Total Pageviews

Thursday, July 12, 2012

வலியும்,வழியும்

அழுகாமல் "நான்" பிறந்திருந்தால்
அன்றோடு முடிந்திருககும்
அழுகையின் அத்தியாயங்கள்

உலுக்கி எடுத்த உடல் வலி
பிறந்ததும் வீரிட்டு அழுதேன்
அழுகையின் அடுத்தடுத்த
அத்தியாயங்கள் தெரியாமல்

அப்போது கூட யோசித்திருக்கலாம்
வாழ்க்கை என்பது
வலிகள் நிறைந்ததென்பதை

புது உடலுக்குள் புகுந்துவிட்ட ஆனந்தம்
உடல்வலியை மனவலிமையால் வென்றிடலாம்
வாழத்துணிந்தது மனம்
வாழ்க்கையின் இன்னொரு முகம் தெரியாமல்

உடலை வளைத்து
உணர்ச்சிகளைப் பெருக்கி
வாழ்க்கைப் பயணத்தை
வலி இன்றிதான் துவங்கியது மனம்.

சிந்தனைச் சிறகுகள்
விரியும் வரை தெரியவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று


தேடலின் வேகத்தில்
ஓடத் துவங்கிய மனம்-
ஒவ்வொரு அடியிலும்
வாங்கியது அடி.


பற்றுப் பாசப் பங்கீட்டில் முட்டி மோதியதில்
வாழ்க்கை வலியின் – அடுத்தடுத்த
அத்தியாயங்கள் ஆரம்பமானது.


பங்கிட்டுக் கிடைப்பது தான் பாசம்


பெற்றோரின் பாசம்
உடன்பிறப்புகளோடு பங்கிட வேண்டும்.


உடன்பிறப்புகளின் பாசம்
அத்தனையிலும் பங்கிட வேண்டும்


"அயலவரின்" பாசம்
அவரவர் பங்குக்கு அற்பத்திலும் சொச்சம்


பங்கிட்டுத் தான் பெற வேண்டுமா பாசத்தை?


யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
வேண்டுமென ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!

மன வலி

எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் – ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்

உடல் வலித்தால்
வீரிட்டு அழலாம்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?

வலி
வலியாற்ற வழியில்லா
வலி
உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவனால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை

வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக

பாசாங்குப் பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்


ச்சே..
திக்குத் தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை


வலியோடு
வாழ வெறுத்தவன்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்


ம்ம்ம்….
வாழ்வின் முடிவு -
அட அதுகூட
ஒரு வலிதான்.


வலிக்கு வலியே மருந்தா?


மறுத்தது மனம்


வலிக்கு வலியே மருந்தாகுமா?


ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்


ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?


அட
இது ஒரு புதுவலிமறுபிறவி தேடல்
மனவலியை மிஞ்சிய
ஒரு மரணவலி


தவம், தியானம் மன ஒருமுகம்
ஒருங்கே கோர்த்தே
சிந்தனைச் சிறகை விரித்தேன்
சிவலோகம் எனும் பரலோகம் நோக்கி
பறக்கப் பறக்க முற்றியது - பாசம்
பரவுலக வாழ்க்கைமீது


சிந்தனைச் சிறகடித்து
சுதந்திர சூட்சமங்களைச் சுவாசிக்கும் ஆர்வம்
வலி மாய்ந்தது போல ஒரு இன்பம்


பற்றுப் பாவ
பங்கீட்டைத் தாண்டி
இனனும் பறந்தேன் வேகமாக
பரம்பொருள் ரகசியம் தேடி


எல்லை நெருங்கிவிட்ட ஆனந்தம்
கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் பதட்டம்
கேள்விகளை ஒத்திகை
பார்த்துக்கொண்டேன் ஒருமுறைகூட


அந்தோ…
சுதந்திர சுற்றுகளை
சுருட்டி முடக்கிய மாயையினின்று
விட்டுப் பிரிந்ததில்
ஒடிந்தது என் சிந்தனை சிறகுகள்.


இங்கு கடவுளை தேடுவது ஒருபுறமிருக்க
முதலில் சிறகொடிந்த நான் எங்கே?


நானே இல்லை என்றால்
நான் எப்படி தேடுவது கடவுளை?
நானும் இல்லை கடவுளும் இல்லை
இனி எங்கே நேருக்குநேர் சந்திப்பு


ஒடிந்தது சிந்தனைச் சிறகுகள் மட்டுமா
என் பரம்பொருள் தேடலும்.


ஒன்றும் அறியாதவன்
எதையோ அறிந்தவ"நாய்" மீண்டேன்

வாழ்க்கை வலிக்கே.
உடல்வலி, உள்ளவலி -இபபோது
எனக்குள் ஆன்ம வலியும்


கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்


சென்று, கண்டவனுக்கு
விண்டுவதில் குழப்பம்

பெருஞ்சூனியத்தை எப்படி
பேரானந்தம் என்றார்கள்?


நான் போன இடம் தவறா
போன முறை தவறா – இல்லை
போகவே இல்லையா?


அழுது தீர்க்க உடல்வலி
புலம்பி தீர்க்க மனவலி
புதிராய் தவிக்க ஆன்ம வலியோ?


வலிகள் மட்டுமே வாழ்க்கையானால்
வழிவேண்டும் வாழ -அல்லது
வரலாறாய் மாழ


கேலியான நானே
கேள்வியானேன்


நான் யார்?


முடிவுறா வலியோடு
அழுதே முடித்தேன் முதல் சுற்றை.
முடிவிலும் எனக்குள் தொடங்கிய தேடல்


நான் யார்?


