Total Pageviews

Friday, January 14, 2011

நினைவு நல்லது வேண்டும்

வானொலி நேர்காணலின் போது ஒரு அன்பர் கேட்ட கேள்வி "'நான் நினைப்பதை எந்த உபகரணமும் இல்லாமல் , யோகத்தின் மூலமாகச் செயல் படுத்த முடியுமா ?.............................



"நினைப்பதைச் செயல்படுத்த முடிகிறதோ இல்லையோ
நினைப்பை ஒழுங்கு படுத்த முடியும்.  இது யோகத்தால் சாத்தியம்" 





வரப் போகிறது அடுத்த கட்டத் தொழில் நுட்பம்! இதைப் பற்றிப் பார்க்கும் முன் ஒரு நிகழ்வைப் பற்றி பார்ப்போம்!

சமீபத்தில் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஓர் அலுவலகத்திற்குச் சென்று இருந்தார் ஒரு பத்திரிக்கையாளர். வாசலில் அவர் தலையில் ஒரு ஹெட் போன் ஒன்றை மாட்டி அனுப்பினார் காவலாளி.


கதவைத் திறக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சென்றவருக்குக் கதவு அதுவாகவேத் திறந்து வழி விட்டது. கொஞ்சம் பயத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, FAN சுவிட்ச் எங்கேவென்று தேடத் தொடங்கினார். அவர் நினைத்த மறு கணமே FAN ஓட துவங்கியது!என்னடா இது? ..எல்லாம் நினைத்த மாத்திரத்திலே நடக்கிறது என திகைத்துப்போன அவருக்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏரியல் கார்ட்டன்(ARIEAL CARTAN) என்கிற உளவியல் நிபுணர் ,"ஆமாம் ....இது சாத்தியம் என்று பேச தொடங்கினார்.



இது போன்ற சின்ன சின்ன வேலைகளை இருந்த இடத்தில இருந்தே அதுவும் மனதில் நினைத்தாலே போதும் ...அது நடக்கும்" என்று சொல்லும் போது நமக்கும் ஒரு சின்ன ஆச்சர்யம் மற்றும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ளத்  தான் செய்யும்.

அந்த டெக்னாலஜி பற்றிப் பார்ப்போம் ..."எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும் போது பீட்டா (beta waves ) அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது, ஓய்வு மூடுக்கு வரும் போது ஆல்பா அலைகளை (ALFA WAVES ) உருவாக்குகிறது.இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக சுவிட்ச் இல்லாமலே லைட் போடலாம் ...இசை கேட்கலாம். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!






நம் காதில் இருக்கும் ஹெட் செட்டில் இருக்கும் சில ஏலேக்ட்ரோடுகள் நம் எண்ண அலைகளைப் படிக்கின்றன.அந்த வாசிப்புகள் கணினிக்கு அனுப்பி அதை ப்ரோசெச்ஸ் செய்து சுவிட்ச்களுக்கு கட்டளைகளை அனுப்புகின்றன.இதன் மூலம் நம் எண்ணங்கள் செயல்படுத்துகின்றன ..


ஆனால், இது இப்போது தொடக்க நிலையில் உள்ள ஆராய்ச்சி! இப்போதைக்கு இது போன்ற விஷயங்கள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த கட்ட நிலைகள் மிக விரைவில் வரும் என்று ஆய்வாளர் கூறியுள்ளார் .


...மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே மிகப் பெரிய விஷயம். ஆனால் இதனால் ஏற்படும் பாதகமான அம்சங்கள் பற்றி இங்கே சொல்ல வேண்டாம் ஒவ்வொருவரும்
நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.


நினைப்பது எல்லாவற்றையும் கணினி செய்து விடுகிறது . சரி ! ...... நல்லதை நினைக்க வேண்டுமே! கற்பக மரத்தடியில் இருந்தவனுக்கு அவன் கேட்ட கனிகளும், ஒய்வெடுக்கக் கட்டிலும் , பணியாட்களும் கிடைத்தார்கள். ஆனா சிங்கம் வந்தா என்ன செய்யன்னு நினச்சுட்டானாம். பாவிப்பய.


""நினைப்பதைச் செயல்படுத்த முடிகிறதோ இல்லையோ
நினைப்பை ஒழுங்கு படுத்த முடியும்.  இது யோகத்தால் சாத்தியம்" 


"நினைவு நல்லது வேண்டும்"


"சித்த விருத்தி நிரோதக இதி யோகஹ"
(எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதே யோகம் ).


                                                                          ஓம் தத் சத்

வெரிக்கோஸ் வெயினா? மண்ணீரலைக் கவனிங்கப்பா!


பலருக்கு கால் தொடைக்குக் கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்குக் கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும்.


இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும்வாய்ப்புண்டு.

அட இதுதான் வெரிகோஸ் வெயின் நோயா? இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமே... என்று நினைக்கத் தோன்றுகிறதா?


உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ,வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இதுஅலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல.


நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரியது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலிகூட தலை போகும் பிரச்சனையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால்ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்.எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந்தாலும் அதனைக் குணப்படுத்த முயலவேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்தரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு வெயின் என்றுபெயர்.

வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள்.

இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்றுஅழைக்கிறோம்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித்தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின்பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லதுவீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக,மலச்சிக்கல்தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.

அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது,ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசைவற்று உட்கார்ந்திருப்பதுபோன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கானவாய்ப்பு உள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தைஇதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும்போது,ரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்தநாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும்.

ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவைஎன்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்
அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதியபராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம்.

· பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும்.

 வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு

 கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில்ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும்.

பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கானவாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே வேலை செய்வது, (நர்ஸ், போலீஸ்,செக்யூரிட்டி வேலைகளில் இருப்பவர்கள்) அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய்க்கான அறிகுறிகள் என்ன?

தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும்.

கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல்.

பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல்.

 பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

 கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாககருதிவிடுவது உண்டு)

வெரிகோஸ் வெயின் (Varicose vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.

வரும்முன் தடுக்க

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனைஅவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பது நல்லது.

தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணியவேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்கவேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை

வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கானசிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாகஉருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும்வேதனைகளைக் குறைக்க முடியும்.

அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாகபயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு ரத்த நாளத்தின் மூலமாக இந்நோய்ஏற்பட வாய்ப்புண்டு.

வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும்,வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள்.
ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள்உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையானபஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை 
அளிக்கின்றன.

நண்பர்களே! யோக மருத்துவத்தை இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம் "ஸ்வஸ்த சம்ரக்சனம்", "ஆதுரஷ்ய ரோகநிவாரணம் ". அதாவது , ஆரோக்கியமாக உள்ள ஒருவர் நோய் வருவதற்கு முன்பாகவே தனது உடலைக் காத்துக் கொள்ளும் முறை. மற்றொன்று நோய் வந்த பின்பு குணமாக்கக் கூடிய முறை. இதில் வெரிகோஸ் வெயின் என்பது வருவதற்கு முன்பாகவே காத்துக்கொள்ளக் கூடிய முறையைச் சார்ந்தது. நோய் வந்த பின்பு இதைச் சரிசெய்வதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகலாம்.

புவியீர்ப்பு விசைக்கு எதிரான ஒரு சக்தி நமது உடலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . அந்த சக்தியை மன்ணீரல்தான் தருகிறது. இது நவீனகால ஆங்கில மருத்துவத்திற்குத் தெரியாத ரகசியம். நமது உடலிலுள்ள , பெருங்குடல், உதரவிதானம் , கர்ப்பப்பை , மூலம். ஆகிய உறுப்புகள் கீழிறங்காமல் பிடித்துக்கொண்டிருப்பது மண்ணீரலில் உள்ள இந்த ரகசியமான சக்திதான். மண்ணீரலின் சக்திக் குறைபாடே பெருங்குடலைச் சரியவிட்டு நரம்புகளில் புடைப்புகளை ஏற்படுத்துகிறது.







 மேலும் கீழிறங்கிய அசுத்த ரத்தம் புவியீர்ப்பு விசையை மீறி மீண்டும் மேலேறி வருவதற்கும் புவியீர்ப்பு சக்திக்கு, எதிரான மண்ணீரலின் ரகசிய சக்தியே காரணமாக இருப்பதால் மண்ணீரலுக்குச் சக்தி கொடுக்கக்கூடிய யோகப் பயிற்சிகளைச் செய்வது அவசியமாகிறது. இந்த நிலையில் தனுராசனம் இதனைச் சாதிக்கும் .







விபரீதகரணி, கால்களில் தங்கியிருக்கிற ரத்தத்தை மீளவைக்கும். முத்திரைகளில் பிருத்வி முத்திரையும் , பிளாவினிப் பிராணயாமமும் , உட்டியாணா பந்தமும். இந்த நோய் வந்தவர்களுக்கு வரப்பிரசாதம்.(பயிற்சிகளை நோயின் தன்மையை ஆரய்ந்து பின் ஆசிரியரின் நேரடிப்பார்வையில் செய்யவும்.)




சரி நண்பர்களே ! மீண்டும் மற்றொரு நோயைப்பற்றிய விளக்கங்களுடன் சந்திக்கிறேன்.



