Total Pageviews

Monday, May 30, 2011

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்







பாஞ்சாலி அந்தக் காட்டையும் தன்னையும் ஒன்றாகவே உணர்ந்தாள். கதிரவனின் சூடு கொஞ்சம்கூடப் புகுந்துவிடாதபடி குளிர்ச்சியாய் இருந்தது அந்தக் காடு.    காடு தன் குளிர்ச்சியை பாஞ்சாலிக்குள்ளும் இறக்கியது. பாஞ்சாலியின் மனம் எங்கெங்கோ ஓடத்துவங்கியது.




காடு எப்போதுமே ஒரு ஆச்சர்யமான, மாய அழகுடன் கர்வம் கொண்டிருக்கிறது. கட்டுப்பாடில்லாத தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே... சுதந்திரத் தென்றலைப் பரப்பிக்கொண்டே... காடு தனது அழகை யாரிடமும் அடகு வைப்பதில்லை... எல்லோரையும் தன்னுள் கவர்ந்து கொள்கிறது.


பாஞ்சாலி, ஏனோ அன்று தன்னுள் அதிகமான கர்வம் கொண்டிருந்தாள். நான் அரசி... என் கணவர்களே எனக்குப் பணியாட்களாகவும் இருக்கிறார்கள்... "நான்" இடும் கட்டளைக்காய் காத்திருக்கும் கணவர்கள் ஐவருக்குள்ளும் என் பாசத்தை நான் ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். ஐந்து பேர்... ஐந்து பேர்! என் கணவர்கள்.


அவளுள் ஒளிந்து எப்போதும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கும் அந்தக் கோபத்தீ அன்று சற்றே சாம்பல் பூத்திருந்தது. அன்புக்காக அவள் மனம் ஏங்கியது அர்ஜுனனை அவள் எதிர்பார்த்திருந்தாள். அழகன்! கம்பீரன்! பௌருஷத்தின் பொக்கிஷங்களைத் தனக்குள் முதன்முதல் திறந்துவிட்டவன்!.


.........அர்ஜுனன் இன்னும் சற்று நேரத்திர்கெல்லாம் வந்துவிடுவான். யோசனைகள் உந்தித்தள்ள காட்டில் வெகுதூரம் வந்துவிட்டாள்.


அதோ... அதோ... மதங்கொண்டெழுந்த ஆண்யானை போல் அசைந்து வருகிறான் அர்ஜுனன்.


"பாஞ்சாலி! என்ன இது இவ்வளவு தூரம் நடந்து வந்துவிட்டாய்? உன் முகமும் மிகவும் பொலிவுடன் இருக்கின்றதே!" வாஞ்சையுடன் கரம்பற்றிய பாஞ்சாலியுடன் அர்ஜுனன் கரம்கோர்த்து நடக்கத் துவங்கினான்.


'இவனுக்கு மட்டுமே உரிமையாக இருக்க வேண்டியவள்...ஹ்ஹ்ம்ம்ம்!' அவளுள் மீண்டும் அந்தத்தீ சாம்பல் உதறக் காத்திருந்தது.  


 'பகிர்ந்து கொள்ளுங்கள்!'    
       
           குந்தியின் வார்த்தைகள் இப்போது ஒலிப்பதைப்போல      
 .         பாஞ்சாலி உணர்ந்தாள்


காதலுஞ்சரி... தாபமுஞ்சரி... கோபமுஞ்சரி....பாஞ்சாலி எப்போதுமே தீ போலத்தான்... எதுவுமே ஒரு காட்டுத் தீ போலத்தான் அவளுள் பரவும். தீயில் பிறந்தவள் அல்லவா!


காடு அர்ஜூனனுக்குள்ளும் ஒரு பாசத்தை விசிறிவிட்டுக் கொண்டிருந்தது. பாஞ்சாலி எது சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருந்தானவன். நடந்து கொண்டிருப்பது விதியை நோக்கி என்பதறியாமல் இருவரும் நடந்தார்கள். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் சுற்றி கொண்டே இருந்த பாஞ்சாலியின் கண்களில் விழுந்து சிரிக்கத்துவங்கியது அந்த நெல்லிக்கனி. உயரத்தில் ஒற்றையாய்....!


          "அர்ஜுனா! அந்த நெல்லிக்கனியைப் பாரேன்!      
           ......................அழகாக இல்லை?"


"உனக்கு வேண்டுமா பாஞ்சாலி? இதோ பறித்துத் தருகிறேன்!"


அர்ஜுனன் நினைத்தவுடன் செய்து முடித்தது காண்டீபம்! அறுந்து விழுந்த நெல்லிக்கனியை பொறுக்கக் குனிந்த அர்ஜூனனின் காதுகளில் விழுந்தது அந்த "ஐய்யோ!"


