Total Pageviews

Saturday, July 9, 2011

மனத்தோடு கிளத்தல்



"ஆத்மா விசாரமென்கிற பெயரில் தினமும் என்னை தொந்தரவு செய்கிறாயே.... உனக்கு என்னதான் வேண்டும்?"

"ஏ..மனமே உன்னோடு சில நிமிடங்கள் தனியாக பேச வேண்டும்.."



"ம்ம்ம்ம்ம்ம்.......நான் ரொம்ப பிஸி. நிறைய நினைக்க வேண்டியதிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை...... தினம், தினம் என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாயே,  அதற்காகவாவது உன்னிடம் கொஞ்ச நேரம் பேசலாம் ......வா..வா...எனக்கும் கொஞ்சம் போரடிக்கிறது.."


"என்னது....! மனதுக்கே போர் அடிக்கிறதா..?"



"இதென்னப்பா கேள்வி!  திருநெல்வேலிக்கே அல்வாவா என்கிற மாதிரி..? மனதுக்குதான் ரொம்ப போர் அடிக்கும்.."

"சரி சரி ...போரடித்தால் என்ன செய்வாய்,,,?"



"இது ராணுவ ரகசியம்.....இருந்தாலும் உனக்கு சொல்கிறேன்.....மனித உடலை திமர வைப்பேன். பந்தத்தில் சிக்க வைப்பேன். அதன் தொடர் விளைவாக பிற மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் தாக்க வருகிற கரடியாகத் தோன்ற வைப்பேன். சில உதடுகளில் நிக்கோடின் அரிப்பைத் தூண்டுவேன். சில நுரையீரல்களுக்கு 'டாஸ்மாக்' வாசனை தேவைப்படும்.சிலருக்குப் புத்தகம். சிலருக்கு டி.வி., சிலருக்கு செல்போன், சிலருக்கு இன்டர்நெட்,..,சிலருக்குத் தூக்க மாத்திரை..இப்படி நிறைய இருக்கிறது.."



"மனமே, நீ ஒரு மாபெரும் ஆற்றல். மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவு. ஒவ்வொரு அறிவும் தாம் செயல்பட ஒரு ஊடகம் வைத்திருப்பது போல். சிந்திக்கும் பகுத்தறிவான நீ, வலது மூளையும் இடது மூளையும் கட்டப்பட்ட கபாலத்தேரின் உச்சியில் சாரதியாய் உட்கார்ந்திருக்கிறாய். என்றெல்லாம் ஞானியர் சொல்கிறார்களே .......அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாய்..?"


"வியாபாரம் செய்கிறேன்"


"அட!.....என்ன வியாபாரம்?"


""எண்ண"..வியாபாரம். என் கடை "எண்ணக்கடை". உடல் செயல்வடிவமானது.உயிர் ஒளிவடிவமானது. மனமாகிய நானோ எண்ண வடிவமானவன். என் பணி கண்டதையும் எண்ணிக்கிடப்பதே."


"இந்த வியாபாரம் நல்லாயிருக்கே!....உன் வாடிக்கையாளர்கள் யார்......யார்?"



"உயிருள்ள உடல் என்னுடைய main dealer. புலன்கள் sub-dealer. செல்கள் என் நுகர்வோர்.."


"எண்ணங்களை வாங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள்..?"



"எண்ணங்களைச் செயலாக்கிப் பொருளாய் மாற்றுகிறார்கள். புதிய கொள்கையையோ, கருத்தையோ உருவாக்குகிறார்கள், மொழியாகப் பேசுகிறார்கள்.."


"சரி... சரி....இதில் உனக்கென்ன லாபம்..?"



"எனக்கு கிடைக்கும் திருப்திதான் லாபம். திருப்தி கிடைக்காவிட்டால் நஷ்டம்.."


"லாபம் வந்தால் என்ன செய்வாய்..? நஷ்டம் வந்தால் என்ன செய்வாய்..?"



"அதையும் எண்ணங்களாகவே மாற்றிவிடுவேன். லாபம் எனில் ஆணவச்சாயம் பூசி அகங்காரமாயும், நட்டம் எனில் சோகச்சாயம் பூசி விரக்தியான எண்ணங்களாகவும் மாற்றி விடுவேன்.நான் தூண்டில் போட்டு அதில் சிக்காதவர்களே கிடையாது. புரியுதா.....இதுதான் என் இயல்பு,,"


"உனது இயல்பை , மனிதர்களாகிய எங்களால் கட்டுப்படுத்த முடியாதா..?"



"அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது நீங்கள்தான். காரணம்..என்னை எதுவாக நினைக்கிறீர்களோ..நான் அதுவாகவே மாறிவிடுவேன். நினைத்தவர்களையும் மாற்றிவிடுவேன்."


"நல்லதே நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்,..?"


"நல்லதை நினைக்க வேண்டும்,."

"நல்லதை நினைப்பது உன் வேலை இல்லையா?.."



