Total Pageviews

Wednesday, May 16, 2012

மீண்டும் ஒரு தேடல் 14




ப்ரண்டனின் தேடல் 14

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை!




முகமது நபி தோன்றுவதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். மிகப் புராதன காலத்திலேயே அவர்கள் ஓசிரிஸ் (Osiris)என்ற கடவுளை வணங்கி வந்தனர். ப்ரண்டனின் ஆன்மீகத் தேடலின் போதும் எகிப்தில் சில இடங்களில் மசூதிகளுக்கு அருகிலேயே ஓசிரிஸின் பழங்காலக் கோயில்கள் இருந்திருக்கின்றன. பால் ப்ரண்டன் அந்தப் பழங்காலக் கோயில்களுக்குச் சென்று அவை சொல்லும் செய்தியை அறிய முற்பட்டார்.


ஒரே இறைவனை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மனிதர்கள் வழிபட்டார்கள், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்று பால் ப்ரண்டன் ஆழமாக நம்பினார். மிகப் புராதனமான அந்தக் கோயில்களில் பல, பால் ப்ரண்டனின் காலத்திலேயே சிதிலமாக ஆரம்பித்திருந்த போதிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்ட அந்த தலங்களில் ஆன்மிக அலைகள் பரவியிருந்ததை அவரால் அங்கு சென்ற போது உணர முடிந்தது. 


அப்படி அவர் உணர்ந்த ஒரு சக்தி வாய்ந்த இடம் அபிடோஸ் (Abydos) என்ற இடத்தில் இருந்த புராதனக் கோயில். கோயிலின் புறத்தோற்றம் கால ஓட்டத்தின் சிதைவுகளைக் கண்டிருந்தாலும் அங்கிருந்த பெரிய தூண்களின் சிற்பங்களிலும், மங்கிய சித்திரங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்த கதைகளில் எத்தனையோ ரகசியங்கள் மறைந்திருந்ததாக பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது.


எகிப்தின் பழங்காலக் கதைகளின் படி பூமிக்கடவுளுக்கும், ஆகாயத் தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவன் மனைவி ஐசிஸ். பூமியை ஆண்டு வந்த ஓசிரிஸ் மீது பொறாமைப் பட்டு அவன் தம்பி செட் சூழ்ச்சி செய்து அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுகிறான். மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஐசிஸ் நீண்ட நாள் பிரார்த்தனைகளும், சடங்குகளும் செய்து துண்டமான உடலை ஒன்று சேர்த்து உயிர் பெறச் செய்து விடுகிறாள். மாண்டவர் உலகிற்குச் சென்று வந்ததால் அனைத்தையும் உணர்ந்து பல மடங்கு சக்தி வாய்ந்தவனாக சில நாட்கள் வாழ்ந்து மனைவி ஐசிஸை கருத்தரிக்க வைத்து விட்டு மறுபடி மாண்டவர் உலகிற்குத் திரும்பி விடுகிறான். ஐசிஸ் பிரசவித்த ஹோரஸ் என்ற அவனுடைய குழந்தை பெரும் சக்தி வாய்ந்தவனாக வளர்ந்து தந்தையைக் கொன்ற சித்தப்பா செட்டை அழிக்கிறான்.


எகிப்தியக் கடவுள்களில் பிரதானமான கடவுளாய் ஓசிரிஸ் இறப்பின் கடவுளாகவும், நியாயத் தீர்ப்பு கடவுளாகவும் எகிப்திய பழங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஹோரஸ் தீயவைகளை அழிக்கும் தெய்வமாகவும், எல்லா புதிய நல்ல மாற்றங்களுக்கான தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அந்தக் கதைகளே அந்த கோயிலில் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் விவரிக்கப் பட்டு இருந்தன.


வழக்கமான கோயில்களில் வழிபாட்டின் போது ஒலிக்கும் இசைக்கருவிகளின் இசையோ, பாடல்களோ பிரதான கடவுளான ஓசிரிஸின் அந்தக் கோயிலில் ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரேபோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்கிருந்த பழமையான எழுத்துக்களில் இருந்த தகவல்களை வைத்துக் கூறுகிறார். மயான அமைதி என்பார்களே அது போன்ற மயான அமைதியே வழிபாட்டு நேரத்தில் கடைப்பிடிக்கப் படுவதாகச் சொல்கிறார்.


