Total Pageviews

Sunday, May 29, 2011

சிட்டுக்குருவி





ஏனிந்தக் குருவியை

இன்னும் 

காணோம்

எனக்கு மகா செல்லம் அது

பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.


சின்ன இறக்கைகளில்

கறுப்புப்கோடு தெரியும்.

கண் மட்டும்

கண்ணாடிக்கல் மாதிரி

வெளிச்சத் துறுதுறுக்கும்.

உரிமையாய் கூடத்தின்

உள்ளே நுழைந்து நடக்கும்.


புத்தகம் ஒதுக்கி

அதையே கவனிக்கும் என்னை

அலட்சியப்படுத்தும்.


மாடி வெயிலில்

என் வேட்டியில் காயும்

வடகத்தை அலகால் நெம்புதல்,


தோல் உரிக்காது

நெல்லை விழுங்குதல்,

துணிக்கொடியில் கால் பற்றிக் 

காற்று வாங்குதல்,


அறைக் கண்ணாடியில்

தன்னைத் தானே 

கொத்திக் கொள்ளுதல்

அதற்குப் பிடிக்கும்.

நான் இறைக்கும்

தானியமணிகளை

அழகு பார்த்துத் தின்னும்

ரசனாவாதி.


ஏனிந்தக் குருவியை

இன்னும் காணோம்

அதுவரும் மாலை

மெதுவாய் நகருதே

கீழ்வானப் பரப்பில்

கண் விசிறித் தேடினும்

காணவில்லை, 

எங்கு போச்சோ

திடுமெனக் காதில் 

தித்தித்தது அதன் கீச்சுக்குரல்

ஜன்னல் பிளவில்

உன்னிப் பார்த்தால்

அடுத்த வீட்டு முற்றத்தில் 

மற்றொருவன் இடும் 

தானியம் பொறுக்கி

அழகு பார்க்கும் என் குருவி......


"பிசைக்காரத் தானியம் 

அதற்குப் பிடிக்கவில்லையாம்".


சிட்டுக்குருவி மற்றுமொருநாள் 

என் வீடு தேடி வரக்கூடும் 

ஆனால் 

எனக்குள் இருக்கும் 

கடவுள் காணாமல் போயிருந்தால்?..........

No comments:

Post a Comment