Total Pageviews

Wednesday, March 14, 2012

சிவராத்திரி ஸ்பெஷல்
 யோக யுவ கேந்திரா மையத்தில் நுழையும்போதே "இந்த வருடம் சிவராத்திரி இங்க தான் கொண்டாடப் போறோம் " என்று பேசி கொண்டிருந்தார்கள்.கேட்கும் போதே மகிழ்வாக இருந்தது. வகுப்பில் இந்தத் தகவலை மாஸ்டரே கூறிய போது, மகிழ்வு இரட்டிப்பாகியது .யோக மையத்தின் அருகிலேயே எனது வீடும் இருந்ததால்,மகிழ்வும் அதிகமாகியது.


சிவராத்திரி நாளில் பஜன்ஸ், நாடகம் ,பேச்சு ,வீணை வாசித்தல் ,தியானம் எல்லாம் கலந்து இருக்கும் கூடுதலாக இந்த வருட நிகழ்ச்சியில் கோலாட்டம் சேர்த்துக் கொள்ளலாம் என்று மாஸ்டர் சொல்லியிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது..


மாஸ்டர் சொன்ன வார்த்தைகளை மிக மகிழ்வாக ஏற்று கொண்டு ......இல்லை ......அதற்கும் மேலாக வேத வாக்காக எடுத்துக்கொண்டோம் ,ரம்யா ராஜேந்திரனும், மாஸ்டரும் அனைவருக்கும் கோலாட்டம் கற்பித்துத் தர ,இந்து டீச்சரை ஏற்பாடு செய்து விட்டார்கள் .(இந்து டீச்சர் கலாக்ஷேத்ரத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது) இந்து,வாரத்திற்கு இரண்டு நாட்கள் வந்து ஸ்டெப்ஸ் கற்றுத்தந்தார்கள்.... மையமே கலகலப்பில் இருந்தது........ .


மார்கழி ,தை மாதப் பொழுதுகள் எல்லாம் கோலாட்ட உற்சவத்தில் திளைத்து போய் இருந்தன.எங்களது ஸ்ரீரங்கபாளையமே அழகிய பிருந்தாவனமாய் மாறி இருந்தது.பனிப் பொழிவோடு புது வித மெருகும் கூடிப் போனது.வழி எங்கும் இருந்த புங்கை மரங்களும் கோலாட்ட சகோதரிகளின் வருகைக்காகக் காத்து இருந்தன .இலைகளின் தலையசைப்பில் ஒரு வரவேற்பின் இதம் தென்பட்டது.


மார்கழியும் விரைவாக விடைபெற்றுச் சென்றுவிட்டது .இன்னும் ஒரு மாதம் தான்! விளையாட்டுத்தனம் கொஞ்சம் குறைந்து ,மிக அக்கறையோடு கற்றுக் கொண்டார்கள் .யார் யார் எந்தெந்தப் பாடல்களுக்கு என்று தேர்வு செய்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ,நேர்த்தி செய்யப்பட்டது .மனம் நிறைந்த ஈடுபாட்டுடன் சரியான ஒருங்கிணைவுடன் அழகான முக பாவனையுடன் ,புன் சிதறல்களோடு மிக நளினமாக அவர்கள் ஆடுவதை அருகில் இருந்து பார்க்க பார்க்க ஆஹா ! ஆனந்தம் !

விழாவிற்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது .வீட்டை மறந்து பணிகளைத் துறந்து ,உணவை மறந்து ,உறக்கம் குறைந்து ,இத்தனைக்கும் மேலாகத் தங்களையே மறந்து கோலாட்டத்தில் மூழ்கி முத்துக்கள் எடுத்தனர் சகோதரிகள். வீட்டில் இருக்கும் போது கூடப் பாடல்களை ஹம்மிங் செய்து கொண்டு ,கோலாட்ட ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஒவ்வொருவர் முகத்திலும் சூரியப்பிரகாசம் தான்! அது அவரவர் கண்களில் அலையென அடித்துக்கொண்டிருந்தது.


