Total Pageviews

Saturday, August 4, 2012

கூர்ம யோகம்
இந்த பிரபஞ்சத்தில் 84 இலட்சம் ஜீவ ராசிகள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன.ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்

நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய

பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த

அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.


ஊர்வன : 11

மானுடம் : 9

நீர் :10

பறவை :10

நாற்காலோர் :10

தேவர் :14

தாவரம்(4*5) : 20


மொத்தம் = 84

ஆக 84 இலட்சவகை ஜீவராசிகளாகும். 


மேற்கண்ட பாடலில் 7 வகையான ஜீவராசிகளின் உற்பத்தி பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றுகின்றன. குறிப்பாக கருப்பை, முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றுகின்றன.. இந்திய யோக மரபில் 84 இலட்சவகை ஆசனங்கள் இருப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன...இந்த 84 இலட்ச யோகாசன இருக்கை நிலைகளும் ஜீவராசிகளின் இருக்கை நிலைகளை ஒத்ததே . யோக கலாசாரத்தில்,உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத அளவுக்கு மனிதன் அல்லாத மற்றைய ஜீவராசிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து புனிதமாக்கப்பட்டுள்ளது..எலி முதற்கொண்டு யானை வரை, புல் முதற்கொண்டு புள்ளினம் வரை அனைத்து உயிர்களின் இருக்கை நிலைகளுக்கும் முக்கியத்துவம் தந்திருப்பது நமது யோக மரபு . உருவ அளவில் வேறுபாடு இருந்தாலும்,ஆத்ம நோக்கில் அனைத்து ஜீவராசிகளும் இங்கு ஜீவர்களாகவே மதிக்கப்படுகின்றனர்.


இந்திய யோக மரபாண்மை என்பது, "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்கக் கூடியது" என்று மிகச் சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறிவிடலாம்.உண்மைதான், அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வள்ளலாரால் வாட முடிந்தது. எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை உணர வேண்டியதுள்ளது.


அந்த வகையில் நீண்ட வருடங்களாக நமது யோக மரபில் எனது சிந்தனையைத் தூண்டிவிட்ட ஒரு விஷயம், ஆமை!. மிகவும் மெதுவாகச் செயல்படக்கூடிய ஆமை யோகிகளிடம் 'பச்சக்கென்று' ஒட்டிக்கொண்டதெப்படி..?சிந்தனை செய்ய வேண்டிய விஷயமாக எனக்குப்பட்டது.

பாற்கடலைக் கடையும்போது மேருமலைக்கு அடி ஆதாரமாக இருந்த ஆமை பற்றியும், தசாவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதார ஆமை பற்றியும் , வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்கி, உணரவேண்டியதிருக்கிறது.

ஆமை விஷயத்திலும், நாம் வழக்கம் போல் சுட்டுவிரல் காட்டும் நிலாவைப் பார்ப்பதற்குப் பதிலாகச் சுட்டு விரலையே நிலாவாகப் பார்க்கும் பாமர நிலையில் இருக்கிறோமோ? என எனக்குத்தோன்றியது.


ஆமைகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய உயிரினம் எனச் சொல்லப்படுவதுண்டு..சில கோவில்களில் காணப்படும் ஆமை உருவங்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த உருவங்களின் மூலமாக யாரோ எனக்கு யோகபாடம் கற்றுத்தருவதாகவே ஒரு உள்ளுணர்வு...அந்த உள்ளுணர்வை துணைகொண்டு ஆமையை ஆராயத்தொடங்குவோமா???? ......
ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
-திருக்குறள் 126-

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.


ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய்.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று குதம்பை சித்தர் கூறினாலும், திருமந்திரம் இதற்கும் மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம். இதையே திருமூலரும் 


ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள

வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்

ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (-திருமந்திரம் 2304-) 


என்கிறார்...................இந்த மந்திரத்தில்,மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால், .............ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்:

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதை நமது சித்த பெருமக்கள் அறிந்திருந்தனர்.மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?. அல்லது சரியான தகவலை உணர்ந்துகொள்ளும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலநாயனார் 3000 ஆண்டு வாழ்ந்திருக்கிறார். ஆமையிடமிருந்து ஒரு சரியான யோக யுக்தியைக் கற்று, இந்தப் பாடல் மூலமாக நமக்கு ஒரு யோகபாடம் நடத்தியிருக்கிறார்.


நீண்ட நாள் வாழ்வது எப்படி?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் . இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அந்தளவுக்கு ஆயுள் கூடும்!


நாம் சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும். இந்த சுவாச ரகசியமே யோகத்தின் அடிப்படை...
திருமூலர் தனது பாடலில்:-


விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்

தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்

வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து

விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே


விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.


இந்த சுவாச தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''சிதம்பர இரகசியம்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருகிறது. 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கிறது. 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடிகளைக் குறிக்கிறது.


ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் 

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர் இல்லை 

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்கு 

கூற்றை உதைக்கும் குறியதுவாமே. என்கிறார் திருமூலர்.

இந்தப் பாடலில், ஒரு சுவாசக் கணக்கு இருப்பதாகவும்,.அதன்படி சுவாசிக்கத் தொடங்கினால் கூற்றுவன் எனச் சொல்லக்கூடிய எமனையும் விரட்டி விடலாம் என்கிறார் திருமூலர். அந்தக்கணக்கின்படி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்


18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இந்த நிலை யோகியரால்மட்டுமே முடியும்)


ஆமை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை தான் சுவாசிக்கிறதாம். அதனாலேயே அதற்கு வாழ்நாள் அதிகம்.


ஒரு மனிதன் பிராணாயாமம் செய்தால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிராணாயாம ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் திருமூலர். 


சரி நண்பர்களே!ஆமை என்ன பிராணாயாமம் செய்கிறது? அதற்கு மட்டும் ஏன் ஆயிரம் வயது?


அடுத்த பதிவில் பார்ப்போமா?
(ஆமை இன்னும் வரும்)

No comments:

Post a Comment