Total Pageviews

Sunday, July 24, 2011

தொட்டுக்காட்டாத வித்தை......


பொதுவாக சித்தர்கள் யோகத்தையும், மருத்துவத்தையும் மறை பொருளாக, குளுக்குறியாகவே சொல்லிவைத்துள்ளனர்.   அதன் நோக்கம்,   தகுதி உள்ளவர்கள் மட்டுமே இதனை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். இந்த அரிய பொக்கிஷங்கள் தீயவர்களிடம் கிடைத்து, அழிந்து விடக்கூடாது என்பதில் யோக குருமார்கள் மிக்க கவனத்துடன் இருந்திருக்கின்றனர்.  அத்தகைய பரிபாஷையுடன் கூடிய கருத்துக்களைக் குருமார்களின் வழிகாட்டுதலுடனேயே புரிந்து கொள்ளமுடியும்.    இதைத்தான் "தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்கிறார்கள்.

உதாரணமாக ஒளவையாரின் ஒரு பாடலைப்பார்க்கலாம்.

நல்ல வாக்கு சித்தியைப் பெறவும்,   அசையாத மனத்தைப் பெறவும்,  தாமரை லெட்சுமியின் கடைக்கண் கடாட்சம் பெறவும்,     ஓர் அருமருந்தினை ஔவையார் அறிமுகப் படுத்துகிறார்.   எல்லோருக்கும் தெரிந்த பழக்கமான பாடல்தான்! 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார் வார் தமக்கு. 

என்ன நண்பர்களே!  இதில் எங்கே மருந்து இருக்கிறது என்று தானே  குழம்புகிறீர்கள்?
 

மேலோட்டமாகப் பார்த்தால் மூல முதல்வனை, விநாயகனைப் பூக்கொண்டு அர்ச்சித்தால் நல்ல வாக்கு சித்தியும், மாமலராள் லெட்சுமியின் அருளும் கிடைக்கும் எனக் கூறுவது போலத் தோன்றும்.

ஆனால் இந்த பாடலின் சூட்சுமம் அதுவல்ல. துப்பார் என்றால் தேன். (தேனீயால் துப்பப்பட்ட மது).    திரு என்றால் திருவிசை என சித்தர்களால் மறை பொருளாகக் கூறப்பட்ட துளசி,  மேனி என்றால் குப்பை மேனி(இதற்கு பூனை வணங்கி என மற்றொரு பெயரும் உண்டு).  தும்பி என்றால் தும்பை.  கையான் என்றால் கரிசிலாங்கண்ணி,   பாதம் என்றால் சுவாசம்.

துளசி, குப்பைமேனி, தும்பைச் செடி, கரிசிலாங்கண்ணி போன்றவற்றை சமூலமாக(சமூலம் என்றால் ஒரு செடியின் இலை, தண்டு,  பூ, காய்,  வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து, இவற்றிலிருந்து முறைப்படி செய்யப்பட்ட ஒளஷதத்தை உண்டு,  தப்பாமல் பிராணயாமப்பயிற்சி செய்பவர்களுக்கு சரஸ்வதியின் அருளான வாக்கும்,  லெட்சுமியின் அருளான பொருளும் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும்.   

சித்தர்கள் தமது பாடல்களைப் பரிபாஷையாகவேக் கூறியிருக்கிறார்கள்.  இந்த பரிபாஷைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அந்தக் குறிப்பிட்ட சித்தரின் நிகண்டுகளைப் படித்து மனப்பாடம் செய்துகொள்ள வேண்டியதிருக்கும்.  மேலும் மூலிகைகளின் குணத்தை நன்குத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். (நிகண்டு என்பது ஒரே பொருளைக் குறிக்கும் பல பெயர்களைக் கொண்ட சித்த பரிபாஷைத்தொகுப்பு)

எடுத்துக்காட்டாக போகர் பாடல்களைப் படிக்க போகர் நிகண்டு படித்து தேர்ந்திருக்க வேண்டும்.  போகரின் ஒரு பாடலைப் பார்ப்போமா?
 


யானைக்கண் ஒருபிடியும் அரசன் விரோதி இளம்பிஞ்சும்-கானக் குதிரை மேற்தோலும் காலில் பிடியாய் மாட்டியதும் தாயைக்கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல் தமிழும் வடுகும் குணமாகும். 

என்ன விடுகதை மாதிரி இருக்கா?
 யானையைப் போல பலம் கொடுப்பதாலும், இதனுடைய பழம் யானைக்கண்ணைப் போல இருப்பதாலும்,  சித்தர்களுடைய பரிபாஷையில் அத்திப்பழத்திற்கு யானைக்கண் என்று பெயர். 

பழங்களின் அரசன் எலுமிச்சை, எலுமிச்சைப் பழத்தின் எதிரி புளி,
 

நன்கு பழுத்த மாம்பழங்களை அசைக்கும்போது கொட்டைகளில் உள்ளிருக்கும் பருப்பு தனியாக ஆடும்தானே!........ காட்டிலுள்ள மாமரத்தில், மொத்த மாம்பழங்களும் காற்றில் ஆடும்போது குதிரைகள் ஓடுவதுபோல சப்தம் வருமாம். எனவே மாம்பழத்திற்கு கானக்குதிரை என்றுபெயர்.கானக் குதிரை என்றால் அமுக்கிரா கிழங்கு எனக்கூறுவோரும் உண்டு. ஆனால் அமுக்கிராக் கிழங்கை அஸ்வம், குதிரை என்றுதான் சித்தர்கள் கூறியுள்ளனர்.எனவே கானக் குதிரை என்பது மாம்பழமே. 

விளாம்பிசின் காலில் ஒட்டியதென்றால் அவ்வளவு எளிதாகப் போகாது. கொஞ்சம் தோலையும் பிய்த்துக்கொண்டுதான் போகும். எனவே இதனைக் காலில் பிடியாய் மாட்டியது என்கின்றனர்.   கடைசியாகத் தாயைக்கொன்றான் பூ என்றால் என்னவென்று பார்ப்போமா????...... 

அட..... அது நம்ம வாழை மரந்தாங்க!   பக்கக்கண் வந்தவுடன் தாய்மரம் இறந்து விடுகிறதல்லவா? அதனால் வாழைப்பூவிற்கே தாயைக்கொன்றான் பூ எனப்பெயர். 
         

 "அத்திப்பழம் ஒருபிடியும், புளியம்பிஞ்சும், மாம்பழத்தோலும்,   மற்றும் விளாம்பிசினையும் வாழைப்பூச்சாரில் அரைத்து உண்டால் தமிழ் நாட்டிலும், வடுகு எனக் கூறப்படும் ஆந்திராவிலும் காணக்கூடிய வெட்டை நோயைத் தீர்க்கலாம்"



போதுமடா சாமின்னு தலை சுத்துதா?.............. “அவனருளாலே அவன்தாழ் பணிந்து” என்பார்களே அதுபோல சித்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள சித்த குருமார்களின் துணைவேண்டும். 
 

“தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது"







வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இலை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்கெனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே!


4 comments:

gayathri said...

இத்தனை இறகசியங்களா............மிக அற்புதம் மாஸ்டர்

Yoga Yuva Kendra said...

நன்றி

manjushiva said...

engalukum sidhaguru kidaika arulpurintha sathguruvirku koodanu koodi nandrigal

Ram kumar said...

very intresting sir. thanq

Post a Comment