சிவராத்திரிக்குச் சில தினங்களுக்கு முன்பாக,   கோலாட்ட ஒத்திகையைப் பார்த்த மாஸ்டர், நன்றாக இருக்கிறதென்று சொன்ன பின்பு அவர்களுக்குள் இன்னும் அதிகமான உற்சாகம் குமிழ் விட்டது.


யோக மையத்தில் ரம்யா குழுவினர் கோலாட்டமும்,உமா குழுவினர் பஜன்சும், வலையில் மாஸ்டர் எழுதியிருந்த,ஜென்...பாரதி கதைகளை வாசித்து கல்யாணி குழுவினர் அதனை நாடகமாக்கியதும்,வசனகர்த்தா ஆகியதும், அனைவரும் மாறி மாறி பயிற்சிகள் எடுத்து கொண்டதும்,சிவராத்திரி நன்னாளை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது.


மாஸ்டர் ,அடிக்கடி சொல்வார்கள்........

பண்டிகை என்பது பகல் நேரங்களில் கொண்டாடப்படுவது!

விழாக்கள் என்பது இரவு நேரங்களில் கொண்டாடப்படுவது!


அறியாமை இருளை நீக்கி அறிவு ஒளியை பரவச் செய்யும்,அற்புத விழாக்கள் சிவராத்திரி, நவராத்திரி என்றும் குறிப்பிடுவார்கள்.மேலும் நம்முள் இருக்கும் சக்தியை வெளிபடுத்துவதும் இந்த விழாகாலங்களில் தான் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.

பிப்ரவரி 16ல் விழாவை ஆனந்தா கார்டென்சில் நடத்துவது என முடிவு செய்தார்கள்.ஏற்பாடுகள் வேகமாக நடந்தேறின.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொறுப்புகள் எடுத்து கொண்டு திறம் படச் செய்து முடித்தனர்.விழா களை கட்டிவிட்டது என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.பிப்ரவரி 20 இரவு 7மணிக்கு ஆனந்தா கார்டென்ஸ் சென்ற போது இதற்கு முன் பார்த்த இடம் அடியோடு மாறிப்போயிருந்தது.மேடைக்குப்பின்னே பசுமையான தென்னங்கீற்றுகள் அணி வகுத்து நின்று அழகு சேர்த்தது.இதற்கு நடுவில் சிவலிங்கம் வைக்கப்பட்டு இருந்தது.சுற்றிலும் மலர்கள் பல வித வண்ணங்களில்! சுர மாலைகளும்,வில்வ இலைகளும்,தோரணங்களும் காண்போர் கண்களைக் கவர்ந்தன.


தென்காசியில் இருந்தும்,சிவகாசியில் இருந்தும் வந்த நம் கேந்திரா அன்பர்களை வரவேற்று உபசரித்து உள் அழைத்து வந்து,அமரச்செய்த பின் மிகச்சரியாக 8.௦௦ மணிக்கு விழா தொடங்கியது.திருமதி.மஞ்சுளா அவர்கள் குத்துவிளக்கு ஏற்ற,சிவகாசி ஸ்ரீதர் அன்புடன் வரவேற்க நிகழ்வுகள் தொடர்ந்தன.திருமதி.மஞ்சுளா அவர்களின் இனிமையான வீணை மீட்டலோடு விழா ஆரம்பம் ஆகியது.


சிலர் பேசுவதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கும் இன்னும் சிலரது பேச்சு, மழையில் நனைவது போன்ற சில்லிப்பு தரும்.மழையே பேசினால்! எப்படி இருக்கும்? வர்ஷாவின் பேச்சு -அவையினரைக் கட்டிபோட்டது.


அடுத்து ஹர்ஷாவின் உரை- சிவராத்திரியின் பெருமையை பேசியது.


"விடிய விடிய கண் விழிக்கிறது மட்டும் சிவராத்திரின்னு அர்த்தம் கிடையாது.மனசில விழிப்பு வரணும்"


"விழான்னு சொன்னா-நம்ம உறவுகளை பாக்கறது,அவங்களோடு சேர்ந்து இருப்பது,சேர்ந்து கொண்டாடுறது"


"சிவராத்திரி காலத்தில் அவரை விதை விதைச்சா நவராத்திரி காலத்தில் அவைகள் பல்கிப் பெருகும்"


இப்படி......அழகழகான எண்ணங்களை அருமையா விதைச்சார் ஹர்ஷா!


