Total Pageviews

Wednesday, January 18, 2012

மீண்டுமொரு தேடல் 6

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி!நண்பர்களே!   உலகில் இரு சக்திகள் தான் உள்ளன.  அவை ஒளி சக்தி, (light energy)மற்றும் ஒலி சக்தி(sound energy).  ஒளி சக்தியே ,விஞ்ஞானமாகப் பரிணமிக்கிறது.    அதுபோல ஒலி சக்தியே மெய்ஞானமாகப் பரிணமிக்கிறது.  மேலை நாடுகள் விஞ்ஞானத்தில் வளர்ந்து வெளிமுகமாகத் தன் தேடலைத் தொடங்கிய அதே நேரத்தில் நமது யோகிகள் ஒலி சக்தியை மந்திரங்களாக்கி உள்முகத் தேடலைத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டு மனிதனின் நிரந்தரத் தேவையான ஆனந்தத்தை அடைவதற்கானப் பயிற்சி முறைகளையும் தொகுத்துக் கொடுத்தார்கள்.   ஆனால் விஞ்ஞானமோ இன்னும் தனது தேடுதலுக்கான முடிவை அடையவில்லை.  இந்த விஞ்ஞானம் ஒரு தொடுவான நிலையாகவே உள்ளநிலையில் விஞ்ஞான சக்திகளுக்குப் புலப்படாத அதே நேரத்தில் விஞ்ஞானத்தால் சாதிக்க முடியாத செயல்களைக் கூட மந்திரங்களால் சாதிக்க முடியும் என்பதே உண்மை.


இந்திய யோகியின் மந்திரப் பிரயோக சக்தி!?
இங்கிலாந்தில் ஒரு பாதிரியார் ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபட்டுச் சர்ச்சால் பதவி விலக்கப்பட்டார். ஆனால் ஹிப்னாடிசமும், சில சித்து வித்தைகளும் தெரிந்த அந்தப் பாதிரியார் தனியாக இயங்க ஆரம்பித்தார். அவர் சக்திகளைக் கண்ட சிலர் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்கள். அவர் தன் சக்திகளைத் தவறான வழிகளில் பயன்படுத்தி மற்றவர்களிடம் பணம் பறிக்கவும், தரக்குறைவாக நடந்து கொள்ளவும் செய்தார். இதை பால் ப்ரண்டன் போன்ற பலரும் அறிந்திருந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒரு முறை பால் ப்ரண்டனுக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஒருவர் இரவில் தூக்கத்தில் நடப்பது போல் தெருவில் நடந்து வருவதைப் பால் ப்ரண்டன் கண்டார். அவரை நிறுத்தி விசாரித்த போது அந்தப் பாதிரியார் வரச்சொன்னதாகவும், அவரைச் சந்திக்கச் செல்வதாகவும் சொன்னார். அந்தப் பெண்மணி பேசிய போது அவர் சுயநினைவில் இல்லை ஏதோ வசியத்திற்கு உட்பட்டிருக்கிறார் என்பது பால் ப்ரண்டனுக்குப் புரிந்தது. அந்த இரவு வேளையில் அந்த நபரிடம் செல்வது நல்லதல்ல என்று பால் ப்ரண்டன் எவ்வளவோ சொல்லியும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. அந்தப் பக்கம் வந்த வேறொரு நண்பரின் உதவியுடன் அந்தப் பெண்மணியை அவருடைய வீட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார் பால்ப்ரண்டன்.

மறுநாள்,  இந்திய யோகிகளைப் பற்றிச் சொல்லி முன்பு தன்னை இந்தியாவுக்கு அனுப்பினாரே இந்திய நண்பர் ஒருவர்,அவரைக் கண்டு வருத்தத்துடன் இந்தத் தகவலைச் சொன்னார் பால் பிரண்டன். (யோகத் தேடல் 1 ல் சொல்லப்பட்ட இந்தியரே அவர்.  அவரே ஒரு யோகி என்பதைப் பின்னாட்களில் தான் பால் ப்ரண்டனால் உணர முடிந்தது). பால் ப்ரண்டன் சொன்ன தகவல் அந்த இந்திய யோகியை ஆத்திரப்பட வைத்தது. இது போன்ற ஆசாமிகளை விட்டு வைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல என்று சொன்ன அவர் உடனடியாக ஏதோ மந்திரங்களைப் பிரயோகம் செய்து அந்த போலி பாதிரியாரைச் சபித்தார். இந்திய யோகிகளின் சக்திகளைக் கண்கூடாகக் கண்டிருந்த பால் ப்ரண்டன் இது அந்தப் பாதிரியாருக்கு அபாயமே என்றுணர்ந்தார். "பெரியதாக ஒன்றும் செய்யாமல் அந்த பாதிரியாருக்குப் புத்திமதி கூறி மிரட்டி ஊரை விட்டேப் போகும்படிச் செய்து திருந்தச் சந்தர்ப்பம் தரலாமே" என்று சொன்னார் பால்ப்ரண்டன். "நீங்கள் உங்கள் வழிப்படி முயற்சி செய்யுங்கள், நான் என் யோக வழிப்படி முயற்சி செய்திருக்கிறேன்" என்றார் அந்த இந்திய யோகி .

