Total Pageviews

Wednesday, October 10, 2012

"தொலைத்தவன்" போட்ட "கோலம்"


எனது நண்பரும் சமூக சேவகருமான காந்தியுடன் நேற்று மாலை குற்றாலத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். தார் சாலையில் நடப்பதைத் தவிர்த்து, அந்த மண் பாதையில் நடக்கத் துவங்கினோம். மாலை நேரத்தில் அதுவும் வெளிச்சத்தின் மேல் இருள் கசியும் அந்த இனிய மென்மையான பொழுதில் நடப்பது சுகமாகவே இருந்தது.. நான் சற்று வேகமாக நடக்கும் இயல்பு கொண்டிருப்பதால், தொடர்ச்சியான பேச்சு இல்லாமல். சீரான இடைவெளி விட்டுப் பேச்சு, இருவருக்கும் பொதுவான ஒரு தளத்தில் வந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் தொலைவிலிருந்தே கவனித்தேன், ஒரு ஆள் அந்த மண் சாலையின் மையத்தில் அமர்ந்திருந்ததை. என் பார்வைக்கு முதுகு மட்டும் தெரிந்தது. கொஞ்சம் நெருங்கி வரும் போது கவனித்தேன் அது ஒரு வயதான மனிதன், சுமார் 60 வயது இருக்கலாம். மேல்சட்டை எதுவும் இல்லை, உற்றுக் கவனிக்கும் முன்பே, உடையையும், தலையையும் வைத்து உள் மனது அடையாளப்படுத்தியது அது ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனெற்று.

வழக்கமாக எல்லோரையும் போல எனக்கு இதுபோன்ற மனிதர்களை எளிதாகக் கடந்து போக மனம் இடம் கொடுப்பதில்லை முன்தினம்தான் தொலைக்காட்சியில்“மனம் அது செம்மையானால்” என்ற தலைப்பில் அன்பர் ஒருவர் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் மனப்பிறழ்வு, மனநோய் பற்றியும், அதற்கான யோக உளசிகிச்சை பற்றியும் அற்புதமாக உரை நிகழ்த்தியிருந்தார். இந்த மனிதனைப் பார்த்த விநாடி சட்டென அந்த அன்பர் சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது.

நடக்கும் வேகத்தைக் குறைக்காமல், சற்று ஒதுங்கி அந்த மனிதனைக் கடந்தோம். கடக்கும் போது அந்த மனிதன் ஏதோ தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது அதில் “அப்படியே பண்ணு” என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது. அதற்கு முன், பின் பேசிய வாசகங்கள் புரியவில்லை, என்னவாக இருக்கும் என்று ஒரு விநாடி கூர்ந்து யோசித்தேன். அந்த மனிதன் பரபரப்பாக அந்த மண் தடத்தில் தன் விரலால் எதோ செய்து கொண்டிருந்தார். ஏதாவது எழுதுகிறாரா என ஒரு ஆர்வத்தோடு பார்த்தேன். எழுத்துகள் இல்லை, வெறும் கோடுகள் வளைவுகளும், நெளிவுகளுமாக இருந்தது. தலையைச் சற்றேச் சிலுப்பிக்கொண்டு மீண்டும் நடையில் கவனமானேன்.

எப்படி அந்த துர்நாற்றத்தின் அருகே, புழுதியில் அந்த மனிதன் உட்கார முடிகிறது. துர்நாற்றம் சிரமமாக இருக்காதா என மனம் நினைத்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனிதனை மறந்தும் போனேன். 25 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நீள் சுற்று வட்டத்தில் நடந்து, அந்த இடத்தை நெருங்கும்போது தெரிந்தது, அந்த மனிதன் இன்னும் அதே இடத்தில் பரபரப்பாக அந்த மண் தடத்தில், தன் விரல்கள் மூலம் இயங்கிக் கொண்டிருப்பது. நண்பரிடம் கேட்டேன் “இந்த மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கும் தானே” அவர் ஒற்றை வார்த்தையில் அழுத்தமாக சொன்னார் “கண்டிப்பாக”. மீண்டும் இருவரிடமும் மவுனம் அடர்த்தியாக ஒட்டிக் கொண்டது.
நெருங்கிய போது கவனித்தேன் அந்த மனிதன் முதல் தடவை பார்த்தபோது இருந்த இடத்தைவிட சில அடி தூரம் தள்ளி அமர்ந்து கிறுக்கிக் கொண்டிருந்தார். என்ன கிறுக்கியிருக்கிறார் என்று உற்றுப்பார்த்தேன். மனம் அதிர்ந்தது, அந்த புழுதி மண்ணில் வெறும் கோடுகளும், வளைவுகளும் கொண்டு பூ மாதிரியான ஒரு படத்தை பல முறை அச்சு எடுத்தது போல் ஒரு கோலத்தை மிக அழகாக வரைந்திருந்தார். கோலத்தைப் பார்த்ததும் "புள்ளியில் பூத்த புதுமலர்"வாசுகி அக்கா வரைந்த கோலம் போலவே மிக நுட்பமான கோலமாக அது தெரிந்தது. நண்பரிடம் “கோலத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

சில அடிகள் தூரம் நடந்திருப்போம். மனம் பட படவன துடித்தது, திரும்ப ஓடிப்போய் அந்த மனிதனைப் பாராட்டலாமா என மனது தவித்தது. கொஞ்சம் செயற்கையாக இருக்குமோவென்று முட்டாள் தனமாக எண்ணம் தடைபோட்டது. எதுவோ என்னை அந்த இடத்தில் நிற்காமல் விரட்டியது. என மனது குறுக்கும் நெடுக்குமாக பரபரத்தது. அடுத்த சில நிமிடங்களில் மனது முழுக்க அந்த மனிதன் பற்றிய சிந்தனை என்னை கவ்வியது.

