Total Pageviews

Sunday, June 12, 2011

நடந்தது என்ன?

யோக வித்தையில் திளைத்து அற்புத சித்துகள் பல புரிந்த எண்ணிறந்த யோக சித்தர்கள் வாழ்ந்த பூமி தென் தமிழ்நாடு. அத்தகைய யோகிகளில் ஒருவராக விளங்கியவர் ஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள். இவர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருக்கயிலாயப் பரம்பரையில் வந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் பத்தாவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் நகரில் அமைந்துள்ள பிரம்மாண்ட சங்கர நாராயணர் ஆலயத்திற்குப் பின்புறம், மேலரத வீதியில் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த மடம் உள்ளது. அங்கேதான் வேலப்ப தேசிகரின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

வேலப்ப தேசிக சுவாமிகள் தாம் வாழ்ந்த காலத்தில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். அதில் முக்கியமான ஒன்று- மாவீரன் பூலித்தேவனுடன் தொடர்புடையது.
சங்கர நாராயணர் கோவில் மூலவர்களை ஆத்மார்த்தமாகப் பூஜித்து வந்த சுவாமிகள், அடிக்கடி சங்கரன்கோவிலுக்கு வந்து தங்குவது வழக்கம். இந்த நகருக்கு அருகிலுள்ள நெற்கட்டுஞ் செவல் பகுதியை ஆண்டு வந்த பூலித்தேவன் வேலப்ப சுவாமிகளை ஆத்மார்த்த குருவாகக் கொண்டவன்.

பூலித்தேவனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியைப் போக்கினார் சுவாமிகள். அதனால் சுவாமிகளுக்கு விளைநிலங்களை தானமாகக் கொடுத்தான் பூலித்தேவன். மேலும் மேலரத வீதியில் மடம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தான்.

அந்த மடத்திலிருந்து அருளாட்சி செய்து வந்த சுவாமிகள் ஜீவசமாதி அடைய திருவுளங் கொண்டார். மடத்தின் உள்ளே பாதாள அறை ஒன்றை அமைத்து, ஒரு புரட்டாசித் திங்கள் மூல நட்சத்திர நாளில் அந்த அறைக்குள் இறங்கி தியானத்தில் அமர்ந்தார். அந்த சமாதியின் மேற்புறம் மூடப்பட்டது.

இவ்வாறு வேலப்ப தேசிக சுவாமிகள் ஜீவசமாதி அடைந்ததை அந்தத் தெருவிலிருந்த பிராமணர்கள் எதிர்த்தனர். "மக்கள் குடியிருக்கும் பகுதியில் சமாதியா?' என்று கண்டனக் குரல் எழுப்பினர். இதையறிந்த பூலித்தேவனின் உறவினர்களும் காவலர் களும் அங்கு வந்து, சுவாமிகளின் அதிஷ் டானத்தைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்படும்நிலை உருவானது.

அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது! சமாதியின் மேற்புறத்தை விலக்கிக் கொண்டு வேலப்ப சுவாமிகள் வெளிப்பட்டார். இரு பிரிவினரும் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தனர்.
அப்போது சுவாமிகள் கலகக்காரர்களைப் பார்த்து, ""இறந்தவர்களுக்குத்தானே ரதவீதியில் சமாதி அமைக்கக்கூடாது? நான் இன்னும் இறக்கவில்லையே. துரியாதீத நிலையில் ஆண்டவனுடன் தான் கலந்திருக்கிறேன்.

சில நாட்களுக்குமுன் சமாதியில் புகுந்த நான்- இதோ உங்கள்முன் காட்சி தருகிறேன். நீங்கள் ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம்.அன்புடன் சேர்ந்து வாழுங்கள். அவர வர் கடமைகளைச் செய்ய கலைந்து செல்லுங்கள்'' என்று கூறினார். அனைவரும் சுவாமிகளை வணங்கி விடைபெற்றுச் சென்றனர். சுவாமிகள் மீண்டும் சமாதி புகுந்தார்.சித்திரபுத்திரத் தேவன்- சிவஞான நாச்சியார் தம்பதிக்கு மகனாக 1715-ல் பிறந்தவன் பூலித்தேவன். சங்கத் தமிழை யும் யோக சாதனைகளையும் செங்கோட்டைக்கு அருகிலுள்ள இலஞ்சியில் ஸ்ரீ சுப்பிரமணியப் பிள்ளையிடம் கற்றான். பின்னர் நெற்கட்டுஞ் செவல் கோட்டை யிலிருந்து அவன் ஆட்சி புரிந்து வந்த போது, ஆங்கிலேய அதிகாரிகள் அவனிடம் வரி கேட்டனர். முடியாதென மறுத்தான் பூலித்தேவன். (வெள்ளையரை எதிர்த்த முதல் புரட்சியாளன் பூலித் தேவனே. (1755). கட்டபொம்மன் வீர முழக்கமிட்டது 1799-ல்). இதனால் ஏற்பட்ட போரில் ஆங்கிலேயர்களை விரட்டியடித்தான் பூலித்தேன்.

இறுதியாக ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றைத் திரட்டி, 1767-ல் டொனால்ட் என்னும் பிரிட்டிஷ் தளபதியின் தலைமையில் வந்து நெற்கட்டுஞ்செவல் கோட்டையை முற்றுகையிட்டனர். உக்கிரமான போருக்குப்பின் கோட்டை வீழ்ந்தது. பூலித்தேவன் கைது செய்யப்பட்டான்.அவனை பாளையங்கோட்டைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சங்கரன்கோவிலை அடைந்தபோது, சங்கர நாராயணரை வழிபட அனுமதி கேட்டான் பூலித்தேன். அதிகாரி அனுமதியளிக்க, கோவிலுக்குள் சென்ற மன்னன் காணாமல் போனான். ஆங்கிலப் படையினர் சல்லடை போட்டுத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் அவன் உலகத்துக்குத் தென்படாமலே போனான்.

