Total Pageviews

Monday, June 20, 2011

உணர்ந்ததைச் சொல்கிறேன்

நண்பீர்! உமக்கு ஓர் 
உண்மையைச் சொல்கின்றேன்,
உணர்ந்ததைச் சொல்கின்றேன்.

ஒருநாள் கூட உணவில்லாமல்
ஓட்டும் திறமை இல்லா திருப்பதும்
இருநாள் விழித்து உணர்வில்லாமல்
இயல்பாய் வாழ முடியாதிருப்பதும்
மரணம் என்பதை மற்றவர்க்கே என
மனம் தெளியாது கனவில் இருப்பதும்
ஒருநாள் விழித்து;உடலை வெறுத்து
உலகைக் கனவாய்க் காண்பதும் காண்பீர்!

சொத்தும் சுகமும் சேர்ப்பதற்கென்று
சுகத்தை இழந்து பித்தாய்த் திரிந்து,
மொத்தமும் ஆசைப் பற்றினில் வீழும்
மூட மனம்இதை யார் அறிவாரோ?
வித்தை,விருந்து;வேடிக்கைச் சடங்கு
வேடம் போடும் நாடக வாழ்க்கை
எத்தனை காலம் நடக்கும் என்பது
சத்குரு எழுதும் காலக் கணக்கு!

வாழும்வரையில் காண்பது யாவும்
வரவோ செலவோ யாதும் இங்கு
சூழ்வது விதிப் பயன் என்றே நூலோர்
சொன்னதை மறந்து நின்றதில் கரைந்தோம்!
ஊழ்வினை நம்மை உலகினில் பிறக்க 
உந்துதல் செய்தது’ என்பதை மறைக்கச்
சூழ்நிலை தோன்றி சூழ்ச்சி செய்தது;
சூழ்ச்சியில் நாமும் தோற்றுப் போனோம்!
  
நாமாய் விரும்பி வந்தோமில்லை;
நடுவழி வந்தபின் திரும்பிடத் தெரியோம்!
தானாய் எல்லாம் நடத்திக்கொண்டு
தனியாய் நம்மைப் படைத்தனன் போலும்!
ஊனாய் உடலைப் பெற்றது முதலே
ஊர்ந்தோம்;தவழ்ந்தோம்;எழுந்தோம்;நடந்தோம்;
ஆனாலும்நாம் உலகிற் பிறந்த
அவசியத்தை அறிந்தோம் இல்லை!
  
அங்கும் இங்கும் அலைவதும்;அலைந்து
அமைதியைத் தேடி உறங்கி எழுவதும்
எங்கும் எதிலும் ’நான்’ ‘நான்’ என்றே
நம்மை முதலாய் எண்ணிக் கொள்வதும்;
பொங்கும் அலைபோல் புதுப்புதுக் கனவில்
புகுந்து,விழித்துப் புலம்பிக் கொள்வதும்
இங்கெம் வாழ்க்கை இயல்பாய்ப் போனது;
இதைத்தான் அருணை குரு எழுதி வைத்தானோ?

உண்ணவும், உறங்கவும் உறங்கி எழுந்து
உழலவும் உணரவும் ஆண்பெண் உறவை
எண்ணவும் ஏங்கவும் இலக்கில்லாமல்
இயங்கவும் மயங்கவும் இவையல்லாமல்
பண்ணிடும் வேறு காரியம் இங்கு  
பலவிதம் இருந்தும் மனிதருக்கதனால்
புண்ணியம் ஏதும் பூப்பது  உண்டோ?
புவியில் இதைத்தான் புரியாதுள்ளோம்
அத்தனும் அம்மையும் ஆசைப் பட்டதில்
ஆரம்பம் முதலே உயிர்சிறை பெற்றது;
பத்து மாதம் கருவறைச் சிறையில்
பட்டபின் உடலுள் வாழ்நாள் முழுதும்!
இரத்தமும் சதையும் வற்றிவிடாமல்
இராப் பகலாகஉறங்கியும் விழித்தும்
நித்தமும் இரைப் பை நிரப்புவதல்லால்
நிஜமாய் இங்கு சாதிப்ப தென்ன?

                                                           எத்தனை நேரம் மனிதர் மண்ணில்

இரவு,பகலாய் விழித்திட முடியும்?
எத்தனை காலம் இருந்து மண்ணில்
இரவை, பகலைக் கழித்திட முடியும்?
எத்தனை நாட்கள் பட்டினி இருந்து
இயல்பாய் மனிதர் வாழ்ந்திட இயலும்?
எத்தனை பணம்தான் இருந்திட்டாலும்
இறப்பு இறுதியில் தருவது என்ன?உண்ணல்,ஓய்தல்,உறங்கல்,எழுதல்
ஒவ்வொருநாளும் இவையே தொடர்தல்;
மண்ணில் இதுதான் நிரந்தர சுழற்சி;
மற்றெவை இந்த மாந்தரின் உடைமை?
உண்ணுதற்கெனவே உலகிற்பிறந்து
உடலை வளர்த்து,மண்ணில் புதையப்
பண்ணும் இந்தப் பம்பர வாழ்க்கை
பலயுகங் கள்எனச் சுழல்வதுதானே?

