்த உண்மைகளை உபதேசிப்பவர் வந்து சேர்வார் என்பதே உண்மையிலும் உண்மை. வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறிய இயலாத நியதியாகும்........ நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் வருத்தப்பட்டுக் கொள்ளும்போது, நமது முதல் கடமை, நம்முடைய  உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமோ என்று கண்டுபிடிக்கவேண்டும். பெரும்பாலோர் விஷயத்தில் நாம் இன்னும் தகுதி பெறவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம். 


தகுதியான ஒருவர் வந்து அவரிடம் உபதேசம் பெற்றாலும், நமது நம்பிக்கை திடமாக இல்லாவிட்டால் பயனில்லை. என்னால் உயர்உண்மைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இவரால் எனக்கு வழி காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த வழி என்னை என் லட்சியத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை வேண்டும். இவற்றுள் ஒன்று ஊசலாடினாலும் சாதகனின்  முன்னேற்றம் தடைபடும்.  சீடனுக்குத் தகுதி வாய்ந்த குரு கிடைப்பது  அபூர்வம், அதைவிட ஒரு உத்தம குருவிற்குத் தகுதி வாய்ந்த சீடன்  கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம் என்று  உபநிசதங்கள் கூறுகிறது. ஆன்மீகத்தைப் போதிப்பவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும். இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக  இருக்கும்போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் அகவளர்ச்சி ஏற்படாது. இவர்களே உண்மையான குருமார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடுகிறார்கள்; தங்கள்   அறிவை வளர்த்துக்கொள்ளவே பயிற்சி பெறுகிறார்கள். பின்பு அறிவாற்றலைச் சேர்த்துக்கொண்டு அவசரத்தில் பிறருக்கும் பயிற்சி கொடுக்கிறார்கள்  ; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; இதனால் உண்மையில்  சீடனும், குருவும் இதயக்குகையில்  நுழைந்து  ஆன்மாவை உணரமுடியாமல்  வெளிவிளிம்பில் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறார்கள் ....

Wednesday, April 26, 2017

வெட்டவெளி ரகசியம்தவசீலர்களுக்கு ஆத்ம வணக்கம்!
பிரபஞ்சம் என்றால் ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்தது’ எனப்பொருள். ஒளியிலிருந்து விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கே பிரபஞ்சம் எனப்பெயர். இது ஒரு சமகிருத பதம். தமிழில் இந்த சொல்லை பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை ஒருபோதும் இந்த ஊனக்கண்களால் ழுமையாக புறத்தில் கண்டுவிடவே முடியாது. அறிவியல் கூட அனுமானத்தினால் மட்டுமே அதனை வரையறுத்திருக்கிறது. ஆக, பிரபஞ்சத்தின் வடிவம் உத்தேசமானது என்பதையும் விஞ்ஞானத்தாலும் அதனுடய முடிந்த முடிவை உறுதிசெய்ய முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பிரபஞ்சம் மட்டுமல்லாது நாம் காணுகின்ற தரிசனத்திற்கோ, காட்சிக்கோ, அல்லது காணாத காட்சிக்கோ எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது வெளி ஆகும். (இங்கு வெளி என குறிப்பது பஞ்ச பூதங்களிலுள்ள ஆகாயம் அல்ல) இதனை வெட்டவெளி எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதுவே மெய்ப்பொருள் அல்லது ஆதிமூலம் என்றும் நம்பப்படுகிறது. 

வெட்டவெளி 
 பேரண்டங்கள் 
 அண்டங்கள் 
 விண்மீன் குடும்பங்கள் 
சூரியக்குடும்பம் 
பூமி 
உயிரினங்கள் 
 மனிதன் என்பதாகவே இங்கு பரிமாணம் நடந்தேறியிருக்கிறது என்பதை ஓரளவு விளங்கிக் கொள்தல் அவசியம். வெட்டவெளியில் பிரபஞ்சம் தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் மூலமாக அறிவியலாரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பெருவெடிப்புக்கு சில வினாடிகள் முன்பு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அறிவியல் இன்றும் ஆய்வாக மட்டுமே வைத்திருக்கிறது. மெய்ஞானமோ முடிந்த முடிவை சித்தாந்தம் ஆக்கியிருக்கிறது.

