Total Pageviews

Friday, July 8, 2011

கடம்பம்
எப்போதெல்லாம் கொங்கு மக்கள் இந்தக் குன்றின் மேல் கூடி நின்று இங்கு, நட்டு வைத்திருக்கும் வேலின் முன்னால் திருவிழா நடத்துகிறார்களோ அப்போதெல்லாம் கடம்பமரம் பூத்துக் குலுங்குகிறது. கள்ளம் கபடம் இல்லாத இந்த கொங்கு மக்களைப் பார்க்கும் போதெல்லாம் கடம்பமரம் குதூகலிக்கிறது. அதன் மனமகிழ்ச்சியை மணம் வீசும் வண்ண மலர்களின் மூலம் வெளிப்படுத்துகிறது.
குண்டு குண்டாக இருக்கும் கடம்ப மலர்களைக் கட்டித் தொடுத்து மாலையாக்கி கொங்கு மக்கள் வேலுக்குச் சூடி விழா கொண்டாடுகின்றனர். வேலுக்குச் சூடிய மாலையை எடுத்து வேலன் என்ற ஒரு வயதானவர் தன கழுத்தில் போட்டுக்கொண்டு வெறியாட்டம் ஆடுகின்றார். மக்கள் எல்லோரும் தங்கள் குறைகளை அவரிடம் கூறி நல்வாக்கு பெறுகின்றனர். அவ்வப்போது 'கடம்பம் கடம்பம்' என்று அந்த பெரியவர் கூவுகின்றார். அப்போது சிலர் ஒரு மரத்தைக் காட்டி 'அது தான் கடம்ப மரம்' என்று சொல்கிறார்கள். சுட்டிக் காட்டப்பட்ட அந்த மரம்தான் கடம்பமரம் போலும்.கடம்ப மரத்தைச் சுற்றிப் பூப்பூக்கும் பல மரங்கள் இருந்தாலும். அந்தப் பூக்கள் எதையுமே கொங்கு மக்கள் வேலுக்கோ வேலனுக்கோ சூட்டுவதில்லை. கடம்ப மலர்களை மட்டுமே சூட்டுகிறார்கள். தன்னால் இவர்களின் கொண்டாட்டத்திற்கு உதவ முடிகிறதே என்ற மகிழ்ச்சியில் அந்தக் கடம்பத்திற்கும் பெருமை தான். அதனாலோ என்னவோ இன்னும் அதிக மணத்துடன் நிறைய பூக்களைப் பூக்கிறது.


அடடா. இதென்ன அதிசயம். சாதாரண மக்களைப் போன்ற உருவம் கொண்டவர் தானே இவரும்? இவர் மட்டும் எப்படி ஆகாயத்தில் பறந்து வருகிறார். இவர் அருகில் வர வர நறுமணம் வீசுகிறதே. கடம்ப மலர்களின் மணம் எல்லாம் இவரின் நறுமணத்திற்கு முன் எடுபடவில்லையே! அழகும் இளமையும் உடைய உருவம். மக்கள் எல்லோரும் அவரை வணங்குகிறார்கள். 'போகர் போகர்' என்று இந்த மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதைப் பார்த்தால் இவர் பெயர் தான் போகர் போலும். போகர் பெருமானே உம்மை நானும் வணங்குகிறேன். இந்த மக்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள். நானும் கேட்கிறேன். நீங்களும் கேட்டுக் கொள்ளுங்கள்."மகாஜனங்களே. இந்த பழனி பர்வதத்தின்சிறப்பு உங்களுக்குத் தெரியுமா? இங்கே ஏன் வேலை நிறுவி வழிபட்டு வருகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?"


"சித்தர் பெருமானே. வழி வழியாக இந்தக் குன்றத்தின் மேல் இந்த வேல் இருப்பதை அறிவோம். குன்றத்தைச் சுற்றி வாழும் நாங்கள் நெடுங்காலமாக இந்த வேலை வணங்கி வருகிறோம். இந்த இடத்தில் வேலனின் வெளிப்பாடு அதிகம் இருப்பதையும் காண்கிறோம். மற்றபடி வேறொன்றும் அறியோம்"


