Total Pageviews

Wednesday, June 8, 2011

மறுவாழ்வு மருத்துவம்மனிதனின் ஆழ்மனம் ஆற்றல்மிக்கது. ஆழ்மன ஆற்றல் பெற்றவர்களே, ஆழ்மன ஆற்றலைப் பயன்படுத்துவோரே சாதனையாளர்கள். ஆழ்மன ஆற்றல் கட்டுப்பாடின்றி திசைமாறிச் செல்லுமானால் ஆனந்தம் அரிதாகிவிடும்.


ஆதவனின் ஒளிக்கதிர்களை ஆடியின் மூலமாக குவித்தால் ஆற்றலைப் பெறமுடிகிறதல்லவா! அதுபோல மனத்தின் சக்தியை ஒழுங்குபடுத்தி, ஒருமுகப்படுத்துவதின் மூலம் மனிதன் ஆனந்த வாழ்வடையலாம் என்பதனை கூறும் உள்நிலை விஞ்ஞானமே “யோகம்” .மனத்தை அமைதியடையச் செய்து, மன ஆற்றலையும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியும் என்பதே சித்தர்கள் கண்ட விஞ்ஞானம். மன அமைதி பெறாதவன் சாதித்ததாக வரலாறு இல்லை நன்பர்களே!.   

உலக அதிசயங்களை எல்லாம் உருவாக்கும் திறன் கொண்ட கைகளில், மதுக்கோப்பைகளும், புகை போதைகளும் குடியிருந்தால் இது மாபெரும் மனித வீழ்ச்சியல்லவா?


“ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்றான் முண்டாசுக்கவி பாரதி. சமூகப் பொருளாதார அடிமைத்தனங்களிலிருந்து பெண்ணினம் விடுதலை பெற வேண்டும் என்பதே பாரதியின் கனவு. இன்றைய கல்வியும், சூழலும் மனித விடுதலைக்குப் பாதை காட்டாமல், போட்டி, பொறாமை, தீய பழக்க வழக்கங்கள் எனும் பள்ளத்தாக்கிலே பலரையும் தள்ளி விடுகின்றன. புகைபிடிக்கும் பெண்களும், மது அருந்தும் மங்கையரும், பான்பராக் சுவைக்கும் பாவையரும் ஆண்களுக்குச் சமமானவர்களா? இல்லை நண்பர்களே!பரிதாபத்திற்குரியவர்கள். ஆணின் கேடான குணங்களை நவீனப் பெண் பின்பற்றுவதா சமத்துவம்?


நம்மிடம் பெருகியுள்ள பழக்க அடிமைத்தனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஓராயிரம்! உணவுகளை ஓரங்கட்டிவிட்டு உடலைக் கெடுக்கும் தின்பண்டங்களிலேயே நாட்களை ஓட்டும் சிலர், எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் புகைபிடிக்காமலிருக்க முடியாது என்று செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிவிட்ட சிலர், ‘கோப்பையிலே என் குடியிருப்பு’ என மதுப் பைத்தியங்களாய் மாறிப்போன சிலர், “உண்பது ஒன்றே உயர்ந்த கடமை” என்று நேரம் காலம் பார்க்காமல் சாப்பாட்டு ராமன்களாய் மாறிவிட்ட சிலர், வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும் எனும் நிலை மாறி ”பீஸா” சாப்பிடுவதற்காகவே வாழ்க்கை எனும் நிலை. 


