Total Pageviews

Tuesday, January 3, 2012

யோகத்தேடல் 1





நண்பர்களே!   இந்தத் தொடர் கட்டுரை, சகோதரர் கணேசனால் ஏற்கனவே வலையில் எழுதப்பட்டது.   அதனை என்னுடைய பாணியில் சிறு,சிறு மாற்றங்களுடன் பதிவாக்கியிருக்கிறேன்.    ரமண பகவானின் அணுக்கத்தொண்டரானத் திருமிகு பால்ப்ரண்டனால் எழுதப்பட்ட "search in secret india"என்ற நூலின் தமிழாக்கமே இந்தத் தொடர்.    அன்னாரின் ஆன்மீக அனுபவங்கள் யோகயுவகேந்திரா நண்பர்களுக்கும் பயன்படட்டும் என்ற நோக்கிலேயே இங்கு பதிவு செய்யப்படுகிறது.




















"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?"



பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தப் புகழ்பெற்றத் தத்துவஞானி ஒரு இந்தியரிடம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இப்படிக் கேட்டார். இங்கிலாந்தில் தற்செயலாகச் சந்தித்த அந்த இந்தியரிடம் ஏதோ ஒரு வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்டப் பால் ப்ரண்டன் அவரிடம் பேச்சுக் கொடுக்கப் பேச்சு இந்தியா பக்கமும், இந்தியாவின் யோகிகளைப் பற்றியும் திரும்பியது. இந்திய யோகிகளிடம் இருந்த மகா சக்திகளைக் கேட்டு பிரமித்தப் பால் ப்ரண்டன் அப்போது தான் இந்தக் கேள்வியை ஆவலுடன் கேட்டார்.


"இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஏனென்றால் யோகிகளாகத் தெரிபவர்களில் பலர் போலிகளாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. மலிந்திருக்கும் போலிகளின் கூட்டத்தின் மத்தியில் உண்மையான யோகிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. உண்மையான யோகிகள் எத்தனை சக்திகள் பெற்றிருந்தாலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவற்றை உபயோகிப்பதில்லை. பணமும், புகழும் அவர்களுக்குப் பொருட்டல்லாததால் அவர்கள் மற்றவர்களைக் கவர எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அவர்களுக்கு ஆத்ம ஞானமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் யோக சக்தியை முறைப்படியான பயிற்சியில் அடைந்த யோகிகளல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பல அபூர்வ சக்திகள் இருந்தாலும் உண்மையான யோகிகள் என்று கூறிவிட முடியாது....." என்றார் அந்த இந்தியர்.





  அந்த இந்தியர், இந்தியாவின் யோகிகளைப் பற்றிச் சொன்னதையெல்லாம் கேட்டு ஆவல் அதிகமான பால் ப்ரண்டன் அப்படிப்பட்ட உண்மையான ஒரு யோகியையாவது சந்தித்து விட வேண்டும் என்று பேராவலுடன் உடனே இந்தியாவுக்கு வந்தார்.இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில்.அந்த இந்தியர் சொன்னது போல் பல அபூர்வமான சக்தி படைத்தவர்களை பால் ப்ரண்டன் இந்தியாவில் சந்தித்தார். அவர் தனது இந்திய ஆன்மீகப் பயண அனுபவங்களை இரகசிய இந்தியாவில் ஒரு தேடல் (A search in secret India) என்ற நூலில் 1934 ஆம் ஆண்டில் சுவைபட எழுதியுள்ளார். அவரது இந்திய அனுபவங்களில் சுவாரசியமான சிலவற்றை இங்கே பார்ப்போமா?



உண்மையான யோகியைத் தேடி பம்பாயில் வந்திறங்கிய பால் ப்ரண்டன் முதலில் கண்ட அபூர்வ சக்திமனிதர் இந்தியரல்லர். எகிப்தைச் சேர்ந்த ஒரு மேஜிக் நிபுணர். பால் ப்ரண்டன் தங்கியிருந்த ஓட்டலிலேயே தங்கி இருந்தார் அவர். அவர் சக்திகளைப் பற்றி ஓட்டலில் பலரும் உயர்வாகச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அவரைச் சந்தித்தார். அந்த எகிப்தியர் பால் ப்ரண்டனிடம் சொன்னார். "ஒரு வெள்ளைத் தாளில் உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியைப் பென்சிலால் எழுதிக் கொள்ளுங்கள்"


பால் ப்ரண்டன் அப்படியே ஒரு கேள்வியை ஒரு வெள்ளைத்தாளில் எழுதினார்.