இந்திய யோகிகளின் சக்தியை இந்தியா வந்திருந்த போது கண்கூடாகக் கண்டிருந்த பால் ப்ரண்டன் அந்தப் போலிப் பாதிரியாருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து விரைவாக அந்தப் பாதிரியாரை சந்தித்து புத்தி சொல்லி எச்சரிக்கச் சென்றார். அந்தப் பாதிரியார் தங்கியிருந்த இடத்திற்குப் போன போது உள்ளே இருட்டாக இருந்தது. அந்த இடமே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அங்கு விசாரித்த போது அந்தப் பாதிரியார் தன் சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது மின்விளக்குகள் திடீரென்று படாரென்று வெடித்தன என்றும், ஏதோ ஒருசக்தி அந்தப் பாதிரியாரை ஆக்கிரமித்தது போல் இருந்தது என்றும் ,பயத்தில் அந்தப் பாதிரியார் ஏதேதோ பிதற்றிக் கொண்டு ஏதோ சைத்தான் வந்து விட்டதாகவும், இதெல்லாம் சைத்தானின் வேலை என்றும் கத்திக் கொண்டு கீழே மயங்கி விழுந்ததாகவும், அவர்கள் சொன்னார்கள். பின் அந்த பாதிரியாரை மருத்துவமனைக்கு விரைவாக அவருடைய சீடர்கள் அழைத்துச் சென்றார்கள்.

பால் ப்ரண்டனுக்கு இது அந்த இந்திய யோகியின் மந்திரப் பிரயோகம் செய்த வேலையே என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. அந்த சீடர்களிடம் இது நடந்த நேரத்தைக் கேட்டார். அவர்கள் சொன்ன நேரம் அந்த இந்திய யோகி மந்திரங்களை உச்சரித்துச் சபித்த அதே நேரம்!..... அந்த முட்டாள் சீடர்களில் ஒருவனிடம் அவர்களது குருவின் மயக்கம் தெளிந்தவுடன் தரச் சொல்லி பால் ப்ரண்டன் ஒரு கடிதத்தைத் தந்தார். "உடனடியாக அந்த ஊரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்றும் இல்லா விட்டால் இந்தியயோகியின் சாபம் உன்னைக் கொன்றுவிடும்"என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். அந்தப் பாதிரியார் பின்பு அந்த ஊரை விட்டே போய் ஒரு வருடத்திற்குள் மற்றொரு கிராமத்தில் இறந்து போனார்.

                          (ஹாவட் கார்டர் மற்றும் லாட் கார்னர்வான்)

                         
அதே போல் மந்திரங்களின் சக்தியை அறிந்து கொள்ள மற்றுமொரு சம்பவம், இங்கிலாந்தைச் சேர்ந்த கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) என்பவர் டுடன்காமென் (Tutankhamen) என்ற கிமு பதினான்காம் நூற்றாண்டின் எகிப்திய சக்கரவர்த்தியின் கல்லறையைத் தோண்டிப் பார்க்கும் பணியை 1923ல் மேற்கொண்டார். அந்தக் கல்லறைக்குள் நிறைய செல்வங்கள் உள்ளன என்றும் அந்த செல்வங்கள் மந்திரங்களால் சபிக்கப்பட்டச் சாபங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் எகிப்தில் பெருத்த நம்பிக்கை பரவலாக இருந்து வந்தது. பலரும் கார்னர்வான் பிரபுவை அந்தக் கல்லறையைத் திறக்கப்போவது ஆபத்தானது என்றும் எச்சரித்தார்கள். ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கல்லறையைத் திறந்து பார்க்கும் பணியை மேற்கொண்டார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவர் இரண்டே மாதங்களில் ஏதோ விஷக் கொசுக்கடியால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது. அவர் இறந்த அந்தக் குறிப்பிட்ட இரவில், கெய்ரோவில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் காரணமே இல்லாமல் எல்லா விளக்குகளும் அணைந்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து மின்சாரம் திரும்பக் கிடைத்த போது அவருடைய நர்சு அவர் பிணத்தைக் காண நேர்ந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இங்கிலாந்தில் கார்னர்வான் பிரபுவின் செல்ல நாய் விசித்திரமாய் குலைத்து விட்டு செத்து விழுந்தது.

(அந்தக் கல்லறையைத் திறக்கும் வேலையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் பல்வேறு கால கட்டங்களில் துர்மரணத்தையேச் சந்திக்க நேர்ந்தது அல்லது பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிட்டது என்று கூறுகிறார்கள்.அந்தக் கால கட்டத்தில் அடிக்கடி வந்த இது போன்ற மரணச் செய்திகள் பத்திரிக்கைகளாலும் மக்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது)

தன் நேரடி அனுபவம் மூலமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கல்லறைத் தோண்டப்பட்டப் பின்பு ஏற்பட்ட விளைவுகளின் பதிவுகளைப் படித்திருந்ததன் மூலமாகவும் அறிந்ததை இந்த சமயத்தில் பால் ப்ரண்டன் நினைவு கூறுகிறார்.(தொடரும்)

No comments:

Post a Comment