'ஆடலும் பாடலுமாக விழாக்கள் கொண்டாடப்படுகிறது. உண்மை தான்!ஆனால் மௌனமாக ஒரு விழா கொண்டாப்படுகிறது என்றால் அது சிவராத்திரி தான். எண்ணிறந்த காய்களை,கனிகளை மரம் சுமக்கிறது .அனைவருக்கும் உண்ணத் தருகிறது ஆனால்,அது தன் பசிக்கு எதவும் உண்ணமுடிவதில்லை.பள்ளம் நோக்கி வரும் ஆறு......தன் வழி எங்கும் பாய்ந்து சென்று குளம் ,ஏறி அத்தனையும் நிரப்பிக் கடலில் கலக்கிறது.ஆனால் அது தன் தாகத்திற்கு எதுவும் அருந்த முடிவதில்லை.காலைக்கதிரவன் தன் ஆயிரம் கதிர்களால் உலகம் எங்கும் ஒளி பாய்ச்சுகிறது.தனக்கு ஒளி வேண்டும் என்று எதுவும் கேட்பதில்லை.இயற்கை தனக்காக வாழ்வதில்லை.அது மற்றவர்களுக்காகத் தான் வாழ்கிறது.அதே மாதிரி மனிதர்களும் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்று எடுத்து சொல்வதற்காகவே,சகமனிதர்களின் துன்பங்களை, துயரங்களை,  களைவதற்காகவே இப்படிப்பட்ட விழாக்கள் அமைய வேண்டும்.....
மீனா கவிதை வாசிக்க,ராதிகா ஜோதிர்லிங்க உரை ஆற்றினார்.


"தில்லையுள் கூத்தனை,தென்பாண்டி நாட்டானை


ஆற்று இன்ப வெள்ளமாய் தோற்ற சுடரொளியாய்


போற்றி புகழ்ந்து,மெய் ஞானம் வேண்டியதை கேட்ட பொழுது,


பாட்டின் பொருளுணர்ந்து சிந்தை இனித்தது"


தென்காசி கேந்திரா சகோதரி பங்கஜம் ,இராஜபாளையம் சகோதரிகள் பத்மா ஜெயந்தி குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடல்கள் பல பாடி எங்களை எண்ணங்களற்ற நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

ஸ்ரீமதி.மஞ்சுளாவும்,மகேஷ்வரியும்,வீணை மீட்டி எங்களை அந்த இசையில் நெகிழ வைத்தனர்.

சிவகாசி நன்பர்கள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் சிந்திக்க வைத்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.ஜென் கதைகள்,பாரதி கவிதைகள் இவற்றிலிருந்து முக்கியமான மைய கருத்தை எடுத்துக்கொண்டு.மிக நுட்பமான வார்த்தைகளால் நாடகம் தயாரித்து,பாத்திர பொறுப்பு ஏற்று மிகச்சிறப்பாக நடித்தார்கள்.நாடக இறுதியில் கூறிய விளக்கங்கள் எல்லாம்,போகிற போக்கில் அள்ளித் தெளித்து விட்டு சென்றார் போல் இருந்தது.யதார்த்த உண்மைகளை மிக எளிதாக புரிய வைத்தனர்.இயல்பாக இருப்பதே ஞானம்.இயற்கையும் இறைமையும் ஒன்று தான் என்ற உண்மையும் உணரப் பட்டது.

உலகத்தில் உள்ள ஒரே ஒரு உண்மை-நிச்சயிக்கப்பட்ட உண்மை-மரணம் தான்! அது எப்போது,எப்படி நம்மைத் தொடும் என்று யாராலும் சொல்லிவிட முடியாது.

யோகா,த்யானம் போன்ற அற்புதமான விஷயங்களை காலத்தே அறிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் ஒரு நாடகம் அமைந்திருந்தது.ஒரு சில கால கட்டத்திற்குப் பின் அவற்றைத் தேரிந்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த நேரத்தில்,அவனை மரணம் தழுவி விட்டது.மரணம் நேர்ந்த பின் மாலை,மரியாதை செய்த காட்சி......இயல்பாக இருந்தது.


