Total Pageviews

Saturday, May 7, 2011

சவப்பெட்டி







எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
செய்யப்பட்ட
சவப்பெட்டியிது?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?

தெரியாது.

பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
கேள்விக்குறிக்குள்

பிறக்கையில்
உன்னருகில்
 நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ
யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.


யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
யாரோ வைத்த பெயர்
"வாழ்க்கை"

Friday, May 6, 2011

பாதாளக்கரண்டி





கிணற்றில் தொலைந்ததைத்
தேடிச் செல்கிறது
பாதாளக்கரண்டி.

தொலைந்ததெல்லாம்
கிடைத்ததில்லை.
என்றோ தொலைந்தது
எல்லாம் இன்றுதான்
கிடைக்கிறது.

தாத்தா தவறவிட்ட
கண்ணாடி-
பாட்டி தொலைத்த
காசிச் செம்பு-
காக்கா தள்ளிவிட்ட
வெள்ளித் தட்டு
இவை எல்லாம்
தாத்தா பாட்டியே
தொலைந்தபின் தான்
கிடைத்தது.

மெதுவாய்த்துளாவி
தட்டுப்படுகிறதா 
எனத் தேடிக்
கற்பனையில் 
பிடித்தெடுத்து
வெளியில் கொண்டுவர
கண்டிப்பாய் வேண்டும் 
மனதுள்
ஒரு பாதாளக்கரண்டி.

தொலைந்தது 
கிடைக்கலாம்.
கிடைத்தது 
தொலையலாம்.
தேடினால் 
கிடைக்கலாம்.
கிடைக்காமலும் 
போகலாம்.

ஏதோ ஒன்றை 
இழப்பதும்
ஏதோ ஒன்றைப் 
பெறுவதும்தான்
பாதாளக்கரண்டி சொல்லும்
தத்துவம்.

இழந்தது கிடைக்காத போது
கிடைத்தது தரும்
மனமாற்றம்தான்
பாதாளக்கரண்டிபோதிக்கும் 
ஞானம்.

அது போகட்டும்,
உங்களிடம் 
இருக்கிறதா 
பாதாளக்கரண்டி?

மூக்குப் பொடிச் சித்தர்





பௌர்ணமி, கிரிவலம், ரமண பகவான், சேஷாத்ரி ஸ்வாமிகள், மலை, குரங்கு, மயில்,தீபம், நிஜ மஹான்கள், போலி சாமியார்கள், கொளுத்தும் வெயில், கடும் பனி, குண்டும் குழியுமான தெருக்கள் ..... இது திருவண்ணாமலை.          
பித்தன், பைத்தியம், சித்தன், சாமி, என்று பலரும் இங்கே சுற்றித் திரிவார்கள் .

வெறித்த பார்வை, ராஜநடை, கையில் ஒரு தடித்த கம்பிளி, வெளுத்த தாடி, சிறுத்த உடல், வினோதமான ஆடை, காவிவேஷ்டி மேல் வேறு ஒரு கல்யாண வேஷ்டி,(வெள்ளை வேஷ்டியை ஒரு 10 வருடங்கள் துவைக்காமல் விட்டுவிட்டால் இருக்கும் நிறம், கருப்பு, காபி மற்றும் சிமெண்ட் கலர் கலந்த ஒரு புது நிறம்) சட்டைக்கு பதில் ஒரு ஸ்வெட்டர் சும்மா youth style ல button ஐ அவுத்து விட்டுவிட்டு super ஸ்டார்ஐ மிஞ்சும் அளவுக்கு body language, தோரணை ... (போதும்னு நினைக்குறேன்) இது தான் மூக்கு பொடிச் சித்தர்

திடமான மனம் உள்ளவர்கள் அருகே செல்லலாம்.. சில சமயம் அடி, உதை, கல்லெறி, அசிங்கமான வசவு, முறைப்பு, அரிதாக சிரிப்பு, அல்லது வேறு பக்கம் திரும்பிக் கொண்டு முகத்தை மறைத்துக் கொள்வது இவரின் பாவனைகள்.