அந்தக் கோயிலில் ஆன்மீக ரசியங்களை மிக அபூர்வமான, தகுந்த வெகுசிலருக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டன என்றும் அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன என்றும் சில நாட்கள் ரகசிய சடங்குகள் கழிந்த பின்னர் அவர்களுக்கு குருமார்களால் உணர்த்தப்பட்டது என்றும் எகிப்திய பழமையான ஏடுகள் சொல்கின்றன. அந்த சடங்குகள் குறித்த சில சித்திரங்களும் அங்கிருந்தன. மிகப் பெரிய உண்மைகள் ஆரவாரத்திலும், கூட்டங்களிலும் உணரப்படுவதில்லை, பேரமைதியில் ஒருவன் தனக்குள்ளே ஆழ்ந்திருக்கும் போதே உணரப்படுகின்றன என்பதற்காகவே அமைதி அங்கு வலியுறுத்தப்படுகின்றது என்று பால் ப்ரண்டன் நினைத்தார்.


(கற்பனைக் கதைகளாக சித்தரிக்கப்படும் எத்தனையோக் கதைகளைக் கற்பனைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டு பிற்கால உலகத்தினரில் பெரும்பாலானோர் பார்த்தாலும், விஷயமறிந்த சிலர் அதன் பின்னால் உள்ள செய்தியைப் படித்து பலன் அடைகிறார்கள். அந்தப் பலனையும், ஞானத்தையும் கதைகளாய் படித்து விட்டுப் போகிறவர்கள் அந்தக்கதைகளினுள் ஒளிந்திருக்கும் உண்மைத்தன்மையை உணரத் தவறி விடுகிறர்கள்.)




நண்பர்களே! இந்த எகிப்து கடவுள் ஓசிரிசின் கையிலிருக்கும் ஆயுதங்களைப் பாருங்கள்..ஏதாவது புரிகிறதா?......




அங்கிருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த சில சங்கேதக் குறிகள் ரகசியக் கலைகள் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்படி இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிதிலமடைந்து பாழ்பட்டுப் போன அந்தக் கோயிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னன் ஒருவன் புனரமைத்தததோடு எகிப்தில் இருந்த ஹீலியோபோலிஸ் என்ற மிகப்பழங்கால நூலகத்தில் இருந்த ஓசிரிஸ் கோயில் பற்றிய தகவல்களைக் கொண்ட நூல்களை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு ஒன்று திரட்டி அந்தப் பழைய தீட்சைக்கான சடங்குகளை தன் பிற்கால சந்ததிகளுக்கு விட்டுப் போனதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னனால் தான் இன்று அந்த தீட்சைகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் விரிவாக அறிய முடிகிறது. அந்த நூல்களில் இருந்த தகவல்களின் படியே அதே கட்டமைப்புடன் பல கோயில்களை அந்த மன்னன் புதிதாகக் கட்டினான் என்றும் வரலாறு கூறுகிறது.


ஆனால் பால் ப்ரண்டன் எகிப்திற்குச் சென்ற காலத்தில் அதுவும் பழமையாகிப் போன போதும் முழுவதுமாக அழிந்து விடாமல் தப்பிய ரகசியத் தகவல்கள் பல, அன்றைக்கும் ஆன்மிக வல்லுனர்களை ஈர்த்த வண்ணம் இருந்தன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆன்மிகத் தேடலுடன் அந்த ரகசிய தீட்சை பெற முயன்றாலும் தக்க குருமார்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெகுசிலரையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த ரகசிய தீட்சை தந்தனர் என்று சொல்லப் படுகிறது. அப்படி ரகசிய தீட்சை பெற்றதாக சொல்லப்படுபவர்களுள் ஒரு சிலர் மிகப்பிரபலமானவர்கள். அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்திய சில ரகசியத் தகவல்களையும் பார்ப்போமா?




(தேடல் தொடரும்)
















































நன்றி;கணேசன்

No comments:

Post a Comment