Total Pageviews

Friday, May 27, 2011

வாழ்க்கை









எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
செய்யப்பட்ட
சவப்பெட்டியிது?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?

தெரியாது.

பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
கேள்விக்குறிக்குள்

பிறக்கையில்
உன்னருகில்
 நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ
யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.


யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
யாரோ வைத்த பெயர்
"வாழ்க்கை"

Wednesday, May 25, 2011

பெரிய துறவி



ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சருடன் செல்வந்தர் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “சுவாமி, கடவுளுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையே துறந்து விட்டீர்களே?!” என்று நக்கலாகக் கேட்டார்.

அதற்கு ராமகிருஷ்ணர் புன்னகையுடன், “நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட பெரிய துறவி நீங்கள்தான்!” என்று கூறினார்.

இதைக் கேட்ட செல்வந்தருக்கு தூக்கிவாரிப் போட்டது. “உங்களை விட நான் பெரிய துறவியா? எப்படி?!” என்று திகைப்புடன் கேட்டார்.

ராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “ஐயா, நானோ கடவுளுக்காக என்னுடைய வாழ்க்கையைத்தான் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்து விட்டீர்களே…. எனவே, என்னைவிட நீங்கள்தான் பெரிய துறவி!” என்றார்.

இதைக் கேட்டதும் செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டார்.

Tuesday, May 24, 2011

துக்கப் படுகிறவன் பாக்கியவான்


மாஸ்டர்,  துரோகங்களை எப்படி ஜீரணிப்பது?    ஆண் அழக்கூடாதா?  இந்த துரோகங்களை எல்லாம் மறந்து எப்படித் தியானத்தில் ஈடுபடுவது?  ஆசைதான் துன்பத்திற்குக் காரணமென்றால் ஆசைப் படாமல் இருக்க முடியுமா?.....அக்சய்


உலக ஆசைகளுடனேயே எல்லா உலக வசதிகளையும், போகங்களையும் பெற்றுப் பற்றற்று வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது. இது சித்தர் போகருடையது.
நம்முடைய உறவுகளும், நண்பர்களும், நம்மிடம் வேலை செய்பவர்களும் நமக்கு இழைக்கின்ற துரோகங்களாலும், ஏமாற்றங்களாலும் நமது மனம் பக்குவப்படுகிறது என்கிறார் போகர்.

அது மிகவும் உண்மை..அக்சய்!

சில அஹோரிகள் உடல் முழுவதும் ஊசியைக் குத்திக் கொள்கிறார்கள். 
சிலர் குத்திக்கிழிக்கின்ற முள் படுக்கையின் மீது படுத்துப் புரளுகிறார்கள். சிலர் இரும்பிலான ஆணிகளை விழுங்கிக் காட்டுகிறார்கள்.

இந்த யோக சாதனைகள் எல்லாம் உடலின் புறத்தோற்றம், அன்னமயகோசம் பதப்படுத்தப்பட்டு, பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன.

கடும் பயிற்சிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம் செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களை, துரோகங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம், மனம் பயிற்சி பெறுகிறது,உள்ளம் தவம் செய்கிறது.

ஆரம்பத்தில் சிறிய துன்பமும், துரோகமும் கூட மலையளவு பெரிதாகத் தோன்றுகிறது.
அது தொடரத் தொடர மனம் மரத்துத் தவத்திற்குத் தயாராகிறது..

செல்கிற பாதையில் எதையும் எதிர் கொள்கிற சக்தி மனதிற்கு வந்துவிடுகிறது.

துன்பங்களாலும், துரோகங்களாலும், சுற்றத்தைக் கற்றுக் கொண்டவன் மெத்தப்படித்த அறிஞனை விடச் சிறந்த ஞானியாகி விடுகிறான்.

ஆரம்பகாலத் துன்பமும், துரோகமும் அழுகையை உண்டாக்குகிறது.

"ஆண்பிள்ளை அழக்கூடாதாம்".... இது அகந்தை உள்ளவவன் கூறியதாகவே எனக்குப் படுகிறது. "அழத்தெரியாதவன் ஆன்மீகத்திற்கிற்கு அருகதையற்றவன்" என்கிறார் பகவான் ஓஷோ. 

தொடர்ந்த துன்பங்களாலும், துரோகங்களாலும், மனம் பரி பக்குவ நிலை அடைகிறது, கண்ணீர் விடுவதைக்கூட மறந்து போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு வருகிறது. மன மரணம் இயல்பாகவே நிகழ்கிறது.