இவரை பற்றி அறிந்தவர் சிலர், அதில் சில பிரபலங்களும் உண்டு. யாராக இருந்தாலும் அடி உதை திட்டு நிச்சயம். இவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது அவர் நினைத்தால் வருவார், விரும்பினால் சாபிடுவார், இல்லையேல் காதில் ரத்தம் வரும் அளவுக்கு திட்டுவார். இவரை தெரிந்தவர்கள் இதை மகிழ்ச்சியாக ஏற்று கொள்வார்கள்.... நல்லது நடக்கும். புரியாத பலர் லூசு, பைத்தியம் என்று நடையை கட்டுவார்கள். சுத்தமான கிராமத்தனத்துடன் இவர் பேசுவார். இப்படி ஒரு ஜீவன் எதற்காக இப்படி சுற்றி வருகிறது? இவரின் பின்னணி என்ன? எங்கே தங்குவார்? எதை சாப்பிடுவர் எப்போது குளிப்பார்? ஒரு பைசா குட இல்லாமல் ஒரு ராஜாவைப் போல சுற்றி திரியும் இவர் பித்தனா? சித்தனா?  சிவமா ????

சிவ தாளம் போட்டு இசை எழுப்பி டமாரம் அடிக்கும் இவரைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்களும் கிரிவலப்பாதையில் சுற்றித் திரிய வேண்டும், WONDERING SWAMY OF ARUNACHALA HILLS என்பதுதான் இவரின் முகவரி. சில சமயம்அலையா விருந்தாளியாக சில விடுதிகள் அல்லது டீ கடையில் ராஜபாட்டை நடத்திக்கொண்டிருப்பார்






சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தரிங்கு இருந்த போது பித்தரென்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்துமென்ன பித்தாயிருப்பீரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களக்கெலாமோன்றே.



அட்சயதிருதியை




ஒரு விறகுவெட்டி, மிகுந்த பக்திமான்,. ;காட்டிற்கு விறகு வெட்டச்செல்லும்போது ஒரு நொண்டி நரியைப் பார்க்கிறான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் ஈசன் படியளப்பானாமே!, இந்த நொண்டி நரிக்கு எப்படி சாப்பாடுபோடுகிறான் எனப்பார்போம் .' என பக்கத்திலிருந்த மரத்தில் அமர்ந்துவிடுகிறான் .


சற்று நேரத்தில் வந்த புலி, சாப்பிட்ட மீதி இறைச்சியை நரி அருகில் விட்டுச்செல்கிறது. ;நரிக்கு உணவிட்ட ஈசன் தனக்கும் உணவிடுவானென வேலை செய்யாமல் இருக்கிறான் விறகுவெட்டி.. ;இரண்டு நாள் கழிந்து விட்டது. ; உணவு கிடைக்கவில்லை. இறை நம்பிக்கை குறைந்த நேரத்தில்


அங்கு வந்த ஞாநி சொன்ன பதில் என்ன தெரியுமா?

தம்பி நீ கற்றுக்கொண்ட பாடம் தவறு. நீ நரியிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டதற்குப் பதிலாக புலியிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். இனியாவது முடியாதவர்களுக்கு உதவி செய் '



சரி இந்தக் கதைக்கும் அட்சயத்திதிக்கும் என்ன சம்பந்தம்.



ஆதி சங்கரர் பிச்சைக்கு வந்திருக்கிறார்.ஆனால் பிச்சையிட ஒன்றுமில்லை. அந்த வீட்டுத்தலைவி ரொம்பத் தவிக்கிறாள். தனது வறுமையை எண்ணி நொந்து கொள்கிறாள்.பரபரப்புடன் எதாவது கிடைக்குமா?........ தேடுகிறாள்.


கிடைத்தது ஒரு நெல்லிக்கனி, அவசரமாக கொண்டுவந்து அதீதிக்கு தானமிடுகிறாள்


சங்கரருக்கு அந்த அம்மையாரின் அவலம் புரிகிறது. மனஒருமையுடன்,கனகதார தோத்திரம் படிக்கிறார் .விளைவு பொன்மழை பொழிகிறது. அன்றைய தினம் அட்சயதிதி.