இதன் பின்னணியில் வேலப்ப சுவாமிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பூலித்தேவன் கைது செய்யப்பட்ட நிலையில் மேற்கு ரத வீதியில் வந்த போது, தன் குருநாதரான வேலப்ப தேசிகரின் ஜீவசமாதியைக் கடக்கும்போது அவரை மானசீகமாக வணங்கி, "எவர் கையாலும் நான் மடியாமல் மானத்தோடு நான் வானுலகம் செல்ல அருள வேண்டும்' என்று வேண்டினான்.

உடனே சூட்சும உடலுடன்- எவர் கண்களுக்கும் தெரியாமல் பூலித்தேவனுக்கு மட்டும் தெரியும்படி சமாதியினின்றும் வெளிப்பட்ட வேலப்ப சுவாமிகள், ""தேவனே, என்னோடு வா'' என்று கூறி முன்னே நடந்தார். அவர்கள் ஆலயத்தை நெருங்கியபோது சுவாமிகள் ஆலயத்தினுள் சென்றார்.
அதைக் கண்ட பூலித்தேவன், ஆலயத்தினுள் செல்ல அனுமதி பெற்று, குருநாதரைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்றான்.
சுவாமி சந்நிதி அருகே சென்ற வேலப்பர், அங்கே நாற்சதுர மந்திர வேலியிட்டு, அதனுள் மன்னனை நிற்க வைத்தார்.

""பூலித்தேவா, இனி நீ எவர் கண்களிலும் படமாட்டாய். உடலோடு சொர்க்கம் சேர்வாய்'' என்று கூறி தியானத்தில் லயித்தார். குரு மொழிக்கு மறுமொழி ஏது? அவ்வாறே மறைந்து போனான் பூலித்தேவன்.

அதன்பின் ஆங்கிலப் படை ஆலயத்தினுள் நுழைந்து ஒரு இடம் விடாமல் தேடியது. எங்கும் அவனைக் காணவில்லை. பீரங்கியும் துப்பாக்கியும் பிரணவத்தை வெல்லுமா? (அதன்பின்னர் ஏதோ பிணத்தை களத்துமேட்டில் தீ வைத்துக் கொளுத்தி, அவன்தான் பூலித்தேவன் என்று வெளியுலகுக்குச் சொல்லி, கோப்பை மூடியது ஆங்கிலேய நிர்வாகம்.)இந்த நிகழ்ச்சிக்கு அடையாளமாக, சங்கர நாராயணர் ஆலயத்தின் மூலவர் சந்நிதிக்கு முன்னால், "பூலித்தேவன் உடலோடு மறைந்த இடம்' என்னும் கல்வெட்டோடு ஒரு சப்பரம் இருப்பதைக் காணலாம்.
          யோக சாதனையில் தேகத்துடன் சமாதி நிலையை எட்டுவது என்பது ஒரு உச்சக்   கட்டப் பயிற்சியாகப் பேசப்படுகிறது.     வள்ளலாரும், இயேசு பிரானும் இந்த நிலையை அடைந்தவர்களே.   இந்த நிலையை அடைந்த யோகிகளால் மீண்டும் இன்னொரு தேகத்துடனும் வலம் வர முடியும்.  இந்த நிலை அடைந்த அவதூதர்களை நேரிடையாகப் பார்த்த அனுபவம் எனக்கும் சிவகாசி ஸ்ரீதர் அண்ணனுக்கும் உண்டு.  அந்த வகையில் வேலப்ப சாமியும் , பூலித்தேவனும் இந்தப் பயிற்சி முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்பது தற்கால அறிவியல் ஆய்வாளர்களுக்கு சவால் விடும் நிகழ்ச்சியாகும்.


இவ்வாறு பூலித்தேவனின் மானம் காத்த வேலப்ப தேசிக சுவாமிகள் அம்பாள் சந்நிதி பீடத்தில் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ளார். பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்றவற்றை விரட்டி உள்ளார். வேப்பிலை, வில்வ இலை, திருநீறு கொண்டே பாமர மக்களின் பிணிகளைத் தீர்த்தவர் வேலப்ப சுவாமிகள்.

""இங்கே ஜீவன்முக்தி அடைந்திருக்கும் சுவாமிகளின் அதிஷ்டானத்துக்கு முன்னே அமர்ந்து, மனமார வேண்டி கண்ணீர் மல்குபவர்களின் மனக்குறையை உடனே தீர்த்து வைக்கிறார் சுவாமிகள். இவ்வாறு வழிபட்டு குறை நீங்கியவர்கள் ஏராளம்'' என்கிறார் வேலப்ப சுவாமி மடத்தின் காவலரும் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆய்வாளருமான திருவள்ளுவர்.

சங்கரன்கோவில் செல்பவர்கள் சங்கர நாராயணரையும் கோமதியம்பிகையையும் வழிபட்டு, பின்னர் மேலரத வீதியில் அமைந்திருக்கும் வேலப்ப தேசிக சுவாமிகளின் அதிஷ்டானத்துக்கும் சென்று வணங்கி வாருங்கள்!

1 comment:

Viji Raja said...

we have gone to sankarankovil many times but have been unknown of the jeevasamadhi.your informations tends us to go there.thank you sir.

Post a Comment