Total Pageviews

Friday, June 3, 2011

வழுக்குமரம்மாஸ்டர் வணக்கம்!
புகைவண்டியில் ஒருமணி நேரம் உங்களுடன் பயணம் செய்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகவே நினைக்கிறேன்.  கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த நினைத்துப் பரஸ்பரம் நலம் விசாரிப்பதைக் கூட மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.     அக்கா நன்றாக இருக்கிறார்களா? தம்பி எப்படி இருக்கிறான்?

நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை புகைவண்டிப் பயணத்தில் எல்லோருக்கும் புரியும்படியாக கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.   நீங்கள் ராஜபாளையத்தில் இறங்கியவுடன்,     உடன் இருந்தவர்களெல்லாம் உங்களைப் பற்றி விசாரித்தது எனக்குப் பெருமையாக இருந்தது.    உறியடித் திருவிழாவையும்,  வழுக்குமரம் ஏறுவதையும் பற்றி எழுதுவீர்களா?  ................டாக்டர்.     நம்பிநடராஜன்.கண்ணன் பிறந்த நாள் கோகுலாஷ்டமியாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பல கோயில்களில் உறியடி உற்சவமும் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெறுகிறது. உறியடி உற்சவம், வழுக்கு மரம் இவை இரண்டுமே மனித வாழ்வின் தத்துவத்தை நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றன.

உறியடி உற்சவத்தில், உயரத்தில், மண் பானையில் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும். அதனை அடிக்க ஆசைப்படுபவர்களின் கண்ணும் கட்டப்பட்டிருக்கும். விளையாட்டில் பங்கேற்பவர்களில் பலரும் அங்கும் இங்கும் அலைமோதி, இறுதியில் ஒருவர் மட்டுமே பானையை உடைத்துப் பரிசைப் பெறுவார்.   பரிசு பெற்ற அனுபவங்கள் எனக்குண்டு. சந்தோஷமான தருணங்கள் அவை.

மண்பானை என்பது நமது உடலாகிய கடம். இந்த உடலாகிய கடத்தினுள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கிறது "முக்தி" எனும் பரிசுப் பொருள்.   ஆத்மனை உணர வேண்டும் என்ற ஆசையில்தான் மனித வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது. ஆனால் நடுவில் பல அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி பல ஜீவன்கள் ஆத்மனை உணர முடியாமல் போய் விடுகிறது. ஆனால் ஆத்மனை உணர வேண்டும் என்ற குறிக்கோளோடு உறுதியாகச் செயல்பட்டு, தேக அபிமானம் என்னும் பானையை உடைத்து விட்டால், முக்தி எனும் பரிசு கிடைத்து விடுகிறது!

அது சரி. ஏன் கண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டும்? மனிதனின் புறக் கண்கள் திறந்திருக்கும் வரை ஆசாபாசம், யாவும் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். புறக் கண்களை மூடிவிட்டால், மனிதனின் அகக் கண்கள் தானே திறந்து விடும். இதனை உணர்த்தும் விதமாகவே உறியடி உற்சவம் கொண்டாடப்படுகிறது.
அடுத்து, வழுக்கு மரம்.

சாதாரண மரத்தில், வழுக்கும் தன்மையுள்ள பொருட்களை அரைத்துப் பூசி விடுகிறார்கள். அதன் உச்சியிலும் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும்.      மனிதன், வாழ்வில் முக்திபெறும் உணர்வுகொண்டு அதற்கான முயற்சியில் இறங்குகிறான். ஆனால் பிரச்சினைகள், கவலைகள் யாவும் அவனை பின்னோக்கி இழுத்து, வழுக்கி விடுகின்றன.  மீண்டும் அவன் முயற்சி செய்ய வேண்டியதிருக்கிறது.

வழுக்கு மரத்தில்,   வழுக்கும் பொருள்களை நாமே பூசி விடுவதுபோல,  வாழ்க்கை என்னும் மரத்திலும் பாசம் என்னும் வழுக்கும் பொருளை நாமே பூசிக்கொள்கிறோம்.   "பாசம்" வழுக்கத்தானே செய்யும். பாசம் எனும் அழுக்கைப் போக்க 'யோகம்" எனும் வேதிப்பொருள் தேவைப்படுகிறது

இப்படி பல தடவைகள் பல பிறவிகளில் வழுக்கி விழுந்து.....பின்பு,யோகப்பயிற்சிகளால் முயற்சி செய்தே ஞானத்தை, முக்தியை அடைய முடியும். இதனை நமக்கு வலியுறுத்தவே நம் முன்னோர்கள் இது போன்ற வைபவங்களை விளையாட்டாக்கி வைத்துள்ளார்கள்.

விளையாட்டுத் தத்துவத்தைப் புரிந்துகொள்வோம், விடாமல் முயற்சி செய்வோம்! முக்தி எனும் பரிசு கிடைக்க குருவருள் துணைபுரியும்.

அலகிலா விளையாட்டுடையார் அவர்- தலைவர்
அன்னவருக்கே சரணாங்களே- கம்பர்

1 comment:

AK said...

i did not, like many others, get any opportunity to directly watch these two games, which are mainly held in villages. Many, like me, who have been born and brought up in cities and towns had seen such games only on TV or in movies.
Whenever i used to watch such games in movies, i never, for even a second, had thought such meanings would have been hidden behind them ! pretty amazing !

Post a Comment