Total Pageviews

Wednesday, January 12, 2011

நம்ம விவேகானந்தருக்கு இன்னைக்கு பிறந்தநாள்

இன்று வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்தநாள் அவரை நினைவு கூர்ந்து
இந்தப்பதிவு...........


1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார். 
உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும். 
பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள். இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டார்விவேகானந்தர், செப்டம்பர் 1-ம்தேதி அவர்பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது. பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை. எடுத்த எடுப்பிலேயே ‘சகோதர சகோதரிகளே!’ என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார் என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் முதலில் நடந்தது அதுவல்ல அவர் மூன்று முறை எழுப்பிய பிரணவ ஒலி அங்கிருந்தவர்களைக் கட்டிபோட்டது. செங்காவிச்சிங்கம் நிமிடத்திற்கு ஒரு ஒம்காரமாக சப்தித்த மூன்று நிமிட ஓம்காரம் அமெரிக்கர்களின் அடிச்சக்கரத்தையே ஆட்டம்காண வைத்தது. ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர்.  பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது. 
அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள். இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது, “அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன. அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார். 
விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது…. அவற்றில் அந்தப் பெண்ணும் இருந்தாள்...


அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர். அத்தனை இடங்களுக்கும் அந்தப் பெண் வந்தாள்; விவேகானந்தரின் முழக்கத்தைக் கேட்டாள்; அப்போதும் அவளுக்கு விவேகானந்தரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.‘செயின்ட் லாரன்ஸ்’ என்ற நகரில் உள்ள தீவுப் பூங்காவில் விவேகானந்தர் ஐம்பது நாட்கள் ஓய்வெடுத்தார் அப்போதும அந்தப் பெண் அந்தத் தீவுப் பூங்காவிற்கு ஒவ்வொரு நாளும் வந்தாள். இருப்பினும் விவேகானந்தரை அவளால் தனிமையில் சந்திக்க இயலவில்லை.


அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் பாரீசுக்கு புறப்பட்டார். அமெரிக்க விமானத்தளத்தில் வைத்து அந்தப் பெண் விவேகானந்தரை மடக்கி விட்டாள்! 


“தங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றாள்.கூட்டத்திலிருந்து விலகிய விவேகானந்தர், “சொல்லு! தாயே! என்றார். 
“நான் மெட்காப் நகரில் நடந்த மகளிர் மாநாட்டில் இருந்து உங்களைக் கவனித்து வருகிறேன்.. தனிமையில் சந்தித்துப் பேச பலமுறை மயன்றும் முடியாமல் போயிற்று.. இனியும் காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டேன்". 

“நான் என்ன செய்ய வேண்டும் தாயே” என்றார் விவேகானந்தர்.“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்கு குழந்தை பிறக்கும்.. அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேசுவதற்கு அலைந்து கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண்! 

“தாயே! எனக்கு முப்பது வயது! உனக்கோ சுமார் இருபது வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்து, இருபது வயதைத் தொடுகின்றபோதுதான் அந்தக் குழந்தை அறிவு மிக்கதா? இல்லையா? என்பது தெரியும். அதற்குப் பதிலாக நீ என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே!” என்றார் விவேகானந்தர் 


சிகாகோவிலிருந்து உலகில் பல நாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1897 ஜனவரியில் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லுக்கு வந்தார். அவர் வருவதை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குந்தக்கல் வந்து காத்திருந்தார். 

கப்பலில் வந்து இறங்கிய விவேகானந்தரின் பாதங்கள் முதன்முதலில் தம் தலையில் பட்ட பின்புதான் மண் மீது பட வேண்டும் என்றார் மன்னர். ஆனால் மனித நேயம் கொண்ட விவேகானந்தர் அதற்கு மறுத்துவிட்டார்.   மன்னரோ விவேகானந்தரை வண்டியில் உட்கார வைத்து மாடுகளுக்குப் பதிலாக தாமே வண்டியை இழுத்துச் சென்றார்.  உண்மையான துறவுக்குக் கிடைத்த மரியாதை.


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தனக்குள் விழிப்புணர்வு பெறும்வரை தனக்கு சமாதி நிலை வேண்டாம் என்பதும் அதுவரை தான் மீண்டும் மீண்டும் பிறக்கப்போவதாகவும் சங்கல்பம் செய்து கொண்ட அந்த தூயத் துறவிற்கு, அவருடைய பிறந்த நாளான இன்று யோகயுவகேந்திரா சிரம் தாழ்த்தி வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment