Total Pageviews

Monday, May 2, 2011

அன்புடன் ஆனந்தி





அன்பிற்கினிய மாஸ்டர் அவர்களுக்கு,


இனிய வணக்கம்.


20-03-11 ல் தங்களது "வலைப்பூக்கள்" புத்தகம் வாசித்தேன். எண்ண வலைகள் மனதை ஆட்கொண்டது.




  • "நானும் அவனோடு" - 

 நேசிப்பின் வியாபகம் தெரிந்தது. "தனிமை என்னைத் தின்னத் தொடங்கியது" - வித்தியாசமான சிதறல் இது. வெறுமை இன்றி வளமை ஏது?.
தனிமை + வெறுமை = எண்ணங்களில் வளமை, செயற்பாடுகளில் செழுமை.


மௌனம் பேசும்


மௌனம் புன்னகைக்கும்


மௌனம் கொண்டாடும்


வேண்டும் போது சாத்தியமாகும் மௌனம்


நிச்சயம் சாத்தியமாகும்.


  • மயிலிறகு - அழகானது.
அன்பான நினைவுகளைப்போல
இறகு தொலைத்த பறவையும் அன்பானதுதான்.


  • ரசிப்பு - ரசிக்க வைத்தது.

  • ஞானம்
"தேடுவதை நிறுத்து


தேடுவது கிடைக்கும்"


நேரில் கேட்டது - இன்று எழுத்துகளில்! வரிவடிவில்!


காற்றில் அலைந்து காகிதத்தில் குடிகொண்டிருக்கிறது.


  • நானும் சூரியனும்-


சூனிய வெளி


சூரியக் கைகள்


துருவங்களின் இடைவெளி


கேள்விகள்


நிகழ்கால உணர்வு


அநித்யமாய் ஒரு ஒளி


ஞாபக ஒளியை மட்டும் பொசிந்து விட்டு


வெறுமையாய் மௌனித்தபடி!


இரண்டு, மூன்று, நான்கு முறை வாசித்தேன்.


நேரில் விளக்கம் பெறுவேன்.


புரிதல் உள்ளது போலும்


அல்லாது போலும் உள்ளது.

  • இன்னும் இருக்கிறேன்-


உறவுகள் சாதகமில்லததால்


உணர்வுகள் புரியாமல் இருப்பதால்


உணவு இறங்காததால்


உறங்கவும் முடியாததால்


காலத்தைக் கரைக்கிறீர்கள்- கவிதைகளில்!


வினாடிகளில்-அல்ல


ஒவ்வொரு வினாடியிலும் மரணிக்கிறீர்கள்!


மனமரணம்- காலத்தோடு ஒன்று படுகிறது


அது முரண்டு பிடிக்காது.


  • நானே முதல் குற்றவாளி-


நீங்கள் குற்றவாளி அல்ல


விழிப்பு பெற்ற உணர்வுகள்


இன்னும் நிறைய எழுதச் சொல்லும்!


இன்னும் நிறையப் படச் சொல்லும்!


யாசிக்கும் கனவுகளும்,


யோசிக்கும் நினைவுகளும்


இன்னும் நிறைய கவிதைகள் தரும்.


இன்னும் வாழும் காலங்களில்


வாழ்க்கை வசமாகிப் போகும்.




இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை அனைத்தும் அகம் சார்ந்தவை என்றாலும், இவை பொதுவானதாக, அனைவருக்கும் உகந்ததாக ஏற்புடையதாக உள்ளது.


சிவா மாஸ்டரிடமிருந்து கவிதைகளா!? எதிர்பார்க்கவேயில்லை. எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பார்க்காதவை கிடைக்கும்போது மனம் அடையும் ஆனந்தத்திற்கு இணை ஏது?




மாஸ்டர்! உங்கள் கவிதைகளை வாசித்தேன் என்பதைவிட, அந்தக் கவிதைகளில் வசித்தேன் என்று சொல்லலாம்.




நேசிப்பின் உச்ச மிகுதிதானே கவிதைகள்!


புதுமழையாய்..... புதுப்புனலாய்......பல்கி பெருகட்டும்!


மரமென வேரோடி....... கிளைகள் விரித்து.........பூத்துக் குலுங்கட்டும்!


தேடி வருவோருக்கு நிழலாய்.....நாடி கேட்போருக்கு வழித்துணையாய்....


நல்ல ஆறுதலாய் அமையட்டும் கவிதைகள்!








அன்பிற்கு நிகர் அன்பு அன்றி வேறென்ன!

"அன்பிற் சிறந்த தவமில்லை"



                                                                                                                    அன்புடன் ஆனந்தி


                                                                                                                               30-03-11

1 comment:

gayathri said...

அற்புதம் ஆனந்தி அக்கா.

Post a Comment