Total Pageviews

Thursday, June 16, 2011

செங்கோட்டை வாஞ்சி நாதன்
இன்று ஒட்டு மொத்த ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை அதிரவைத்த தினம்... ஆம், வீர வாஞ்சிநாதன், கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தானும் மரணத்தை தழுவிய நாள்.

அன்று இந்திய விடுதலைக்காக போராடிய வீரர்களில் 28 வயது பிராமண வகுப்பை சேர்ந்த கேரள வனத்துறை பணியாளர் வீரவாஞ்சியும் ஒருவர். ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கலெக்டர் அதிகாரமும, அந்தஸ்தும், சக்தியும் கொண்டவர் ஆவார். அவருடைய அதிகார வரம்பு இன்றைய காலகட்டத்தை போல் அல்லாமல் பல மாவட்டங்களை உள்ளடக்கிய விரிவாதாகவே இருந்தது.

போலீஸ்காரர்களை கண்டாலே ஓடி ஓளியும் இந்தியர்கள்  நிரம்பியிருந்த நேரம்.. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பரம்பரையை சேர்ந்த பாளையக்காரர்களும், குறு நில மன்னர்களும் கூட வேலூர் புரட்சிக்கு பின் முற்றிலுமாக தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி ஆங்கிலேயனுக்கு அடங்கி போனார்கள்.

கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அட்டூழியங்கள் பெருகியது. ஆங்கிலேயனின் கொடுமைகள் அதிகரித்தன. பொறுத்தது போதும் என்று ஒரு இளைஞர் பட்டாளம் ஆங்கிலேயனுக்கு சரியான சம்மட்டி அடி கொடுக்க தயாராகி அதற்கான களப்பணிகளிலும் இறங்கியது.

தென்மலை, செங்கோட்டை, குற்றாலம், ஐந்தருவி என பல்வேறு ஊர்களில் வனப்பகுதிக்குள் ரகசிய கூட்டம் போட்டனர். துப்பாக்கி சுடும் பயிற்சிகளை ரகசியமாக மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் ஹிட்லர் போல் வலம் வந்த அப்போதைய ஆட்சி தலைவரான வில்லியம் ஆஷ்துரையின் செயல்கள் மிகவும் எல்லை மீறி வருவதை உணர்ந்த அந்த இளைஞர்கள் பட்டாளம் ஆஷ்துரையை தீர்த்து கட்ட களம் தேடியது. கண்காணிப்பையும் தொடங்கியது. நாட்கள் நகர்ந்தன.

ஆஷ்துரை நெல்லையில் இருந்து ரயில் மூலம் மணியாச்சி வழியாக குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு போகும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஆனந்தம் கொண்டனர். 12 இளைஞர்களும் தயாரானார்கள். தலா 2 பேர் வீதம் ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு பணிகளை தேர்ந்தெடுத்தனர். அதில் வீர வாஞ்சிநாதனுக்கும், சாவடி அருணாசலப்பிள்ளைக்கும் ஆஷ்துரையை சுடும் பணி தானாகவே வந்தது. 1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியோடு வீர வாஞ்சிநாதனும், சாவடி அருணாசலப் பிள்ளையும் காத்திருந்தனர்.

ஆஷ் துரை தனது மனைவியோடு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் அமர்ந்திருந்தார். ஆஷ்துரையின் இறுதிகாலம் முடிவை எட்டும் நெருங்குகிறது. வீரவாஞ்சி கைத்துப்பாக்கியோடு ஆஷ்துரை அமர்ந்திருக்கும் பெட்டியில் திடீர் பிரவேசம் செய்து ஆஷ்துரைக்கு துப்பாக்கி குண்டுகளை பரிசளிக்க அங்கேயே ஆஷ் சரிந்து விழுந்தார். விவேகம் கொண்ட வீரஇளைஞன் வீரவாஞ்சி அதே ரயில் பெட்டியின் கழிவறையில் புகுந்து சரியாக காலை 10.50க்கு தன்னை தானே சுட்டு களச்சாவு அடைந்தார்.

நெல்லை கலெக்டர் ஆஷ்துரை சுட்டு கொல்லப்பட்ட தகவல் போதிய தகவல் வசதி இல்லாத காலகட்டத்திலேயே தேசமெங்கும் பரவியது.

ஜூன் 19ம் தேதி பிரிட்டிஷ் பார்லிமெண்டில் கூட ஆவேசமாக பேசப்பட்டது. ஆங்கிலேயனுக்கு அன்று முதல் மரண பீதி தொற்றிக் கொண்டது. தமிழனை கண்டாலே ஒவ்வொருவனுக்கும் வீரவாஞ்சிநாதன் தெரிந்தான். அந்த வீரமிக்க மாமனிதனுக்கு வீர வணக்கங்களை செலுத்துகிறது யோக யுவ கேந்திரா.


No comments:

Post a Comment