Total Pageviews

Thursday, January 5, 2012

யோகத்தேடல் 5











முதல் முதலில் ரமண மகரிஷியிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது பால் ப்ரண்டன் சொன்னார். "ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

மகரிஷி புரிகிறது என்பது போல் தலையசைத்தார்.

பால் ப்ரண்டன் தயக்கமில்லாமல் தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொன்னார். "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

அருகிலிருந்த சிலர் பால் ப்ரண்டனுடைய வெளிப்படையான கேள்வியைக் கேட்டு திகைத்தனர். மகரிஷி அவரையே பார்த்தாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை. பால் ப்ரண்டன் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"

"இந்த தேடலுக்குத் தேவையான வழிமுறைகளைக் குரு கற்றுத்தரலாம். ஆனால் "நான் யாரென்பதை" அவரவர் தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். 


"மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். ரமண மகரிஷி அவர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகியால் தான் இப்படி நடந்து கொள்ளமுடியும் என்பதில் சந்தேகமென்ன?

ரமணாஸ்ரமத்தில் இருக்கும் போது பால் ப்ரண்டனுக்கு யோகி ராமையா என்னும் ஆந்திர சித்தரின் அறிமுகம் கிடைத்தது. வருடத்தில் ஒரு முறை வந்து சுமார் ஒரு மாதம் அங்கு இருந்து விட்டுப் போவார் அந்த சித்தர். ஒரு முறை பால் ப்ரண்டன் இருந்த அறையில் ஒரு கொடிய விஷமுள்ள நாகம் வந்து விட பலரும் ஓடி வந்து அதைக் கொல்ல கம்புகளை எடுக்க யோகி ராமையா அங்கு வந்து அவர்களைத் தடுத்து தன் இரு கைகளாலும் அந்த நாகத்தை எடுத்து அதை அன்புடன் பார்க்க, தன் விஷ நாக்குகளை வெளியே நீட்டினாலும் அவரை தீண்டாமல் அந்த நாகம் சீற்றம் தணிந்து அவருக்கு தலை வணங்கியது. ராமையா அதை கீழே விட யாரையும் உபத்திரவிக்காமல் அந்த நாகம் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டது. ஆச்சரியத்துடன் "உங்களுக்குப் பயமாக இருக்கவில்லையா?" என்று பால் ப்ரண்டன் கேட்டதற்கு ராமையா சொன்னாராம். "நான் மனதில் வெறுப்பு சிறிதும் இன்றி முழு அன்புடன் அதை அணுகியிருக்கும் போது பயப்பட என்ன இருக்கிறது?". மனித எண்ணங்களை உணரும் சக்தி விலங்குகளுக்கும் உண்டு என்பதையும் அவை அதன்படியே நடந்து கொள்கின்றன என்பதையும் அந்த நிகழ்ச்சி தெரிவிக்கிறதல்லவா?





ரமண மகரிஷி பெரும்பாலும் மௌன நிலையிலேயே இருப்பார். அவர் முன் வந்தமர்ந்து செல்லும் பல மனிதர்களுக்கு அந்த வார்த்தைகளற்ற சூழ்நிலையிலும் தேடி வந்ததற்கு ஒரு பதில் கிடைத்தது. சில சமயங்களில் மட்டுமே அவர் பேச இசைந்தார். பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."


ரமண மகரிஷியைக் கண்டு அவர் காலடியில் சில காலம் தங்கி ஆன்மீக அனுபவத்தை ஆழமாக உணர்ந்த பால் ப்ரண்டன் இந்த தேசத்தில் வந்து தேடியதைக் கண்ட திருப்தியில் தன் நாடு திரும்பினார்.

(முடிந்தது)






1 comment:

vijay said...

மார்கழி மாத ஸத்ஸங்க பலனைப் பெற்றோம் .நன்றி மாஸ்டர்.

Post a Comment