கடவுள் என்பது நிஜமா?,பொய்யா?
காரணமான கற்பனைப் பொருளா?
திடப் பொருளான வடிவம் உண்டா?
திரவப் பொருள்போல் உருவம் உடைத்தா?
ஜடப் பொருள் இந்த மானுடம் மற்றும்
ஜராசரம் அனைத்தும் சேர்ந்த வடிவா?
விடை தெரியாத குழப்பம்;எனினும்
விஷய ஞானிபோல் உரைசெய்கின்றோம்!

அண்டம் என்னும் அகண்ட வெளியில்
அணுவெனத் திகழும் பூமிப் பந்தில்
அண்டிய இந்த மானுடப் புள்ளியுள்
அணுவிலும் அணுவாய் ஆகிய ஒருவன்
கண்டு வருவது கனவுகள்;அதில்தான்
காட்சிகள் இந்த மானுட வாழ்க்கை!
கண்கள் மூடினால் தான்நிஜம் தெரியும்;
இறையின் நோக்கம் யாதெனப் புரியும்!

அதுவரை எண்ணம் ஆயிரமாயிரம்;
அவற்றின் இடையே,குழப்பம்;தெளிவு
எதுவரை இந்த நாடகம் என்பது
குருவின் பிடியில் இருக்கும் முடிவு!
இதனிடை நானோர் இறைவனைப்போல
எண்ணிக்கொண்டு எழுத்துகள் படைத்து
அதனிடை வாழும் அரைகுறைப் பாமரன்
அறிவீர்;என்போல் நீங்களும் தானே!

தோற்றம்,வளர்ச்சி.தொடர்ந்து முதுமை
தோல்வியும் வெற்றியும் நிலைகொள்ளாமல்
மாற்றம் என்பது மண்ணில் தோன்றும்
மாந்தருக்கெல்லாம் மாறா விதிதான்!
ஆற்றலும் அறிவும் அறிவில்லாமையும்
அவனவன் விதியில் எழுதியபடியே
ஏற்றமும் இரக்கமும் ஏழ்மையும் செல்வமும்
குருமார்கள் வழங்கிய நன்கொடை; கண்டேன்!

எங்கோ இருந்த இவ்வுயிர் தன்னை
இப்புவி மண்ணில் இழுத்து வைத்தவன்
எங்கோ இருந்து எழுதிடும் நாடகம்;
இதில் என்பாத்திரம்;’நான்’ எனும் சூத்திரம்!
நமக்குள்ளே இருக்கும் உணர்வுகள்;
உலக மக்களின் உள்ளங்கள் எல்லாம்
தங்கி இருக்கும் தத்துவம்; எனினும்
தனித்தனி நாடக அரங்கேற்றங்கள்!

உலகம் நமக்கோர் நாடக மேடை;
உறவுகள்,நண்பர்கள் போடும் வேடம்;
பலப் பல விதமாய் காட்சிகள் மாற்றம்;
பாசம் நேசம்;மோசம், வேஷம்;
நிலையில்லாத நிஜமும் பொய்யும்
நினைவில் மலர்ந்து கனவாய் உதிர
தொலைதூரம்போல் மரணம்;ஆனால்
தொடரும் நிழலாய்அது நம் அருகில்!

நடந்து முடிந்த நாடகக் கூத்தின்
நாயகர்களாக நாம் இருந்தாலும்
நடத்தி வைத்தவன் சத்குருவே;அவனே
நடிப்பின் இயக்கம் செய்தவன்;உண்மை!
நடக்கப் போகும் முடிவும் அவன்தான்
நாம்அவன் கருவி;நலமும் தீங்கும்
கடந்த காலம்;நம் செயல் களுக்குக்
காரணம் எல்லாம் அவன்தான்;கேளீர்!

7 comments:

abarnavijay said...

"நானோர் இறைவனைப்போல
எண்ணிக்கொண்டு எழுத்துகள் படைத்து"----நான் யார் ? ’என்’ஐ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நீங்கள் உறுதியாக எங்கள் ’இறைவன்’ மாஸ்டர் .i m really feeling proud and blessed to be a member of "Yoga Yuva Kendra" and to read your valuable words .

Yoga Yuva Kendra said...

thank u abarna, sathguru blesses u

gayathri said...

எல்லாம் விதிப்படி நடக்கிறது என்றால்,நமக்கு தோன்றும் எண்ணமும் அதன்படித்தான் தோன்றுகிறதா.அதற்காக போராடுவதும் நம் விதியினால் தானா?அது சரி மாஸ்டர் , முதலில் "விதி" என்றால் என்ன என்பதை சொல்லுங்கள்.

AK said...

this poem is a bit frightening, Sir.

Venkat said...

சித்தர் பாடல் படித்தது போன்று உணர்கிறேன். பாடல் மிக அருமை மாஸ்டர். முழு அர்த்தம் புரிய எனக்கு சில வருடங்கள் ஆகலாம்.

manjula said...

ETHANNAI KAALAM,NERAM,NATKAL ENNA ETHANAI NATKAL EDAI PATRI ENNIPARTHADHILLAI.

IVVALAVU ALLAMIKKA KARUTHINAI THANDATHARKU

THANK YOU MASTER.

IRAPPU IRUDIYIL THARUVADHU THAVIPPA ALLADHU THANNIRAIVA? MASTER.

sm.sakthivel. said...

masu niraintha ulagil kasu irunthum payan illai. think it.thank u

Post a Comment