Total Pageviews

Friday, May 6, 2011

பாதாளக்கரண்டி





கிணற்றில் தொலைந்ததைத்
தேடிச் செல்கிறது
பாதாளக்கரண்டி.

தொலைந்ததெல்லாம்
கிடைத்ததில்லை.
என்றோ தொலைந்தது
எல்லாம் இன்றுதான்
கிடைக்கிறது.

தாத்தா தவறவிட்ட
கண்ணாடி-
பாட்டி தொலைத்த
காசிச் செம்பு-
காக்கா தள்ளிவிட்ட
வெள்ளித் தட்டு
இவை எல்லாம்
தாத்தா பாட்டியே
தொலைந்தபின் தான்
கிடைத்தது.

மெதுவாய்த்துளாவி
தட்டுப்படுகிறதா 
எனத் தேடிக்
கற்பனையில் 
பிடித்தெடுத்து
வெளியில் கொண்டுவர
கண்டிப்பாய் வேண்டும் 
மனதுள்
ஒரு பாதாளக்கரண்டி.

தொலைந்தது 
கிடைக்கலாம்.
கிடைத்தது 
தொலையலாம்.
தேடினால் 
கிடைக்கலாம்.
கிடைக்காமலும் 
போகலாம்.

ஏதோ ஒன்றை 
இழப்பதும்
ஏதோ ஒன்றைப் 
பெறுவதும்தான்
பாதாளக்கரண்டி சொல்லும்
தத்துவம்.

இழந்தது கிடைக்காத போது
கிடைத்தது தரும்
மனமாற்றம்தான்
பாதாளக்கரண்டிபோதிக்கும் 
ஞானம்.

அது போகட்டும்,
உங்களிடம் 
இருக்கிறதா 
பாதாளக்கரண்டி?

1 comment:

velvijayan said...

இருக்கிறது மாஸ்டர் ஆத்மவிசாரம் எண்ணும் பாதாளகரண்டி.

Post a Comment