இணையதளம் எனும் சமுத்திரத்திற்குள் இறங்கி முத்துக்குளிப்பதற்கு பதில் குப்பைகளையும் கூழாங்கற்களையும் பார்த்து மோகித்து பார்வை கெட்டு பாறைகளில் மோதி ‘E-addiction’ எனும் வலையில் சிக்கித் திணறும் சிலர், இப்படி விதவிதமாய் வாழ்க்கையைத் தொலைப் போர் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது.
பழக்க அடிமைத்தனங்களில் பலர் மாட்டிக்கொண்டு குடும்பத்திலும் சமூகத்திலும் இரண்டற கலந்து வாழ முடியாத தனிமைத் தீவுகளாகின்றனர். பெருகிவரும் புகை, மது, போதைப் பழக்கங்களைப் பாரதம் போன்ற பாரம்பரிய பண்பாடுகள் நிறைந்த நாட்டில் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. 
நமது உணவுப் பண்பாடுகளும் மேற்கத்திய மோகத்தால் சீரழிந்து விட்டன. கேடான பழக்கங்களில் வீழ்ந்து அடிமையாகும் தனி மனிதனின் உடல், உள்ள இயல்புகள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சவாலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பழக்க அடிமைத்தனம் என்பது தனிமனித வாழ்க்கையை சோகமயமான, துயரமான பயணமாக மாற்றிவிடும்.
ஒருவர் தன்னிடம் பழக்க அடிமைத்தனம் உள்ளதா? என்று எளிதில் அறியலாம். தவறான பழக்கம் என்று தெரிந்தும் அதே சிந்தனை நீடிக்கிறதா? சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சனைகள், கஷ்டங்கள் வந்தால்கூட தற்காலிகமாக விடுபட விரும்பி தவறான பழக்கத்திற்குச் செல்கிறீர்களா? சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நடுங்கி செயற்கை உத்வேகம் கிடைப்பதாகக் கருதி தவறான பழக்கத்தையே பெரிதும் சார்ந்துள்ளீர்களா? செய்வது தவறு என்று நன்கு உணர்ந்திருந்த போதிலும் மீண்டும் மீண்டும் செய்கிறீர்களா? முயற்சித்தாலும் மீள முடியவில்லையா?பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள பதஞ்சலி முனிவரால் வடிவமைக்கப்பட்ட இயற்கை மனநலச் சிகிச்சையான யோகமருத்துவம் பேருதவி புரிகிறது. மண் தின்னும் குழந்தை முதல் மது அடிமைத்தனங்களிலிருந்தும் யோகப் பயிற்சிகள் மூலம் மீள முடியும். யோக மருத்துவம் மனித குலத்திற்கு மருத்துவ உலகிற்குக் கிடைத்த மாபெரும் அற்புதக் கொடை. 
போதை வாழ்வில் அடிமைகளாகியவர்கள் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் காலம் மலர்ந்தால் எண்ணற்ற உடல் மற்றும் உள்ள வீழ்ச்சிகளிலிருந்தும், அடிமையான பழக்கங்களிலிருந்தும் மீள முடியும். தனிமனித முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாய் நிற்கும் போதை பழக்கத்திலிருந்தும் விடுபட முடியும்.
பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள்வதற்காக துயரத்தோடு யோகயுவ கேந்திராவிற்கு வந்து சிகிச்சைக்குப் பின் புதுவாழ்க்கை வாழக்கூடிய ஆண்களும், பெண்களும் யோக மருத்துவத்தின் சீரிய ஆற்றலுக்கு சிறந்த உதாரணங்கள். பழக்க அடிமைத்தனங்களிலிருந்து குழந்தைகளை, பருவவயதினரை, இளையோரை, தம்பதியரை, முதியோரை யோக மருத்துவ சிகிச்சை மூலம் குணமாக்குவதற்கு அவர்களின் குணநலன் பற்றிய ஆய்வும், அடிமைப்பட்டுள்ள பழக்கத்தின் தன்மைகளும், இதர பின்னணிச் சூழல்களும் அறியப்பட வேண்டும். 


யோகஆசனங்களாலோ,பிராணாயாமத்தாலோ, முத்திரைகளலோ அல்லது இவற்றின் கலவையாலோ , மனநிலை சம்பந்தமான நோய்களை, அனுபவமும், திறமையும், நிறைந்த யோக ஆசிரியரால் குணமாக்க முடியும். 


பொதுவாகப் பித்தப் பிரகிருதியில் உள்ளவர்களே போதை அடிமைத்தனங்களில் அதிகமாக மாட்டிக்கொள்பவர்களாக இருப்பதை எனது அனுபவத்தில் நான் பார்த்திருக்கிறேன். பதஞ்சலியின் ஆயுர்வேத சாஸ்திரமும், ‘குத்தூசி வைத்தியம்” எனப் போக மஹரிசியால் கற்றுக் கொடுக்கப்பட்ட அக்கு பஞ்சரும் இதனை உறுதிப்படுத்துகிறது. மனிதனின் “தனித்தன்மைக்கு” காரணமான கல்லீரலின் சக்தி, குறைந்த நிலையில் இருப்பவர்களே போதைவாழ்விற்கு எளிதில் அடிமையாகிறார்கள். 