இருக்கும் போதே இல்லாத நிலைக்கு ஆளாகி, மாலை ஏற்று நடித்த ரேவதிக்கு அனைவரும் தம் பாராட்டுதல்களை,கரவொலிகளின் மூலம் தெரிவித்தனர்.


இந்த சிவராத்திரி பொழுதில் மரணம் பற்றிய சம்பவக் கதைகளே அதிக இடம் பிடித்திருந்தது.


"நான் இருக்கும் வரை மரணம் என்னை தீண்டுவதில்லை,
மரணம் என்னை தொட்ட பிறகு நான் இருக்க போவதில்லை" என்று மாஸ்டர் கூறியது நினைவிற்கு வந்தது.


"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த வகையிலும் எனக்கு மரணம் இல்லை"-கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் பள்ளிச்சென்று மின்னியது.

"நான் இருக்கும் போதே என்னை கேட்டுவிடுங்கள்
நான் இறந்த பின்-என்னால் கேட்க முடியாது"- மாஸ்டரின் முகநூல் வரிகள்

 சந்தோஷமாக நினைத்து பார்த்து கொண்டேன்.


இன்றைய நிகழ்ச்சியில்,சுப்பிரமணிய பாரதியின் 'அருந்தவப் பன்றி'-என்னும் நூலில் இருந்து ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. அருந்தவத்தினால் ஞானியான ராஜா ஏதோ ஒரு தவற்றினால்,முனிவரின் சாபத்திற்கு ஆளாகி பன்றியானார்.விமோசனம் வேண்டி ராஜாவின் மகன் முனிவரை யாசித்தான்.அதற்கு அவர்,உன்னுடைய மகன் உன்னை அழைக்க வரும் போது நீ மீண்டும் ராஜாவாக மாறுவாய் என்று கூறிச்சென்று விடுகிறார்.


இந்த பன்றி வாழ்க்கையில் ராஜாவுடைய நாட்கள் கடந்து கொண்டிருந்தன.ஒரு நாள் ராஜாவின் மகன் அப்பாவை அழைக்க வருகிறான்.அதற்கு அவர் 'இந்த வாழ்க்கை எனக்குப் பழகிப்போய்விட்டது.நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.நீ போய்வா' என்கிறார்.


சில காலம் சென்ற பின், மறுபடியும் அழைக்க வரும்போது 'எனக்குத் திருமனமாகிவிட்டது.சந்தோஷமாக இருக்கிறேன்' என உடன் செல்வதற்கு மறுத்து விடுகிறார்.


இரண்டு,மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மகன் அழைக்க வரும்போது 'நான் இப்போது மனைவி,குழந்தைக் குட்டிகளோடு சந்தோஷமாக இருக்கிறேன்.இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்துப்போய்விட்டது.நீ போய்வா என்று அனுப்பிவிடுகிறார்.'


எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஜமீன்தாரின் கீழ் வேலை பார்க்கும்,அவல நிலை தனக்கு வாயத்ததை பன்றி நிலைக்கு ஒப்பிட்டு காட்டுகிறார் பாரதி.பாரதியை போல் உண்மை உரைக்கும் துணிவு யாருக்கும் வராது.அவர் தன்னையே 'அருந்தவ பன்றி'-என்று கூறிக்கொள்வது வலியும் வேதனையும் தருகிறது.


மேற் கூறியவற்றை கவிதையாக்கி இருந்தார் பாரதி.இவற்றை காட்சியாக்கி ராதாவும்,சித்ராவும் நடித்துக் காட்டியது மிக தத்ரூபமாக இருந்தது. ரமணர் பற்றிய நாடகம் மிக அருமையாக அரங்கேற்றப்பட்டது.