விறகு சுமந்துவந்து கொண்டிருந்த அமித்திர ரிஷியின் சீடன் பதறத் தொடங்கினான். "பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்... அதுவும் இந்த நெல்லிக்கனி மட்டும்தானே குருதேவனின் உணவு! அவருக்கென்று மட்டுமே படைக்கப்பட்டதை வீழ்த்தி விட்டீர்களே! அவர்வந்து சபிப்பாரே! உம்மைப்பார்த்தால் அரசகுலம்போல் தோன்றுகிறது. ஏன் இந்தப் புத்தி உமக்கு? கண்ணில் கண்டதெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ளும் நாகரீகவான்களின் புத்தியை காட்டுக்கு வெளியேயே கழற்றிவைத்து வரக்கூடாதா? என்ன செய்யப் போகிறீர் இப்போது?"


அர்ஜூனனும் பாஞ்சாலியும் பதறித்தான் போனார்கள். செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். தர்மனுக்கும் செய்தி போனது. தம்பிகளோடு வந்து சேர்ந்த தர்மனும் குழம்பித் தவிக்க...


"அவசர போலிஸ்,ஆபத்பாந்தவன்... கண்ணனன்றி வேறு யார் இருக்கிறார் நம்மைக்காக்க?'      இது அனைத்தும் அறிந்த சஹாதேவனின் வார்த்தை.


பதறத்துவங்கும் போதெல்லாம் பாஞ்சாலியின் மனதில் பழைய நெருப்பும் சேர்ந்தே விசிறப்படும். இப்போதும்! குருவம்சத்தில் மணம் முடித்த எல்லாப் பெண்களுமே பாவப்பட்ட ஜீவன்கள் போல! தானும்... தன்னால்தான் இன்றைய பிரச்சினை எனினும் ஏன் வனம்புக நேர்ந்தது? புகுந்திராவிட்டால்..........


அர்ஜூனனைக் காதலித்தவளை ஐவருக்கும் மனைவியாக இருக்கச் சொல்லும்போது நானும் இதோ இந்தப் பழம் மாதிரித்தானே கிடந்தேன்! என் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு... சீந்துவாரின்றி... இந்த உலகம் ஆண்களால்தானே நிறைந்திருக்கின்றது?


குந்தியும்தானே துணைபோனாள்? மறக்கமுடியுமா அந்த வார்த்தைகளை... "பகிர்ந்துகொள்ளுங்கள்..." !
கல்யாணத்துக்கு முன்னரே கதிரவனால் கன்னித்தன்மை கழிக்கப்பட்டுக் கர்ணனைப் பெற்று அவனையும் தூக்கி வீசியபோதே பெண்மையின் உணர்வுகளையும் கழற்றி வைத்துவிட்டாள் போலும்! இல்லாவிடில் என்னைப் புரிந்திருப்பாள்.ஐவரையும் காலம் போகப்போக ஏற்றுக் கொள்ளத்துவங்கினாலும் என்னுள் அந்தத்தீ ஏன் இன்னும்...?—இது பாஞ்சாலி


பல்வேறு திசைகளிலும் சுழலத்துவங்கிய மனக்காற்றாடிக்கு அணை போட்டது கபடக்கண்ணனின் வருகை. விவரம் கேட்டறிந்தவன் கைகளால் முகவாய்க்கட்டைக்கு சிறிது நேரம் முட்டுக்கொடுத்திருந்தான். பின் வழக்கமான விஷமப் புன்னகையுடன் பேசத்துவங்கினான் விதியின் வேடிக்கை புரிந்தவனாய்.


"இதோ பார் தர்மா! தர்மம் எப்போதும் தனக்குப் பிடித்தவருடன் விளையாடிப் பார்ப்பதையே பொழுதுபோக்காய் வைத்திருக்கின்றது! இப்போது மீண்டும் உன் முறை. ஆட்டத்தைத் துவங்கியாயிற்று. நீதான் முடித்துவைக்க வேண்டும்!"


"இது என்ன சோதனை பரந்தாமா! என்ன செய்யச் சொல்கிறாய் என்னை?" தர்மனின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் சற்றே நடுங்கின.


"ஒன்றும் பயப்படாதே தர்மா! இது அமித்திரமுனிவருக்குச் சொந்தமான கனி. அவர் வருவதற்குள் ஒட்டவைக்க வேண்டும். ஒரே உபாயம்தான் இருக்கிறது"
          "சொல் கண்ணா! செய்கிறோம். பிரச்சினை தீர்ந்தால் சரி"
"கடினமானது ஒன்றுமில்லை! “உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்” நீங்கள் ஒவ்வொருவரும் உம் மனதில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள். இதுதான் உபாயம். நீங்கள் சொல்லச் சொல்ல கனி தானாகவே மேலேறும்.... ஒட்டிக்கொள்ளும்"


கண்ணன் பாஞ்சாலியை ஓரக்கண்ணால் பார்த்து லேசாய் சிரித்துக்கொண்டே சொன்ன கணத்தில் புரிந்து போனது பாஞ்சாலிக்குக்கு 'இது தனக்கு வைக்கப்பட்ட சோதனை' என்று. சிந்தனையில் ஆழ்ந்தாள்.


