Total Pageviews

Thursday, January 13, 2011

யோகசித்தி

வணக்கம், நண்பர்களே !

நேற்று நெல்லை வானொலியில், யோகம் பற்றிய நேர்காணல். நேயர்களிடம் இருந்து வந்த கேள்விகள் மனதிற்கு மகிழ்ச்சியளித்தது. சுத்தமல்லியில் இருந்து ஒரு நேயர் கேட்ட கேள்வி "யோகப்பயிற்சியால், நீரின் மேல் மிதக்கமுடியுமா?." .ஊடகத்தில் பதில் சொல்ல நேரம் போதாமையால் பதிலை இங்கே பதிவாக்குகிறேன்..........................

பகவான் ராமகிருஷ்ணரிடம் ஒருவர், "பகவான் நான் இருபது வருடங்களாகத் தவம் செய்து நீரின் மேல் நடக்கிற சித்தியைப் பெற்று இருக்கிறேன்.இங்கு வரும்போது கூட ஆற்றின் மேல் நடந்துதான் வந்தேன் " எனக்கூறினார் . .பகவான் அவரைப் பரிதாபமாகப் பார்த்து, அடப்பாவி நாலனா கொடுத்தால் படகுக்காரன் கொண்டு வந்து விட்டு விடுவானே, இதற்காக இருபது வருடங்களை வீணாக்கி விட்டாயே"எனக் கடிந்து கொண்டாராம்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி லும்புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே”
                                                                                    (தாயுமானவர் ஜீவசமாதி )


இந்தப்பாடல் தாயுமானசுவாமியினுடயது. சாமி என்ன சொல்றாரு புரியுதா?
மதம் பிடித்த யானையை அடக்கலாம்,  சிங்கத்தின் மேலேறிக்கொள்ளலாம்.
நீரின்மேல் நடக்கலாம், நெருப்பின் மேல் இருந்து தவம் செய்யலாம். ஆனால் 
மனதை அடக்கி "சும்மா" இருப்பது கஷ்டம்.

யோகத்தால் நமக்குக் கிடைக்கிற பயன் என்ன தெரியுமா? இந்த "சும்மா"
 இருக்கும் திறன். நீரில் மிதப்பதற்கும், வானில் பறப்பதற்கும், விஞ்ஞானத்தைப் 
பயன்படுத்திக்கொண்ட மனிதன். மன நிம்மதியை மட்டும் இன்னும் பெற்ற பாடில்லை. மன நிம்மதிக்காக மகான்களால் கொடுக்கப்பட்ட உள்நிலை விஞ்ஞானம் தான், "யோகம்".

பகவான் ரமணமஹரிஷி, தன்னுடைய உள்ளது நாற்பதில்
      
       "சித்தமாய் உள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்தி பிற
        சித்தி எல்லாஞ் சொப்பனமார் சித்திகளே-நித்திரை விட்
        டோர்ந்தால் அவை மெய்யோ உண்மை நிலைநின்று பொய்ம்மை
        தீர்ந்தார் தியங்குவரோ தேர்."                        

 என்கிறார்.எங்கும், எப்பொழுதும், சித்தமாய், உண்மையாய்ப் பிரகாசித்துக்கொண்டிருக்கும்,உண்மைப் பொருளான ஆத்மாவை உணர்ந்து, அந்த உணர்வில் நிலை பெற்று இருத்தலே பூரண சித்தியாகும். மற்ற சித்திகள் எல்லாம் கனவில் கிடைக்கக்கூடிய சித்திகளுக்கு ஒப்பானதாகும். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டால் கனவு எப்படி பொய் என உணர்ந்து கொள்கிறோமோ, அதுபோல,யோகப்பாதையில் கிடைக்கக் கூடிய சித்திகளும் பொய்யானவைகளே . என்றும் உண்மையாய் உள்ள பொருளை உள்ளபடி உள்ளத்தில் உணர்ந்து உய்வதே உண்மையான சித்தி.

செப்படி வித்தைகற்று இப்படி மயக்குவிட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாச்சலா

                                                                ஓம் தத் சத்

No comments:

Post a Comment