Total Pageviews

Saturday, June 18, 2011

நினைவுகள் முடிவதில்லை






இன்பத்தில் மூழ்கி இளமையைத் தொலைத்து
இனித்ததும் சில காலம் - பின்
துன்பத்தில் ஆழ்ந்து தொலைத்ததை எண்ணித்
துடித்ததும் சில காலம்……

நன்மையைத் தீமையைப் பிரித்தறியாமல்
நடந்ததும் சில காலம்-அதன்
பின்னணியில் ஓர் மடமையை உணர்ந்து
பிழைத்ததும் சில காலம்…

விரும்பியதெல்லாம் வெற்றிகள் ஆகிட
விளைந்ததும் சில காலம்-அவை
அரும்பிய கனவெனத் தெளிந்தபின் மனது
அவிந்ததும் சிலகாலம்!

அழகிய நட்புகள் பழகிய விதத்தில்
அலைந்ததும் சில காலம்-அது
அழுகிடும் பொருளாய் ஆன பின்னாலே
அழுததும் சில காலம்

கரும்பினித்ததுபோல் கவிதைகள் சுவைத்துக்
கனிந்ததும் சில காலம்-ஒரு
இரும்பும் துருவாய் ஆவதைப் பார்த்து
இளைத்ததும் சில காலம்!



செழுமனம் படைத்த சத்குரு நிழலில்
சேர்ந்ததும் சில காலம்-பயன்
முழுதென வரும்முன் ஊழ்வினை தடுத்து
முறித்ததும் சில காலம்!


இழிநிலை கொண்டோர் உறவினில் இரங்கி
இணைந்ததும் சில காலம்-வீண்
பழிகளில் சூழ்ந்து வழிதெரியாமல்
பதைத்ததும் சில காலம்!

நிரம்பிய அறத்தில் இருப்பதை இரைத்து
நிமிர்ந்ததும் சில காலம்-புகழ்
வரம்பினில் வாழ்க்கைச் சுமைகளை ஏற்று
வளைந்ததும் சில காலம்!

தாய்போல் பேயரைத் தாங்கித் திரிந்து
தாழ்ந்ததும் சில காலம்-தினம்
ஓய்வில்லாமல் உழைத்துடல் இளைத்து
ஓய்ந்ததும் சில காலம்!

கருமே கங்கள் கலைவது போல்துயர்
கலைந்ததும் சில காலம்-அட!
நிரந்தரம் என்று நம்பிய உறவும்
நிலைத்ததும் சில காலம்

நிகழ்வதும் மறைவதும் சிருஷ்டியின் நிஜமாய்
நிலைப்பதும் நிகழ்காலம்-இதை
அகழ்ந்து ணராமல் சுகங்களைத் தேடி
அலைவதும் அலங் கோலம்!

சென்றவை யாவும் செலவினம் ஆக்கி
சிந்தையைச் செதுக்கு கின்றேன் - அதில்
நின்றவை நினைவின் நிஜமென வடித்து
நிம்மதி ஒதுக்கு கின்றேன்!

இன்றதில் வென்றேன்;நேற்றதில் தோற்றேன்;
இரண்டும் எனதில்லை-நான்
நின்றதை எண்ணி எழுதுகின்றேன்;பல
நினைவுகள்....முடிவதில்லை….

3 comments:

manjushiva said...

GOODMORNING MASTER,
TRUE WORDS..BUT NO WORDS TO EXPLAIN ABOUT UR WORDS.JUST I THANK GOD FOR GIVING ME A VALUABLE GURU FOR PROCEEDING MY SPRITUAL LIFE.
THANK U MASTER.....MANJUSHIVA FROM YOGA YUVA KENDRA.

Yoga Yuva Kendra said...

sathguru blesses u manju

AK said...

On reading this poem, the mind feels very peaceful and clear

Sir, who is "செழுமனம் படைத்த சத்குரு"?

Post a Comment