தருமன் மெல்ல வாய்திறந்தான்.


"நாடுநகரம் ஆளவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை கண்ணா!...."


மீதி ஐவரும் லேசாய்த் திடுக்கிடத் தொடர்ந்தான்... " நான் ஜெயிக்கவேண்டாம்.... எது தர்மமோ அது எப்போதும் ஜெயிக்க வேண்டும்"


'தர்மம்.... நீயா தர்மா தர்மம் பேசுவது! ஒரு பெண்ணின் காதலை வலுக்கட்டாயமாய் வரவழைத்த நீயா?' பாஞ்சாலி மனதில் தீ லேசாக சாம்பல் விலக்கி எட்டிப் பார்த்தது.


பீமன் சொன்னான் " பரந்தாமா! என்றும் நான் பிறன்மனை வேண்டேன். பிறர்வசை வேண்டேன்! பிறர் துயர் என் துயராகக் கொள்ளவே விரும்பினேன்!"


பாஞ்சாலி மனதுக்குள் புன்னகைத்தாள்


வெட்கத்தை விட்டுப் புகழ் மீது தனக்குள்ள போதையை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்டான் அர்ஜுனன்.




" எத்தனை செல்வம் இருப்பினும் எத்தனை பலம் இருப்பினும், கல்வியின், ஞானத்தின் நிழல்படாதோரை என்றும் மதியேன் நான்" என நகுலனும், 


குந்தி என் தாயில்லை, தருமன் என் சகோதரன் இல்லை, பாஞ்சாலி என் மனைவி இல்லை, சத்தியமே தாய், தருமமே சகோதரன், சாந்தமே மனைவி என அணுகுண்டுகளை அடுக்கினான் அறிவாளி சஹாதேவன்.


கபடக் கண்ணன் பாஞ்சாலியிடம் திரும்பினான். திரௌபதி மனதில் தீ சடசடவென எரியத் தொடங்கியது.


"பலசாலிகளும், ஞானவான்களும், அன்பு மிக்கவர்களுமான ஐவரைக் கணவராகப் பெற்ற நான் அவர்கள் நன்மைதவிர வேறேது நினைக்கப்போகிறேன் கண்ணா?"


நெல்லிக்கனி அசையாதிருந்தது.


மாயக் கண்ணன் புன்னகைத்தான். "ஏன் பாஞ்சாலி... பொய் சொல்கிறாய்" வார்த்தைகளை கனமாக இறக்கினான்.


பாஞ்சாலியின் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் கணவர்மார்களைப் பார்த்தாள். லேசாய்ப் பெருமூச்சும், குரூரமும் கலந்தெழ மெல்ல... மெல்ல வார்த்தைகளை எண்ணிக் கோர்க்கத் துவங்கினாள். காட்டுத்தீ பரவியது...


"ஐந்து கணவன்மார்களும் என் ஐந்து புலன்கள் போலத்தான் அண்ணா! ஆனாலும் மனிதர் ஆறாம் அறிவை நாடி ஏங்குவதுபோல என் மனமும் ஆறாவதாய் ஒருவனுக்காய் ஏங்குகிறதே.... என்ன செய்வேன்?!"


விண்ணதிர, மண்ணதிர கபடக் கண்ணன் சிரிக்கிறான்.
அண்ணண்தம்பி ஐவரும் சிலையாகினர்....அவர்களது ஆண்மையின் கர்வம் செத்திருந்தது...


அதன்பின் பாஞ்சாலியையைத் தொடும்போதெல்லாம் அவர்கள் இறந்து இறந்து உயிர்ப்பிக்கப்படுவதே விதிக்கப்பட்டதானது.


          அது சரி நண்பர்களே!
           பாஞ்சாலி தேடிய ஆறாவது கணவன் யாரென்பது
           உங்களுக்குப் புரிகிறதா?  











5 comments:

Viji Raja said...

master, is it karnan?

Yoga Yuva Kendra said...

ஜமாய்ச்சிட்டீங்க விஜிராஜா, அது கர்ணன் தான். மனித உடற்கூறில் கர்ணன் என்பது சுழுமுனை நாடி.

Viji Raja said...

Master,what does Dharma,Bhima,Arjuna,Nakula,Sahadeva represent in our body?please explain.

AK said...

Yes, I know who the sixth person Panjali was after, but only because I was lucky enough to attend one of your speeches.

During your speech, I was particulary impressed with the way you kept the audience spellbound with your interesting and fast paced flow of language. Now, after reading this article, I find your writing skills are as good if not better.

I have subscribed your blog and will, henceforth, be a regular reader.

Though, you disclosed what panjali's secret was (in your speech), you strode away from saying about the secrets of the five pandavas. Now that I know those from this article, thats another mystery solved.

Thanks for the article.

sm.sakthivel. said...

sariyathan irukirathu.makkal unarnthal nallathuthan.

Post a Comment