பேரண்டத் தோற்றத்தை எளிமையான வழியில் புரிந்து கொள்ளப் பார்ப்போம். எவ்வித அசைவும் இல்லாதிருக்கும் வெட்டவெளியில் திடீரென ஒரு அசைவு நிகழ்கிறது. அந்த அசைவு ஏற்பட எந்த இயக்கம காரணமோ அவ்வியக்கமே பேரண்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிப்படையாகவும் அமைகிறது. வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் இந்த அசைவு பெரிதாகிறதுது. அவ்விரிவால் அண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் முளைக்கின்றன. அசைவின்றி இருக்கும் வெட்டவெளியில் திடும்மென்று நிகழும் அசைவைக் காட்சியாக்கிக் கொண்டால் பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் நமது அறிவால் உணர்ந்துகொள்ள முடியும்.
வெட்டவெளி, பேரண்டம் உள்ளிட்டவற்றை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ள . சிவம், சக்தி எனும் குறியீடுகளைப் பார்ப்போம். சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது என நாமறிவோம். அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சவத்தை இன்னும் நுட்பமாக சிந்தித்தால் உயிரற்றதோடு அசைவற்றது எனத் தெரிந்து கொள்ளலாம். சிவத்தை நுட்பமாக சிந்தித்தால் இயக்கமற்று ஆனால் உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம். திடீரென வெளியில் நிகழும் அழுத்தமே வெடிப்பு அல்லது விரிவாகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். அந்நிலையில் சிவம் உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. அவ்விடத்தில் அதன் பெயர் சிவமல்ல, சக்தி. உயிருள்ள இயக்கமற்ற வெளியான சிவம் இயக்கத்திற்கு வரும்போது சக்தி எனச்சொல்லப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம்.

வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் இந்த அசைவால் உண்டாகும் சத்தமும்(நாதம்), வெளிச்சமும்(ரூபம்) பேரண்டத்திற்கான தோற்றப்புள்ளிகள். நமது மதங்களில் அவ்வொலியை ஓங்காரம் என்றும், ஆமென், ஆமீன், என்றும், வெளிச்சத்தை சோதி என்றும் குறிப்பிடுகிறார்கள். இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்துவது அவசியமாக இருக்கிறது. வெளிச்சம் வேறு, ஒளி என்பது வேறு, பேரொளி என்பது வேறு, சுயம்சோதி என்பது வேறு. மீண்டும் ஒலி, ஒளிக்கு வருவோம். நாதம், விந்து என இரண்டு சொற்களை சமயத்தில் தோற்றக்குறியீடுகளாகக் குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. ”நாத விந்து கலாதி நமோநம” எனும் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒரு சான்று. நாதம்(ஒலி) முதலிலும், விந்து(ஒளி) பிற்பாடும் என்பதாகவே அப்பாடலே சொல்கிறது. சமயத்தில் இறைவனை நாதன் என்றே குறிப்பிடுகிறார்கள், சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி,சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி என்றும், நாதன் நாமம் நமச்சிவாயவே எனச்சொல்வதையும் இங்கு நினைவுகூரவும். ஆக பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன்.

இப்போது பிள்ளையார், முருகன் குறியீடுகளுக்கு வருவோம். சிவசக்தி என்பது வான்காந்த ஆற்றல் தத்துவம் இந்தப் பிள்ளையார் முருகன் என்பது மின்னாற்றல் தத்துவம், வான் காந்தத்திலிருந்தே மின் காந்தம் தோன்றி அது மின்னற்றலாகிறது. (இந்த ஆற்றல்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்) ஓங்கார வடிவாகச் சொல்லப்படுபவர் பிள்ளையார். வெட்டவெளிக்குள் நிகழும் இயக்கத்தின் துவக்கமாய் வெளிப்படும் ஒலியைச் சுட்டி நிற்பவர் அவர். அதனால் அவர் நாத முதல்வர். ஒலியைத் தொடர்ந்து உதிக்கும் ஒளியைச் சுட்டும் குறியீடே முருகன். “ஆதிநடுஅந்தம் கடந்த நித்தியானந்தப் போதமாய் பந்தம் தண்ந்த பரஞ்சுடராய்” எனும் குமரகுருபரரின் கந்தர்கலி வெண்பா வரிகளைக் கவனியுங்கள். ”சோதிப்பிழம்பதோர் மேனியாக” எனும் கந்தபுராண வரியையும் நினைவு கூர்வோம். ”ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு” என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

பிள்ளையார் , முருகன் எனும்போது அதனை ஆற்றல்களாக புரிந்துகொள்ளாமல் நபர்களாகப் புரிந்துகொள்ளும் அபக்குவ நிலையே இங்கு தன்னை அறிவதற்குத் தடையாக இருக்கிறது. வெட்டவெளியின் ஓரிடத்தில் திடீரென நிகழும் அசைவு அல்லது விரிவே பிரபஞ்சத்தோற்றத்துக்கான அடிப்படை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவோம். “ஓமென்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு நம்வீடும் அந்த இடமே” எனும் கண்ணதாசனின் எளிய பாடல்வரிகளை அக்காட்சியோடு பொருத்திப்பார்ப்போம். அறிவியல் விளக்கங்களால் பெற்றுவிட முடியாத ஆனந்தத்தை நாம் உணரலாம். அதுதான் நம் குருமார்களின் விருப்பமும் .