இதனால்தான் "துன்பப்படுகிறவன் பாக்கியவான் பரலோக சாம்ராஜ்யம் அவனுக்குரியது" என்றார் யோகி இயேசு. 
துயரங்களில் புதைந்து எழுந்தவனுக்கு எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது.
இதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம்.


எங்கோ படித்த ஞாபகம்!ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது!
ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப் பாருங்கள்.

பசு மாடு கன்று போட்டதாம்.

அடாத மழை பெய்ததாம்.

வீடு விழுந்து விட்டதாம்.

மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம்.

வேலைக்காரன் இறந்து போனானாம்.

வயலில் ஈரம் இருக்கிறது.

விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.

வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம்.

“உன் மகள் இறந்து போனாள்” என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.

இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.

பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம்.

நில வரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.

குருக்களும் தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.

(ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்

தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!)



ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் ஒருவனுக்கு அழுகையா வரும்?

இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு, ஒருவன் மனம் மரத்துப் போகும்.

மரத்துப்போன நிலையில், துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும். மன மரணம் இயல்பாகும்.

“அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியின் தைரியம் நமக்கும் வந்துவிடும்.

பார்ப்பதெல்லாம் பரம்பொருளாகத் தோன்றும்; பேராசை அடிபட்டுப் போகும். தீக்குள் விரலை விட்டாலும் நந்தலாலனை தீண்டியதாகத் தோன்றும். எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா? என எக்காளமிடலாம்.

பல ஆண்டுகள் இயம, நியமங்களுடன் யோகம் செய்து பெறுகிற ஞானத்தை விட இந்த ஞானம் அழுத்தமானது; ஆழமானது; உண்மையானது; உறுதியானது.

துரோகங்களும், துன்பங்களும்தான் ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற ஞானியாக்குகின்றன.

ஞானம் என்பது துரோக, துன்ப அனுபவங்களிலிருந்துத் திரட்டப் பெற்ற தொகுப்பு நூல் என்று யாராவது என்னிடம் கூறினால் அதற்கு வழிமொழிகிற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

துரோக, துன்ப அனுபவங்களே உண்மையான பட்டறிவை உண்டாக்குகின்றன. 

வயிற்றிற்கு ஆகாத உணவைச் சாப்பிட நேரிடுகிறது. வயிறு கலாட்டா செய்கிறது. பேதியாகிறது, வாந்தியாகத் தள்ளுகிறது. மருத்துவர் உதவியுடனோ, உதவியின்றியோ சரியாகிப் போகிறது. ஆனால் மனத்திற்கு ஏற்காத பல விஷயங்களை உள்ளே செலுத்தி, இவற்றை ஜீரணிக்காமல் அல்லது வெளித்தள்ளாமல் நிரந்தர குப்பைத் தொட்டிபோல் மனத்தை ஆக்கிக் கொள்கிறோம்.

மகிழ்ச்சியான கணங்களிலெல்லாம் இந்த அடக்கி வைத்தத் துரோகத் துன்பங்களைக் கவனத்திற்குக் கொண்டு எத்தகைய மகிழ்ச்சியையும் துடைத்து எடுத்துவிடுகிறோம். 

நிரந்தரக் கவலைகளை ஜீரணிப்போம். மாற்றமுடியாத கவலைகளை ஏற்றுக்கொள்ளுவோம்.

‘மாற்றங்களைத்’ தேடுவோம். 

மிகப் பெரிய இழப்பா? கீதையின் தத்துவத்தை நம்புவோம். ‘என்ன கொண்டுவந்தோம் இழப்பதற்கு’ 

இழந்த உறவா? நட்பா? புதுப்பிப்போம்.


‘உறவுகள் துரோகம் பண்ணிட்டாங்க" என்ன செய்யலாம் என்கிறீர்களா அக்சய் ?  என்ன செய்வது, நாம் உறவுகளைத் தேர்ந்தெடுத்த விதம் அப்படி . இது கவலை அல்ல! அறியாமையால் செய்த தவறுக்குத் தரப்பட்ட விலை!

சிறு நரி துரோகம் செய்ததற்காகச் சிங்கங்கள் சோர்ந்து விடலாகாது. இந்த துரோகங்களும், துன்பங்களும் குருமார்கள் நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நடத்தியப் பயிற்சிப்பட்டறை எனக் கொள்வோம்.

நமது புகைவண்டி போய்க்கொண்டே இருக்கட்டும்.  ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளட்டும்.   இறங்குபவர்கள் இறங்கிக் கொள்ளட்டும்.  நமது இலட்சியப் பயணத்திற்கு குருமார்கள் துணை இருப்பார்கள்.
                                     கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்பொல்லாப் பவக்கடலில் போகாதே-எல்லாம்செலக்குமிழி என்றுநினை செம்பொனம் பலத்தைக்கலக்கமறப் பார்த்தே கரை.  -  பட்டினத்தார்      

Saturday, May 21, 2011

பைத்திய மருத்துவம்


  




கண்கள் மூடி
கவிழ்ந்து படுத்து
உறக்கமற்று
நீள்கிற இரவு.


கண்கள் விரித்து
காண்கிற காட்சி
என் உருவிலேயே
நிறைகிற நினைவு.


செய்கிற வேளையில்
சிந்தையின்றி
என்னைச் சுற்றியே
விரிகிற எண்ணம்.


உடல் உறங்கி
உள்ளம் உறங்கா
காலத்தின் நீட்சி.


விடிய விடிய
என் பெயரை
நான் 
மட்டுமே
உச்சரிக்கும்
விந்தை.


இவையெல்லாம்
என்னிடத்தில் 
சொல்கிறது
நான்
எனது மையம் நோக்கி 
செல்கிறேனென்று!.

மருத்துவரோ எளிதாய்
சொல்லிவிட்டார்
நீ சைக்கோ
ஆகி விட்டாயென்று!


வாழ்க! மருத்துவம்!

Saturday, May 14, 2011

புத்த பௌர்ணமி




தேடி அலைந்ததில் மிகவும் களைப்பாக இருந்தது அவனுக்கு. 


வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து போயிருந்தான். களைப்பாற நிழல் தேடினான். அவனது நிழலைத்தவிர வேறெதுவும் கண்ணில் படவில்லை.


களைப்புடன் சில அடிதூரம் நடந்தான். கண்காணும் தொலைவிலிருந்தது அந்த மரம்.   தாயைக் கண்ட சேய் போல உற்சாகமாக நடந்தான். களைப்பு காணாமல் போயிருந்தது.


நிம்மதியாய் மரத்தடியில் அமர்ந்தான். மரத்தை நன்றியோடு பார்த்தான். 'நான் தினமும் வெயிலில் அழைகிறேன்.  களைப்பாற நிழல் தேடுகிறேன்.   ஆனால் இந்த மரம்... அதே இடத்தில்தான் இருக்கிறது. தினமும் வெயிலில் காய்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு நிழல் கொடுக்கிறது.    பலருக்கும் நிழல் கொடுக்கும் மரம் வெயிலில் காய்ந்துதானே ஆகவேண்டும். அதுவுமில்லாமல் இது நம்மைப்போல அலைவதில்லையே! தேடி அலைந்தால்தான் களைப்புவருமோ?. இருந்த இடத்திலிருந்தே இந்த மரத்துக்கு எல்லாம் கிடைத்துவிடுகிறதே!. கொடுத்துவைத்த மரம்... அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து உறங்கிப்போனான்.


திடீரென்று அவன் முகத்தில் ஏதோ விழுந்தது. விழித்துக்கொண்டான்.


"என்ன நண்பா களைப்பு தீர்ந்ததா?"


குரலுக்குச் சொந்தமானவரைச் சுற்றிலும் தேடினான்.


"நான்தான் மரம் பேசுகிறேன்"


மரம் பேசுமா? ஆச்சரியத்துடன் மரத்தைப் பார்த்தான்


"இது கனவா? நனவா?"


"இது கனவேதான். நீ இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய். கொஞ்சம் பொறு அதற்குள் விழித்துவிடாதே!"


"விழித்துக்கொண்டால் என்னவாம்?"

"நீ தேடும் விடை உனக்குக் கிடைக்காமலே போய்விடும்"


"நான் தேடும் விடையா?"


"ஆம். நீ எதைத் தேடி அலைகிறாய்?"


"உலகமக்களெல்லாம் ஏன் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்? அவர்களுக்கு நோய், மூப்பு, பிணி இதெல்லாம் ஏன் வருகின்றன என்ற காரணங்களைத் தேடி அலைகிறேன்"


"தேடினால்தான் கிடைக்குமா??"