அட்சயதிதி என்பது , வாங்குவதற்கு உகந்த நாள் அல்ல நண்பர்களே!


கொடுப்பதற்கு உகந்த நாள். ;அட்சயதிதி அன்று, சாதுக்களுக்கு தானம் செய்தால் ஞானச் செல்வம் கிடைக்கும். குருவிடமிருந்து ஞானத்தைப்பெற்றுக்கொள்வதற்கு அட்சயத்திதி சிறந்தது.


பரசுராமன் பிறந்ததும், தனது மாணவர்களுக்கு யோக பாடங்களை ஆரம்பிப்பதும் அட்சய திதியில்தான்.குசேலன் கண்ணனுக்கு அவல் கொடுத்து செல்வச் சிறப்புகளைப் பெற்றதும் இந்த நாளில்தான். இந்த நாளில் தானம் கேட்டால் இல்லை என சொல்லாது தருவான் என்பதால் கர்ணனிடம் கண்ணன் கவசக் குண்டலங்களைத் தானமாகக் கேட்டதும் இந்த அட்சயத்திதி நன்னாளில்தான்.


சயம் என்றால் குறை எனப்பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாத எனப்பொருள். அட்சயதிதி அன்று செய்யக்கூடிய தானங்களால் அள்ள அள்ளக்குறையாத அருட்செல்வத்தைப் பெறலாம்.கொஞ்சமாகத் தானம் செய்தாலும்,மேரு மலையைப் போல் புண்ணியம் சேரும் என்கிறார்கள் இத்தினத்தின் சிறப்பை உணர்ந்த யோகிகள்.


சித்திரைமாதம் அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில்வரும் இந்த அட்சயதிதி, மனமுவந்து நாம் செய்யும் தானதர்மங்களை மேலும்மேலும் வளர்க்கிறது.அரிசிபருப்பு பானகம் நீர்மோர் விசிறி செருப்பு பால் என இயன்றவைகளைவாங்கி சாதுக்களுக்கும், ஏழைகளுக்கும் அளிக்கலாம்.

அனைத்திலும் மிக உயர்ந்தபுண்ணியம், சாதுக்களுக்கு வயிறார உணவிடுவதுதான்!

Tuesday, May 3, 2011

நான் தேடும் நான்





நான் விழித்திருக்கும் 


இதுபோன்ற இரவுகளில்…


சிலர்..