"மக்கள் தலைவரே. நீங்கள் சொன்னது போல் இந்த இடத்தில் கந்தனின் வெளிப்பாடு நிறைந்து தான் இருக்கிறது. இந்த வேல் இருக்கும் இடத்தில் முருகனுக்கு ஒரு திருவுருவம் சமைத்து நிறுவ எண்ணியிருக்கிறேன். அந்தத் திருவுருவதைத் தொழுதால் உங்கள் பிறவிப்பிணி நீங்கும்; திருவுருவத்திற்கு முழுக்காட்டி அந்த நன்னீரை உட்கொண்டால் உடற்பிணி நீங்கும். உறுதியான உடல் தானே இறைவன் வாழும் ஆலயம். அதனால் உடலுக்கும் உயிருக்கும் நன்மையை அருளி என்றும் இங்கே நிலையாக நிற்பான் திருக்குமரன்""ஆகா. அப்படியே ஆகட்டும் பெருமானே. உங்களுக்கு எங்களால் ஆகும் எல்லா விதமான உதவிகளையும் செய்கிறோம். கட்டளை இடுங்கள், காத்திருக்கிறோம். சித்தர் பெருமானே!""ஒன்பது விதமான நச்சு மூலிகைகளாலும் பொருட்களாலும் முருகனின் திருவுருவத்தை உருவாக்கப் போகிறேன். அந்தப் பொருட்களைத் தனித் தனியாகத் தொட்டாலோ உட்கொண்டாலோ உடனே உயிரிழக்க நேரிடும். ஆனால் அவற்றையே தகுந்த முறைப்படி ஒன்று சேர்த்தால் அது உடற்பிணியை நீக்கும் உயரிய மருந்தாக மாறிவிடும். அதனையே நான் செய்ய முயற்சிக்கிறேன். அப்படி செய்யும் போது வெளிப்படுகிற வெப்பத்தால் இங்கிருக்கும் செடி கொடிகள் வாடலாம். உங்களுக்கும் கெடுதல் நேரிடலாம். அதனால் எல்லோரும் இந்த பழனி மலையை விட்டுக்கீழிறங்கி அங்கேயே தங்க வேண்டும். அதுவரை என்னை யாரும் பார்க்க வரவேண்டாம். திருவுருவம் நிறுவப்பட்டவுடன் நானே வந்து உங்களை அழைத்து வருகிறேன். . "


"ஆகா. அப்படியே ஆகட்டும் சித்தர் பெருமானே"எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டனர். போகர் சொன்னதைக் கேட்டால் எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. போகர் பெருமானே, செடி கொடிகள் வாடும் என்று சொல்கிறாரே!; மரங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. கடம்பமும் வாடுமா?


வேகமாக பறந்து சென்ற போக சத்குரு . சற்றைக்கெல்லாம் திரும்பி வந்துவிட்டார். கைகளில் சில மூலிகைகளும் உலோகங்களும் கற்களைப் போன்ற பொருட்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இதோ சேர்க்கத் தொடங்கிவிட்டார். அடடா! அடடா! என்ன வெப்பம் என்ன வெப்பம். இந்த வெப்பம் நீங்க தனது கிளைகளைக் கொண்டு காற்று வீசுகிறது கடம்பம். கொஞ்சம் குளிர்ந்த காற்று வருவதைப் பார்த்து போகர்பெருமானும் கடம்பத்தைப் பார்த்து புன்னகைக்கிறார். ஆகா. தொடர்ந்து இதையே செய்வோம். இதை விட பெரும்பாக்கியம் வேறு என்ன இருக்கிறதென கிளைகளை வேகமாக அசைக்கிறது கடம்பம்.

அழகான திருவுருவத்தை உருவாக்கிவிட்டார் போகர் பெருமான். இதோ இன்னும் சில மூலிகைகளைக் குழைத்து ஒரு சிறு குழிக்குள் போட்டு அந்தத் திருவுருவத்தை அங்கே நிறுத்துகிறார். இது தான் திருமுருகனின் திருவுருவம் போலும். கையில் கோலுடன் கோவணாண்டியாக நிற்கும் அந்தத் திருவுருவத்தின் தலையிலும் தோள்களிலும் வயிற்றிலும் முழங்கால்களிலும் கால்களிலும் முகுள முத்திரையுடன் கூடிய தனது கையை வைத்து கண்ணை மூடிக் கொண்டு ஏதோ முணுமுணுக்கிறாரே. 