யாராக இருக்கும் இந்த மனிதன், இந்த மனிதனின் பெற்றவர்கள் நாம் நம் குழந்தையை வளர்ப்பது போல்தானே வளர்த்திருப்பார்கள். படித்திருப்பாரா? திருமணம் ஆகியிருக்குமா? எதன் காரணமாய் மனநிலை பிறழ்ந்திருக்கும். எந்த விநாடியில் இந்த மனிதன் மனிதனிலிருந்து பைத்தியகாரனாக தடம் புரண்டிருப்பான். சினிமாவில் காட்டுவது போல் சட்டென ஒரு விநாடியில், மின்னல் போல் நிகழ்ந்திருக்குமா? அல்லது தொடர்ச்சியான பற்பல தோல்விகள், துரோகங்களில்,இழப்புகளில் சிறிது சிறிதாக மனது விரிசல் விட்டுச் சிதறிப் போயிருக்குமோ? அந்த மனப்பிறழ்வு அணைக்கட்டில் கசியும் நீர்போல் மெலிதாக, சீரான இடைவெளியில் நிகழ்ந்திருக்குமா?. எல்லோரிடமும் இருக்கும் இயல்பான காதல், காமம், கோபம், பாசம், ஆசை போன்ற ஏதாவது உணர்வுகள் இவருக்கு இப்போதும் இருக்குமா?

மனநிலை பிறழும் நிலை வரை அவர்களை அவர் என்றோ, அவன் என்றோ, அல்லது அவள் என்றோ அழைத்த நாம், மனநிலை பிறழ்ந்த தருணத்திலிருந்து “அது” என்றே அழைக்கிறோமே, ஏன் அவர்களை மனிதனாகப் பார்க்க முடிவதில்லை. எதன்பொருட்டு சகமனிதனிடமிருந்து இவர்கள் தொலைந்து போகிறார்கள்?.

பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளின் ஓரத்திலும், உணவு விடுதிகளின் அருகிலும் தவறாமல் அவர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனாலும் நம்மால் அவர்களை ஒரு சக மனிதனாகப் பார்க்க முடிவதில்லையே, அது எதனால்?

எத்தனையோ முறை இப்படிப்பட்டவர்களைப் பார்த்திருந்தாலும், இன்று இந்த மனிதனைப் பார்த்த பின் கேள்விகள் சுனாமியாய் மனதினுள் அடித்தது. எந்தச் சுயநலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கிறது. விடைதேட மனது வெட்கப்பட்டது.

அந்த மண் சாலையில் இவ்வளவு நுணுக்கமாகக் கிறுக்கப்பட்ட இந்த கோலத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆயுள் இருக்கப் போகிறது. அநேகமாக இந்த மண் தடத்தில் அடுத்து வரப்போகும் நாலு சக்கர வாகனம் வரை தானே!!!???

வாழ்க்கையும் ஒரு கோலம் போலத்தான்......அழிந்து விடக்கூடியதுதான் என்றாலும் நேர்த்தியாக வரைய வேண்டியது நமது கடமை என்பதை வாழ்க்கையைத் தொலைத்த இந்த மனிதனின் கோலத்தின் மூலமாக உள்ளுணர்வு எனக்கு உணர்த்துகிறது....


"கர்மயோகத்தின்" சாரத்தைப் பருகக் கொடுத்தது "தொலைத்தவன் போட்ட கோலம்"......










நன்றி; கதிர் அண்ணன்

1 comment:

AK said...

அருமையான எழுத்து. படித்தபோது நேரிலிருந்து பார்த்ததுபோலவே இருந்தது.

" நம்மால் அவர்களை ஒரு சக மனிதனாகப் பார்க்க முடிவதில்லையே, அது எதனால் ?
எந்தச் சுயநலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கிறது ? "

என்ற உங்கள் இரு கேள்விகள் யோசிக்க வைத்தன.
சுயநலத்தை விட பயமே காரணம் என்று தோன்றுகிறது.
அருகில் சென்றாலோ பேச்சுக் கொடுத்தாலோ ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயம்.

என்ன சார் செய்றது ? நம்மள அப்டியே வளர்த்துட்டாங்க. சிறு வயதில் சாப்பிடவில்லை என்றாலோ சேட்டை செய்தாலோ இது போன்ற மனிதரைக் காட்டி "பூச்சான்டி கிட்ட புடிச்சிக் குடுத்துடுவேன்" என்று சொல்லியே ஒருவித பயத்தை ஏற்படுத்தி, அது அப்படியே பழகிவிட்டது.

Post a Comment