தனது தனித்தன்மை பாதிக்கப்படும் போதோ அல்லது திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பம் கிடைக்காதபோதோ, தனது திறமையை வெளிக்காட்ட விடாமல் பிறரால் அடக்கப்படும் போதோ ஏற்படும் மன நிலை கோபமாக வடிவெடுக்கிறது. இந்த மன நிலை தொடர்ந்து நீடிக்கும்போது “கல்லீரல்” தனது ஆக்க சக்தியை அழிவு சக்தியாக மாற்ற முயல்கிறது. 


இந்த மன நிலையில் நோயாளி தனது சுற்றத்தையும், உலகத்தையும் புதிதாக கற்பனையில் சிருஷ்டி செய்ய முயல்கிறார். விளைவு தனி உலகத்தில் வாழ்வதாக கற்பனை செய்து கொண்டு போதைக்கு அடிமையாகி விடுகிறார்.
இந்த சூழலில் கல்லீரலுக்கு சக்தி தரக்கூடிய யோகப் பயிற்சிகளான யோகமுத்ரா, குமாராசனம் பார்ச்சுவயோகமுத்ரா, சைதல்யாசனம், பஸ்ஸிமதானாசனம், அர்த்தபத்ம ஜானுசிரசாசனம், பத்ம வக்ராசனம், போன்ற ஆசனங்களைச் செய்யலாம். 


அதுபோல சமான வாயுவை இயக்கக் கூடிய பயிற்சிகளான வியாக்ர பிரணாயாமமும், சூர்ய பேதனாவும், கல்லீரலை வலுப்படுத்தும். முத்திரைகளில் சூர்ய முத்திரை, லிங்க முத்திரை, ஆதித்ய முத்திரை போன்றவைகளும் கல்லீரலை வலுவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. போதை மருந்துகளுக்கு அடிமையானோர் தாம் செய்வது தவறு எனத் தெரிந்தும் அதனை வைராக்கியமாக விட முடியாமல் 
தவிப்பதைப் பார்க்கிறோம். 

இது போன்ற நிலையில் வைராக்கிய சிந்தையைஅதிகப் படுத்தும் ஆசனமான பகீரத ஆசனத்தினையும், சலபாசனத்தினையும் செய்யலாம்.

நண்பர்களே! யோக மருத்துவப் பயிற்சிகளை, 

ஒரு யோக ஆசிரியரின் நேரடிப் பார்வையில் செய்வதே சிறப்பு என்பதால் செய்முறைப்பயிற்சி பற்றிய குறிப்புகளை இங்கே தரவில்லை.ஒரு யோக ஆசிரியராலேயே உங்களுடைய உடல் தன்மையையும், உள்ளத்தன்மையையும் உணர்ந்து, பயிற்சி முறைகளை வடிவமைக்க முடியும்.

யோகேன சித்தஸ்ய பதேன வாச்சாம்
மலம் சரீரஷ்ய து வைத்ய கேன!
யோபாகரோத்தம் ப்ரவ்ரம் முனினாம்
பதஞ்சலிம் ! ப்ராஞ்சலிராந தோஸ்மி
     


      

2 comments:

AK said...

Sir, i have been under the impression that acupuncture was invented in China by Chinese. Only after reading your article, i realised that it was indeed given to the world by Boha Maharishi !
Does that mean acupuncture originated in India and was copied by Chinese ??!!

Yoga Yuva Kendra said...

உண்மைதான் AK. அக்குபஞ்சர் நம்முடைய சொத்து.
நம்ம வர்மசாஸ்திரம் தான் ,நவீனப்படுத்தப்பட்டு அக்கு பஞ்சராக மருவி இருக்கிறது. நம்ம பள்ளியில் படிக்கும் போது வாத்தியார் காதைபிடித்துத் திருகுவாரே அதைத்தான் "ஆரிகுலர்" அகுபஞ்சர்னு சொல்றாங்க.
மூலாதாரத்தை விழிப்புறச் செய்வதற்காக மூல கணபதிக்கு தோப்புக்கரணம் போடுவோமே இதெல்லாம் தான் ஆரிகுலர் அக்குபஞ்சர்.

"பருப்புக்கடை, பருப்புக்கடைனு" சின்னப் புள்ளைங்கள சிரிக்க வைக்க ஒரு விளையாட்டு விளையாடுவோமே அதைத்தான் "ஜூ- ஜோக்" அக்குபஞ்சர்னு சொல்றாங்க. சீக்கிரமா இதைப் பத்தி தனியா ஒரு பதிவு போடலாம்.

Post a Comment