அட! இது என்ன அதிசயம். முருகன் திருவுருவம் பொன்னால் செய்ததைப் போல் பெரும் ஒளி வீசுகிறதே. போகர் கை கூப்புவதைப் பார்த்தால் சிலையில் கடம்ப வேலனின் வெளிப்பாடு ஏற்பட்டு விட்டது போலிருக்கிறதே. கந்தா கடம்பா நானும் வணங்குகிறேன்.இப்போது தான் கவனிக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் செடி கொடிகள் பொலிவிழந்து போய்விட்டனவே. மரங்களும் கொஞ்சம் வாடித் தான் இருக்கின்றன. கடம்ப மரம் மட்டும் தான் வாடவில்லை . இது ஏன் என்று தெரியவில்லை!கந்தனின் அருளா? போகர் பெருமானின் அருளா?போகர் பெருமான் தன் கருணைப் பார்வையை அந்த வாடிய செடி கொடிகள் மரங்கள் மீது வீசியதும் அவை மீண்டும் பழைய படி பொலிவு பெற்று விட்டன. ஆகா! கடம்ப மரம் அருகில் வருகிறாரே போகர் பெருமான்."கடம்ப மரமே. நீ நினைப்பதைப் போல் கொற்றவை சிறுவனின் திருவுருவம் சமைக்கப்பட்டுவிட்டது. ஒரு மண்டல காலம் நான் பூசனை செய்துவிட்டு பின்னர் போய் இந்தப் பகுதியில் வாழும் மக்களை அழைத்து வருவேன். திருவுருவத்தைச் சமைக்கும் போது வெப்பம் தீர நீ கிளைகளால் வீசி திருப்பணி செய்ததால் வெந்து போகாமல் நின்றாய். அந்தத் திருப்பணி செய்ததால் இன்னும் அதிக திருப்பணி செய்யும் வாய்ப்பு உனக்குக் கிடைக்கும். கடம்ப மரமாகிய நீ உன் வாழ்நாள் முழுதும் இந்த முருகனுக்கு உன் மலர்களால் தொண்டு செய். உன் வாழ்நாள் முடியும் போது நானும் நீ நிற்கும் இந்த இடத்திற்கு வந்து ஜீவசமாதி அடைவேன். அடுத்தவர்க்குப் பணி செய்ய விழையும் நீ நின்றதாலும் நான் ஜீவசமாதி அடைவதாலும் இந்த இடம் பெரும் புனிதமடைந்து பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்று தன்னை நாடி வரும் அனைவருக்கும் அருள் கொடுத்துக் கொண்டிருக்கும்."ஆகா. ஆகா. என்ன பாக்கியம் என்ன பாக்கியம். மகிழ்ச்சியால் தன் கிளைகளை விசிறி குளிர்ந்த காற்று வரச் செய்கிறது கடம்பம். தன் கிளைகளில் இருக்கும் மலர்களை உதிர்கிறது கடம்பம். அந்த மலர்கள் போகர் பெருமான் மேலும் பழனியாண்டவன் மேலும் சொரிகின்றன.
மூலம்; கூடல் கடம்பம்

2 comments:

gayathri said...

மாஸ்டர் ,கடம்ப மழர்களை மட்டும் ஏன் உபயோகிக்கிறார்கள்,அதன் சிறப்பு என்ன?

Yoga Yuva Kendra said...

கடம்ப மரம்(ANTHOCEPHALUS CADAMBA)மதுரை மீனாக்ஷிஅம்மன் கோவிலின் தல விருட்சமாகும்.
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்லினை வீடுமே.என்கிறது தேவாரம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் கதம்பமரம் தெய்வீக மரமாக வணங்கப்படுகிறது.

சிவபெருமான் மற்றும் முருகப் பெருமானுக்கு கதம்பா மரம் உகந்த மரமாகக் கருதப்படுகிறது. இது தவிர புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மரத்தை மிகவும் போற்றுகிறார்கள்.

ஜைன மத முனிவர் வாசு பூஜ்யா கதம்பா மரத்தின் அடியில் ஞானம் பெற்றதாக ஜைன மதத்தவர்கள் நம்புகின்றார்கள்.இந்த மரத்துப் பூக்களை முருகப்பெருமான் ஆபரணமாக அணிந்து கொண்டதாக “திருமுருகாற்றுப்படையில்” சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் முருகனை வழிபடும் பக்தர்கள் கதம்பப்பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றனர்.

இது போலவே, விஷ்ணு புராணத்திலும் கதம்ப மரத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணனுக்கும் இந்த மலர் மிகவும் பிடிக்கும். இந்துக்களின் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த மலைச் சிகரங்களில் ஒன்றான கோமந்தா சிகரத்தில், கதம்ப மரம் மிக அதிகளவில் காணப்படுகிறது.

கதம்பா மூலிகை இமயமலை அடிவாரங்களில், குறிப்பாக, நேபாளத்தின் கிழக்குப் பகுதி முதல் பர்மா வரையிலுள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. மேலும், இது தென்னகப் பகுதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்றுப் பகுதிகளிலும் இவை மிக நன்றாக விளைகின்றது.

ஆயுர்வேதம்
இந்த மூலிகை ஆண்மைக் கோளாறுகளைப் போக்கி, நலப்படுத்த மிகவும் உதவுகிறது. இந்திரியத்தை அதிகளவில் உற்பத்தி செய்வதுடன்,, பிறப்புறுப்புக் குறைபாடுகளுக்கும் இவை மிகவும் நன்மை பயக்கிறது.

பெண்களின் பிறப்புறுப்பு நோய்கள், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் சிக்கல், இரத்தசோகை, தோல்நோய்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது.

இரத்தச்சிதைவு, விஷத்தன்மைகளுக்கு எதிரான தன்மைகளைத் தோற்றுவிப்பதால் இது மிகவும் உதவுகிறது.

இதன் பழத்தைச் சாறு பிழிந்து, அதனைச் சீரகம், சர்க்கரையுடன் கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட உதவும். இந்த மூலிகை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அசுத்தங்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது.

இந்த மூலிகையின் பூக்களை கஷாயமிட்டு, அதனைக் கொண்டு வாய் கொப்பளித்தால், வயிற்றுப் பிரச்னைகள், ஜீரண மண்டல குறைபாடுகள் குணமடைந்து நலன் ஏற்படும். மேலும், இது சிறுநீரை சீராக வெளியேற்றுவதுடன், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் குறைபாடுகளையும் சீர்ப்படுத்துகிறது.

Post a Comment