மனதைப் பதறவைக்கும் நாவலின்
கடைசி பக்கங்களை வாசித்துக்கொண்டு…


ஏமாற்றிய உறவுக்கு இன்னுமொரு
கடிதம் வரைந்துகொண்டு…


"பேய்" நினைவுக்குப் பயந்து
போர்வைக்குள் ஒளிந்துகொண்டு…


தன் உடலையோ/உயிரையோ ரசித்த
ஒருவனுடன்எல்லை தாண்டி ஓடிக்கொண்டு…


இன்னும் சிலர்…


தெருவோர சோடியம் விளக்கின் கீழ் தூங்கிக்கொண்டு…


நல்லதோர் "raak"இசை கேட்டுக்கொண்டு…


அபத்தமான அந்த சினிமாவின் கடைசி காட்சியை ரசித்துக்கொண்டு…


அலைபேசியில் அழுதுகொண்டு…


மற்றும் சிலர்…


எதையோ புகைத்துக்கொண்டு…


தூரதேசத்திற்கு பிரயாணித்துக்கொண்டு…


தன் பிள்ளைகளுக்காய் கன்னம் நனைத்துக்கொண்டு…


கலவியில் களைத்து…


வேறு சிலர்…


வானத்தை வெறித்துக்கொண்டு…


தனது அடுத்த கதையை படைத்துக்கொண்டு…


பூட்டிய கதவுகளை உடைத்துக்கொண்டு…


போருக்கு ஆயத்தமாகிக்கொண்டு…


ஒரு சிலர்…


ரேடியோவில் பேசிக்கொண்டு…


ஏதோவொரு சாதனையைப் படைத்துக்கொண்டு…


முதலிரவுக்கு ஆயத்தமாகிக்கொண்டு


வெகு சிலர்…


வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு…


பிரார்த்தித்துக்கொண்டு…


பரீட்சைக்குப் படித்துக்கொண்டு…


கனவுகளில் ஓடிக்கொண்டு…


கணினியின் விசைப்பலகையைத் தட்டிக்கொண்டு…


நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டு…


தூங்கிப்போன தன் குழந்தைக்கு முத்தமொன்றை பரிசளித்துக்கொண்டு…


தோழனுக்கோ/தோழிக்கோ பிறந்த நாள் வாழ்த்துப் பகிர்ந்துகொண்டு…


புகைப்படமெடுத்துக்கொண்டு…


மேடையின் ஒளிவிளக்கை சரி செய்துகொண்டு…


தெருக்கூத்து இரசித்துக்கொண்டு…


துரிதமாய் சமைக்கப்பட்ட ஏதோவொன்றை உண்டு…


வேட்டையாடிக் கொண்டு…


பணத்தை எண்ணிகொண்டு…


சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டு…


பேனாவில் உதிரம் நிரப்பிக்கொண்டு…


விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டு…


சூதாடிக்கொண்டு…


சண்டையிட்டுக்கொண்டு…


விலைமகளுடன் சல்லாபித்துக்கொண்டு…


உயிரை மாய்த்துக்கொண்டு…


டைரி எழுதிக்கொண்டு…


இன்னொருவனது டைரியைப் புரட்டிக்கொண்டு…


எதையோ கொளுத்திக்கொண்டு


எதையோ மறைத்துக்கொண்டு


எதையோ மறக்க முயன்றுகொண்டு…


மீன் பிடித்துக்கொண்டு…


நீர் இறைத்துக்கொண்டு…


மருந்து பாட்டிலைத் தேடிக்கொண்டு…


யாரையோ சந்தேகித்துக்கொண்டு…


கடற்கரையில் உலவிக்கொண்டு..


தோற்ற காதலுக்காய் இன்னும் வருந்திக்கொண்டு…


திட்டங்கள் தீட்டிக்கொண்டு…


தசைவாளுடன் போராடிக்கொண்டு..


இணையத்தில் மூழ்கிக்கொண்டு….


இப்படியாய் கரைந்துகொண்டிருக்கின்றன இரவுகள்…


என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்"நான்"


Monday, May 2, 2011

அன்புடன் ஆனந்தி





அன்பிற்கினிய மாஸ்டர் அவர்களுக்கு,


இனிய வணக்கம்.


20-03-11 ல் தங்களது "வலைப்பூக்கள்" புத்தகம் வாசித்தேன். எண்ண வலைகள் மனதை ஆட்கொண்டது.




  • "நானும் அவனோடு" - 

 நேசிப்பின் வியாபகம் தெரிந்தது. "தனிமை என்னைத் தின்னத் தொடங்கியது" - வித்தியாசமான சிதறல் இது. வெறுமை இன்றி வளமை ஏது?.
தனிமை + வெறுமை = எண்ணங்களில் வளமை, செயற்பாடுகளில் செழுமை.


மௌனம் பேசும்


மௌனம் புன்னகைக்கும்


மௌனம் கொண்டாடும்


வேண்டும் போது சாத்தியமாகும் மௌனம்


நிச்சயம் சாத்தியமாகும்.


  • மயிலிறகு - அழகானது.
அன்பான நினைவுகளைப்போல
இறகு தொலைத்த பறவையும் அன்பானதுதான்.


  • ரசிப்பு - ரசிக்க வைத்தது.

  • ஞானம்
"தேடுவதை நிறுத்து


தேடுவது கிடைக்கும்"


நேரில் கேட்டது - இன்று எழுத்துகளில்! வரிவடிவில்!


காற்றில் அலைந்து காகிதத்தில் குடிகொண்டிருக்கிறது.