எல்லா ஞானிகளும்
யோசித்த அதே யோசனை


தான் தான்
எல்லா மனங்களும்
சொல்லிக்கொண்ட அதே சொல்


எனக்குமேல்
எல்லா மனிதர்களும்

உணர்ந்து கொண்ட அதே உணர்ச்சி


நான்யார்? -என்
உடல் மன ஆன்ம வலிகளின்
உச்ச கேள்வி


புலன் தாண்டி
புறப்பொருள் கூடி
தேடிய அறிவியல்


புலன் அடக்கி
உள்மன உட்கருவில்

உணரத்துடித்த ஆன்மீகம்


புலன் மனம் கோர்த்து
பொருள் கருத்தை
பொருத்திப்பார்த்த தத்துவம்


அறிவியல் ஆன்மீகம் தத்துவம்
மூன்றிலும் தேடினேன்
நான்யார்? கடவுள் யார்?


தெரியாது
தெரிந்து கொள்ளலாம்
அலுத்தது அறிவியல்


உனக்குள் இருக்கிறான்
உணரச்சொன்னது ஆன்மீகம்


நீதான் இறைவன்
அறிவை விளக்கி விவரித்தது தத்துவம்


மூன்றும் சொன்னவையோ
விடைகள்
எனக்குள் விடைகளே
வினாக்களாக


தெரியாது எனில்
அறிவியல் தெரிந்தது
எல்லாம் என்ன?


நான் தான் எனில்
நான் ஏன் தேடுகிறேன் இறைவனை


வினாக்களுக்கு விடைகேட்டேன்
உள்ளுக்குள் உள்ள
அத்தனை வலிகளையும்
ஒருங்கே கோர்த்து


வலி ஆற்ற
வியாபார உலகில்
விற்பனையில் கடவுள்கள்
விதவித கடவுள்கள்


விலைகொடுத்தால்
விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்
பணம் அல்லது பற்று – இது தான்
கடவுளின் விலை


விலை தந்து தான்
வாங்க வேண்டுமா
என்னையும் கடவுளையும்
உச்சத்தில் வலித்தது மனம்


கடவுளுக்காக
பற்றை விலை கொடுத்தால்
எப்படி தெரிவேன் நான் யார்? என்பதனை


கடவுள் யார்? நான் யார்?
எது எந்தன் முதன்மை வலி


நானா?, கடவுளா?

யார் முந்தியவர்
முதலில் தேடுவது

யாரை?


கடவுளை தேடிப்போய்
நான் தொலைந்தாலோ
நானை உணரப்போய்
கடவுள் மறைந்தாலோ
எனக்குள் கடவுளை விட
நான் தான் முதன்மை வலி


நான் யார்

விடைதெரியாது விட்டிலாய் திரிந்தவனுக்கு
விளக்காய் ஒரு சுடர்

வாழ்க்கையைத் தொலைத்தவனை
வாவென அழைத்தது "யோகம்"


எனக்குள் வலி ஆற்ற வந்த
அற்ப சொற்ப விடயங்களுள்
யோகமும்ஒன்று- ஆயினும்
ஒன்றாய் நன்றாய்


குருவின் அறிமுகம் – இது
பங்கிடாத பாசம்


பங்கிடாப் பாசமாய்
எனக்குள் படர்ந்தார்
என்னவர்


குரு – இந்த முதல் சுடரே
என் முழுமுதல் விளக்கானது

என்னவரில் காண துடித்தேன்
என்னையும் கடவுளையும்


உணர்ச்சிகள் உசும்ப
உயிரை குடிக்கும்
சுவாச ரீங்காரம்
வலிகளின் வானவில்


விட்டிலாய் சுற்றும் விடலையை
கட்டிப்போட்டது
வீரியம் பூத்த
வாசியின் "வேள்வி"


வசப்பட்டது
என் உணர்ச்சிகள் மட்டுமல்ல

"நானும்"

யோகப்பேரின்பத்தில்
பொங்கியது நான் மட்டுமல்ல
என் உணர்ச்சிகளும்


ஆழமாகப் பூரித்துப்போனஎனக்குள் 
புரிந்தது புதிய ஞானம்

யோகத்தின் அர்த்தங்களை
அசைபோடலானேன்

யோகம் மருத்துவம் மட்டுமல்ல
மானுடம் வெல்லவைக்கும் 
மாபெரும் மகத்துவம்.

"நான்"என் உணர்ச்சிகள்
`எப்போதும் பிரிக்கமுடியா சார்புகள்

"தான்"- இதன் வெளிப்பாடே
என் உணர்ச்சிகள்
– இதன்
உட்கருவே "நான்"
நானின்றி – என்
உணர்ச்சிகள் இல்லை. – என்
உணர்ச்சிகள் இன்றி நானில்லை.


நான் தனின் அறிமுக நுட்பங்களே
என் உணர்ச்சிகள்


உணர்ச்சிகளின் வெளிப்பாடே
சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி

கனவே சொப்பனம்
உறக்கமே சுழுத்தி
விழிப்பே சாக்கிரம்

கனவு,விழிப்பு,உறக்கம்-மூன்றின்
முறையான முடிச்சே வாழ்க்கை.


அவிழ்க்க அவிழ்க்க அவிழ்ந்துகொண்டிருக்கும்
அது தான் வாழ்க்கை.
அறிந்தவன் அணைத்தேன் யோகத்தை
அதற்கப்பாலும் அறிய
அவிழ்ந்தது
என் வலி முடிச்சுகள் மட்டுமல்ல
அறிவின் கருவறைக் கட்டும்.


1 comment:

vijay said...

Please bless us to attain your end point with you- along with your and satguru 's blessings with out fail and pain.

Post a Comment