'உயிர்களிடத்து அன்பு வேண்டும் -தெய்வம்
உண்மை யென்று தானறிதல் வேண்டும் '

இப்படியான கருத்துக்கள் பலரின் நட்பின் மூலம் மெய்பிக்கப்பட்டது. ரமணராக பாத்திரமேற்று மெருகு ஊட்டியவர் சிவகாசி அன்பர் நாகராஜ் அவர்கள்.இவரைச் சுற்றிலும் உள்ள ஜீவன்களாக பலர் இருந்து தங்கள் நடிப்பாற்றலை அற்புதமாக வெளிப்படுத்தினர்.

இன்றைய நிகழ்ச்சியில்,நாங்கள் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த கோல்லாட்டக் குழுவினர் நான்முகக்கடவுள் விநாயகரைத்  துதி பாடி ஆடினர்.  ,இதற்கு முன் நடனம் ஆடியதில்லை,மேடை ஏறியதில்லை.இன்று அநாயசமாக ஆடுவதற்கு வழி வகை செய்தது யோக யுவ கேந்திரா தான்! கூடவே எங்கள் இந்து டீச்சரும், கோலாட்டம் இடம் பெற வேண்டும் என்ற மாஸ்டர் சிவா அவர்களின் வார்த்தைகளும் தான் !

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ - கண்ணா !

பாட்டின் போருளுக்கு ஏற்ப 'கோல்கள் ஆடுவோம் '-என்ற பாடலுக்கு குழுவினர் இரண்டாவது முறையாக ஆடி எங்களை மகிழ்வின் எல்லைக்கு அழைத்து சென்றனர்.

மீண்டும் ஒரு கோலாட்டம் கண்களுக்கு விருந்தாய் !

தமிழ்நாட்டில் எப்படி கோலாட்டமோ,அப்படி குஜராத்தில் தாண்டியா ஆட்டம் ! நாம் குஜராத் தாண்டியாவை -இங்கு அமர்ந்த படியே ரசித்துப் பார்த்தோம்.இவர்களின் நடனம் உற்சாகம் மிக்கதாய் இருந்தது.

இன்னுமொரு நிகழ்வாக மீரா பஜன்ஸில் உள்ள ஒரு பாடலுக்கான -ஆடல் ! இதை 1968ல் லதாமங்கேஷ்கர் தேன் குரலில் பாடி இருக்கிறார். இசைக்கு ,நடனத்திற்கு வயது ஏது? எல்லை தான் ஏது? இந்த பாடல் 'ராசலீலா' பற்றியது.கிருஷ்ணன் -ராதா ,கோபிகையர் குழு பரவசமாய் ஆடி பாடுவது !

கிருஷ்ணன் பரிபூர்ண அன்பின் ஸ்வருபமாக ,பரமாத்மாவாக உணரப்படுகிறான்.ராதா ஆழமான அன்பின் தேடலாக ஜீவாத்மாவாக உணரப்படுகிறாள்.

ஆழமான தேடல் -அன்பில் கரைய ,ஜீவாத்மா -பரமாத்மாவில் இணைய பாடி ஆடி ஒன்றிணைவதை இந்தபாடல் மூலம் காட்சிப் படுத்தினார்கள்.அதில் கரைந்து ஒன்றுமற்றுப் போய்விட்டோம் என்பதே உண்மை.

தீபங்கள் கார்த்திகை மாசம் மட்டும் தானா பேசும்?

இந்த மாசி மாசத்திலும் ,நம்முடன் பேசவந்திருக்கின்றன கொஞ்சும் தீபங்கள் !

இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சி செய்து புல்லாங்குழல் இசைக்கு ஏற்ற வண்ணம் அவர்கள் ஆடியது கொள்ளை அழகாய் வசீகரித்தது.

' எல்லாப் புகழும் சத்குரு ஒருவனுக்கே'

இன்றைய நடன நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் எங்கள் நடன இயக்குனர் இந்துவுக்கே !


சிவவாக்கியார் பாடலை மாஸ்டர் சிவா அவர்கள் பாட ,உடன் வேல்விஜயன், டாக்டர் ஹரி,மற்றும் அனைவரும் இணைந்து பாடினோம்.வாத்தியக் கருவிகளின் இசையும் மகிழ்வும் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது .

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ ,

எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்தபண் எழுத்தும் நீ,

கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவைநீ,

நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்!

