Total Pageviews

Tuesday, January 17, 2012

மீண்டும் ஒரு தேடல் 5

கண்ணுக்குத் தெரியாத..... பூதங்கள் உள்ளனவா?


மீண்டும் அந்த மந்திரவாதியை சில முறை சந்தித்து அவரிடம் இதுபற்றித் துருவித் துருவி கேள்விகள் கேட்டார். அந்த மந்திரவாதியோ பிடி கொடுத்து பதில் சொல்லவில்லை. அந்த மந்திரவாதியின் மகனும் பால் ப்ரண்டனிடம் தனியாகக் குறைபட்டுக் கொண்டான். "என் தந்தையிடம் நானும் இந்த வித்தையைக் கற்றுத் தரும்படி பல முறை கேட்டுக் கொண்டேன். அவரோ இது கடினமானது மட்டுமல்ல அபாயகரமானதும் கூட. எழுப்பி விட்ட பூதத்தை அடக்க முடியாமல் போன எத்தனையோ மந்திரவாதிகள் பல பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். எனவே உனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி என்னை சட்டப்படிப்பு படிக்க அனுப்பி விட்டார்"

மகனிடமே அந்த ரகசியங்களை சொல்லாத மந்திரவாதி தன்னிடம் சொல்லாததில் வியப்பில்லை என்று பால் ப்ரண்டன் எண்ணினார். ஆனாலும் இது உண்மையா பொய்யா என்ற சந்தேகம் மனதில் எழுந்து கொண்டே இருந்தது. அதைப் புரிந்து கொண்டது போல் ஒரு நாள் அந்த மந்திரவாதி சொன்னார். "உங்களைப் போன்ற மேலை நாட்டினர் புரியாத விஷயங்களை இல்லை என்று ஒரேயடியாக சாதிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறீர்கள். பழங்கால மந்திரவாதங்கள் உண்மையே. உண்மையில் இது போன்ற கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் இருக்கத்தான் செய்கின்றன."

அவராக அந்தப் பேச்சை எடுத்த பின் பால் ப்ரண்டன் அந்த சந்தர்ப்பத்தை விடவில்லை. "உண்மையில் அவை என்ன?"

மந்திரவாதி சொன்னார். "மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும் அவையும் உலகத்தில் வாழ்கின்றன. ஒரு காலத்தில் அவற்றைக் காணும் சக்தியைப் பெற்றிருந்த மனிதன் காலப்போக்கில் அந்த சக்தியை இழந்து விட்டான். அவை கண்ணுக்குத் தெரியாத ஆவியுலகில் வசிப்பவை. ஆனால் அவை மனித ஆவிகள் அல்ல. மனிதர்கள் உலகில் வாழ்ந்து முடித்த பின் தான் ஆவியுலகிற்குச் செல்கிறார்கள். ஆனால் அவை அங்கேயே உருவாகி அங்கேயே இருப்பவை. அவற்றின் குணாதிசயங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றிலும் நல்லவை உண்டு. தீயவை உண்டு. தெய்வத்தன்மை வாய்ந்தவையும் உண்டு."

பால் ப்ரண்டனுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. "அவற்றை உங்கள் ஆதிக்கத்திற்கு நீங்கள் எப்படிக் கொண்டு வருகிறீர்கள்?"

மந்திரவாதி சொன்னார். "அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஒவ்வொன்றையும் வரவழைக்கவும் கட்டுப்படுத்தவும் முறையான மந்திரங்கள் உண்டு. அவைகளை வந்தமர்த்த சில வடிவங்கள்/எந்திரங்களை வரைய அறிந்திருக்க வேண்டும். அவற்றினுள் சில குறிகளையும், மந்திரங்களையும் எழுத வேண்டும். எல்லாவற்றையும் கற்றுத் தர ஒரு குரு அவசியம். இத்தனையும் அறிய குரு தரும் பயிற்சிகள் எளிமையானவை அல்ல. கடுமையானவை. அதுவும் பொருத்தமானவனா இல்லையா என்றறியாமல் எந்த குருவும் யாரையும் சீடனாக ஏற்றுக் கொள்வதில்லை."