  • நானும் சூரியனும்-


சூனிய வெளி


சூரியக் கைகள்


துருவங்களின் இடைவெளி


கேள்விகள்


நிகழ்கால உணர்வு


அநித்யமாய் ஒரு ஒளி


ஞாபக ஒளியை மட்டும் பொசிந்து விட்டு


வெறுமையாய் மௌனித்தபடி!


இரண்டு, மூன்று, நான்கு முறை வாசித்தேன்.


நேரில் விளக்கம் பெறுவேன்.


புரிதல் உள்ளது போலும்


அல்லாது போலும் உள்ளது.

  • இன்னும் இருக்கிறேன்-


உறவுகள் சாதகமில்லததால்


உணர்வுகள் புரியாமல் இருப்பதால்


உணவு இறங்காததால்


உறங்கவும் முடியாததால்


காலத்தைக் கரைக்கிறீர்கள்- கவிதைகளில்!


வினாடிகளில்-அல்ல


ஒவ்வொரு வினாடியிலும் மரணிக்கிறீர்கள்!


மனமரணம்- காலத்தோடு ஒன்று படுகிறது


அது முரண்டு பிடிக்காது.


  • நானே முதல் குற்றவாளி-


நீங்கள் குற்றவாளி அல்ல


விழிப்பு பெற்ற உணர்வுகள்


இன்னும் நிறைய எழுதச் சொல்லும்!


இன்னும் நிறையப் படச் சொல்லும்!


யாசிக்கும் கனவுகளும்,


யோசிக்கும் நினைவுகளும்


இன்னும் நிறைய கவிதைகள் தரும்.


இன்னும் வாழும் காலங்களில்


வாழ்க்கை வசமாகிப் போகும்.




இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை அனைத்தும் அகம் சார்ந்தவை என்றாலும், இவை பொதுவானதாக, அனைவருக்கும் உகந்ததாக ஏற்புடையதாக உள்ளது.


சிவா மாஸ்டரிடமிருந்து கவிதைகளா!? எதிர்பார்க்கவேயில்லை. எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பார்க்காதவை கிடைக்கும்போது மனம் அடையும் ஆனந்தத்திற்கு இணை ஏது?




மாஸ்டர்! உங்கள் கவிதைகளை வாசித்தேன் என்பதைவிட, அந்தக் கவிதைகளில் வசித்தேன் என்று சொல்லலாம்.




நேசிப்பின் உச்ச மிகுதிதானே கவிதைகள்!


புதுமழையாய்..... புதுப்புனலாய்......பல்கி பெருகட்டும்!


மரமென வேரோடி....... கிளைகள் விரித்து.........பூத்துக் குலுங்கட்டும்!


தேடி வருவோருக்கு நிழலாய்.....நாடி கேட்போருக்கு வழித்துணையாய்....


நல்ல ஆறுதலாய் அமையட்டும் கவிதைகள்!








அன்பிற்கு நிகர் அன்பு அன்றி வேறென்ன!

"அன்பிற் சிறந்த தவமில்லை"



                                                                                                                    அன்புடன் ஆனந்தி


                                                                                                                               30-03-11

Sunday, May 1, 2011

ஊமை உணர்வு




எல்லைக்குட்படாத


சிந்தனையின் விளிம்பில்..


எனக்குள் ஏற்பட்ட


இடைவெளியை நிரப்ப


வார்த்தைகளையும்..



இன்னபிற.. 


பொருள் தரும்..


குறிப்பறிவித்தல்களையும்..


தேடித்.. தேடியே..


கழிகிறது காலம்.


சமயங்களீல் 


சொல்லப்படாத வார்த்தைகளை மீறி..


உணர்வுகளில் நனைகிறேன் நான்.


உதடுகளில்.. ஊனமும்..


மொழி பேசத் துடிக்கும் 


உதடுகளும் என..


பெருமூச்சில் கலந்து..கரைகிறது..


எனது எல்லையற்ற சிந்தனை


நான் பேச நினைப்பதெல்லாம்..


என் மாணவர்களில் 


யாரோ ஒருவர் 


என்றோ ஒரு நாள் 


பேசக்கூடும்..


கேட்கக் கூடுமோ?..... "நான்."