நாம் யார் ? நாம் எங்கிரூக்கிறோம் என்பதே இல்லாத பேரானந்த நிலை உணர்ந்தோம்.எம்மை விட்டு நாங்கள் வெளிவர,நிறைய நேரம் ஆகியது .

நீர் ,நிலம் ,ஆகாயம் ,காற்று ,நெருப்பு -இதனினும் சிறந்த உறவு வேறு என்ன இருந்து விடப் போகிறது ?

பஞ்ச பூதங்களுக்கு மனமார அன்பும் நன்றியும் சொன்னோம்.


இந்தியா உலகிற்கு அளிக்கும்

ஒரு இனிய உதயம் - அரவிந்தம் !

இன்று ,இந்த இனிமையான சிவராத்திரியில் ஒரு இனிய உதயத்தை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதை விடப்  பெரும் பேறு எனக்கு என்ன வேண்டும் ?

*

திங்களும் ,செவ்வாயும்

இணையப்போகிற தருணம் இது

இருளும் ,வெளிச்சமும்

ஓன்றிணைந்து - மெல்ல

நகருகின்ற அற்புதக்  கணம் இது !

*

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை

நேரே யின்றெனக்குத் தருவாய் - என்று

யோக சித்தியில் -மகாசக்தியிடம் கேட்கிறான் பாரதி.

அவன் தனக்கு மட்டும் வரம் வேண்டவில்லை.

நாட்டு மக்கள் கீர்த்திஎங்கும் ஓங்க

வையத் தலைமை எனக்கு அருள்வாய் என்கிறான் !

*

வரங்கள் பெற -நாம் என்ன செய்ய வேண்டும் ?

நல்ல தவம் செய்ய வேண்டும் .

எத்தனை காலம் ?நமக்குத்  தெரியாது .

சக்தி இருந்தால் அனைத்தும் சாத்தியப்படும்.

சக்தி எல்லையற்றது

நமக்குச்  சக்தி கொடுப்பது காற்று .

வலிமையை ,வளமையை சேர்ப்பதும் காற்று .இதைப் பாடமாக்கி -நம்மை


புடம் போட்டுக் கொண்டிருப்பவர்

நம் மாஸ்டர் சிவா அவர்கள்

*

இன்று நம் மாஸ்டர் மூலம்

ஒருவர் அறிமுகம் ஆக இருக்கிறார்.

*

சக்தி வெள்ளம் என்றால்

ஞாயிறு ஒரு குமிழியாம்.

சக்தி பொய்கை என்றால்

ஞாயிறு ஒரு மலராம் -பாரதி

*

ஆம் ! ஞாயிறு ஒரு மலராய்

அரவிந்தமாய் மலர்ந்திருக்கிறது .

*

தென்பொதிகைச்  சாரலில் இருந்து

புறப்பட்டு வந்திருக்கிறது -தமிழ் அமுதாய் !

*

காற்றாய் ,நெருப்பாய்,விரிகடல் வியப்பாய்

நிர்மல வானாய் நம்முடனே அமர்ந்திருக்கிறது .

*

20 வருஷ பாடங்களை

இருபதே நாட்களில் கற்றுத்தேர்வதும் -

அதை நம்மிடம் பகிர்ந்து கொள்வது என்பதும்

அசாதாரணமானது, அதிசயமானதும் கூட !

*

பேரன்பாய்,பேரானந்தமாய் .

பேரின்பமாய்,பெருமிதத்துடன்

பெருமை பொங்க மௌன அழகாய்

அமர்ந்திருக்கும் அமுதாவிற்கும்

சிவா மாஸ்டர் அவர்களுக்கும் ,

அரவிந்தன் அவர்களுக்கும்

யோகா யுவ கேந்திர மாணவர்கள் சார்பில்

எம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை

பூ மழையாய் சமர்ப்பிக்கிறோம் .