விஞ்ஞானத்தை அறிவு எனக்கொண்டால், மெய்ஞானத்தை அனுபவம் எனக்கொள்ளலாம். விஞ்ஞானம் தான் கண்ட அறிவை பொதுப்படையானதாக மாற்ற முயல்கிறது. அந்த அறிவை அனுபவத்தைத் தனிப்பட்டதாக உணரச்செய்வது மெய்ஞானம். விஞ்ஞானக் கலைச்சொற்கள்(வாக்கு) நேரிடையானவை; அதனாலேயே நமக்குச் சலிப்பூட்டுபவை. மெய்ஞானச் சொற்கள் (எழுத்து) உருவகங்களாலும், உவமைகளாலும் ஆனவை. அதனாலேயே நமக்குத் தொடர்ந்து உற்சாகம் தருபவை. பொருள்சார் உலகத்திற்கு வேண்டுமானால் புறத்தில் வளர அறிவியல் முக்கியமானதாக இருக்கலாம். தனிமனிதனுக்கோ அகத்தில் வளர மெய்ஞானமே முக்கியம். மெய்ஞானம் என்பதை தயவுசெய்து நவீனகால மதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஒருவனை அவனிலிருந்து விடுவித்து வெட்டவெளியின் சிறுதுகளாக அவனை உணரச் செய்வதே உண்மையான மெய்ஞானமாக இருக்க முடியும். மற்றவை எல்லாம் – எப்படிப்பட்ட புனித அடையாளங்களை முன்வைத்தாலும் – போலிகளே.

நமது குருமார்கள் நமக்களித்திருக்கும் மெய்ஞானத்தை அறிவியல் துணைகொண்டு இங்கு நிரூபிக்க முயலவில்லை. அப்படியாக முயற்சிப்பது நம்மை நாமே கேவலப்படுத்தும் செயல் என்பதும், மெய்ஞானத்திலிருந்தே இந்த விஞ்ஞானம் தோன்றியது என்பதும் நமது தீர்மானமான முடிவு. இருப்பினும் நமது குருமார்கள் நமக்களித்திருக்கும் குறியீடுகளைக் கொண்டும், நமது குருமார்கள் நமக்களித்த மெய்யறிவைக் கொண்டும் பிரபஞ்சம் உள்ளிட்டவை குறித்த என் பார்வையை உங்கள் முன்வைக்கிறேன், அவ்வளவே.......