" தேடினால்தானே தேவையானது கிடைக்கும்?"


மரம் குலுங்கிச் சிரித்தது. அதனால் முதிர்ந்த இலைகள் சில உதிர்ந்தன. உதிர்ந்த இலைகளைப் பற்றி அது கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சிரித்துக்கொண்டே சொன்னது, "என்னைப்பார்! நான் எதைத் தேடி அலைகிறேன்? எனக்கு எல்லாமே இருந்த இடத்திலிருந்தே கிடைத்துவிடுகின்றன."


"உனக்கு இங்கே என்ன கிடைக்கிறதோ அதையே வைத்துக் கொள்கிறாய். ஏனெனில் உன்னால் எதையும் தேடி அலையமுடியாது"


"ஆமாம். இங்கு என்ன கிடைக்கிறதோ அதையே வைத்துக் கொள்கிறேன். அதே சமயம் என்னிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுத்தும் விடுகிறேன், இப்போது நான் உனக்கு நிழலை கொடுப்பதுபோல. எது கிடைத்தாலும், எதை இழந்தாலும் நான் சும்மாவே இருக்கிறேன். நான் நானாகவே இருக்கிறேன். ஆனால் நீ நீயாகவே இருப்பதில்லையே ஏன்?"


"நான் நானாக இல்லையா? என்ன சொல்ல வருகிறாய்? எனக்குப் புரியவில்லை."

"நான் எதைத் தேடினாலும் என்னிலிருந்து தேடுகிறேன். எனக்குள்ளிருந்து தேடுகிறேன். ஆகவே நான் நானாக இருக்கிறேன். ஆனால் நீயோ எதைத் தேடினாலும் வெளியிலிருந்து தேடுகிறாய். அடுத்தவனின் அனுபவத்திலிருந்து தேடுகிறாய். அடுத்தவனின் அனுபவத்தைக் கூட உன் அனுபவமாகவேப் பார்க்கிறாய். அதனால்தான் சொல்கிறேன் நீ நீயாக இல்லை"


"அப்படியானால் விடையை என்னிலிருந்தே தேடச்சொல்கிறாயா?"


"ஆமாம். இப்போது நீயும் மற்றவர்களைப்போல அவதிப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறாய்?"


"உண்மைதான். நான் ஒரு இளவரசன். மனைவி மக்களோடு நலமாகத்தான் இருந்தேன். எனக்கு எல்லா சுகங்களும் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அப்போது எனக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. ஆனால் இப்போது நானும் மற்ற சாதாரண மக்களைப்போல் உடல் மெலிந்து அலைந்து கொண்டிருக்கிறேன். அலைந்தால்தானே எதுவும் கிடைக்கும்?"


"நல்ல நிலையிலிருந்த உன் வாழ்க்கை தற்போது இல்லாமல் போனதற்கு யார் காரணம்?"


"நான்தான். உலக மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். இப்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறிது சிறிதாக அழிந்துகொண்டிருக்கிறேன்."


"அப்படியானால், உன் அழிவிற்கு உன் ஆசைதானே காரணம்?"

"ஆமாம்"


"அப்படியானால் மற்றவர்களின் அழிவிற்கும் அவர்களின் ஆசைதானே காரணம்?"


ஆச்சரியத்தில் எழுந்தபடி, "அட ஆமாம். அப்போ ஆசைதான் அழிவிற்குக் காரணமா?"

"ஆம் நண்பா! ஆசைப்பட்டது கிடைச்சா தெம்பு. கிடைக்கலேன்னா வம்பு. அதனால எப்பவும் உன்னை மட்டுமே நீ நம்பு."

"ஆனால் ஆசைப்படாமல் எப்படி வாழ முடியும்?"


" நீ இப்போது எதன்மீது நிற்கிறாய்?"


"ம்ம்ம் . . . பூமியின் மீது"


"அதாவது நீ உலகத்தின் மீது நின்று கொண்டிருக்கிறாய், சரிதானே?"


"ம்"


"உலகமே உன் காலடியில் இருக்குபோது எதற்காக நீ ஆசைப்படுகிறாய்? எல்லாமே உன்னுடையது எனும்போது எதற்கு ஆசைப்படுகிறாய்? ஆசை என்பது தேவையற்றதுதானே? தேவையற்ற ஆசை அழிவைத்தானே தரும்."