*

வாருங்கள் அரவிந்த்

இது உங்களுக்கான நேரம்

உங்களுக்கானக்  களம்

தாங்கள் கற்றுக் கொண்டதை

எங்களுக்குத் தாருங்கள் 


மெல்லிய இசையின் பின்னணியில் -அரவிந்த் ஆசனங்கள் செய்ய ,அரங்கமே வியந்து நின்றது . சொல்வதற்கு ஏதும் இயலாத பூரிப்பில் கண்கள் பனித்திருந்தது.அமைதியும்,ஆராவாரமும் பின்னிப் பிணைந்து வண்ணக் கோலமாகியது. ஒரு ஆசனம் செய்யும் பொழுது அரவிந்த் சிறிதே தடுமாற ,உடனே சிவா மாஸ்டர் அவன் அருகில் சென்று அமர்ந்து கொள்ள ,அந்த ஆசனத்தை சரி செய்தான் .அந்த சூழலை என்னவென்று சொல்வது ?அதன் பின்,மாஸ்டர் தன்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். ஓவ்வொரு ஆசனம் செய்த முடித்த பின்பு ,அவன் அப்பாவைப் பார்க்க ,அவர் கண்களில் தெரிந்த அன்பும், அரவணைப்பும் .........சொல்ல வார்த்தைகள் இல்லை .பார்வைகளின் பாஷையைப் பூரணமாகப் பார்த்தேன் .ஆம் ! மௌனம் பேசியது.பேசிக் கொண்டிருந்தது .


'என்ன தவம் செய்தனை ! யசோதா' என்ற பாடல் வரிகள் மனசில் தவழ்ந்ததை -எடுத்துச் சொல்ல முடிந்தது.

மீன் குஞ்சுக்கு யார் நீச்சல் கற்றுத் தருவார்கள் ?

யாரும் நீந்தக் கற்று தர வேண்டியதில்லை

அது தானாகவே கத்துக்கும்.

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,மீண்டும் பாரதியின் கவிதை வரிகள் நட்சத்திரங்களாய் வந்து விழுந்தன .

'உச்சிதனை முகர்ந்தால் -கர்வம்

ஓங்கி வளருதடி

மெச்சியுன்னை யூரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி !'

கர்வத்தையும் சிலிர்ப்பையும் ஒரு சேரக் கண்டு இன்புற்றோம்.'எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்கு அளிக்கும் -ஆம்

இந்தியா உலகிற்கு அளிக்கும் -ஆம் ஆம்

இந்தியா உலகிற்கு அளிக்கும்-வாழ்க !'


சிவா மாஸ்டர் அடிக்கடி கூறும் இந்த கவிதை வரிகளையே அரவிந்திற்கும் கூறுகிறேன்.

வாழ்த்துக்கள் அரவிந்த் !ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை பஞ்ச கோஷ த்யானம் மாஸ்டர் அவர்களால் கொடுக்கப்பட்டது.அதில் ஒன்றி இருந்த அனுபவம் அகமும் ,புறமும் மறக்கச் செய்தது.

நிறைவின் நிறைவாக, சிவராத்திரி பற்றிய மாஸ்டர் .சிவா அவர்களின் அன்பு உரை மனசை நிறைத்தது.ரம்யமாய் ,மனோகரமாய் ,அதி மதுரமாய் ,மோன அழகாய் ராத்திரிப் பொழுது எங்களுள் கரைந்தது. காலைப் பனிப் பொழுது, புன்னகையாய்த் தழுவி,வணக்கம் கூறி ,எங்களைக் குளிரச் செய்தது .


என்ன தவம் செய்தோம் நாங்கள் !இப்படி
அழகழகான வரங்கள் பெறுவதற்கு !

நன்றி -இயற்கைக்கு ,இறைமைக்கு ,இன்னிசைக்கு.எங்கோ இருந்துகொண்டு எங்களை வழிநடத்தும் சத்குருனாதனுக்கு......


அன்புடன்,
ஆனந்தி.
இராஜபாளையம்2 comments:

Viji Raja said...

thank u for bringing the picture of sivarathiri.it would be ever green moments in our mind .the credit goes to master & all of the yoga yuva kendra family.awaiting for another occation like this.---UMA VIJAY

Jananiramya said...

Thank u anandhi akka. This article reminds me of each and every incident which took place on shivaratri -the blissful experience.

Post a Comment