Total Pageviews

Saturday, March 10, 2012

கோலாட்டம்


போதக முகத்தோனே
பேரன்னை புதல்வோனே!
ஏரம்ப நாயகனே
கோட்டுமலை பெரியோனே!


பொதிகைமலை பெரியோனே
அகத்திய நாயகனே
குறுந்தடிக் கூத்தாட வந்தோம்
களம் வந்து காத்திடய்யா!!


தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
ஏலேலோ ஆட்டமாடி
ஏலேலந்தம் பாடவந்தோம்!
எழிலான  ஏழு(சக்கரம்)தேசம் 
இறங்கி நாமும் ஓடிவந்தோம்!!


அருமனை அங்காளம்மா
அழகாக பெத்தபுள்ள!
கடம்பங் குச்செடுத்து 
கழியாட்டம் ஆடவந்தோம்!!
கைக்கொரு கழிகொண்டு
எதிராக சோடிபோட்டு!
சித்தர் கூட்டக் கலையிதையே
சிறப்பாக ஆடவந்தோம்!!


தகுதியான தமிழினந்தான்
தரணி போற்றும் நல்லினந்தான்
தகுதியான இக்கலையைக்
குறுந்தடி சிலம்பமென்பார்.

சீதவெற்றம் குச்செடுத்து
சிங்கார உடையுடனே!
சித்தர் கூட்ட குலம் விளங்க
கூட்டமாக ஆடவந்தோம்!!


கொரண்டிக் கழிகொண்டு
தட்டித்தட்டி ஆடயிலே!
கருப்பன் சாமி சலங்கை போல
கலகலன்னு ஒலிக்குதய்யா!!
மாடனுக்கும் இயக்கிக்கும்
வரலாறு சொல்லிவந்தோம்!
வக்கனையா பாட்டெடுத்து
வரிசை போட்டு ஆடிவந்தோம்!!


முடவாட்டுக் கிழங்கை நல்லா
பக்குவமா கிளர்ந்தெடுத்து!
பாபநாசம் உச்சியிலே
பாங்காக வாசம் செய்தோம்!!


அகத்திய ஆசானவர்
தலையேத்தி தந்தபாடம்!
கணுக்கால் சதிராட
அடவுகட்டி ஆடிவந்தோம்!!
உடும்பின் தோலெடுத்து
உலர்ந்து போனபின்னே!
சுட்டெடுத்த மண்பானை
வாயில்தான் கட்டிவச்சோம்!!


கட்டிவச்ச பானையத
உடுக்கக் கட்டை என்போம்!
அதில் வந்த இசையோடு
அழகாக ஆடிவந்தோம்!!


ஒருகையில் கழிஎடுத்து
மறுகையில் துணிய கட்டி!
வட்டமிட்டு ஆடிவந்த
ஒத்தைக்கழி கோலாட்டம்!!
கைக்கொரு கழிஎடுத்து
முன்நெற்றி மண்பார்க்க! 
வளைஞ்சு நெளிஞ்சு ஆடிவந்த
 குறுந்தடிக் கோலாட்டம்!!


உத்தரம் ஒன்னு செஞ்சு
பலவண்ண துணிகள் கட்டி!
வலக்கையில் கழிஎடுத்து
இடக்கையில் துணி பிடித்தோம்!
வட்டமாக கூடிநின்னு
வந்த இசைக்கேற்ப!
கோலாட்டம் அடிக்கையிலே
துணிகளில் பின்னல் விழும்!!


ஆடிவந்த திசைக்கிப்போ
எதிராக அடுத்தகுழு!
நேரெதிரா ஆடயிலே
விழுந்த பின்னல் அவிழ்ந்துவிடும்!!


அழகான இந்த ஆட்டம்
கவர்ந்திழுக்கும் ஆட்டமய்யா!
இதற்கான பெயரதுவே
பின்னல் கோலாட்டம் என்பார்!! 

தாண்டியா என்பதெல்லாம்
தானாக வந்ததல்ல!
எம்கலைய பார்த்துதானே
தருவித்த கலையப்பா!!


'கால்களுக்கும்" "கை"களுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!
சின்னமக்கா பொன்னுமக்கா
சிங்கார கண்ணுமக்கா!
சீரான இக்கலைய
சீரழிக்க வேணாமய்யா!!


break னு சொல்லிக்கிட்டு
நீங்க ஆடும் ஆட்டமெல்லாம்
குறுந்தடிக் கோலாட்டம்
முன்னே எங்கு நிக்குமையா?????

தோளிலே கைபோட்டு
தோழனென இல்லேனாலும்!
கூனிப்போன எங்களைத்தான்
கோமாளி ஆக்காதய்யா!!

ஆன்மீகம் சொல்லும் ஆட்டம்
அறிவறிந்து ஆடும் ஆட்டம்
வழியறிந்த சித்தர் கூட்டம்
வாசியேற ஆடும் ஆட்டம்


தங்குதற்கு "காரவீடு"
தகுதியா இல்லேனாலும்!
தரணியில சித்தர் ஆட்டம்
தரம் தாழ்ந்து போகலய்யா!!

அடுத்த சிவ ராத்திரியில்
அழகாக ஆண்களுமே
ஆடித்தான் காட்டப்போறோம்
அங்கவந்து பாருமையா!!!!!

No comments:

Post a Comment