                                                                               ஓம் தத் சத்

-விழிப்புணர்வே முக்கியம்-ஜென் கதை

ஒரு மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.




நண்பர்களே!    முக்கியமானது வழிபாடல்ல, விழிப்புணர்வே !

Thursday, January 13, 2011

ரமணர்-கவிதை


"என் கைகள்தாம் என் முதல் மேல்துணியாகும். எத்தனை கம்பளி போர்த்துக்கொன்டாலும் அதற்கு ஈடாகுமா!"
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி




உணர்வதர்க்கோர் உள்ளுணர்வு :


பட்டு சட்டை பணக்காரனின் அடையாளம் !
"பத்து விரல் போதும்" (என் மானத்தை மறைக்க) என்று சொன்ன மகரிஷி மனிதனுக்கு அடையாளம் !
எல்லாம் இருப்பவன் செயற்கையாய் மகிழ்கிறான்
ஒன்றும் இல்லாதவன் என்றென்றும் மகிழ்கிறான் !
"இல்லாமையில் தான் இருக்கிறது இனிமையான வாழ்க்கை "என்பதற்கு ரமணர் ஓர் அற்புத எடுத்துக்காட்டு

மீராவின் கவிதை

அக பக்தி




தினமும் குளிப்பதனால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்

நீரில் வாழும் விலங்குகள்

ஹரியை அடைந்துவிட்டனவா?



பழங்களையும், கிழங்குகளையும் உண்டால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்

வெளவால்களும், குரங்குகளும்,

ஹரியை அடைந்து விட்டனவா?



துளசிச் செடியை வணங்குவதால் தான்

ஹரியை அடைய முடியுமெனில்

நான் துளசித் தோட்டத்தையே வணங்குவேனே!



கல்லை வணங்குவதால் தான்

ஹரியை அடைய முடியுமெனில்

நான் மலையையே வணங்குவேனே!



இலைகளையும் தழையையும் தின்றால்தான்

ஹரியை அடைய முடியுமெனில் ஆடுகள்

ஹரியை அடைந்து விட்டனவா?



பாலை மட்டும் அருந்தினால் தான்

ஹரியை அடைய முடியுமெனில்

கன்றுகள் ஹரியை அடைந்துவிட்டனவா?



புறச் சாதனங்களால் அல்ல

உண்மையான அன்பினாலேயே

நந்தகோபனை அடைய இயலும்.



அன்னை மீராபாய்

சிசேரியன்



புகழ் பெற்ற ரோமாபுரி தளபதி ஜூலியஸ் சீஸர் , இவர்தான் உலகத்திலே முதல் முதலில் வயிற்றை கிழித்து எடுக்கப் பட்டக் முதல் குழந்தை !எனவே , அவரது பெயரையே இம்முறைக்கு வைத்துவிட்டார்களாம் ! ஒரு விஷயம் தெரியுமா ? சிசேரியனில் பிறக்கும் குழந்தை நார்மல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் , புத்திசாலியாக இருக்கிறதாம் ! அதேநேரம் , நார்மல் முறையில் பிறக்கும் குழந்தை தனது தாய் - தந்தையிடம் காட்டும் அன்பு பரிவு பாசத்தைவிட சிசேரியனில் பிறக்கும் குழந்தை குறைவாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறது ஆய்வுகள்


ஆசிய நாடுகளில் சமீபகாலமாக பணத்துக்காக சிசேரியன் மூலம் மகப்பேறு செய்யும் மனிதநேயமற்ற செயல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை சிசேரியன் மூலமே பிறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிய நாடுகளில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.


சுயப்பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் உயிருக்கும் ஆபத்து மிக மிகக் குறைவு. இதனால் கூடுமானவரை சுயப்பிரசவத்துக்கே முயற்சிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.


ஒருவேளை, தாய் அல்லது சேய் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கேனும் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் சிசேரியன் செய்யவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் செய்துகொள்ளலாம். இதை தவிர்க்க இயலாது. ஆனால் அவசியமே இல்லாமல் சிசேரியன் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் சிசேரியன் பிரசவம் அதிகபட்சம் 15 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால் இந்த அறிவுரையெல்லாம் ஆசிய நாடுகளில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் காற்றில் பறக்கவிட்டு பணத்துக்காக சிசேரியன் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 9 ஆசிய நாடுகளில் 2007-08 ஆண்டில் மட்டும் சிசேரியன் பிரசவம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.


ஆசிய நாடுகளில் கம்போடியா, இந்தியா, ஜப்பான், நேபாளம், பிலிப்பின்ஸ், சீனா, இலங்கை, வியத்நாம்,தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிசேரியன் பிரசவம் அதிகமாகவுள்ளது.


இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத், மத்தியப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் சிசேரியன் அதிகமாக நடக்கிறது. தில்லி மற்றும் மும்பை நகரில் 65 சதவீத குழந்தைகள் சிசேரியன் மூலம்தான் பிறக்கின்றன.


இவற்றில் பெரும்பாலானவை சிசேரியன் தேவையானதல்ல; பணத்துக்காகவே நடைபெறு கின்றன என்பதே கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்று மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


9 ஆசிய நாடுகளில் உள்ள 122 மகப்பேறு மருத்துவமனைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதி, இங்கு மகப்பேறு நடைபெற்ற பெண்களின் மருத்துவ ஆவணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரியவந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது

யோகசித்தி

வணக்கம், நண்பர்களே !

நேற்று நெல்லை வானொலியில், யோகம் பற்றிய நேர்காணல். நேயர்களிடம் இருந்து வந்த கேள்விகள் மனதிற்கு மகிழ்ச்சியளித்தது. சுத்தமல்லியில் இருந்து ஒரு நேயர் கேட்ட கேள்வி "யோகப்பயிற்சியால், நீரின் மேல் மிதக்கமுடியுமா?." .ஊடகத்தில் பதில் சொல்ல நேரம் போதாமையால் பதிலை இங்கே பதிவாக்குகிறேன்..........................

பகவான் ராமகிருஷ்ணரிடம் ஒருவர், "பகவான் நான் இருபது வருடங்களாகத் தவம் செய்து நீரின் மேல் நடக்கிற சித்தியைப் பெற்று இருக்கிறேன்.இங்கு வரும்போது கூட ஆற்றின் மேல் நடந்துதான் வந்தேன் " எனக்கூறினார் . .பகவான் அவரைப் பரிதாபமாகப் பார்த்து, அடப்பாவி நாலனா கொடுத்தால் படகுக்காரன் கொண்டு வந்து விட்டு விடுவானே, இதற்காக இருபது வருடங்களை வீணாக்கி விட்டாயே"எனக் கடிந்து கொண்டாராம்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி லும்புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே”
                                                                                    (தாயுமானவர் ஜீவசமாதி )


இந்தப்பாடல் தாயுமானசுவாமியினுடயது. சாமி என்ன சொல்றாரு புரியுதா?
மதம் பிடித்த யானையை அடக்கலாம்,  சிங்கத்தின் மேலேறிக்கொள்ளலாம்.
நீரின்மேல் நடக்கலாம், நெருப்பின் மேல் இருந்து தவம் செய்யலாம். ஆனால் 
மனதை அடக்கி "சும்மா" இருப்பது கஷ்டம்.

யோகத்தால் நமக்குக் கிடைக்கிற பயன் என்ன தெரியுமா? இந்த "சும்மா"
 இருக்கும் திறன். நீரில் மிதப்பதற்கும், வானில் பறப்பதற்கும், விஞ்ஞானத்தைப் 
பயன்படுத்திக்கொண்ட மனிதன். மன நிம்மதியை மட்டும் இன்னும் பெற்ற பாடில்லை. மன நிம்மதிக்காக மகான்களால் கொடுக்கப்பட்ட உள்நிலை விஞ்ஞானம் தான், "யோகம்".

பகவான் ரமணமஹரிஷி, தன்னுடைய உள்ளது நாற்பதில்
      
       "சித்தமாய் உள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்தி பிற
        சித்தி எல்லாஞ் சொப்பனமார் சித்திகளே-நித்திரை விட்
        டோர்ந்தால் அவை மெய்யோ உண்மை நிலைநின்று பொய்ம்மை
        தீர்ந்தார் தியங்குவரோ தேர்."                        

 என்கிறார்.எங்கும், எப்பொழுதும், சித்தமாய், உண்மையாய்ப் பிரகாசித்துக்கொண்டிருக்கும்,உண்மைப் பொருளான ஆத்மாவை உணர்ந்து, அந்த உணர்வில் நிலை பெற்று இருத்தலே பூரண சித்தியாகும். மற்ற சித்திகள் எல்லாம் கனவில் கிடைக்கக்கூடிய சித்திகளுக்கு ஒப்பானதாகும். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டால் கனவு எப்படி பொய் என உணர்ந்து கொள்கிறோமோ, அதுபோல,யோகப்பாதையில் கிடைக்கக் கூடிய சித்திகளும் பொய்யானவைகளே . என்றும் உண்மையாய் உள்ள பொருளை உள்ளபடி உள்ளத்தில் உணர்ந்து உய்வதே உண்மையான சித்தி.

செப்படி வித்தைகற்று இப்படி மயக்குவிட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாச்சலா

                                                                ஓம் தத் சத்