Saturday, April 15, 2017

சித்திரை விசு


தவசீலர்களுக்கு ஆத்ம வணக்கம்!
*யோக யுவகேந்திராவின் சித்திரை விசு வாழ்த்துக்கள்*
தமிழ் வருடம் என்பது சித்திரையில் துவங்கி பங்குனியில் முடிவது. சூரியனின் நீள்வட்டப்பாதையை (elliptical) பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து , ஒவ்வொரு பகுதியையும் ஒரு ராசியாக கணக்கிட்டு மேஷம் முதல் மீனம் வரை சூரியனின் சுற்றுவட்டப்பாதையைக் கணித்திருக்கிறார்கள் நம் சித்த குருமார்கள்...
சூரியன் மேஷராசியில் நுழையும் நாள் சித்திரை அதாவது ஆண்டுத் துவக்கம், மீன ராசியிலிருந்து வெளியேறும் நாள் பங்குனி முடிவு. அதாவது ஆண்டின் முடிவு.
சித்திரை மாசம் ஏன் தமிழ் மாதத்தின் முதல் மாதமாக இருக்க வேண்டும்?
சூரியனின் ஒளிகிரணங்கள் அதிகமாக இருக்கின்ற நாட்கள் சித்திரை மாதத்தில் தான். சூரிய ஒளி கிரணங்கள் அதிகமாக இருக்கிற மாதம் சித்திரை மாதம். அதாவது சூரியன் தனது சொந்த வீட்டில் மேஷ ராசியில் இருப்பது சித்திரை மாதம்.
ஒளி கிரணங்கள் அதிகமாக இருக்கிற காரணத்தால் இதை சித்தர்களோட விழாவாக, சித்தர்கள் விழா என இந்த மாதத்தின் முதல் நாளைக்கொண்டாடுகிறார்கள்.
சித்திரை என ஏன் பெயர் வந்தது????
நமது தேகத்தில் உயிர் பொருள் ஒன்றிருக்கிறது இதற்கு "சித்" என்று பெயர்"; ஆன்ம பொருளுக்கு "சத்" என்று பெயர். இந்த உயிர் பொருள் ஆன்ம பொருளாக மாற முடியாமலிருப்பதற்கு இடையிலே ஒரு *"திரை"* இருக்கிறது. உயிர்பொருளிலுள்ள மலத்தை, அசுத்தத்தை நீக்கி அந்த திரையை பயிற்சிமுறைகளால் நீக்கத்தெரிந்தால் உயிர் பொருளே ஆன்ம பொருளாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துவிடும். ஆன்மாவாகிய சத்தை காணவிடாமல் சித்தாகிய உயிரை மறைத்துக்கொண்டிருக்கும் திரையை விலக்குவதற்கான நாள் தான் "சித்திரை திருநாள்".
இதனை ஏன் *"சித்திரை விஷு"* என்று சிறப்பாக சொல்லக்காரணம் என்னவென்றால் விஷு என்றால் (visual) பார்ப்பது எனப்பொருள். பல ஆங்கில சொற்கள் தமிழ் கலைச்சொற்களிருந்து தான் சென்றிருக்கிறது.எடுத்துக்காட்டாக:-விஷு - Visualமாதா - வடமொழியில் மாத்ரு எனத் திரிந்து பின்பு Mother என மாறியிருக்கிறது - பிதா என்பது வடமொழியில் பித்ரு எனத்திரிந்து Father என மாறியிருக்கிறதுஹோரை - என்பதே மருவி "Hour" ஆகியிருக்கிறதுஎனவே விஷூ என்றால் காண்பது என்றுபொருள்,
எதைக் காண்பது???

இந்த *சித்தாகிய உயிர் பொருளிலுள்ள திரையை விலக்கி ஆத்மாவாகிய மெய்பொருளைக் காண்பதற்கான வசந்தகாலப் பண்டிகையே சித்திரை விசு
தமிழ்நாட்டில் நாகர்கோவில், மற்றும் கொங்கு மண்டலத்திலுள்ள ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் மற்றும் கேரளாவிலும் இன்றைய தினத்தில் *"சித்திரை கனி"* எனும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலையில் அந்த வீட்டிலுள்ளவர்களைக் கண்ணைத் திறக்காமல் கூட்டிக்கொண்டு போய் கண்ணாடியின் முன்பு நிறைய பழங்களை வைத்து அப்பழங்களை கண்ணாடியின் வழியாக பார்க்கச்சொல்கிறார்கள். இந்த கனிகாணும் நிகழ்வுக்குப் பின்னால் ஒரு ஞான சூட்சும பயிற்சி முறையையே மறைமுகமாகக் கற்றுத்தருகிறார்கள் நமது சித்தகுருமார்கள்....
நமது பிண்டமாகிய உடலிலும் "கண்ணாடி" ஒன்றிருக்கிறது...... இந்த கண்ணாடி இப்பொழுது நமக்கு ஆடிக்கொண்டிருக்கிறது, இக்கண்ணாடியை முதலில் ஆடாமல் நிறுத்தப் பழக்கிக்கொண்டு இதன் வழியாக நமக்குள்ளிருக்கும் ஆத்மனாகிய "ஞான" பழத்தை தரிசிக்க முடியும். பழம் என்றால் "பழமையான பொருள்" என அர்த்தம்... இதனையே
*கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்*
*பண்ணாக வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு*
*அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி*
*பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே...* என
சித்தர்கள் சொல்கின்றனர் . அந்த பழம்பொருளை பார்க்க வேண்டியதின் அவசியத்தை சூட்சுமமாக நமக்கு புரிய வைப்பதற்குத்தான் கணிகாணும் பண்டிகை.
சித்த புருஷர்கள் நமக்கு சூட்சுமமாகக் கருணையோடு கொடுத்த இந்த சிறந்த நாளைத்தான் *"சித்திரை திருநாள்"* என்றும் சித்திரை விசு என்றும், *"தமிழ் புத்தாண்டு தினமாகவும்"* கொண்டாடுகிறோம். நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்குள்ளும் ஆன்ம இரகசியம் புதைந்திருக்கிறது, சிந்தித்தால் ஞானம் பிறக்கும். சிந்திப்பவனே மனிதன்..........
Show More