Total Pageviews

Tuesday, April 30, 2013

சிவராஜயோக நடனம்.....நடராஜரின் ஒளி நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார்.

மகாவிஷ்ணுவும், ஈசனின் ஆனந்த ஒளி நடனக் கோலத்தை வர்ணிக்க....... தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய் ஆதிசேஷன் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் ஆகாய ஸ்தலமான சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிமகரிஷிக்கும், அனுசூயைக்கும் மகனாய் பிறக்கின்றார் , இந்தக் குழந்தையே பதஞ்சலி மகரிஷி.......... உலகமே திரும்பிப் பார்க்கும் யோகக் கலையின் தந்தை இவர்தான்..யோகம் என்றவுடன் ஏதோ கை கால்களை அசைத்து செய்யும் ஒரு உடற்பயிற்சி என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கி நிற்கிறது.....சாதாரண மனிதர்கள் இவ்வாறு புரிந்து கொள்வதில் வருத்தமில்லை ஆனால் ஒரு சில வேதாந்திகளும், சில சித்த வித்யார்த்திகளும்,சில சன்மார்க்கிகளுமே..........யோகம் என்றவுடன் அதனை கிள்ளுக்கீரையாக நினைத்து கேலி பேசுவது....அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது..

நண்பர்களே! உடல், உள்ள நோயை தீர்க்கும் பயிற்சி முறைகளை மட்டும் உள்ளடக்கியதல்ல யோகம்........சாதகனுக்கு ஞானத்தெளிவை உண்டாக்கி நோய்களில் எல்லாம் தலையான, பிறவி நோயைத்தீர்ப்பதற்கானப் பயிற்சி முறைகளை உள்ளடக்கியதே யோகம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் .....வெறும் ஹட யோகப் பயிற்சிகளை மட்டும் யோகமென்றோ, அல்லது வேதாந்தக் கருத்துகளை மட்டும் தெரிந்து கொண்டு அதனுடைய உள் அர்த்தங்களை உணராமல் ஹட யோகப்பயிற்சிகளை யோகமில்லை எனக்கூறி எள்ளி நகையாடுவதும் அறிவுடைமையாகாது. சித்தர்கள் முறைப்படுத்திக்கொடுத்த அட்டாங்க யோகத்தை முழுவதுமாக தெரிந்துகொள்ளாமல் யோகத்தினால் ஞானம் கிடைக்காது எனக் கூறுவதும் அர்த்தமுடையதல்ல.

வான் போற்றும் நாயகன், என் மார்க்கம் அது சன்மார்க்கம் என கர்ஜித்த வடலூர் வள்ளல், சிதம்பர ரகசியம் எனக் கூறப்படும் தகர வித்தையை சிதம்பரத்தில் உணர்ந்து, ..... அந்த ஒளி நடன ரகசியத்தை தனது அடியார்களானத் திருக்கூட்டதிற்கு கருணையோடு வழங்கியிருக்கிறார். 

பதினெண் சித்தர்களும் கண்ணுற்ற அதே ஒளி நடனக் காட்சியை .....சன்மார்க்கத்தை, எம்பெருமான் வள்ளலாருக்கு முன்பே பார்த்தவர் தானே பதஞ்சலி மகரிஷி.....அதனால் தானே வள்ளல் பெருமானும், வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டத்தில் நானும் ஒருவன் என்கிறார். 


பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் பதஞ்சலியும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய யோகசூத்திரத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

“பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலைக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். தனது கூட்டமான பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர். தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர் பதஞ்சலி. 

“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்

என்றிவர் என்னோடு எண்மருமாம்!” ...........திருமந்திரம்


சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். 

“பதஞ்சலி என்னுடைய தாத்தா!

மேலே ஏறிப் பார்!

ஆனால் என்னைப் பிறப்பித்தவர்

காலங்கி நாதர்!

பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது

பார், இதுவே சரியான வழி!

"அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் எப்படி திரும்புவது என்றும் எனக்குச் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி (வாலைத்தாய்)காட்சி கொடுத்துச் சொன்னாள்.”அப்பா நீ தேடினாயே இது தான் அது!” என்று.

குண்டலினி யோகம் சாதனை செய்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடைத்ததும் பிறந்தது “போகர் 7,000″. அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.


மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வெளி வந்தது தான் அவ்ருடைய யோகசூத்திரம்
இப்போது ஒரு சுவாஸ்யமானக் கதையைப் பார்ப்போம்.


அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்த சித்தர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் அடங்குவர் ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ, தான் பூக்களைப் பறிப்பதற்காக இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால், புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம், மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும், கால்களும் இருப்பதால், ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள், தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு, பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம்.


அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தாராம். இப்படி நந்தி தன் "கொம்பை" நினைத்துப் பெருமையிலேயும், வியாக்ரபாதர் தன் புலிக் "கால்களை" நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள், ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப் படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார்.


நந்தியும், வியாக்ரபாதரும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தான் மட்டுமே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். “புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதை நான் பார்ப்பதை விடவா நீ பார்த்துவிட்டாய்? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனம் தெரியுமே. சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?” என்று சொன்னார்.

இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, “உனக்குக் கொம்பும் இல்லை, புலிக் கால்களும் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?” என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.

தான் ஆத்மார்த்த அனுபவத்தில் திளைத்து ஈசனின் ஆட்டத்தில் ஒன்றிப் போகவில்லையோ? இவர்கள் சொல்வது தான் சரியோ? ஒரு வேளை புலிக்கால்களும், நந்தியெம்பருமானைப் போல் கொம்புகளும் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்கும் பக்குவம் வருமோ? என நினைத்தார் பதஞ்சலி.

அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க ஈசன் வந்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, “பதஞ்சலி, இன்று யாம் "பாதம்" தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் "பதம்" பாடப் போவது நீயே தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்.” என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

மேலும் கூறுகின்றார் ஈசன், “பதஞ்சலி, இன்றைய பாடலில் "கொம்பும், காலும்" வரக் கூடாது!”என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப் பதஞ்சலி முனிவரோ “அப்படியே ஆகட்டும் ஈசனே!” என வணங்கி நின்றார். வியாக்ரபாதரின் முகத்திலும், நந்தியினின் முகத்திலும் ஈ ஆடவில்லை. பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடிக்கு துதி ஒன்றைப் பாடினார். கெ, பெ, போ, ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும், கா, பா, சா, லா, ளா போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடிய அந்த நடராஜர் துதி 

“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!”

இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.   இந்த நாட்டிய தரிசனமே "தகரவித்யா"எனும் பெயரில் யோகிகளால் போற்றப்படுகிறதுஎன்ன நண்பர்களே!  இந்தக் கதையில் என்ன தெரிஞ்சுகிட்டீங்க?????
கொம்பு என்ன? புலிக்கால் என்ன? புரிகிறதா????


யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ

1 comment:

AK said...

ஒன்னும் தலை (கொம்பு) கால் புரியல சார் !

Post a Comment