"அந்தத் தாளை நான்காக மடியுங்கள்....". பால் ப்ரண்டன் மடித்தார். மேலும் நான்கு நான்காய் முடிகிற வரை மடித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே முடிகிற வரை மடித்தார். கடைசியில் அந்தத் தாளையும், பென்சிலையும் சேர்ந்தாற்போல கெட்டியாக வலது கையில் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். அப்படியே செய்தார் பால் ப்ரண்டன்.


பின் சிறிது நேரம் அந்த எகிப்திய மேஜிக் நிபுணர் கண்களை மூடிக்கொண்டு ஒருவித தியான நிலைக்குச் சென்றார். சில நிமிடங்கள் கழிந்து கண்களைத் திறந்த அவர் "நீங்கள் அந்தத் தாளில் எழுதிய கேள்வி இது தானே?" என்று கேட்டு அவர் எழுதிய கேள்வியை அப்படியே சொன்னார். பால் ப்ரண்டன் திகைத்துப் போனார்.


அந்த மேஜிக் நிபுணர் அந்தத் தாளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அதைப் பிரித்துப் பார்த்தார். அந்தக் கேள்வியின் கீழ் அதற்கான பதில் பென்சிலில் எழுதியிருந்தது. பால் ப்ரண்டனிற்கு பிரமிப்பாக இருந்தது. இது என்ன கண்கட்டு வித்தையோ என்று நினைத்த அவரை மேலும் சில கேள்விகள் எழுதிக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். பால் ப்ரண்டன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், பெயர்கள், தேதிகள் குறித்து மிகவும் கடினமான கேள்விகளாகத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டார். அந்தத் தாளையும் மடித்து முன்பை விட இறுக்கமாக பென்சிலோடு பிடித்துக் கொண்டார். ஆனால் அவை எல்லாவற்றையும் அந்த எகிப்தியர் சொன்னதோடு அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்த போது அந்தக் கேள்விகளின் கீழே பென்சிலால் சரியான பதில்கள் எழுதப்பட்டிருந்தன.


பிரிக்க முடியாதபடி தன் கையிலேயே மிக இறுக்கமாக மடித்துப் பிடித்து வைத்துக் கொண்ட தாளில் உள்ள கேள்விகள் அந்த எகிப்தியரால் எப்படி அறியப்பட்டன என்பதும் எந்த விதத்திலும் தன் வாழ்க்கையில் நெருங்கியவர்கள் கூட அறிந்திராத அந்தப் பதில்கள் எப்படி அறியப்பட்டன என்பதும் பென்சிலை மடித்து வைத்திருந்த தாளுடன் இறுக்கிப் பிடித்திருந்த போதும் அந்த பென்சிலால் அந்தப் பதில்கள் அந்தத் தாளில் எப்படி எழுதப்பட முடியும் என்பதும் பால் ப்ரண்டனுக்குப் புரியாதப் புதிராக இருந்தது.


வியப்பின் எல்லைக்கேப் போன பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்ட போது அந்த எகிப்தியர் அந்த இரகசியத்தைச் சொல்ல மறுத்து விட்டார். பால் ப்ரண்டன் வற்புறுத்திய போது "இந்த இரகசிய வித்தையை வெறும் ஆர்வமுடையவர்களுக்குச் சொல்லித் தர முடியாது. நீங்கள் என் உதவியாளராக மாறி என்னுடனேயே வருவதாக இருந்தால் மட்டுமே நான் உங்களுக்கு இந்த இரகசிய வித்தையைக் கற்றுத் தர முடியும்." என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.


பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்திலிருந்து தான் இந்தியா வந்த உண்மையான காரணத்தை அந்த எகிப்தியரிடம் சொல்லிப் பின் வாங்கினார்.

தன் தேடலில் அவர் கண்ட இன்னொரு சுவாரசியமான நபர் சென்னைக்கு அருகே இருந்த ஒரு ஹத யோகி. அவரது அபூர்வ சக்திகள் பற்றி அடுத்த பதிவில் காண்போமா?

(தேடல் தொடரும்)




நன்றி; கணேசன்

No comments:

Post a Comment