"என்னுடைய குரு என் தந்தையே. எனக்கு இதில் இருந்த ஈடுபாடை அறிந்து, தகுந்தவனா என்று தெளிந்த பிறகு தான் என் தந்தை எனக்கு மந்திர தீட்சையை என் பதினெட்டாம் வயதில் அளித்தார். இருபத்தெட்டு வயது வரை நான் கடும் பயிற்சிகளைச் செய்து, நிறைய படித்து, என்னை சக்தி வாய்ந்தவனாக ஆக்கிக் கொண்ட பின்பே நான் இந்த பூதத்தின் மீது என் ஆதிக்கத்தை ஏற்படுத்தினேன். என் மகன்கள் தங்களுக்கும் சொல்லித் தர வற்புறுத்துகிறார்கள். ஆனால் முக்கியமாக தைரியம் என்ற பண்பு அவர்களிடம் தேவையான அளவு இல்லை என்பதாலேயே நான் மறுத்து வருகிறேன். நான் இறப்பதற்கு முன் யாராவது ஒரு தகுந்த சீடனுக்கு இதை சொல்லித் தந்தே ஆக வேண்டும். அது நான் என் குருவுக்குத் தந்த வாக்குறுதி. அது இந்தக் கலை தொடர நான் செய்ய வேண்டிய கடமை. ஜோதிட வல்லுனரான நான் என் மரணகாலத்தை அறிவேன். அதற்கு முன் என் கடமையை நிறைவேற்றுவேன்."

அந்த மந்திரவாதி இது வரை தன் மந்திரவாதத்தினால் சாதித்த பல செயல்களைச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டு தன் சந்தேகத்தை எழுப்பினார். "நீங்கள் அபாயகரமானது என்று முன்பு சொன்னீர்களே. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஆதிக்கத்தின் கீழ் வந்த போதிலும் அந்த பூதங்கள் நம் கைப்பாவை அல்ல. அவை மிக புத்திசாலித்தனமானவை. எப்போது நாம் பலவீனராகவும், கட்டுப்பாடில்லாமலும் மாறுகிறோமோ அவை நம் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போகவும் சாத்தியம் உண்டு. நம் சக்திகளை தீய செயல்களுக்கு உபயோகிப்பதும், நாம் வலிமை இழந்து போவதும் அவை நம்மை எதிர்த்து செயல்பட வழி வகுக்கலாம். அந்த நேரங்களில் அவை நம்மை விவரிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாக்கும். சில நேரங்களில் மரணமே சம்பவிப்பதும் உண்டு"

பால் ப்ரண்டன் கேட்டார். "பண்டைய எகிப்தியர்கள் இது பற்றி ஆழ்ந்த ஞானம் உடையவர்களாக இருந்தார்களா?"

"ஆமாம். பண்டைய எகிப்திய மதகுருமார்கள் அவற்றைப் பற்றி அறிந்திருந்தது மட்டுமல்லாமல் அவற்றை கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் ரகசியங்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளை அந்த பூதங்களிடம் ஒப்படைந்திருந்தார்கள்."

அப்போது பால் ப்ரண்டன் பிரமிடின் உள்ளே தனக்கேற்பட்ட அனுபவங்களைச் சொன்னார். அதற்கு மந்திரவாதி சொன்னார். "உண்மையே. அந்த ஆவிகள் பண்டைய மதகுருமார்களின் ஆதிக்கத்தில் இருந்தவை. அந்த ரகசியங்களைக் காக்கும் பணியை அவை இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. யார் அந்த ரகசியங்களை அறிய முற்படுகிறார்களோ அவர்களை பயமுறுத்துதல், ஆசை காட்டுதல், கவனத்தை சிதற வைத்தல் போன்ற வேலைகளைச் செய்து அப்புறப்படுத்தி விடும். அவற்றைக் கட்டுப்படுத்த தெரிந்தால் அந்த ரகசியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். துரதிர்ஷ்ட வசமாக அந்த குறிப்பிட்ட பூதங்களை வரவைத்து கட்டுப்படுத்தும் மந்திரங்கள் பண்டைய எகிப்திய குருமார்களுடன் மறைந்து விட்டன. இப்போது அவற்றை அறிந்தவர்கள் யாருமில்லை."

பால் ப்ரண்டன் கேட்டார். "பூதங்களின் உதவியுடன் எதையும் செய்து விட முடியுமா?"

மந்திரவாதி அடக்கத்துடன் ஒப்புக் கொண்டார். "எல்லாவற்றிற்கும் எல்லைகள் உண்டு. பல விஷயங்கள் செய்ய முடியும் என்றாலும் அதற்கும் மேல் முடியாது. இறைவன் ஒருவனே எல்லை இல்லாதவன். முயற்சிகள் செய்ய மட்டுமே எங்களால் முடியும். எது வரை எந்த அளவு முடியும் என்ற கடைசி முடிவு இறைவனிடம் மட்டுமே இருக்கிறது"

(தொடரும்)
நன்றி- என்.கணேசன்

1 comment:

suganya shankar said...

Sir

I have downloaded this A search in secret Egypt book.

Shankar Ganesh

Post a Comment