அவன் கண்களை மூடியபடி, "ஆஹா. அற்புதம்"


"இனி நீ தூங்க வேண்டியதில்லை. நீ விழித்துக் கொண்டாய்." என்ற மரம் குழுங்கியது. தூங்கிக் கொண்டிருந்த அவன் முகத்தில் இலைகள் விழுந்தன.


இலைகளை எடுத்தபடி அவன் எழுந்தான். அவன் ஒளி பெற்றிருந்தான்.

அவன் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். முழு நிலவு தெரிந்தது. முழு நிலவில் அவன் முகம் தெரிந்தது. சித்தார்த்தன் புத்தி தெளிந்த புத்தனாக மாறிவிட்டான். 




புத்த பூர்ணிமா.

                                                           
                                                           
புத்தம் சரணம் கச்சாமி 
சங்கம் சரணம் கச்சாமி 
    

Monday, May 9, 2011

பயணங்கள் முடிவதில்லை










எதையெதையெல்லாமோ
சேர்த்து வைக்கிறோம்
தேவைப்படலாமென.
எதுவுமே
தேவையற்றுப்போவதாக
முடிவுற்று
நிறைகிறது பயணம்.

எதுவும் பேசமுடிவதில்லை
பயணிக்கையில்.
பேசாதும்
இருக்கமுடிவதில்லை


வாழமுடியாத போதும்
வாழ்ந்தபடி இருப்பது போல.
வாழமுடியாத போதும்
வாழ்கிறோம்.


செல்ல விரும்பாதபோதும்
செல்கிறோம்.
வாழ்க்கை நம் கையில்
என்றாலும்
வாழ்வதும் செல்வதும்
நம் கையில் இல்லை.

பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின்
பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.


உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
மனதிற்கடியில்
உருளும் கற்களையும்.

Sunday, May 8, 2011

வஜ்ராயுதம்









இந்திரனின் வஜ்ராயுதம் மிகவும் பலம் வாய்ந்தது என்பது நமக்குத் தெரியும். வஜ்ராயுதத்திற்கு அவ்வளவு சிறப்பு, மற்ற ஆயுதங்களுக்கு இல்லாத வலிமை வஜ்ராயுதத்திற்கு எப்படி வந்தது தெரியுமா?


ததீசி முனிவர், பேராசையோ பொறாமையோ துளியும் இல்லாதவர். பாற்கடலைக் கடையும் பணி நடந்தபோது அவ்வளவு தேவர்களும், அஷ்டதிக் பாலர்களும், சகல தேவதைகளும் தாங்களது விசேஷமான சக்திகள் அடங்கிய ஆயுதங்களை ததீசி முனிவரிடம் தான் ஒப்படைத்தனர்.


ததீசி முனிவர் மிகசிறந்த ஆசாரசீலர். தன்னை நம்பி , பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறி ஒப்படைத்த ஆயுதங்களைக் கண்போல் காக்க விரும்பினார் ஆனால் பாற்கடல் கடையப்பட்டு அமுதமும் கிடைத்து விட்ட நிலையில் தேவர்களுக்கு இனி அந்த ஆயுதங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.


ததீசிமுனிவரிடம் வந்து ஆயுதங்களைத்திரும்பக் கேட்கவே இல்லை. வெகு நாள்வரை பாதுகாத்து வைத்து இருந்த முனிவர் யாரும் வந்து கேட்காத நிலையில், அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், அவ்வளவு ஆயுதங்களையும் பொடியாக்கி, அதை ஒரு உருண்டையாகச் சுருக்கி விழுங்கி, அந்த சக்திகள் அனைத்தும் தனதுமுதுகெலும்பில் உருக்கொள்ளுமாறு செய்து கொண்டார்.

இதனால் தான் அவரது முதுகெலும்பு உலகில் அவ்வளவு ஆயுதங்களாலும் ஏதும் செய்ய இயலாத ஒரு சிறப்பு கொண்டதாக மாறி இருந்தது.


அனைத்து ஆயுதங்களும் உருத்திரண்ட ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஒரு ஆயுதம் செய்தால், அந்த ஆயுதமே விருத்திகாசுரனை அழிக்கும் என்று விஷ்ணுமூர்த்தி இந்திரனுக்குக் கூறினார்.


தேவலோக சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவர் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தை வடிவமைத்து இந்திரனுக்குக் கொடுத்தார்.

சரி நண்பர்களே!  
இந்தக் கதையிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?