"நல்லைவைகள் மிக மிக உயரத்தில் இருக்கின்றன. அவ்விடத்திற்கு சென்று நான் கொள்முதல் செய்துவரும் வரை புலன்கள் பொறுப்பது இல்லை. அதனால்தான் தாழ்வான நிலையில் உள்ள தரமற்ற எண்ணக்களைத் தருகிறேன்."


"தரமற்ற எண்ணங்கள் என்றால்..?"



"உயரத்தில் உள்ளவை உன்னதங்கள்.என் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவையோ..கோபம்,எரிச்சல்,சலிப்பு,சோம்பல், விரக்தி, தற்கொலை.."


"அய்யோ.."



"என்ன அய்யோ? தலைவர்களூக்காக தீ குளித்தவர்கள்,நாக்கை வெட்டித் தங்கத் தலைவிக்காக உண்டியலில் போட்டவர்கள், தீர்க்க முடியாத கடனைத் தண்டவாளத்தில் அடைத்தவர்கள், நினைத்த காதல் நிறைவேறாமல் மலையிலிருந்து குதித்தவர்கள்,இப்படி..இப்படி..என்னை உயரத்துக்கு எடுத்து செல்லாதவர்கள் ஏராளம்.."


"உன்னால் இதை எல்லாம் தடுக்க முடியாதா..?"



"முடியும். தவமிருந்தால்தானே வரம் கிடைக்கும்..இல்லையெனில் சாபம்தான். இயல்பாகவே நான் ஒரு குப்பைத் தொட்டி.முயற்சி செய்யாமலே என்னிடம் குப்பைகள் குவியும். முயற்சியின்றி சேர்ந்தால்தான் அது குப்பை. முயற்சி செய்தால் மட்டுமே தூய்மை.அம்முயற்சிக்கு எனக்கு தூண்டுதல் வேண்டும்.."


"எதை வைத்துத் தூண்ட..?"


"விழிப்புணர்வை வைத்து.."


"இதென்ன புது உணர்வு.."



"உன் போன்ற ஆட்களுக்கு இது புதிதாகத்தான் இருக்கும். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.."


"மனமே எங்கே போகிறாய்..?"



"ஊர் சுற்றத்தான்..தெரியாமல் உன்னிடம் சிக்கிக்கொண்டேன். கண்டதையும், கேட்டதையும், நினைக்க வேண்டும்..நான்..வருகிறேன்..பை..பை"


"எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது இனிப்
போதும் பராபரமே.."


என்று விழிப்புணர்வை வேண்டினார் தாயுமானவர்.

"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்..?" 




என விழிப்பின் உச்சியில் கிட்டும் சுகத்திற்காக ஏங்கினார் பத்திரகிரியார்.

விழிப்புணர்வு கூடக்கூட யாருடைய மனது படிப்படிபயாகப் பக்குவம் அடைகிறதோ , அம்மனிதனே மெய்வாழ்வு பெறுகிறான். மனோலயப்பட்டால் யோகி. மனோ நாசம் உற்றால் ஞானி. மானுடப்பிறவி எடுத்ததன் நோக்கமே ஒருவன் தன்னை மனத்திலிருந்து விடுவித்துக் கொள்ளவே. 


சாதாரணமாக, வாழும் வாழ்கை என்பது, உணர்தல், பார்த்தல், சுவைத்தல், மூச்சுவிடுதல், கேட்டல் என மனதிற்கு அடிமையாக வாழ்வது.......விழித்துணர்ந்து வாழ்தல் என்பது..மனமில்லாமல் உணர்வோடு வாழ்வது.


விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.


நாமும் பிழைத்துக்கொள்வோம். விழிப்பே உயர்வு. விழிப்புடன் மனமிறக்க கற்றுக்கொண்டால் மட்டுமே உயர்வு.





மனமெனும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே-முக்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே-----------இடைக்காடர்.




மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்----------சிவவாக்கியார்

13 comments:

suganya shankar said...

Sir,

You made us aware about the Awareness we should be aware of and the bad things we should be
unaware of.

Thanks a lot.

Velvijayan said...

முழுமை, தெளிவு, ஆனந்தம்.

Yoga Yuva Kendra said...

நன்றி!வேல்விஜயன்

gayathri said...

மனதோடு நடக்கும் சம்பாசனைகளை மிகவும் அற்புதமாக உணர்த்தி ,அதை எப்படி விழிப்புணர்வோடு கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்திவிட்டீர்கள் மாஸ்டர்.we all are blessed to have u as our master.THANKS A LOT MASTER.

Yoga Yuva Kendra said...

sathguru blesses u gayathri

AK said...

Super, Sir.

Yoga Yuva Kendra said...

நன்றி AK

manjula said...

manathai arayathodaginal ennaalaigalil sikkikolamal vilithukollalam enbathai thelivaga unarthiyamaiku thankyou master.

sm.sakthivel. said...

asathittinga sir.innum niraiya thagaval sollunga makkal unarattum.ini gnanamthan ellarukum devai.

Unknown said...

Very Nice

Unknown said...

Very interesting word super Ayya

kirubarp said...

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

Siva said...

Super explanation about the nature of "Manam".

Post a Comment